Wednesday, June 17, 2020

மெத்தனம் ஆகாதடி கிளியே


மெத்தனம் ஆகாதடி கிளியே
- பாலசாண்டில்யன்
நாங்கள் படித்தவர்கள், நாங்கள் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்கள், நாங்கள் சைவ உணவு உண்பவர்கள், ஏற்கனவே ஆச்சாரமாக இருப்பவர்கள் எங்களுக்கு எந்த நோயும் வராது என்கிற நிலை நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர்களுக்கு நல்ல பாடம் நடத்தியது கொரோனா.
நாங்கள் தினம் தினம்
1. வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் நிச்சயம் போய் நொறுக்குத் தீனி தின்போம்.
2. கீரை, காய்கறிகள் பிரெஷ் ஆகத் தான் வாங்குவோம்.
3. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 ரூபாய் போடுவோம். 200 ரூபாய் எடுப்போம். அதற்கு பாஸ்புக் என்ட்ரி போட பாங்க் வரிசையில் நிற்போம்.
4. பன்னீர் சோடா குடித்து விட்டு, வெற்றிலை பாக்கு போட்டு கும்பலாக நின்று சில நிமிடங்கள் குசலம் விசாரித்து விட்டுத் தான் போவோம்.
5. பத்திரிகை, நாளிதழ், பால் என்று ஒவ்வொன்றாக வாங்க நூறு தடவை கடைகளுக்கு போவோம்.
6. பூ, தேங்காய், பழம், வாங்க போவோம்.
7. பிரெஷ் ஆக காபி பொடி வாங்கணும் இல்லை என்றால் வாசனை போய் விடும். அதனால் 100 அல்லது 200 கிராம் தான் வாங்குவோம்.
8. கோவில் மூடி இருந்தாலும் வாசல் வரை சென்று வணங்குவோம்
9. மருந்து கடைக்கு தினம் போவோம்
இப்படி மாம்பலத்தில் வசிப்பவர்கள் அடித்த லூட்டி கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. அதுவும் மாஸ்க் போட மாட்டோம். தனியாகப் போக மாட்டோம். இரண்டு மூன்று பேராகத் தான் போவோம்.
இதற்கெல்லாம் கிடைத்தது தக்க தண்டனை. அரசு 19 ஜூன் முதல் முழு ஊரடங்கு என்று சொன்னாலும், மேற்கு மாம்பலத்தில் ஒரே நாளில் கற்பனைக்கு எட்டாத நபர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதாக கண்டறிந்து உடனே அரசு நடவடிக்கை எடுத்து எல்லா கடைகள், எல்லா வீதிகள் காலை 11.30 மணிக்கே மூடி விட்டனர்.
இத்தனைக்கும் இந்தப் பகுதி கிராஜுவேட் (படித்தவர்கள்) தொகுதி என்று சொல்லுவர். படித்தவர்களே இப்படி மெத்தனமாக இருந்தால் மற்ற ஏழைகள், பாமர ஜனங்கள் இருக்கும் இடங்களில் எப்படி இருக்கும். நினைத்தால் அச்சமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
ஓர் அரசு என்ன செய்யும். மீண்டும் கவனமாக இருங்கள் என்று வலியுறுத்தும். ஆனால் மக்கள் கேட்காவிடின், ஆண்டவனால் கூட ஒன்றும் செய்ய முடியாது.
காலையில் இருப்பவர் மதியம் இல்லை என்று சிலர், அதுவும் மூத்தவர்கள் இறந்த சேதி கடந்த 10 நாட்களாக மேற்கு மாம்பலத்தில் நடந்து வருகிறது.
கண் கெட்ட பிறகு ஒன்றும் செய்ய முடியாது.
மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், தேவை இல்லாமல் வெளியே போகக் கூடாது, வீட்டிற்கு வந்தால் கை கால் கழுவ வேண்டும். கபசுர குடிநீர் குடிக்க வேண்டும், சுடுதண்ணீரில் உப்பு போட்டு தொண்டை கொப்பளிக்க வேண்டும், நீராவி பிடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் புத்திமதி சொல்லும் நபர்கள் இப்படி நோயை வாங்கி நோயை பரப்பும் நிலை ஆனது மிகவும் வருத்தம் தரக்கூடியது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
இனியேனும். கவனமாக இருந்தால் நல்லது. எல்லாம் அவன் செயல். நல்ல புத்தியை அவனே கொடுக்கட்டும். எல்லோரையும் காப்பாற்றட்டும்.

பாலசுப்பிரமணியன் - பாலசாண்டில்யன் ஆன கதை


பாலசுப்பிரமணியன் - பாலசாண்டில்யன் ஆன கதை
(தவம் அல்ல இந்தப் பெயர் வரம்)

(ஒரு சுய விளக்கம்)

1976 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் என்று நினைக்கிறேன். என் தந்தை (மறைந்த திரு E S கல்யாணராமன்) என்னை அவர்கள் எழும்பூரில் பணி புரிந்த ரயில்வே அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தார்கள். என்னை ஒரு அலுவலக அதிகாரியின் சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு எனக்காக கேன்டீனில் பக்கோடா வாங்கி வருவதாகச் சென்றார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை

சுற்றிலும் பார்த்தேன், ஒரு எறும்பு கொசு கூட அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் அறிகுறி எனக்குத் தென்படவில்லை. எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். சத்த சத்தமாக ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முதல் நாள் தான் எனது பெரியப்பாவின் மகள் அனுராதா என்னை விட ஆறு ஏழு மாதம் வயதில் பெரியவள், ஆனால் வகுப்பில் ஓர் ஆண்டு குறைந்தவள். வித்யோதயா பள்ளியில் ஆங்கிலப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் இருந்தாள். அவளது பள்ளி ஆண்டு மலரில் இரண்டு தமிழ் கவிதைகள் எழுதியதாக எல்லோருக்கும் காட்டி பாராட்டைப் பெற்றுக் கொண்டிருந்தாள். எனக்கு லைட்டாக பொறாமை என்று சொல்லவும் வேண்டுமோ? அந்த நிகழ்வினை நான் அந்த ரயில்வே அலுவலகத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமயம் எனது பெரியப்பாவும் (ரயில்வே தான் - ஆனால் பக்கத்து அலுவலகம்) அங்கே வந்தார். "என்னடா இங்கே என்ன செய்கிறாய்? எங்கே உன் அப்பா?" என்றார். அவர் கான்டீன் போன விஷயம் சொன்னேன். அவரும் அங்கே கிளம்ப ஆயத்தமானார். அவரிடம் ஓரிரு காகிதங்களும் ஒரு பேனாவும் வாங்கிக் கொண்டேன்

அந்த மதிய நேரத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் எனது வாழ்வில் நடந்தன. ஒன்று நான் நிச்சயம் பின்னாளில் அரசுப் பணியில் சேர மாட்டேன் என்ற முடிவு. மற்றொன்று அனுராதாவை நினைத்துக் கொண்டு அந்தக் காகிதங்களில், 'மலை', 'மயில்', 'கடல்' இது போன்ற மொக்கை தலைப்புகளில் கவிதைகள் நான்கோ ஐந்தோ எழுதினேன். அவை கவிதைகள் என்று சொல்லி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வீடு வந்து எல்லோரிடமும் காட்டினேன். யாரும் பெரிதாக அவற்றைப் படித்து விட்டு சிலாகிக்கவில்லை. எனது அம்மா மட்டும் சொன்னார், பரவாயில்லை நல்ல முயற்சி என்று. அப்பாவிடம் நான் காட்டவே இல்லை

அதன் தொடர்ச்சியாக அப்போது நான் DB ஜெயின் கல்லூரியில் பி யூ சி படித்துக் கொண்டிருந்தேன். எனது தமிழ் ஆசிரியர் 'சுட்டி' தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் சுந்தர் அவர்கள். இப்போது மிகப் பிரபலமாக விளங்கும் திருநின்றவூர் பாண்டுரங்கன் எனது வகுப்புத் தோழன். நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அது மரபா அல்லது கவிதை தானா என்று கூட எனக்குத் தெரியாது. பிறகு பட்டப் படிப்பிற்கு A M ஜெயின் கல்லூரியில் சேர்ந்தேன். நான் வசித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு டைப் ரைட்டிங் பயிற்சி நிறுவனத்தில் (இன்றைய அழகிய சிங்கர் - நவீன விருட்சம்) சந்திரமௌலி என்ற என்னை விட வயதிலும் உயரத்திலும் மூத்தவர், எனது கல்லூரித் தோழன் எஸ் வி வேணுகோபாலன், மறைந்த சொர்ணவேலு ஆகியவர்கள் இணைந்து இளங்கவிஞர் இயற்றமிழ் மன்றம் ஒன்று தொடங்கி இரு வாரத்திற்கு ஒரு முறை கவிதை வாசிப்பு செய்யும் கவியரங்கம் நடத்தினர். நான் அங்கு என்ன தலைப்பிலும் வாசிக்கலாம் என்பதால் எனது கெக்க பிக்க கவிதைகளை வாசித்து விட்டு வருவேன். அப்போது ஒரு தமிழ் ஆசிரியர் புலவர் ஒருவர் எங்களுக்கு யாப்பு கொஞ்சம் கற்றுத் தந்தார். பிறகு நாங்கள் சந்திரமௌலி அவர்களின் தலைமையில் ஒரு கையெழுத்து பிரதி ஒன்றை ஆரம்பித்து அதில் எழுதி எல்லோரையும் தொல்லை செய்தோம். நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு வரும் போது அந்தக் கல்லூரியின் தமிழ் மன்ற செயலாளர் என்ற பதவி கிடைத்தது. அப்போது அனைத்துக் கல்லூரி பட்டிமன்றம் ஒன்றை நானும் நண்பர் ராஜசிம்மனும் (எங்கு இருக்கிறார் என்று தெரியாது) ஏற்பாடு செய்தோம், அதற்குத் தலைமை நமது அன்பிற்குரிய மதிப்பிற்குரிய டாக்டர் அவ்வை நடராசன் அவர்கள். அப்போது எனக்கு தமிழ் ஆசிரியர் மறைந்த நாகநந்தி (வேணுகோபாலன்) அவர்கள். அவர் தான் ஆர் எஸ் மனோகர் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்

அவ்வமயம் நானும் நண்பர் ராஜசிம்மனும் எல்லா அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று கலந்து கொண்டு டீம் பரிசாக கிட்டத்தட்ட 60 பரிசுகள் வாங்கினோம். அப்போது போட்டிக்கு வந்தவர்கள் என்னை விட சீனியர்கள் டாக்டர் சுதா சேஷன், வக்கீல் ராமலிங்கம், மணிமொழி என்று பெரிய பெரிய ஜாம்பவான்கள்

எப்போது பார்த்தாலும் கவிதை, இலக்கியம் என்று அலைந்த என்னை ஒரு முடிவோடு எனது தந்தை எனது கடைசி பரீட்சை ஏப்ரல் 30, 1979 அன்று இரவே மும்பைக்கு மூட்டை கட்டித் துரத்தி விட்டார். அங்கே வேலை உடனே நான்கைந்து நாட்களில் கிடைத்தது. கூடவே நிறைய தமிழ் மீது பற்று கொண்ட நண்பர்கள். மும்பை மாதுங்கா தமிழ் சங்கக் கூட்டங்களுக்கு சில சமயங்கள் செல்வது உண்டு. ஒரு முறை மூத்த எழுத்தாளர் சிவசங்கரி அம்மா வந்தார்கள். அவரைப் பற்றிக் கவிதை எழுதி வாசித்து அவரிடம், "உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என்று கையொப்பம் பெற்றேன். பிறகு பத்திரிகை பலவற்றிற்கு அங்கிருந்து கவிதைகள், துணுக்குகள் என்று கபாசு மணியன் என்ற பெயரில் அனுப்புவேன். சில பத்திரிகை மும்பை வாசகர் என்பதாலோ என்னவோ அவற்றைப் பிரசுரித்தது. பிறகு அங்கிருந்து மஸ்கட் சென்றேன். தொடர்ந்து கவிதைகள், இசையுடன் கூடிய பாடல்கள் எல்லாமே எழுதி வந்தேன்.

1987 ஆம் ஆண்டு, சென்னை திரும்பி விட்டேன். மேற்கு மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் எனது வீடு (வாடகை வீடு). எதிர் வீட்டு ஸ்வயம்வராலயா ஜானகிராமன் அண்ணா எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது எனது அடுத்த வீட்டில் தான் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஐயா குடியிருப்பதாக சொல்லி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று நான் எழுதிய கவிதைகளை தொகுத்து 'தலையுதிர்காலம்' என்று சிறு புத்தகம் வெளியிட ஆசையோடு அவரை சந்தித்தேன். எனது இயற்பெயரை சொல்லி விட்டு, எனது புனைபெயர் 'பாலசாண்டில்யன்' என்று சொன்னேன். உடனே ஐயா அவர்கள் அதன் காரணம் கேட்டார். நான் சாண்டில்ய கோத்திரம் என்று சொன்னேன். எல்லா புகழும் ஒரிஜினல் சாண்டில்யனுக்கு போய் விடும், பெயரை மாற்றிக் கொள்ளேன் என்றார் அன்பொழுக. நான் பிடிவாதமாக, துணிச்சலாக அவரிடம் மறுத்து விட்டேன். பின்னர் எனக்கு நல்லதொரு அணிந்துரை கொடுத்தார். பிறகு இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா. மறுநாளே என்னை திரு ஜானகிராமன் ரொம்ப சஸ்பென்ஸ் கொண்டு ஒரு விழாவிற்கு கூட்டிச் சென்று என்னை ஒரு சிலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் தான் உரத்த சிந்தனை திரு உதயம் ராம் மற்றும் திரு ராஜசேகர். அன்று அவர்களின் ஆண்டு விழா, அதிலே திருமதி பத்மாமணி அம்மையார் ஜீவீ விருது பெற்றார்கள். நானும் ஒரு நாள் இந்த விருதினை பெறுவேன் என்று மனதில் பேராசை கொண்டேன். (அப்படியே எனக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு GV அவர்கள் கையாலேயே கிடைத்தது)

நான் அஸ்வினி நட்சத்திரம் என்பதால், அசுவதி, சாருரூபன் (எனது பெரியம்மா பெண்ணின் பெயர் சாரு), கபாசு என்றெல்லாம் எழுதிய போது யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. கொட்டும் மழையில் எழிலகம் அலுவலகத்தில், மெரினா கடற்கரையில் எழுத்தாளர்கள் சுபா, ஐயா ஏர்வாடி ஆகியோர் உட்பட 13 பேர் முன்னிலையில் எனது கவிதை புத்தகம் வெளியானது. உரத்த சிந்தனை மூலம் அது நூற்றுக் கணக்கானவர்களுக்கு பின்னாளில் போய் சேர்ந்தது. கவிதை உறவு நடத்திய கவிதை இரவில் பங்கு பெற்று பல கவிதைகள் வாசித்தேன். பல பிரமுகர்களை சந்தித்தேன்

இருப்பினும் முகமும் முகவரியும் எனக்குத் தந்து என்னையும் ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடலாசிரியராக, டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ஆக்கி பன்முகத் தன்மை தந்தது உரத்த சிந்தனை தான். அப்படி பாலசாண்டில்யன் ஆன பிறகு எல்லாமே ஏறுமுகம் தான். எனது தந்தை கவிதை நான் அன்று எழுதியதை விரும்பாதவர் பின்னாளில் நான் கவிஞர் எழுத்தாளர் பாலசாண்டில்யனின் தந்தை என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார் (அவர் பப்ளிக் ஹெல்த் சென்டரின் துணைத் தலைவர் என்றாலும்)

பாலசாண்டில்யன் ஆன பிறகு, வளர்தொழில், ஏற்றுமதி உலகம், தொழில் முன்னேற்றம், பொருளாதாரம், ஆனந்த விகடன், அமுதசுரபி, கலைமகள், மங்கையர் மலர், வானொலி, பொதிகைத் தொலைக்காட்சி எல்ல்லாவற்றிலும் எனது கவிதை, கட்டுரைகள், தொடர்கள், சிறுகதைகள், எல்லாமே வெளிவந்தன. மணிமேகலை பிரசுரத்தின் பிரபலமானவர் புத்தகத்தில் எனது பெயர், முகவரி அச்சில் வந்தது. அது மட்டுமா? உலகநாயகன் கமல்ஹாசன், விசு சார், டெல்லி கணேஷ் சார், எஸ்பிஎம் சார், எஸ்வி சேகர், கிரேசி சார், மற்றும் பல பிரபலங்கள் பத்திரிகைத்துறை, சினிமாத்துறை, எல்லோரிடமும் பாலசாண்டில்யன் என்ற பெயர் பரிச்சயம் ஆனது. தீபாவளி மலர்களில் எனது படைப்புகள் வெளிவந்தன. உரத்த சிந்தனை அமைப்பில் பொறுப்பு, பத்திரிகையில் பொறுப்பு என்று என்னை சிறு சிறு உளி கொண்டு செதுக்கிய பெருமை உடன் பிறவா சகோதரர் உதயம் ராம் அவர்களுக்கும், அவருடன் மெளனமாக என்னை எல்லாப் பணிகளிலும் சேர்த்துக் கொண்ட தலைவர் எஸ்விஆர் அவர்களை நான் எனது உயிர் உள்ளவரை மறக்க முடியாது.

உதயம் ராம் அவர்கள் எனக்கு கொடுத்தது புதிய பொறுப்புகள் மற்றும் பரிமாணங்கள், சன் டிவியில் திரு சோ சாருடுடைய 'சோவின் பஞ்சாயத்து' மற்றும் ராஜ் டிவியில் 'துக்ளக் தர்பார்' மற்றும் டிஎன் சேஷன் அவர்கள் கலந்து கொண்ட 'சென்சேஷன்', சிவசங்கரி அம்மாவின் நேற்று இன்று நாளை, விசு சாரின் 'அரட்டை அரங்கம்', மற்றும் மறைந்த திரு ஜெயகாந்தனின் 'ஒரு பிரஜையின் குரல்', மற்றும் எஸ்வி சேகர் அவர்களின் 'இனிமே நாங்க தான்', பிறகு அபஸ்வரம் ராம்ஜி அவர்களின் 'பேச்சுக் கச்சேரி' போன்ற அனைத்து டிவி நிகழ்வுகளிலும் என்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இணைத்துக் கொண்டு எனது பெயர் டைட்டில் கார்டில் வரவழைத்து பார்த்து பெருமைப்பட்டார், பெருமைப் படவைத்தார். இது வரை 400 முறைக்கு மேலாக நான் எல்லா டிவி சானல்களிலும் வந்துள்ளேன் என்றால் அதற்கு 'பாலசாண்டில்யன்' என்ற பெயரும் அதற்கு அங்கீகாரம் கொடுத்த உரத்த சிந்தனையும் தான் காரணம்

கூடவே எனக்கு எப்போதும் உற்சாகம் மற்றும் ஆதரவு கொடுத்தது இலக்கிய ஆசான் திரு விக்கிரமன் ஐயா, ஏர்வாடி ஐயா, கிரிஜா ராகவன் அவர்கள், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், கீழாம்பூர் அவர்கள், லோகநாயகி அவர்கள், என்றால் மிகையல்ல. அவர்கள் அனைவர்க்கும் எனது கோடான கோடி நன்றி மலர்களையும் வணக்கங்களையும் இந்த கட்டுரை வாயிலாக சமர்ப்பிக்கிறேன்.

இந்த கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் சொல்ல வேண்டிய தகவல் என்னவென்றால் 'பாலசாண்டில்யன்' என்ற இந்தப் பெயர் வைத்துக் கொள்ள நான் எனது வீட்டில் கூட யாருடைய அனுமதியும் யோசனையும் கேட்கவில்லை. ஆனால் அவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது எங்கள் குடும்பத்தில் பிறந்துள்ள சில குழந்தைகளுக்கு இந்த 'சாண்டில்யன்' என்ற பெயரை இணைக்கிறார்கள்.

இந்தப் பெயர் வைத்துக் கொண்டதால் அன்று முதல் முதல் விக்கிரமன் அவர்கள் சொன்னது போல பல பேர் என்னைக் கேட்காமலே நான் திரு சாண்டில்யன் அவர்களின் மகன் என்றே நினைத்து யூகித்தார்கள். நானே வலியச் சென்று நான் அவர் மகன் இல்லை என்று விளக்கம் சொல்லுவேன். பிறகு தேடி அறிந்து சாண்டில்யன் அவர்களின் மகள் (இசைக்கலைஞர்) மற்றும் மகன் (பேராசிரியர்) என்று தெரிந்து கொண்டேன்

நிறைவாக ஒரு கொசுறு செய்தி.அண்மையில்  கிரி ட்ரேடிங் திரு சுரங் டிஎஸ் ரங்கநாதன் அவர்களின் குரலில், கண்ணன் (தமிழ்ப்படம் எனும் படத்தின் இசை அமைப்பாளர்) இசையில், எனது பாடல் வரிகளில், சிவசங்கரி அம்மா அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டு திரை இயக்குனர் திரு வசந்த் சாய் அவர்கள் பெற்றுக் கொண்டார். அந்த சிடியில் எனது இயற்பெயராகிய 'பாலசுப்பிரமணியன் கல்யாணராமன்' என்று வெளியானது - பாலசாண்டில்யன் என்று அதில் இல்லை. விழாவின் போது சிவசங்கரி அம்மா, உரிமையாக கூப்பிட்டு, "என்ன இது 'பாலசாண்டில்யன்' என்று போடாமல் நீட்டி முழக்கி வேறு பெயர் போடப்பட்டுள்ளது.  யாருக்கு தெரியும் இந்தப் பெயர், எல்லோருக்கும் உங்களை பாலசாண்டில்யன் என்றால் தானே தெரியும், அடுத்த பதிப்பு சிடியில் சரி செய்யுங்கள்  என்று சொன்னார். அந்த விஷயத்தை திரு ரங்கநாதன் அவர்களின் காதில் போட்டு வைத்தேன் ஒரு விண்ணப்பமாகஅந்த விழாவில் சிவசங்கரி அம்மாவின் எனது மும்பை 1980 களில் ஏற்பட்ட சந்திப்பை, அவரது ஆசியை நினைவு கூர்ந்து பேசினேன். அவர் உடனே எழுந்து 'இப்போது சொல்கிறேன், பாலசாண்டில்யன், நீங்கள் நிச்சயம் மிகப் பெரிய அளவில் இனி அறியப் படுவீர்கள்' என்று ஆசி கூறினார். கண்கள் குளமாகின எனக்கு

பெயரியல் நிபுணர் திரு ராஜராஜன் ஒரு முறை சொன்னார், நீங்கள் யாரைக் கேட்டீர்கள் என்று தெரியாது, ஆனால் இந்தப் பெயர் உங்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய பலம் என்று வாழ்த்தினார். இந்தப் பெயர் எனக்கு மனதில்  தோன்ற வைத்த இறைவன், அதனை நிலைக்க வைத்த உரத்த சிந்தனை, இன்னும் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் எனது பெற்றோர்கள்,  எனது அக்கா அனுராதா (கவிஞர் ஆக்கியவர்), அனைவர்க்கும் இன்று நான் நன்றி சொல்கிறேன். கடைசி ரகசியம் என்னவென்றால் - எங்களுக்கே அண்மையில் தான் தெரியும் எனது தாயார் லட்சுமி அவர்கள் 100 க்கும் மேலாக பாடல்கள் எழுதி இசை அமைத்து வைத்து டைரியில் எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த எழுதும் திறமை நிச்சயம் ஜீனில் உள்ளது. தாங்க்யூ அம்மா. திருமணத்திற்கு பிறகு எனது முதல் வாசகி திருமதி சுகீர்த்தி பாலசாண்டில்யன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல
என்னை முன்னேற்றியவர்கள் பெயர் ஏதாவது விடுபட்டுப் போய் இருந்தால் எனது வயது தான் அதன் காரணம் - அதனால் மறதி.