Monday, August 4, 2025

Tuesday, July 29, 2025

எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்

 எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்


- கட்டுரை


- பாலசாண்டில்யன், மனநல ஆலோசகர்

"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்                 

காக்கின்என், காவாக்கால் என்"  

எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாக

கோபம் கொள்ளாதவன். பலிக்காத இடத்தில் கோபத்தை தடுத்தால் என்ன,

தடுக்காமல் விட்டால் தான் என்ன?  அதாவது ஒரு செயலுக்கு எதிர்வினை

வரும் இடத்தில் கோபத்தை அடக்கினால், அது பயனுள்ள செயல்.

மாறாக, கோபம் பயனளிக்காத இடத்தில் கோபத்தைக்

கட்டுப்படுத்தினாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.

வளமையை உடைய வலியவன், தன் சினத்தை வெளிப்படுத் தாது அடக்கிக்

காக்கிற பொழுது, அவன் சிறந்த காவல் வீரன் ஆகிறான். வலிமையின்றி

இளைத்தவன் பிறர் மேல் கோபத்தைக் காட்டவில்லை என்று பேசினால் அது

கேவலமான விளக்கமாகும்.

கோபம் கொள்வது தவறு கிடையாது. கோபம், வருத்தம், கவலை போன்ற

எந்தவொரு உணர்வையும் கட்டுப்படுத்தினால் (சப்ரெசென் எனும் அடக்குதல்)

அது மனதுக்கும் உடலுக்கும் நல்லதல்ல என்று பல மனநல நிபுணர்கள்

கூறுவார்கள். 

'ரௌத்திரம் பழகு' என்கிறான் பாரதி.  ஆக, கோபம் கொள்ள வேண்டிய

இடத்தில் நிச்சயம் நாம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.

கோப மேலாண்மை என்பது ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான

முறையில் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் வெளிப்படுத்தவும்

பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் குறிக்கிறது. இது

கோபத்தை முழுவதுமாக அடக்குவது பற்றியது அல்ல, மாறாக

எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க அதன் தீவிரத்தையும்

வெளிப்பாட்டையும் நிர்வகிக்கக் கற்றுக்கொள்வது. 


கோப மேலாண்மை என்பது தூண்டுதல்களை அங்கீகரிப்பது, சமாளிக்கும்

வழிமுறைகளை உருவாக்குவது மற்றும் தேவைகளை திறம்பட தெரிவிக்கக்

கற்றுக்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியது.

கோபத்தை நிர்வகிக்க, தூண்டுதல்களை அடையாளம் காண்பது, ரிலாக்சேஷன்

எனப்படும் தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான

சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். இதில்

கோபத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது,

தேவைப்படும்போது கால அவகாசம் எடுப்பது மற்றும் உணர்வுகளை

வெளிப்படுத்த ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டறிவது ஆகியவை அடங்கும்.

கோப மேலாண்மையின் 3 விதிகள் - அங்கீகரித்தல், பிரதிபலித்தல் மற்றும்

பதிலளித்தல் (Recognize, Reflect and Respond)- கோபப் பிரச்சினைகள் மற்றும்

அறிகுறிகளை வழிநடத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன. இந்த

மூன்று அத்தியாவசிய படிகளைப் புரிந்துகொண்டு செயல்படுத்துவதன் மூலம்,

தனிநபர்கள் தங்கள் கோபத்தின் மீது சிறந்த கட்டுப்பாட்டைப் பெறலாம் மற்றும்

அதை நிர்வகிப்பதற்கான ஆரோக்கியமான வழிகளை உருவாக்கலாம்.

கோபத்தை திறம்பட நிர்வகிக்க கோபத்தின் மூல காரணங்களைப்

புரிந்துகொள்வது முக்கியம். கோபத்திற்கு நான்கு முக்கிய தூண்டுதல்கள்

உள்ளன: கடந்த கால அனுபவங்கள், துரோகம், மனநலப் பிரச்சினைகள் மற்றும்

அவமானம் அல்லது துக்கம் போன்ற உணர்ச்சிகள். தவிர, இயல்பாகவே

சிலருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரலாம். அதற்கு காரணம்

தேவையில்லை. 

சிலர் கோபம் வந்தது போல நடிப்பார்கள். குறிப்பாக ஆசிரியர்கள், காவல்துறை

அதிகாரிகள் இவர்கள் கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள்.

அவர்கள் மிகவும் கனிவாக அன்பாக இருப்பின், அவர்களால் தமது பணியை

செவ்வனே செய்ய முடியாது.

ஆனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் வீட்டிலும் அப்படியான

கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.  அவர்கள் மரபணுக்களில் அது புகுந்து

விடுகிறது. ஆனால் பெரும்பாலும் அங்கு அந்த கோபம் செல்லுபடி ஆகாது.

அவர்களைத் தான் நாம் 'வீட்டில் எலி வெளியில் புலி' என்கிறோம்.


அவர்கள் வீட்டில் கோபம் வந்தால் எல்லா விளக்கு மின்விசிறி போன்றவற்றின்

ஸ்விட்ச்களை ஆக்ரோஷத்துடன் போடுவார்கள். தண்ணீர் குழாய்களை திறந்து

விடுவார்கள். பணியாளர்கள் மீது எரிந்து விழுவார்கள். சில நேரங்களில்

வீட்டில் இருக்கும் நாயை ஓங்கி அடித்து குறைக்க விடுவார்கள். கதவை ஓங்கி

அடித்து சாத்துவார்கள். அதனால் எந்தவொரு பயனும் இல்லை என்று

அவர்களுக்கு நன்றாகத் தெரியும். உள்ளிருந்து ஒரு குரல் கேட்கும் "என்ன

அங்கு சத்தம்" என்று. பின்னர் விவரிக்க முடியாத நிசப்தம் அங்கே நிலவும்.

பொதுவாக ஒரு விஷயத்தை பலர் சொல்லக் கேட்டிருப்போம். திருமணத்திற்கு

முன்பு எல்லா ஆண்களும் சிங்கங்கள் தான். திருமணத்திற்கு

பிறகும் அப்படியே. வித்தியாசம் என்னவென்றால் அந்த சிங்கத்தின் மீது

துர்கை அம்மன் அமர்ந்து இருப்பாள். இதனை விளக்கினால் வாசிக்கும்

பெண்கள் என் மீது கோபம் கொள்ளுவார்கள். பெண் கோபம் பொல்லாதது

அல்லவா ?

கோபம் வரும் பொழுது சூழலை சமாளிக்க நமக்கு சில குணாதிசயங்கள்

தேவை. உளவியலாளர் பீட்டர் கிளாஃப், மன உறுதியின் நான்கு முக்கிய

பண்புகளை விவரிக்கிறார், நம்பிக்கை, சவால், கட்டுப்பாடு மற்றும்

அர்ப்பணிப்பு தான் அவை.

உண்மையிலேயே கோபத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால் தியானம்,

சுவாசப் பயிற்சிகள் மற்றும் சுய பிரதிபலிப்பு போன்ற நினைவாற்றல்

நுட்பங்கள் மூலம், உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றிய

ஆழமான புரிதலைப் பெற வேண்டும்.  மேலும் சூழ்நிலைகளுக்கு

அமைதியாகவும் தெளிவாகவும் எவ்வாறு பதிலளிப்பது என்பதைக்

கற்றுக்கொள்ள வேண்டும். 

Anger எனும் கோபம் Danger - D ஓரெழுத்து தான் குறைவு என்பர். அதாவது.

கோபத்தினால் நம்மில் நிறைய பேர் செய்யக்கூடாததை செய்து பிறகு

வருந்துவோம், குற்ற உணர்வுக்கு ஆளாவோம், மன்னிப்பு கேட்போம்,

உறவுகளை இழப்போம். தண்டனை பெறுவோம். ஆக, கோபம்

காட்டினாலும் தவறு. கோபத்தைக் காட்டாவிட்டால் நமக்கு இழப்பு. எனவே

தான் கூடுமானவரை கோபத்தை அடக்க வேண்டும். அதே சமயம் நமது

கோபம் எடுபடாத இடத்தில் அதனை அடக்கி ஆண்டும் எந்தவித

பயனுமில்லை. 


எல்லா உணர்ச்சிகளும் ஒரு நோக்கத்திற்கு உதவுகின்றன, மேலும் கோபம்

ஊக்கமளிக்கும் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும். உங்கள் கோபத்தை

அமைதியாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துவது இந்த வகையான

வலுவான உணர்ச்சியை நிர்வகிக்க ஆரோக்கியமான வழியாகும்.

கோபத்தை அடக்குவது அல்லது அதைப் புறக்கணிப்பது ஆரோக்கிய

விளைவுகளை ஏற்படுத்தும். கோபம் உங்கள் தனிப்பட்ட மற்றும்

தொழில்முறை உறவுகளை கடத்த வேண்டியதில்லை.

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்ற பாடல் வரி நமக்கு

மிகவும் பரிச்சயமான பாடல் வரி. கோபம் வரும் பொழுது நமது

வார்த்தைகள், நடத்தை, பாவனை எல்லாமே தவறாக இருக்கும். சில

நேரங்களில் கோபப்படுவார் இவர் என்று எதிர்பார்க்கப்படும் பொழுது நாம்

அதனை மௌனத்தின் மூலம் வெளிக்காட்டினால் அதற்கு பெரியதொரு

மதிப்பு கிடைக்கிறது. 'அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்பது போல

மன்னிப்பு என்பது நிச்சயம் தேவகுணம் தான். 

சில சமயம் ஒரு பார்வை, நமது முகபாவம், அங்க அசைவு, இதர சங்கேத

நடவடிக்கை நாம் கோபமாக இருப்பதை பிறர் புரிந்து கொண்டு நாம்

நினைத்த வண்ணம் அவர்கள் நடந்து கொள்ளுவார்கள்.

பெண்கள் கோபப்பட்டால் அதனை சமையல் அறையில் அல்லது டங்

என்று காபி பாத்திரம் வைப்பதில், படுக்கை அறையில் காட்டுவார்கள்.

தந்தைமார்கள் பாக்கெட் மணியில் கைவைப்பார்கள். ஆசிரியர்கள்

மதிப்பெண் மூலம். மேலதிகாரி சம்பள உயர்வு தராமல் இருப்பது அல்லது

கடினமான பணி தருவதன் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

கிரிக்கெட் வீரர் தனது கோபத்தை பேட் மூலம் காட்டுவார். ரஹ்மான்

போன்ற இசை நிபுணர்கள் நல்ல இசை தருவதன் மூலம்

வெளிப்படுத்துவார்கள். 

ஒரு கத்தியால் பழத்தை அறுக்கலாம். ஒருவர் கழுத்தையும் அறுக்கலாம்.

ஒரு தீக்குச்சி மூலம் விளக்கு ஏற்றலாம். ஒரு காடையே கொளுத்தலாம்.

நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே இங்கே நமது ஆளுமையை

வெளிப்படுத்தும். அப்படித்தான் கோபம் என்பதும். எங்கே யாரிடத்தில்


எப்போது எப்படி எதற்காக ஏன் வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான்

ஒருவர் தனியாகத் தெரிகிறார். அவருக்கு மதிப்பு ஏற்புடுகிறது.

நகைச்சுவை நக்கல் நையாண்டி மூலம் கோபத்தை

வெளிப்படுத்துபவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பர் என்று நம்மால்

காண முடியும். 

பிறரை காயப்படுத்தாமல் நாமும் மன சங்கடம் அடையாமல் ஒரு

செயலை செய்வதோ, பிறரை செய்ய வைப்பதோ நிச்சயம் ஒரு

தனித்திறன் தான். நம்மை கோபப்படும் செயல்கள் அன்றாடம் நிச்சயம்

நடக்கும். இருப்பினும் நாம் எப்படி புத்திசாலித்தனமாக சூழலை

மனிதர்களை கையாள்கிறோம் என்பது அவரவர் தனித்திறன். அப்படியான

திறனை வளப்படுத்துவோம். வாழ்வை மேம்படுத்துவோம்.

டிஜிட்டல் வாழ்க்கை மாறுமா?

 உங்களை விட அதிகமாக லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்! ஒரு காதல் ஒழிஞ்சிச்சோ ஒரு காதல் செத்துச்சோ?

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின் கவனத்தைத் திருப்ப சற்று சிரமம் தான். வீட்டில், வெளியில், ஹோட்டலில், டிவி பார்க்கும் பொழுது, நாம் பேசும் பொழுது, ட்ரிங் ஓசை கேட்டு போனை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு மெசேஜை மட்டும் பார்த்து விட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாரா என்றால் இல்லை என்பது தான் பதில். ஏன் எனில் போனை கையில் எடுத்தவுடன் அடுத்து அடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை. 

உள்ளங்கை அளவில் ஒரு எதிரி என்றால் அது ஸ்மார்ட் போன் தான். நம்மை அவர் கவனிக்கவில்லை என்பதை விட நம்மை அவர் ஒதுக்கி வைத்து விட்டார் என்ற உணர்வு சில நேரம் தலை தூக்குகிறது. நீங்கள் ஒரு கணவன் இருந்தும் கைவிடப்பட்ட கைபேசி கைம்பெண் ஆகலாமா?

சில நேரம் சில பெண்கள் கேட்கிறார்கள்? நமக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகி உள்ளன. இப்போது தான் நமக்கு ஒரு குழந்தை பிறந்து உள்ளது. எப்படி சிரிக்கிறது பாருங்கள்? அப்படி என்ன தான் இந்த சனியன் போனில் உள்ளது? ஆரம்பிக்கிறது ஓர் உரையாடல்.

பட்டென்று வருகிறது பதில். இவ்வளவு நேரம் எனது பாஸ் உயிர் எடுத்தான். இப்போது தான் உலகத்தில் என்ன நடக்கிறது, எனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்று கூட பார்க்க எனக்கு உரிமை இல்லையா? நேற்று நமது திருமண நாள் போட்டோ முகநூலில் போட்டிருந்தேன். யார் என்ன சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள் ..உனக்கு அதில் விருப்பம் இல்லையா?

சில கணவர்கள் காதில் இப்படி விழுகிறது. நீங்கள் பேசாமல் என்னை திருமணம் செய்து கொண்டதற்கு பதில் இந்த போனை கட்டிக்கொண்டு இருக்கலாமே? என்னை ஏன் உயிர் எடுக்கிறீர்கள்? 

எல்லோருக்கும் துணை நிற்பது இந்த கைபேசி தான். அதில் தானே வந்து விழுகிறது பல போட்டோக்கள், மீம்ஸ்கள், விடியோக்கள், செய்திகள், பல தகவல்கள், அரசியல் மற்றும் சினிமா கிசுகிசுக்கள், பற்பல வதந்திகள், இப்படி இருக்கும் பொழுது யார் தான் கைபேசியை கீழே வைப்பார்கள். 

பாதி பேருக்கு என்ன கேட்கிறோம், என்ன சாப்பிடுகிறோம், என்ன செய்கிறோம் என்ற சுய சிந்தனையே இல்லை என்பதே மிகவும் வருத்தமான செய்தி. 

மனநல ஆலோசகர்களிடம் பெரும்பாலும் பெண்கள் சொல்லும் புகார் என்ன தெரியுமா? என் கணவர் முன்பு போல இல்லை. என்னிடம் இப்போது அதிகம் பேசுவது இல்லை. சாப்பாடு, உறக்கம், செல்போன், ஆபீஸ் இது தான் அவர் உலகம் என்றால் நான் எதற்கு இடையில்? 

ஆனால் பெண்களும் இப்படி ஆகி வருவதும் பார்க்க முடிகிறது. ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டால் வேறு எங்காவது சந்தோஷம் கிடைக்குமா என்று தேடவும் நேரிடுகிறது. இது ஆபத்தானது. அவர்களும் வீட்டில் எது நடந்தாலும் உடனே உடன் வேலை பார்க்கும் தோழன் அல்லது தோழிக்கு அனுப்பி ஆறுதல் தேட நினைக்கிறார்கள். கூடவே சில கேம்ஸ் விளையாடுவதும் உண்டு. 

மனக்கிலேசங்கள் வரும் பொழுதே உரையாடல் மூலம் அவற்றை சரி செய்ய வேண்டும். மனதில் போட்டு புதைத்து வைத்தால், பிறகு சிக்கல் அதிகமாகும். இருவருமே வேலை பார்க்கும் இன்றைய நாட்களில் உணவு, காய்கறி, வீட்டு சாமான், காஸ் புக்கிங், பண பரிவர்த்தனை இவற்றிற்காக கையில் எடுக்கும் போன் கீழே வைக்கப் படுவதில்லை. ஏனெனில் அதில் தான் நேரம் பார்ப்பது, பாட்டு கேட்பது, போட்டோ எடுப்பது, டிவி ரிமோட், வீடியோ பார்ப்பது, மெயில் செக் செய்வது, எல்லாம் நடக்கிறது. யாரை இங்கே குற்றம் சொல்வது? தொழில்நுட்பம் இயல்பு வாழ்வை சாகடித்து விட்டது. 

பெண்களே நானும் முக்கியம், கையில் இருக்கும் அந்த போனும் முக்கியம் என்று மெதுவாக அன்பாக அழகாக பேசிப் புரிய வையுங்கள். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள். பிறகு இழந்த நேரத்தை இளமையை வாழ்க்கை இன்பங்களை திரும்பப் பெற முடியாது. 

இன்று வேலை வாழ்க்கை போன் இவை மூன்றையும் மிகச் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு புத்தி சாதுரியம் மட்டும் போதாது. இழந்த தருணத்தை கரணம் போட்டாலும் திரும்பப் பெற முடியாது. இருக்கும் நமது நேரத்தில் உண்பது, உறங்குவது, வேலை பார்ப்பது, பயணிப்பது, பொழுது போக்கிற்காக டிவி பார்ப்பது, நண்பர்களோடு பேசுவது, உறவினர் இல்லம் செல்வது, பிரார்த்தனை, உடற்பயிற்சி, தியானம், பாட்டு கேட்பது, குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, குடும்பத்தோடு வெளியே செல்வது, திட்டமிடுவது, பெற்றோரோடு பேசுவது, அழகு ஆரோக்கியத்தை காப்பது, சமூக பொறுப்புகள் ஏற்பது, தொழிலை மேம்படுத்துவது, இடையே சற்று காதல் செய்வது எல்லாமே தான் அவசியம். அதற்கு அந்தந்த செயல் அந்தந்த தருணத்தில் என்பது போல சரியான நேரம் ஒதுக்கி நேர மேலாண்மையோடு செயல்படுதல் அவசியமாகிறது.

இந்த எப்போதும் கையில் போன் எனும் பொழுது வீட்டில் உரையாடல்களே நிகழ்வதில்லை. உறவுகள் அதனால் மிகவும் பலவீனம் அடைகின்றது. மேலும் இப்போது சுமார் நான்கு மாதங்களாக ஒர்க் பிரம் ஹோம் வேறு. அலுவலக நிமித்தம் தான் கையில் போன் உள்ளதா ? அல்லது வேறு ஏதாவது நடக்கிறதா ? எப்படி கேட்பது ? எப்படிக் கண்டறிவது ? ஒருவருக்கொருவர் சந்தேகம் வந்தாலும் தவறு தானே. இப்போது பிள்ளைகளும் ஆன்லைன் வகுப்புகள் என்று கையில் போன் அல்லது லேப்டாப் எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் சென்று விடுகிறார்கள். பல வீடுகளில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் மயான அமைதி தான். கைபேசி செய்யும் அநியாயம். வேண்டாத ஒரு மாயம். 

இதனால் காட்ஜெட் டிசீஸ் என்று சொல்லக்கூடிய சில புதிய மூட்டு அல்லது நரம்பு தொடர்பான நோய்கள், கழுத்து மற்றும் முதுகு வலி, சீக்கிரமே கண்ணாடி என்று இதர சிக்கல்கள் வேறு. இந்த தொழில்நுட்ப கருவிகள் தரும் மிகவும் சக்தி வாய்ந்த 'ரேஸ்' எனும் சில நெகடிவ் கிரணங்கள் உடலை உடல் உறுப்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. அது குழந்தை பிறப்பைக் கூட பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில குழந்தைகள் ADHD எனும் கவனக் கோளாறு குறித்த நோய் ஆட்கொள்கிறது. 

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் காதல், காமம், அன்பு, கருணை எல்லாவற்றிற்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் மன முறிவு மற்றும் மண முறிவு இரண்டுமே தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். கவனம் தேவை மக்களே.உங்கள் போன் உங்கள் கையில். அதே போல உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். ஆல் தி பெஸ்ட்.

கணபதி பாப்பா மோரியா

 கணபதி பாப்பா மோரியா - பாலசாண்டில்யன் 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா

-ஒளவையார்

நமக்குத் தமிழ் தந்து அருள்பவன் விநாயகன் தான் என்று ஒளவையார் பிராட்டி கூறுகிறார்.

முருகனுக்கு அரோகரா என்பது போல பிள்ளையாருக்கு ‘கணபதி பாப்பா மோரியா’ என்கிற கோஷம் மிகவும் பிரபலம் எனலாம். 

திருப்புகழ்பாடிய அருணகிரிநாதர் பாடிய இந்தப் பாடலில் மட்டுமே விநாயகரைக் குறிப்பிடுகிறார்என்பது இங்கே விசேஷமான செய்தி. 

“கைத்தலநிறைகனி அப்ப மொடு அவல்பொரி  கப்பிய கரிமுகன் அடிபேணிகற்றிடும்அடியவர் புத்தியில் உறைபவ     கற்பகம் எனவினை கடிதேகும்மத்தமும்மதியமும் வைத்திடும் அரன்மகன்  மற்பொரு திரள்புய மதயானைமத்தளவயிறனை உத்தமி புதல்வனை  மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனேமுத்தமிழ்அடைவினை முற்படு கிரிதனில்  முற்பட எழுதிய முதல்வோனேமுப்புரம்எரி செய்த அச்சிவன் உறை ரதம்  அச்சு அது பொடிசெய்த அதிதீராஅத்துயர்அது கொ(ண்)டுசுப்பிரமணி படும்  அப்புனம் அதனிடை இபமாகிஅக்குறமகளுடன் அச்சிறு முருகனை  அக்கணம் மணம் அருள் பெருமாளே. 

"கரதலத்தில்நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானைமுகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள்யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும்,மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன்துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டுநான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும்முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள்முற்பட்டதான மேரு மலையில் முதல்முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்தஅந்தச் சிவ பெருமான் எழுந்தருளியரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே, (வள்ளி மீது கொண்ட காதலாகிய)அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன்நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன்அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம்புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே. " என்பது இந்தப் பாடலின் பொருள்.

விநாயகருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், வாதாபி கணபதி, நடன கணபதி, நர்ததன கணபதி, தும்பிக்கை ஆழ்வார் போன்ற பல பெயர்கள் உள்ளன. கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும், யானை முகம் கொண்டவர் என்பதால் ஆனைமுகன் அல்லது கஜமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இவருடைய வேறு பெயர்கள் மற்றும் அவை குறிக்கும் பொருள்:

கணபதி: கணங்களுக்கு அதிபதி (தலைவர்).

ஆனைமுகன் / கஜமுகன்: யானை முகம் கொண்டவர்.

ஏகதந்தன்: ஒரு தந்தம் உடையவர்.

லம்போதரன்: பெரிய வயிறு உடையவர்.

ஹேரம்பன்: அன்னை பார்வதிக்குப் பிரியமானவர்.

தும்பிக்கை ஆழ்வார்: வைணவர்களால் வழங்கப்படும் பெயர்.

நடன கணபதி/நர்ததன கணபதி: நடனமாடும் விநாயகர்.

கஜானனன்: யானை முகம் உடையவர்.

ஒற்றைக்கொம்பன்/ஒற்றைமருப்பினன்: ஒரு தந்தம் உடையவர்.

அங்குசதாரி/அங்குசபாசதரன்/அங்குசபாணி: அங்குசம் (கொக்கி) வைத்திருப்பவர்.

பரசுபாணி: மழு ஆயுதம் வைத்திருப்பவர்.

கங்கைபெற்றோன்: கங்கை நதியால் பெற்ற குழந்தை எனப் பொருள் கொள்ளலாம்.

துண்டிராஜன்: துண்டிரா என்ற பெயருடன் தொடர்புடையவர்.

வாதாபி கணபதி: ஒருவகை விநாயகர் சிலை.

கல்வி கணபதி: கல்வியில் சிறந்து விளங்க வைக்கும் விநாயகர்.

அரசமரத்தடி பிள்ளையார்: அரசமரத்தின் கீழ் உள்ள விநாயகர்.

பிள்ளையார்: பொதுவாக விநாயகரைக் குறிக்கும் பெயர்

விநாயகருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், வாதாபி கணபதி, நடன கணபதி, நர்ததன கணபதி, தும்பிக்கை ஆழ்வார் போன்ற பல பெயர்கள் உள்ளன. கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும், யானை முகம் கொண்டவர் என்பதால் ஆனைமுகன் அல்லது கஜமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

முருகனை நாம் தமிழ்க்கடவுளாக கொண்டாடி வணங்கும் நேரத்தில் அவனின் அண்ணன் விநாயகன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார்.

மற்ற நாடுகளில், சமஸ்கிருதத்தில் விநாயகர் என்று அழைக்கப்படும் விநாயகர், வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார், மேலும் பல்வேறு வடிவங்களிலும் வழிபடப்படுகிறார். தாய்லாந்தில், அவர் ஃபிரா பிகானெட் அல்லது ஃபிரா பிகனேசுவான் என்று அழைக்கப்படுகிறார். ஜப்பானில், அவர் காங்கிடென்  அல்லது கணபாச்சி என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் முதன்மையாக குறிப்பிட்ட பௌத்த பள்ளிகளில் போற்றப்படுகிறார். சீனாவில், அவர் ஹுவான்சி தியான் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீராமநவமி என்பது நவமி திதியில் வருகிறது. கோகுலாஷ்டமி என்பது அஷ்டமி திதியில் வருகிறது. அதுபோல சதுர்த்தி திதியில் வருகிற  விநாயகர் சதுர்த்திஎன்பது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். இது விநாயகப் பெருமானின்பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த விழா ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகரின் பிறப்பு மற்றும் சிறப்புகளை நினைவு கூர்ந்து கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் வரலாறு மிகவும் நீண்டது. இது மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டுவந்தாலும், பாலகங்காதர திலகர் இதை ஒரு தேசிய விழாவாக மாற்றியமைத்தார். இவர் பிரிட்டிஷ்ஆட்சியின்போது தேசிய உணர்வை வளர்ப்பதற்காக இந்த விழாவைப் பயன்படுத்தினார். அவர் விநாயகர்சதுர்த்தியை ஒரு சமூக நிகழ்வாக மாற்றி மக்களை ஒன்று திரட்டினர்.

நாடெங்கிலும் (ஏன் உலகெங்கிலும் விநாயக சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி போல நிறைய நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஒரு மீசை வரைந்தால் பாரதி என்பது நினைவுக்கு வரும். ஒரு கண்ணாடியை வரைந்தால் காந்திஜி நினைவுக்கு வருவார். ஒரு வளைவுக்கோடு போட்டாலே அது விநாயகரை நினைவுபடுத்தும். ஒரு பிள்ளையார் சுழி போடாமல் நாம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதில்லை. விநாயகர் வெற்றியின் மறுபெயர் எனலாம். எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது.

விநாயகர்சதுர்த்தியின் வரலாறு:விநாயகர்சதுர்த்தி விழா, புராணங்களின்படி, பார்வதி தேவி தன் உடலில்இருந்து களிமண்ணால் ஒரு சிலையை உருவாக்கி,அதில் உயிரூட்டி, விநாயகரை உருவாக்கினாள்.ஒருமுறைபார்வதி குளிக்கச் சென்றபோது, விநாயகர் வாசலில் காவலிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த சிவபெருமான் விநாயகரால்தடுக்கப்பட்டதாகவும், இதனால் சிவன் கோபமடைந்து விநாயகரின் தலையை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.பின்னர்,பார்வதி தேவியின் துயரைக் கண்ட சிவன், விநாயகரின்தலையை யானையின் தலையை வைத்து ஒட்டவைத்து, அவரை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும்கூறப்படுகிறது.

சிவன்,விநாயகருக்கு 'கணங்களின் தலைவன்' என்ற பட்டத்தை அளித்தார்.அதிலிருந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

ஒரு அற்புதமான கவிதை நினைவுக்கு வரும் :களிமண்ணெல்லாம்  கடவுள் ஆச்சு. காசும் ஆச்சு. விற்காத கடவுள் எல்லாம் மீண்டும் களிமண் ஆச்சு. (ஆம் பண்டிகை மத்தியான நேரமே முடிந்து விடும். அதற்குப் பிறகு யாரும் பிள்ளையார் சிலையை யாரும் வாங்க மாட்டார் அல்லவா?)

விநாயகர்சதுர்த்தி கொண்டாட்டம்:இந்த விழாவின் வரலாறுபண்டைய காலத்தினுடையது என்றாலும், இன்று நாம் கொண்டாடும் விநாயகர்சதுர்த்தி காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. விநாயகர்சதுர்த்தி விழா, பல நாட்களுக்கு முன்னரே தயாராகத் தொடங்கும். மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை செய்து வைத்து, அவற்றை அலங்கரிப்பார்கள்.அவரது பூஜையில் இலை தழை, பலவிதமான பூக்கள், எருக்கம்பூ மாலை, அருகம்புல் இவற்றால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதுண்டு. அதே போல அவருக்கு விநாயகர்சதுர்த்தி அன்று, விநாயகருக்கு பிடித்தமான கரும்பு, பழங்கள், தேங்காய், தேன், தினைமாவு, வடை, கொழுக்கட்டை, பாயசம் அல்லது பொங்கல், சுண்டல்  போன்றவற்றை படைத்து வழிபடுவார்கள்.

பல இடங்களில், ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பார்கள். சென்னையில் இதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி கடற்கரை சென்று பிள்ளையாரை கரைத்து விட்டு ‘அடுத்த ஆண்டு மீண்டும் வருக’ என்று வேண்டிக்கொள்ளுவர். நிச்சயமாக இதற்கு காவல்துறை பாதுகாப்பு மிகவும் பலமாக இருக்கும். காரணம், போகிற வழிகளில் சில சமயங்கள் கலவரங்கள் ஆனது உண்டு.

இந்தநாளில், மக்கள் ஒருவருக்கொருவர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். 

இங்கே ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல விநாயகப் பெருமானுக்குஎட்டு இடங்களில் பிரசித்தி பெற்ற கோயில்கள் உண்டு. அஷ்டவிநாயகர் கோயில்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே நகரைச் சுற்றிஅமைந்துள்ளன. குறிப்பாக, இந்த எட்டு விநாயகர்கோயில்களும் புனே மாவட்டத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன. அஷ்ட விநாயகர் கோயில்கள்மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ளன: மோர்ஷேவர் (Moreshwar): தேவுர்(Theur)சித்தாவினாயக்(Siddhivinayak): சித்தேடேக்(Siddhatek)பல்லாலேஷ்வர்(Ballaleshwar): பாலி(Pali)வரதவிநாயகர்(Varadavinayak): மகத்(Mahad)சிந்தாமணி விநாயகர் (Chintamani): தேவுர் (Theur)லெண்யாதிரி (Lenyadri): ஒசார் (Ozar)விக்னேஷ்வர்(Vigneshwar): ஓசார்(Ozar)மகாகணபதி(Mahaganpati): ரஞ்சன்கான்(Ranjangaon).

தக்டுசேட் கணபதி, புனே மகாராஷ்டிராவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாக அறியப்படும் தக்டுசேட் கணபதி கோயில் புனேவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதுடன், இக்கோயிலின் விநாயகர் சிலை ரூபாய் 1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பிரபாதேவி என்ற இடத்தில் அமைந்துள்ள 'சித்தி விநாயக்' கோவில் (சச்சின் டெண்டுல்கரின் மிகவும் பிடித்த கோவில் இது எனலாம்) மிகவும் பிரசித்தி பெற்றது, நமது பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலைப்போல. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மிகவும் சக்தி வாய்ந்தவர். பாண்டிச்சேரி மணக்குள விநாயகரை மறக்க முடியாது. எப்போதும் அங்கு கூட்டம் உண்டு. இந்த கோவில்களில் எல்லாம் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

மஞ்சளில் பிடித்து வைத்தாலே பிள்ளையார் தான். ஒவ்வொரு தெருவிலும், சாலைகளின் நடுவிலும், அலுவலகங்களிலும், அடுக்கு மாடி கட்டிடங்களிடலும் விநாயகர் உண்டு. தூணிலும் துரும்பிலும் நாராயணன் இருப்பார் என்பது போல விநாயகர் இல்லாத இடமே இல்லை எனலாம். 

விநாயகர் சிலைகள் பல்வேறு வகைகள் உள்ளன. வெட்டிவேர் விநாயகர், வெள்ளெருக்கு விநாயகர், குபேர விநாயகர், பாதரச விநாயகர், நவதானிய விநாயகர், தேங்காய் விநாயகர், மரகத விநாயகர் முதலியன. வெட்டிவேர் விநாயகரை வழிப்பட்டால் கண் திருஷ்டி நீங்கும் மற்றும் தீயசக்திகள் அண்டாது. வெள்ளெருக்கு வேரினால் செய்த விநாயகரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். காரியத் தடைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிகள் குவியும். குபேர விநாயர் இருக்கும் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும். அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் சக்தி குபேரருக்கு உண்டு என்பது ஐதீகம். பாதரச விநாயகரை வழிப்பட்டால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். நவதானிய விநாயகர் இருக்கும் வீட்டில் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது நம்பிக்கை. நவதானிய விநாயகரை வழிபடுவதால் வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சம் நிறையும்.

சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது நம் பாரம்பரிய வழக்கமாகும். ஏனெனில், தேங்காயை தரையில் அடித்து உடைக்கும் போது அது உடைந்து சிதறி ஓடுவது போல், நம் தோஷங்களும், பாவங்களும் நம்மைவிட்டு சிதறி ஓடும். மரகத விநாயகரை வழிப்பட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் பதவியில் அமரும் யோகம் உண்டாகும் மற்றும் பண வரவு அதிகரிக்கும்.

சிறுவயது முதல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பண்டிகை விநாயகர் சதுர்த்தி தான். 

பிள்ளையார் சிலைகள் மற்றும் பொம்மைகளை வீட்டில் நிரந்தர கொலு போல வைத்திருக்கும் சென்னையின் முக்கியப் பிரமுகர்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி அவர்களின் இல்லம் மற்றும் அலுவலகம், கர்நாடக இசையரசி சுதா ரகுநாதன் அவர்களின் இல்லத்திலும் இப்படியான கொலு உண்டு. எழுத்தாளர்களில் பிரபலமாக விளங்கும் டாக்டர் பாஸ்கர் ஜெயராமன் அவர்களின் கிளினிக்கிலும் ஒரு பிள்ளையார் கொலு உண்டு.

நீங்களும் ஒவ்வொரு ஆண்டும் (தினந்தோறும்) விநாயகரை வழிபட்டு வெற்றி அடையுங்கள். பிரைன் ஜிம் யோகா எனப்படும் தோப்புக்கரணம் (தோர்பிஹிகரணம் ) செய்து தான் பிள்ளையாரை வழிபட வேண்டும். கீழே விழுந்து நமஸ்கரித்து அல்ல. உங்களுக்கு வெற்றிகள் நாளும் கிடைக்க இந்த 'பாலசுப்ரமணியனின்' வாழ்த்துக்கள்.

Jiye tho jiye

 வாழுவேன் வாழுவேன் எப்படி...

நீ இல்லாமல் நான்...
மனம் ஏற்குமா சொல்
நீ இல்லாத நாள்...
நீயில்லா வாழ்வெப்படி
நிலை சொல்ல முடியாதடி.
சாபத்தை தண்டனையை
வர்ணிக்க சொல்லேதடி...
எனக்கொரு முடிவுண்டு
நீயின்றி நானில்லையென்று...
விஷமென்றாலும் பருகிடுவேன்
வலியென்றாலும் தாங்கிடுவேன்
எந்நிலையிலும் நான் வாழ்ந்திடுவேன்
பிரிவின் வலியிது வேண்டாமடி...
நீயின்றி வாழ முடியாது
நீரின்றி ஒரு நதி கிடையாது...
எனைப் பார்த்த உன் விழிகள்
தரை பார்த்தது
நீ செய்த புன்னகை மனதில்
நீங்காதிருக்குது...
எப்படி மறப்பேன் உன்
பார்வையை புன்னகையை
எப்படி மறப்பேன் அந்த
இரவின் சந்திப்பை...
வாழுவேன் வாழுவேன்
எப்படி
நீ இல்லாமல் நான்
மனம் ஏற்குமா சொல்
நீ இல்லாத நாள்...
Impeccable impact created by "Jiye toh jiye kaise haye bin aapke"
- பாலசாண்டில்யன்

Appa song of mine in video format

 https://youtu.be/SU-F9CiuH_g?si=6scDFdkPLyuVZjZ7

எனது மற்றும் ஒரு பாடல் வீடியோ வடிவில். நன்றி மின்கைத்தடி மற்றும் திரு உமாகாந்த் சார்

அல்லி நோடலு ராமா

 புரந்தரதாசர் இயற்றிய கன்னடத்தில்

" அல்லி நோடலு ராமா
இல்லி நோடலு ராமா" கிருதி
தமிழில் முயற்சி: டாக்டர் பாலசாண்டில்யன்
ராகம்: நாட்டைக் குறிஞ்சி
(பாடல் கற்க : பாலமுரளி சார் ஆல்பம் உண்டு)
அங்கு காணினும் ராமா
இங்கு காணினும் ராமா
எங்கெங்கு காணினும் ராமனின் ஸ்வரூபம்
ராவணனின் சேனை கண்டு அஞ்சி பயந்து
வானர சேவை காத தூரம் பறந்து
பாமரனில்லை அவன் பரந்தாம னெனப் புரிந்து
ராமனென்ற அவதாரம் பாரினில் விரிந்து...
(அங்கு)
அவனுக்கு இவன் ராமன் இவனுக்கு அவன் ராமன்
அன்புடன் காண்பவர் அனைவருமே ராமன்
அழகான அவன் ரூபம் அண்டமெலாம் விரிய
அசுரர்கள் அனைவரும் தாமே கொன்றழிந்தனரே
(அங்கு)
அனுமனைப் போல் நல்லோர் பலர் வந்திணைய
ஆரவாரமாக அவர் ஆடிக் களித்தெழ
அத்தருணத்தை புகழ்கிறார் புரந்தரதாசர்
அற்புத ராமனாய் எழுந்தருளி காட்சி தர
(அங்கு)