Tuesday, February 7, 2023

Lord Muruga

 விருத்தம் - எனக்குப் புதிது (ஓர் பிரபல இசைக்கலைஞர் விரும்பிக் கேட்ட பொழுது நான் எழுதித் தந்தவை): - பாலசாண்டில்யன்

1.
பற்றறுக்கப் பற்றினேன் நின் மலர்ப்பதம்
பரமகுருபரா கனிந்தருள் பார்வை யொன்றுதா
கற்றறியேன் இகபர சுகம் பெற்றிட யான்
கந்தனுந்தன் கழலன்றி வேறறியேன்
சொற்பதம் போற்றி நின் பொற்பதம் தொழுதேன்
சொக்கன் மகனே எனக்கருள் நல்கிடுவாய்
அற்புதம் ஆயிரம் நாளும் செய்திடும் கந்தா
அனுதினம் உனைப் பாடிடும் வரந்தா
2.
பவசாகரத்தில் உழல்கின்றேன்
பன்னிரு கண்கள் கண்டிடுமோ
தயவே காட்டும் தயாபரனே
தந்தருள் செய்க குருபரனே
துன்பச் சுமையால் தவித்துநிதம்
தூயவன் கருணை கேட்கின்றேன்
அன்பைச் சொரியும் அருளரசே
அஞ்சேலென தோன்றுகவே
3.
பூவினுள் நின்றொருளிரும்
பன்னிரு கையனே ஐயனே
நாவினுள் நடனஞ் செயும்
நன்திரு முகங்கள் அழகே
யாவிலும் நிறையும் ஒளியே
யவன ரூபனே எழிலே
புவன முழுதும் நின்னருளே
புரிந்தருளுள் செய்திடு குகனே
4.
தோத்திரம் செய்தேன் தொழுதேன்
துதித்துநின் சேவடிகள் பற்றி நின்றேன்
ஆத்திரம் விடுத்து அடியனுக்கருள்வாய்
ஆறுமுகா குருபரா முத்துக்குமாரா
சூத்திரம் அறியேன் சூதறியேன்
சுப்ரமணியா நினையன்றி வேறறியேன்
உத்தமனே உனையே அழைத்தேன்
உள்ளக் குகையில் வந்தமர்வாயே
கீர்த்தனம்:
ராகம்: மலயமாருதம் தாளம்: ஆதி
உனைக் காணும் வரம் ஒன்று தா - முருகா
உன் தாள் பணிந்தேன் நான்
அருமறை போற்றிடும் அருள் வடிவேலா (உனை )
வினைகள் தீர்க்க விரைந்தே நீ வா
வள்ளி மணவாளா வடிவேலா
அனைத்தும் உன் செயல் தான்
அருள் செய் சிவபாலா
கவலையைக் களையும் கருணைக் கடலே (உனை )
அநாதை என்னை அணைத்துக் கொள்வாய் நீ
ஆரூரான் மைந்தா ஆறுமுகா
வேதனை தீர்த்தருள்வாய்
வேலா அருள்பாலா
வா வா முருகா வடிவேலழகா (உனை )
- பாலசாண்டில்யன்