Thursday, December 4, 2014

My recent poems

எத்தனை முயன்றாலும்
என்னைப் பற்றி நானே
சித்தரிக்கவும் சிரிக்கவும்
இயலவில்லை
எத்தனை உரித்தாலும்
முடியாத வெங்காயம் போல்
எந்தன் மனம்...
- பாலசாண்டில்யன்


உன்னை அழகாகக் காட்டும்
கண்ணாடி அழகா?
உண்மையில் அழகாய் இருக்குமுன்
கண்கள் அழகா?
உனைப்பற்றிய எண்ணத்தில் தானே
நானும் அழகாய்த் தெரிகிறேன்....!
அழகே என்முன்னாடி வா....
கண்ணாடி போதும்....!!
- பாலசாண்டில்யன்


தப்பு செய்ய யாரும் பயப்பபடவில்லை
தெரிந்தால் தப்பாகி விடுமே என்று தான்.



சிலர் கண்ணால் சிரிக்கிறார்
சிலர் கண்ணால் எரிக்கிறார்
சிலர் கண்வலை விரிக்கிறார்


கடத்தியவன்
விடுவிக்கும் போது
தொடர்பில் இருங்கள்
என்றால் எப்படியிருக்கும்
அது போலத்தான்
கடந்த கால காதலி
தொடர்பில் இரு
என்பதும்.....!!


மதி மயக்கத்தில் சிலர்
கதி கலக்கத்தில் சிலர்
விதி மாற்றத்தில் சிலர்
சதி திட்டத்தில் சிலர்
துதி பாடுவதில் சிலர்
நிதி மேம்பாட்டில் சிலர்
புது நம்பிக்கையில் சிலர்
நீங்கள் எப்படி...?!
- பாலசாண்டில்யன்


அறிவாளிகளாக
அறிவிலிகளாக
அழகானவர்களாக
அழகு குறைந்தவர்களாக
அன்பானவர்களாக
அன்பற்றவர்களாக
அக்கறையுள்ளவர்களாக
அக்கறையற்றவர்களாக
அளிப்பவர்களாக
அள்ளுபவர்களாக
அகிலத்தில் மனிதர்கள்
அவர்களில் நாம் எப்பக்கம்?!
- பாலசாண்டில்யன்


யாருக்கும் பயமில்லை இங்கே - டாக்டர் பாலசாண்டில்யன்

குனிந்து கல் எடுத்தால்
நாய்கள் 
கோபித்து சத்தம் போட்டால்
பணியாட்கள்
பிரம்பு காட்டிப் பேசினால்
மாணவர்கள்
வரம்பு மீறிப் போகின்ற
மாடுகள்
கண்ணை உருட்டும் பெற்றோரிடம்
பிள்ளைகள்
மண்ணை எடுத்தாலும் நிற்காத
நதிகள்
சினந்து கொண்டு பேசினாலும்
மருமகள்கள்
மீசை வைத்த பூசணிக்கு
திருடர்கள்
கோட்டு போட்ட வைக்கோலுக்கு
பறவைகள்
கோல் எடுத்துக் காட்டினாலும்
குரங்குகள்
எத்தனை பேர் மாட்டினாலும்
ஊழல்வாதிகள்

Monday, December 1, 2014

After death - what happens to the people....

கதையல்ல நிஜம் - 13
- டாக்டர் பாலசாண்டில்யன் 

குமரன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை பார்க்கிறார். நிறுவனத்தில் சில சமயம் இரவு கூட தங்க வேண்டி இருக்கும். அவ்வளவு வேலை பிரஷர்.

சரியாக போய்க்கொண்டிருந்த நிறுவனத்தில் தீடிர் பிரச்சனை. சம்பளம் வருவற்கு தாமதம் ஆனது. வீட்டில் பணச் சிக்கல். குமரனுக்கு சொல்ல முடியாத மனச்சிக்கல். குடிக்க ஆரம்பித்தான். இதற்கு நடுவே ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் அவனுக்கு தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அது திருமணத்தில் போய் முடிந்தது.

நிறுவனத்தில் சம்பளம் சில சமயம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் வந்தது. இரண்டு குடும்பம். குடிப் பழக்கம். இருதலைக்கொள்ளி எறும்பாக சிக்கினான் குமரன்.

ஒரு நாள் நிறுவனத்தில் வந்து கையழுத்து போட்டு சிறிது நேரம் இருந்து விட்டு எல்லோரும் வீட்டிற்கு போகலாம். பாதி சம்பளம் என்றனர். குமரன் 11.30 மணிக்கு கிளம்பினான். கொஞ்சம் குடித்து விட்டு பிறகு பஸ் ஸ்டாண்ட் போனான். பஸ் கூட்டமாக இருந்தது. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும். சரியென்று வேறு வழியின்றி ஏறினான். பஸ் கொஞ்சம் கூட போய் இருக்காது. நடக்கக் கூடாத அந்த சம்பவம் நடந்தது.

தொங்கிக் கொண்டு போன குமரன் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியில் மோதி மண்டையில் அடிபட்டு அங்கேயே கீழே விழுந்தான். தலையில் பலத்த காயம்.
பஸ் நின்றது. குமரனை அதே பஸ்ஸில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவன் நிறுவன நண்பர்கள் மற்றும் சில பயணிகள் பெரிய ஆஸ்பத்திரி சென்றனர். போகும் போதே அவன் உயிர் போனது.

காரியம் முடிந்து போய் ஒரு மாதம் கழித்து குமரனின் மனைவி, அவன் தாய், அவனின் இரண்டாவது மனைவி மூவரும் வந்து HR மானேஜரிடம் கத்திக்கொண்டு இருந்தனர். குமரனின் பிஎப் தனக்குத் தான் வர வேண்டும் என்று. குமரன் அவனது ஆரம்பத்தில் கொடுத்த அவன் அம்மா பெயரை மனைவி பெயரில் மாற்றவில்லை. இப்போது சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது மனைவி வேறு.

HR மானேஜர் அதற்கு தீர்வு சொல்லிக்கொண்டு இருந்தார். போய் சேர்ந்த குமரனுக்கு என்ன கவலை இன்னும் வாழ்க்கையை போராடி ஜெயிக்க வேண்டியவர்களை விட்டு விட்டுப் போனபிறகு....??!!