Monday, November 29, 2021

காதல் கடல்

 

காதல் கடல் 

குறுங்கதை 

- பாலசாண்டில்யன் 

 

ரேணு அந்த தாடிக் கிறுக்கனுடன் மால், தியேட்டர், ஹோட்டல் என்று ஓயாமல் சுற்றுவதைப் பார்த்து விட்டு சும்மா இருக்க முடியவில்லை காளையனுக்கு.  

 

ரேணுவை இவன் ஒன்றும் காதலிக்கவில்லை. இருந்தாலும் 'என் முறைப்பெண்ணை வேறு ஒருத்தன் எப்படி காதலிக்கலாம்' என்ற பொறாமை மனதை ஏதோதோ சிந்திக்க வைத்தது.

 

"ஏண்டா காளை, என்ன எப்போ பாத்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுகிட்டு இருக்கே? பகல்ல குடிக்கிறே ! என்னாச்சு உனக்கு?" இவனுக்கு தனது அம்மாவிடம் உண்மைய சொல்லவும் முடியல, மெல்லவும் முடியல.

 

"மாமா, எனக்கு எப்போ ரேணுவ கட்டித்தர போறே?" நேரடியா கேட்டான். மாமா, "அவ இப்போ தான் படிக்கிறா, கொஞ்சம் நாள் போவட்டும், எவ்வளவு நாள் ஆனாலும் அவ ஒனக்கு தாண்டா மருமவனே!" என்றார்.

 

அவன் பாத்த உண்மைய போட்டுடைத்தான் காளை. இவன விட அதிகம் கோபம் கொண்ட மாமா "டேய் அவன் யாரா வேணா இருக்கட்டும் நீ அவன கண்டம் துண்டமா வெட்டிட்டு வந்து விஷயத்த சொல்லு, உனக்கு ஒன்னும் ஆவாம பாக்கறதுக்கு நான் இருக்கேன்." அதுக்குத் தான் காத்திருந்தது போல புறப்பட்டான் காளை.

 

கையும் களவுமா சிக்குனான் அந்த தாடிக்காரன் ரஞ்சித். கையில் இருந்த கழியால மண்டைல ஒரே போடு போட்டு அவன தூக்கி அந்த இன்னோவா வண்டில போட்டு கெளம்பினான் காளை

 

அத பாத்த ரேணு கதறினா. கூச்சல் போட்டா. ஒத்தாசைக்கு யாரும் வரல. பயங்கர மழை வேற. ரேணு கண்ணு அடுத்த வாரம் நம்ம கல்யாணம்னு கத்திப்புட்டு  வண்டிய விரட்டுனான்.

 

வண்டி அந்த பலத்த மழையிலும் பாய்ந்து ஓடியது. கிட்டத்தட்ட கடலூரை நெருங்கினான். சிதம்பரம் வந்து அந்த ரைஸ் மில்லுல ரஞ்சித்தை முடிக்கறதா இவன் பிளான்

 

மேல இருக்கறவன் பிளானே வேறயா இருந்துச்சு. அந்த கடலூர் சிதம்பரம் பாதை வெள்ளம் சீறிப் பாயுற வண்டிய அப்படியே பொறட்டி பொறட்டி உருள வெச்சுது

 

காளை ரஞ்சித் ரெண்டு பேருமே ஓடுற தண்ணியில விழுந்து உயிருக்கு போராடி தோத்து போனாங்க. ரெண்டு பேருமே சீட் பெல்ட் போடல. அது தான் எமனோட கயிறுல சிக்க வசதியா போச்சு.

 

ரஞ்சித் என்ன ஆனான்னு ரேனுக்கு தெரியாது. காளை என்ன ஆனான்னு ஊருல மாமாவுக்கும் மத்தவங்களுக்கும் தெரியாது

 

ஓடுற வெள்ளக்காட்டுல புதைஞ்சு போனது ரெண்டு உசுரு மட்டுமல்ல. ரெண்டு பேரோட கல்யாண ஆசயும் தான்.

 

சிகிச்சை

 

சிகிச்சை 

 

ராஜனுக்கு வயது 75 இருக்கும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வாழ்வியல் மதிப்புகள் பற்றிய போதனைகளை சொல்லிவிட்டு வருவார். தினமுமே மனைவி செல்லத்திற்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்வார். உறவினர்கள் வீட்டிற்கு சில சமயம் சென்று வருவார்

 

ஒரே பையன் மஹேஷுக்கு வெளியூரில் வேலை. அவ்வப்போது வெளிநாடும் சென்று விடுவான்

 

ஒரு சமயம் தனது பையன் ஊரிலிருந்து வந்திருந்த சமயம் வெகுநேரம் காலை பேசிக் கொண்டிருந்து விட்டு தாமதமாக குளிக்கச் சென்றார். வெளியில் வரும் போது யாரோ தள்ளியது போல உணர்ந்து இடுப்பில் துண்டுடன் கட்டிலில் அமர்ந்து கொண்டார். சில நிமிடங்களில் கண்கள் சொருகியதுமனைவி செல்லமும் மகன் மகேஷும் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு சென்றனர்

 

ராஜனை உள்ளே ஒரு ஸ்ட்ரெச்சரில்  போட்டு தள்ளிக் கொண்டு விரைந்தனர். செல்லம் அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் தனது மாமாவிற்கு போன் செய்து விட்டு, அப்பா அட்மிஷன் செய்திட அங்கே கொடுத்த பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் முன்பணமும் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டான்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் ராஜன் பொட்டலம் கட்டப்பட்டு சடலமாக வண்டியில் ஏற்றப்பட்டார். அதற்கு காரணம் இருந்தது. மகேஷ் இது அறியாமல் கண்ணை மூடி பிரார்த்தனையில் இருந்தான்.

 

அங்கே மகேஷின் மாமா - ஒரு சமூக ஆர்வலர் மற்றும் ஒரு பத்திரிகையாளர்தனது அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உள்ளே நுழைந்து விட்ட போது ஓரிரு  நர்சுகள், மற்றும் இரண்டு டாக்டர்கள் ராஜனை நெஞ்சில் குத்திக்கொண்டு இருந்தனர். ஒரு ஊசியும் போட தயாராக இருந்தனர்

 

மகேஷ் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நடப்பது என்ன என்ற விபரம் கேட்ட போது புரிந்து கொண்டார்  ராஜன் அங்கே கொண்டு வரும் போதே இறந்து விட்டார் என்று. மருத்துவமனை ஊழியர்கள் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் தமது வழக்கமான பணியை  முடித்துக் கொண்டனர்.

 

தட்டிக் கேட்காவிட்டால் சடலத்துக்கு மருத்துவ சிகிச்சை அளித்து குறைந்தது ஒரு வாரம் கடத்தி பெரியதொரு பில் கொடுத்திருப்பர்.

 

நடந்திருக்க வேண்டிய சிகிச்சையை மகேஷ் வழங்கியதால் மகேஷுக்கு மீதி பணம் கூட கிடைத்தது