Sunday, December 29, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 50



50. எங்கும் யார் பொறுப்பு என்பதே கேள்வி
(This article is dedicated to all the Social Soldiers)
"உன் அழகுக்கு தாய் பொறுப்பு. அறிவுக்கு தமிழ் பொறுப்பு. புகழுக்கு வான் பொறுப்பு. பொறுமைக்கு மண் பொறுப்பு. குணத்துக்கு பொன் பொறுப்பு. நிறத்துக்கு மலர் பொறுப்பு. உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு" என்ற பிரபல பாடல் வரிகளை 'ஆளவந்தான் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி இருப்பார்கள்.
பொறுப்பு என்பது ஒரு நபர் இடப்பட்ட பணியை அல்லது கடமையை செவ்வனே நிறைவேற்றுவது எனலாம். நிறுவனம் என்றால் ஒருவரின் நிலைக்கு ஏற்ப சில பொறுப்புக்கள் மற்றும் கடமை சார்ந்த பணிகள் அவரது மேலதிகாரிகளால் ஒதுக்கப்படும். அதனை செய்து முடிப்பது அவரின் கடன் அல்லது கடமை எனலாம்.அதுவே குடும்பம் எனும் நிறுவனம் என்றால் இல்லத்தரசி சமையல் மற்றும் வீட்டு நிர்வாகம், கணவர் என்பவர் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பது, பிள்ளைகள் நன்கு படித்து முன்னேறுவது என்று இந்த பொறுப்பு அவர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படாமல் பேசி அல்லது பேசாமல் முடிவு செய்யப்படுகிறது.
அரசுத் துறை என்றால் அரசின் சில துறைகள் சாலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தடையில்லா மின்சாரம் வழங்குதல் என்று தமது பொறுப்பை ஏற்று அதனை செய்து முடிக்கின்றனர். வழங்கிய பணியை முடிப்பது என்பது வேறு. தாமாக உவந்து தனக்கில்லாத ஒரு பணியை ஏற்று அதனை தனது தலையான கடமையாக எண்ணி பொறுப்புடன் செயலாற்றுவது வேறு.
'உரத்த சிந்தனை' என்ற எழுத்தாளர்கள் சங்கத்தினை ஏழு பேரைக் கொண்டு 1983 ஆம் ஆண்டு தொடங்கிய ராஜசேகர் மற்றும் உதயம் ராம் இருவரும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தமது அயராத பணியை மிகுந்த பொறுப்புடன் ஆற்றி வருகின்றனர். சாதாரண மக்களை சாதனை மக்களாக மாற்றி உள்ளனர். பலரின் நூலை வெளியிட்டு உள்ளனர். ஒரு மாதப் பத்திரிகையை நடத்தி வருகின்றனர். மகாகவி பாரதியின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக 'பாரதி உலா' எனும் நிகழ்ச்சியை (இந்த ஆண்டு 15 ஊர்களில் 40 நிகழ்ச்சிகள் திட்டமிட்டு செயல்படுத்தி அதன் வெற்றி விழாவை 30.12.19 அன்று விமரிசையாக கொண்டாடுகின்றனர்). பொறுப்பு என்பது இங்கே தானும் ஏற்று சிலருக்கு சில பொறுப்புக்களை பகிர்ந்து கொடுத்து இதனை செம்மையாக செய்து முடித்து உள்ளனர்.
தவிர, அளித்த பொறுப்பு அல்ல. தாமே முன்வந்து ஏற்ற பொறுப்பு.'சேவாலயா' 'ஆனந்தம்' 'மாதா கேன்சர் டிரஸ்ட்' 'தர்ஷினி' போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஓர் அரசு ஏற்க வேண்டிய பெரிய பொறுப்புகளை சில தனி நபர்கள் தன்னார்வத்தோடு சில அதே எண்ணம் கொண்ட நல்மனம் படைத்த நபர்களின் உதவியோடு அருமையாக செயல்படுத்தி வருகின்றனர்.
நான் வசிக்கும் போஸ்டல் காலனி முதல் தெருவில் (மேற்கு மாம்பலம்) ராமநாதன் மற்றும் நவநீதன் எனும் இரண்டு இளைஞர்கள் கற்பக கணேஷ், சந்தானம், அன்பு, பாஸ்கர் போன்ற அதே நோக்கம் கொண்ட சிலரின் உதவியோடு மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதால், தெருவின் சுத்தம், குடிநீர் வரத்து, தெருவில் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் சிறப்பாக இருக்கிறது. பகுதி MLA திரு சத்யா அவர்களை அழைத்து வந்து தெருவின் பிரச்சனைகளை சொல்லுதல், காவல் துறை துணை ஆணையரை வரவழைத்து பெண்களைக் காக்கும் புதிய செயலி 'காவலன்' அறிமுகம் செய்தல், குடிநீர் வரத்து சம்பந்தமாக உரிய அதிகாரிகளை சென்று சந்தித்து ஆவன செய்தல் எல்லாமே யாரும் சொல்லாமல் தாமே உவந்து ஏற்ற பொறுப்பு எனலாம்.
இப்போது யோசியுங்கள், 'பொறுப்பு' என்பது பிறர் கொடுப்பதா? தாமே ஏற்று செயல்படுத்துவதா? ஒவ்வொரு தனி நபருக்கும் (நாட்டின் குடிமகனுக்கும்) தெருவில் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவது, எச்சில் துப்பாது இருத்தல், சட்ட ஒழுங்கை மதித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்தல் போன்ற சில சொல்லப்படாத பொறுப்புக்கள் இருப்பதை உணர்ந்து செயல்படுவது முக்கியமாகிறது.
தனிநபர்களுக்கு சில பொறுப்புக்கள் உண்டு. குறிப்பாக அவர்கள் வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பு. அவர்களின் வெற்றி, தோல்வி, வருமானம், செலவு, சேமிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, கல்வி, வேலை, வேலையில் பதவி உயர்வு, குடும்பப் பராமரிப்பு என்று எதற்குமே அரசோ, பிறரோ, சமூகமோ, உறவினரோ, நண்பர்களோ வேறு யாருமோ பொறுப்பு அல்ல. அவர்களே முழுக்க முழுக்க பொறுப்பு.
நமது சிக்கல்களுக்கும் நமது சந்தோஷங்களுக்கும் எப்படி பிறர் பொறுப்பாக இருக்க முடியும்.ஒவ்வொருவரும் 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' (ஐ ஆம் ரெஸ்பான்சிபிள் பார் மை லைப்) என்று உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது யாரும் யாரையும் 'பழி' சொல்லும் இழிசெயல் வேண்டி இருக்காது.பிளேம் கேம் என்று சொல்லப்படும் இந்த பழி விளையாட்டு உலகெங்கும் வீட்டிலும், வெளியிலும், சமூகத்திலும், நடத்தப்படுகிறது. இது தமக்கு இருக்கும் பொறுப்பை தட்டிக் கழிப்பதால் வரும் விளைவே.
தட்டிக் கழிப்பது பொறுப்பு அல்ல. முட்டி மோதி முன்வந்து ஏற்பதே ஆகும். அதற்கு தன்னார்வம் என்று சொல்லுவது உண்டு. தம்முடைய செயல்களையே பிறர் செய்ய வேண்டும் என்று நினைக்கும் உலகில் பிறர் செயல்களை கடமைகளை யார் வந்து பொறுப்புடன் செய்வார்கள்.
இந்த உலகில் நிறைய உதயம் ராம்கள், முரளிதரன்கள், பாகீரதிகள், கிருஷ்ணமூர்த்திகள், விஜயஸ்ரீக்கள், ராமநாதன்கள், சௌமியாக்கள் தேவைப்படுகிறார்கள்.பொறுப்புகளை சொல்லாமல் ஏற்கும் நபர்களே நல்ல தலைவர்களாக விளங்குகிறார்கள். ஆகிடுவோம் நாமும் அப்படி பொறுப்புடன். ஏற்கும் பொறுப்பே மிகவும் சிறப்பு.
(இந்தப் பகுதி இன்றுடன் 50 செய்திகளைத் தொட்டு நிறைவடைகிறது தங்கள் ஆதரவுடன்)

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 49


பார்ப்பது தான் பார்வையா ?
நாம் காண்பது என்னவோ கண்கள் மூலம் தான். ஆனால் நாம் காணும் விஷயங்களை பிம்பங்களாக மாற்றித்தருவது நமது மூளையின் வேலையே. அதுவே கண் பார்வை அற்றவர்களின் மூளை விஷயங்களை பிம்பங்களாக மொழி பெயர்த்துப் புரிந்து கொள்ளச் செய்வது அவர்களின் காதுகள் எனலாம். இதனை ஒலி மூலம் பார்வை எனலாம்.
உலகில் சுமார் 285 மில்லியன் நபர்கள் பார்வை குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களில் சுமார் 38 மில்லியன் மக்கள் முழுமையாகவே பார்வை இழந்தவர்களாக (குருடு என்று சொல்ல எனக்கு மனம் இல்லை) இருக்கிறார்கள். மேலும் 247 மில்லியன் மக்கள் பார்வையில் குறைபாடும் கோளாறும் கொண்டவர்களாக உள்ளனர். இப்படிப் பார்வையால் பாதிக்கப்பட்ட மக்களில் 80% மக்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்று இணையம் சொல்லுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 12 மில்லியன் மக்கள் முழுமையாக பார்வை இழந்தவர்கள். மேலும் 48 மில்லியன் மக்கள் சுமார் அல்லது மோசமான கண் பார்வைக்கோளாறு உள்ளவர்கள் எனலாம்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலக பார்வை நாள் என்று கொண்டாடப்படுகிறது. நமது வாழ்வின் பல்வேறு விஷயஙங்களை 80 சதவீதத்திற்கு மேல் பார்வையால் மட்டுமே அறிய முடியும். ஒளி விலகல் பிழைகள் அல்லது கதிர்ச்சிதரவு, கண்புரை, பசும்படலம் எனப்படும் குளுக்கோமா, வயதுக் கோளாறு, நரம்புச் சிதைவு மற்றும் நீரிழிவு நோயின் தீவிர பாதிப்பு இவற்றால் மக்கள் கண் பார்வை இழக்கிறார்கள். சிலர் பிறவியிலேயே கண் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்கள்.
'தர்ஷனி' என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் அழைப்பை ஏற்று பார்வையற்ற அதே சமயம் கல்வியில் பல்வேறு சாதனை செய்து வாழ்வில் முன்னேறிய சுமார் 150 பேர் கலந்து கொள்ளும் ஆண்டு விழாவில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு. அதன் மூலம் பார்வையற்றவர்களைப் பற்றி மேலும் அறிய வாய்ப்பு கிடைத்ததன் விளைவு தான் இந்த கட்டுரை.
விழா நடக்கும் நேரத்திற்கு முன்பே விழா நடக்கும் இடத்திற்கு சென்று விடும் பழக்கம் உள்ளபடியால் விழா மேடைக்கு செல்லும் முன்பே அங்கே வந்திருந்த சில ஆண் பெண் சாதனையாளர்களை சந்தித்து அவர்களோடு அளவளாவ முடிந்தது. பெரும்பாலும் அவர்கள் முதுகலைப் பட்டம் முடித்தவர்களாக இருந்தனர். சிலர் முனைவர் பட்டம் பெற்று ஆசிரியர் பணியில், பேராசிரியர் பணியில், அரசுப் பணியில், அல்லது வங்கிப் பணியில் இருந்தனர். ஒருவர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களை ஆய்வு செய்து தனது முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஒரு பெண்மணி சொன்னார், ஒரு வேளை எனக்கு கண் தெரிந்து இருந்தால் என்னை எனது வீட்டில் படிக்க அனுமதித்து இருக்க மாட்டார்கள். இன்று நான் MA, B.Ed, படித்து இருக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. என்னால் சைவம் மற்றும் அசைவ உணவை சுவையாக செய்ய முடியும் என்று சொல்லி சிரித்தார்.
இன்னொரு நண்பர் சொன்னார், எனக்கு திருமணம் ஆகி விட்டது. எனது மனைவி குறைகள் எதுவும் அற்ற பட்டதாரி. நான் முதுகலைப் பட்டம் பெற்று கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். எனது மாண்வர்கள்  தொழில் நுட்பம் மூலம் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பதனால் நான் என்னை தினம் தினம் மேம்படுத்திக் கொள்ளுகிறேன். புதுப்பித்துக் கொள்ளுகிறேன். எனது கைபேசியில் டச் மூலமும், வாய்ஸ் மூலமும் என்னால் புத்தகத்தை வாய்ஸ் மூலம் படிக்க முடியும், எனக்கான ஓலா காரை ஆட்டோவை புக் செய்ய முடியும். முகநூலில் பதிவிட முடியும் என்றெல்லாம் சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்கள் அவர்கள்.
'ஜெயமுண்டு பயமில்லை' என்று எனக்கு அளிக்கப்பட்ட தலைப்பில் ஒன்றரை மணி நேரம் பேசி, நடுநடுவே பாடல்கள் பாடி அவர்கள் உலகிற்குள் புகுந்து திளைத்தேன். சிலர் எனது பேச்சை தமது கைபேசியில் வீடியோ பிடித்ததை காண முடிந்தது.
அவர்களிடம் மிகுந்த தன்னம்பிக்கை இருந்தது. அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். யாருமே குறை கூறவில்லை. யாருமே நெகடிவாக பேசவில்லை. யாருமே அனுதாபத்தை இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உலகைப் புரிந்து கொள்ளும் எம்பதி அல்லது பச்சாதாபத்தை மட்டுமே விரும்புபவர்களாக இருந்தனர். மற்றொரு ஆச்சரியமான விஷயம் அவர்களின் ஒற்றுமை, மூன்று பேராக அல்லது நான்கைந்து பேராக ஒருவருக்கொருவர் அவர்கள் கைகோர்த்து கழிப்பறை சென்றார்கள். மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார்கள்.
மேலும் கைகுலுக்குவதன் மூலம், நமது குரல் மூலம் நம்மை பற்றிய பிம்பத்தை அவர்களால் உள்வாங்கிட முடிந்தது. நாட்டு நடப்புகள் தெரிந்து வைத்திருந்தார்கள். நடைபாதை நடக்கும் வகையில் இல்லை. ஆங்காங்கே பள்ளம் மேடு உள்ளதையும், எதிர்பாராத பள்ளங்கள் இருப்பதையும் பற்றி மட்டுமே ஆதங்கப்பட்டார்கள். அவர்களின் ஆச்சரியமான உலகை கண்டு வியந்து போனேன்.
மனதின் மூலம் உள்வாங்கும் விஷயங்கள், நமது நுண்ணறிவு (இன்சைட்) மூலம் நாம் மனதால் கூடப் பார்க்க முடியும் என்ற ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தை இன்று உறுதி செய்து கொள்ள முடிந்தது. "நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்" என்ற பாடல் வரிகள் மனதில் வந்து போயின.  அவர்கள் பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை. அதன் மணம் அறிவர். கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை. ஆனால் அது விழுகின்ற சத்தம் அவர் அறிவர். அது போல நம்மை எல்லாம் காணாமலேயே புரிந்து கொள்ளுகின்றனர் நமது தொடுதல் மற்றும் குரல் கொண்டு. 
அவர்களைப் பற்றிய எனது பார்வை நிச்சயம் மாறித்தான் போனது. இந்த மாற்றுத் திறனாளிகள் பலர் பாடுகிறார்கள், வயலின், புல்லாங்குழல், கீபோர்டு, தபலா, மற்றும் கிட்டார் வாசிக்கிறார்கள். பலர் போல மிமிக்ரி செய்கிறார்கள். பார்வை இருந்தும் தவறுகள், குற்றங்கள், கொடுமைகள், தீங்குகள் செய்கிற மக்கள் போல இவர்கள் இல்லை. இவர்கள் தீங்கைப் பார்க்கவும் இல்லை. தீங்கு விளைவிப்பதும் இல்லை. இவர்கள் நன்மக்கள் மற்றும் மேன்மக்கள் என்பதே சரி.
எனவே பார்வை என்பது பார்ப்பது மட்டுமல்ல. மனிதர்கள், பொருட்கள், விஷயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய நமது கருத்து (பெர்ஸப்ஷன்) என்பதுவும் பார்வை தான். வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம். நமது சவால்களை, நமது கடினமான சூழல்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுவும் பார்வை தான். சவால்களை அணுகும் முறை, சூழலில் இருந்து மீண்டு எழுகிற பாங்கு, சமூகத்திற்கு நாம் தரும் பங்கு இவை எல்லாமே கூட பார்வை தான். உண்மையில் எனது கண்கள் இன்று திறந்து கொண்டது. 



Thursday, December 26, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 48


வேலை என்பது தெய்வீக வேள்வி 
எந்த ஒரு தொழில் நடவடிக்கையிலும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை, மற்றும் ஒருமைப்பாடு அவசியமாகிறது. தவிர நாம் செய்யும் வேலையில் அழகியல் மற்றும் அழகுணர்ச்சி மிகவும் முக்கியமாகிறது.
கலை, சுவை, நெளிவு சுளிவு இவற்றுடன் செய்யப்படும் செயல்களை அழகியல் கலந்து எனலாம். ஈடுபாடு, வேட்கை, நேர்மை மற்றும் ஆர்வம் இவற்றோடு ஒருவர் ஒரு செயலை செய்யவில்லை என்றால் அந்த வேலையில் நம்மால் லயிக்க முடியாது. சாக்கடை அள்ளுவது அல்லது அதன் அடைப்பை எடுப்பது, ஒரு பிணத்தை எரிப்பது போன்ற மிகவும் கடினமான ஒரு வேலையை அழகுணர்வுடன் செய்ய முடியாது. ஆனால் அந்த வேலை முடிந்த பிறகு அந்த இடத்தை அழகாக வைக்க முடியும். ஆனால் சிலர் அதே போன்ற வேலையை ஆடிப் பாடி செய்கின்றனர். அப்போது அவர்களுக்கு மனதில் வேதனை வலி தெரிவதில்லை. அவர்கள் உடுத்தி இருக்கும் ஆடை அழுக்காக இருந்தாலும் அவர்கள்  மனது தூய்மையானது.
சிலர் பாடும் பொழுது அவர்கள் முகத்தை அங்க அசைவுகளைக் காண சகிக்காது. ஆனால் அவர்கள் இசை மிகவும் நுணுக்கமாக இருக்கும். சிலர் பாடும் பொழுது பால் கறப்பது போல, பூச்சி பிடிப்பது போல, உதடுகளை சுளித்து, முகத்தை அஷ்ட கோணலாக்கி, காண்பவருக்கு கெட்ட கனவுகளைப் பரிசளிப்பர். இருந்தாலும் அவர்களின் இசை அறிவை, அவர்கள் வெளிப்பாடை பாராட்டுவோம். அதுவே அவர்கள் உணர்ந்து அழகுணர்வோடு அதனை செய்தால் எப்படி இருக்கும்?
சிலர் டிவியில் சமைப்பதை பார்ப்பதே மிகவும் சுவாரசியம் தான். வெங்கடேஷ் பட் அவர்களை புன்னகை, அவரது லாவகம், அவர் சமையலை சற்றும் வேதனை கஷ்டம் இல்லாமல் மிகவும் லாவகமாக அழகாக செய்து முடிப்பார். அவர் உண்ணாத சில உணவுகளை அதன் வாசம் உணர்ந்தே அதன் ருசி அறிவார். அதனையும் தாண்டி  அவர் செய்து முடித்த உணவை மேற்கொண்டு அலங்காரங்கள் செய்து (சுற்றிலும் கொத்தமல்லி இலைகள், தக்காளி, வெங்காயம், போன்றவை வைத்து அதனை அழகு செய்யும் விதம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும்) அதுவே அவர் நண்பர் ஒருவர் எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தெளித்து மிகவும் கொடூரமான முறையில் சமைத்துக் காட்டுவார். அதே போல சில இல்லத்தரசிகள் சமைத்து முடித்த பிறகு தமது சமையல் அறையை மிகவும் சுத்தமாக கண்ணாடி போல வைத்திருப்பார்கள். சிலர் மாறாக அந்த மேடையை சாக்கடை போல மிகவும் மோசமாக வைத்திருப்பார்கள். அதே போல சிலர் பாத்திரம் சுத்தம் செய்யும் விதமே மிக அழகு. சிலர் சுத்தம் செய்த பாத்திரம் அதன் பிறகும் மோசமாக இருக்கும்.
சில மெக்கானிக் ஷெட், சில அலுவலங்கங்கள் மிகவும் நேர்த்தியாக வைத்திருப்பர். சிலர் எது எங்கே என்று தேடுவதிலேயே பாதி நேரம் கழிந்து விடும். பாதி நேரம் அவர்களே காணாமல் தொலைந்து போவதும் உண்டு. சிலர் அலமாரிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கைப்பைகள் கோடௌன் போல இருக்கும். அதனை சரி செய்ய நேரமில்லை என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.
வெளிநாடுகளில் பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் சுத்தமாக, துர்நாற்றமின்றி இருக்கும். சிலர் வீட்டு கழிப்பிடங்கள் பொதுக் கழிப்பிடங்கள் போல மிகவும் மோசமாக குமட்டிக் கொண்டு வரும். தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு இருந்தால் நிலையை தலைகீழாக நல்ல முறையில் மாற்ற முடியும். இது தனிநபரின் மனப்பாங்கு சம்பந்தப்பட்டது.
மிகவும் கீழ் நிலை ஊழியர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் ரொம்ப நேர்த்தியாக, சுத்தமாக, அழகாக ஆடை உடுத்தி வலம் வருவார். அதுவே மிக உயர்ந்த ஓர் அரசு அதிகாரி கசங்கிய சட்டை, பாத்ரூம் செருப்பு, சவரம் செய்யாத முகம், வெட்டாத நகங்கள் என்று முக்கிய கூட்டங்களுக்கு வருவதைக் காண முடியும். 
நமது ஊர்திகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப நாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கடைக்கே செல்லுவோம். ஏன் எனில் அவர்களின் கடப்பாடு, சுத்தம், தரம், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் எல்லாமே தான். ஷெல் நிறுவனங்களில் அங்கே இருப்பவர்கள் கை எடுத்து கும்பிடுவார்கள். வாயால் நன்றி சொல்லுவார்கள். சில நேரம் பெட்ரோல் போடும் அந்த நேரத்தில் வேறொருவர் வந்து வண்டியின் கண்ணாடியை சுத்தம் செய்து விட்டு காசு கொடுத்தாலும் புன்னகையுடன் மறுத்துவிடுவர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி அப்படி. சில துணிக்கடைகளில் கூட அப்படித்தான். சில நகைக்கடைகளில் கூட இதனை பார்க்கலாம்.
சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புன்னகையுடன் வலிக்காமல் ஊசி போடுவர், மருந்து தருவர். சிலரைப் பார்த்தாலே வலிப்பது போலவே இருக்கும். சிலர் அவர்களே வலிப்பு வந்தது போல இருப்பர்.(டாக்டர்கள் கோபிக்க வேண்டாம்)
சில விமானங்களில் நம்மை வணக்கம் சொல்லி வரவேற்பார்கள். பயணம் முடிந்ததும் வணக்கம் நன்றி சொல்லி அனுப்பி வைப்பார்கள். சிலர் வணக்கம் ஏன் சொன்னார்கள் என்று அவர்களின் முகமே காட்டி விடும். சிலர் சொல்லும் வணக்கமே வேண்டா வெறுப்பாக இருக்கும். சில வங்கிகள் மிகவும் அற்புதமான சேவையை கூடுதல் கட்டணம் இன்றி செய்து தருவர். சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி என்று சில வங்கிகளைக் குறிப்பிட்டு சொல்லலாம். சிலர் மோட்டார் பொறுத்தப்படாத இயந்திர ரோபோக்களை போல நடந்து கொள்ளுவார்கள். அதனை சில ஹோட்டல் ரிசப்ஷனில் பார்க்கலாம். அதே போல சில கார் ஓட்டுநர்கள் மிகவும் கனிவாக, மரியாதையாக நடந்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். சிலர் சினிமா வில்லன் போலப் பார்ப்பதும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு போகிற வழியில் எல்லோரையும் திட்டிக் கொண்டு சண்டை வளர்த்துக் கொண்டு, ஏன் தான் அவர்கள் வண்டியில் நாம் ஏறினோம் என்று நினைக்க வைப்பார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்றால். செய்யும் செயலில் கூட தெய்வம் இருக்காதா? அது அழகாக, நேர்த்தியாக, லாவகமாக, சீராக இருக்கும். எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும். 


சிலர் மேடையில் ஏறும் முன்பு படியை முத்தம் இடுவார்கள். கண்ணில் ஒற்றிக் கொள்ளுவார்கள். அதே போல சில விளையாட்டு வீரர்கள், சில இசைக்கலைஞர்கள், சில நடிகர்கள் தமது தொழிலை மிகவும் மதித்து, ரசித்து, போற்றி, மிகுந்த ரசனையுடன் மரியாதையடன் செய்வதைப் பார்க்கலாம். அவர்களைப் பார்க்கும் போது நமக்கு மனதில் இறைவனைப் பார்ப்பது போன்ற மரியாதை தோன்றும். இது அவர்களின் தொழில் பக்தி என்றால் அது மிகையல்ல. ஞானமும், பக்தியும், ஈடுபடும் இருந்து விட்டால் செய்யும் எந்த செயலும் மிகவும் தெய்வீகமாக அழகாக நேர்த்தியாக இருக்கும். என்ன சந்தேகம்?

Wednesday, December 25, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 47


வாழ்திறன் அவசியம்

இன்றைய  மாறி வரும் உலகத்தில் சில பல வாழ்திறன் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் பிழைத்து முன்னேறலாம் என்று ஆகி வருகிறது. சரி தானே? வாழ்திறன் என்றால் இன்றைய மாறிவருகிற டிஜிட்டல் யுகப்புரட்சியில் பல்வேறு புதிய விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே வாழ்வின் புதிய சவால்களை சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

புறவெளியில் காண்கிற பிறவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் கூட்டம் ஒரு புறம், மால் எனும் பல்வகை நாகரீக மாளிகைகளில் சுற்றித் திரியும் கூட்டம் மறு புறம் என்று இன்று இந்தியா இரண்டாகப் பிரிந்து பிளந்து கிடக்கிறது. தனது பெயரைக் கூட எழுதத் தெரியாத சிலர் மற்றும் அடுத்தவர் கையெழுத்தைப் போட்டு அல்லது பாஸ்வோர்ட் பயன்படுத்தி அக்கௌன்ட் ஹாக் செய்யும் சிலர் என்று மேலும் இரண்டாகப் பிரிந்து இருக்கிறது இளைய தலைமுறை

இதற்கு நடுவில் ஒரு சில திறன்கள் இருத்தல் அவசியம் என்று உலகம் அறிவிக்கிறது. அந்தப் பட்டியலை அறிய நிச்சயம் ஆவல் இருக்குமே..! 

தானே டை கட்டிக் கொள்வது, லேஸ் இருக்கும் காலணி அணிந்து கொள்வது, புத்தகம் படிக்க, இணையத்தில் நம்பகமான விஷயத்தை தேடி எடுக்க, ஒரு புத்தகத்தை படித்து விமர்சனம் செய்ய, ஒரு கதையோ நகைச்சுவையோ அழகாக நயமாக சொல்லத் தெரிதல், நினைவு கூர்ந்து ஒரு கவிதையை பழமொழியை சொல்லுதல், கிழிந்த துணியை மற்றும் சட்டை பட்டன் தைக்க, தோய்த்த துணியை இஸ்திரி செய்ய உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

நண்பர்கள் வந்தால் தேனீர் போட்டுத் தர, புதிய டிவி சானெலை தேடி ரிமோட் மூலம் வைக்க, ரூம் ஏசியை குறைக்க கூட்ட, வீட்டில் பியூஸ் போனால் அந்த ஒயரை மாட்ட, பல்பை மாற்ற, இரண்டு சக்கர வண்டியில் பஞ்சர் ஆனால் வீல் மாற்றிட, நல்லதொரு போட்டோ எடுக்க, குழந்தையை தூங்க வைக்க, ஆபத்தில் இருக்கும் வயதானவருக்கு மருந்து கொடுத்து உதவ, திடீர் என்று ஒரு தலைப்பில் எழுத மற்றும் பேச, சொந்தமாக ஒரு பவர் பாயிண்ட் ப்ரெசென்ட்டேஷன் செய்ய, ஆபத்து என்றால் நதியில் கிணற்றில் நீந்த, ஓடும் வண்டியில் ஏற இறங்க, தெரியாத மொழியில் ஓரிரு வார்த்தையாவது பேச என்று இந்த பட்டியல் நீளுகிறது

ஆளில்லாத நள்ளிரவில் தனியாக நடக்க, ரகசியம் காக்க, பிரார்த்தனை செய்ய, யோகா மற்றும் தியானம் செய்ய, புதிய மனிதருக்கு கை குலுக்க, ஒபெனர் இல்லாமல் ஒரு பாட்டில் திறக்க, சாவி தொலைந்தால் பூட்டைத் திறக்க, போலீஸ் பிடித்தால் சமாளித்துப் பேசித் தப்பிக்க, வங்கியில் பணம் போட எடுக்க, இணையம் மூலம் பணம் அனுப்ப அல்லது பெற, இணையத்தில் உணவு அல்லது ஒரு பொருள் வாங்க, இணையம் மூலம் சினிமா அல்லது பயணச் சீட்டு பெற, குழந்தைகளுடன் விளையாட பேச, அழும் ஒருவரை அல்லது குழந்தையை சமாதானப்படுத்த, அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணிடம் அல்லது ஆணிடம் பேச, சொத்து வாங்கும் முடிவெடுக்க, பயன்படுத்திய பொருளை விற்க, நாய் போன்ற விலங்குகளை சமாளிக்க இது நீடிக்கப்பட்ட பட்டியல் எனலாம்

மற்றவர் மனம் புண்படாதவாறு ஒரு விஷயம் பற்றி விவாதம் செய்ய, நமது கருத்தை எடுத்துச் சொல்லி அடுத்தவரை ஒத்துக்கொள்ளச் செய்தல், சுவாரசியமான கடிதம் எழுத, சிறு கவிதை எழுத, நல்லதொரு சம்பவத்தில் சிறு நடனம் ஆட அல்லது நாலு வரி பாட, தீ விபத்தில் காப்பாற்ற, புதிய மொபைல் வாங்கினால் பழைய தொலைபேசியில் உள்ள எண்களைப் பதிவு செய்ய, திடீர் என்று பேச அழைத்தால் நல்லபடி பேசி கைத்தட்டல்கள் பெற, நல்லதொரு தன்விவரக் குறிப்பு தயார் செய்ய, கோபமாக இருப்பவர்களை சமாளிக்க, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, என்று இன்னும் எவ்வளவோ இருக்கிறது கற்றுக் கொள்ள....வாழ்ந்து சாதிக்க. இவற்றுள் உங்களுக்கு எவ்வளவு தெரியும் ? எவ்வளவு தெரியாது? எப்போது தெரிந்து கொள்ளலாம்?

முக்கியமாக இவை கற்றே தீர வேண்டும் இன்றைய நிலையில் சமாளித்து வெற்றி பெற: தாமதம் செய்யாமல் ஒரு தீர்மானம் அல்லது முடிவு எடுக்க, படைப்பாற்றலுடன் சிந்திக்க, மற்றவர்களை கருணையோடு பார்த்தல், பிறருடன் இணைந்து செயலாற்ற, தாழ்மையுடன் இருக்க, வெற்றியை சமாளிக்க, கவனமாக பிறர் பேசும் பொழுது கேட்க, கனிவுடன் பரிவுடன் நடக்க பிறரை நடத்த, தோல்விகளை எதிர்கொள்ள, பிறர் பற்றி சரியான முடிவு எடுக்க - என்று பல வல்லுநர்கள் சொல்கிறார்கள். இவை பற்றி என்றேனும் சிந்தித்தது உண்டா? இல்லை என்றால் உடனே யோசியுங்கள் எங்கே தொடங்குவது, எதை கற்கலாம் என்று...!!

கற்பது என்று முடிவு செய்தாகி விட்ட நிலையில் தாமதம் வேண்டாம். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எனலாம். ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடங்கள் என்றால் ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் முதலீடு செய்து நாம் புதியதொரு விஷயத்தைக் கற்கலாம் என்றால் நாம் செலவிடும் நேரம் மொத்த நேரத்தில் 1% மட்டுமே. (1440 - 15 என்றால் 1 % தானே) ஏன் நம்மால் ஓராண்டில் புதிதாக 365 விஷயங்களைக் கற்று விட முடியாத? அவ்வளவு வேண்டாம். ஒரு மாதத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் ஓராண்டில் 12 விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம். திறன் வளர்ப்போம். புதுவாழ்வு சமைப்போம்.


Tuesday, December 24, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 46


டிஜிட்டல் டயட் தொடங்குவோமா?
மக்கள் தமது  எடையைக் கூட்ட, குறைக்க அல்லது பராமரிக்க சரியான, சீரான, சமச்சீர் உணவை எடுத்துக் கொள்ளுகின்றனர். தவிர, நீரிழிவு நோய் மற்றும் இதய சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கும் இந்த உணவுக்கட்டுபாடு இருக்கும். உணவுக்கட்டுப்பாடு தவிர உடற்பயிற்சியுமே  உடல் எடையினை சீராக வைக்க, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
செல்வந்தராக இருப்பதை விட ஆரோக்கியமாக இருப்பதே இன்றைய காலகட்டத்தில் முன்னுரிமையாக இருக்கிறது. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பர் பெரியோர். நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் உறக்கம் உட்பட நமது  இதர பழக்க வழக்கங்கள் தான் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.
அதே போல நாம் ஆனந்தமான, ஆரோக்கியமான, அற்புதமான வாழ்வினை வாழ எது நிர்ணயம் செய்கிறது என்றால் நமது டிஜிட்டல் டயட் தான். முடிவில்லாத (அன் எண்டிங்) அளவிற்கு நாம் சாதனங்களோடு நம்மை இணைத்துக் கொண்டு விட்டோம்.(மனிதர்களோடு இருக்கும் இணைப்பு சற்று அதிகமாகவே  துண்டிக்கப்பட்டு சாதனங்களோடு இணைக்கப்பட்டு நிற்கிறோம்). இது நமது உடல் மற்றும் மனநலனை சீர்குலைக்கிறது என்பதை பெரும்பாலும் நாம் உணர்வதே இல்லை. 
நமது நாளின் (24 மணி நேரம் என்பது எல்லோருக்கும் பொது என்றாலும்) பெரும்பகுதி தூக்கத்தில், பணியிடத்தில் கழிகிறது. மீதமிருக்கும் நேரத்தில் (பயணத்தில், கழிப்பறையில், காத்திருப்பு நேரங்களில், சாப்பிடும் போது, டிவி பார்க்கும் போது என்று) நாம் கையில் வைத்திருப்பது நமது கைபேசி தான். எப்போதும் உட்கார்ந்தே இருக்கிறோம். கைகளும் கண்களும் மிகவும் ஆக்கிரமிப்பில் உள்ளன. நமது உட்காரும் தோரணை, வேலை செய்யும் தோரணை எதுவுமே எப்படி இருக்கிறது என்று நாம் சிந்தித்துப் பார்க்கவே நேரமில்லாது கைபேசி அடிமைகளாக மாறி விட்டோம். 
என்ன சாப்பிடுகிறோம், எந்தப் பொருளை எங்கே வைத்தோம், என்ன பார்க்கிறோம், என்ன செய்கிறோம் எதுவுமே நமது          பிரக்ஞையில் இல்லை என்பதே உண்மை. அறிவுசார் தகுதி முக்கியமா அல்லது தகவல் பருமன் முக்கியமா? (தகவல்களால் அறிவு பருமன் ஆவதை விட மூளை தகுதியுடன் சுறுசுறுப்பாக இருக்கிறதா என்பதே முக்கியம் )  அதிகம் உண்ணுபவர்களின் உடல் எப்படி இருக்கும்? மிகவும் குண்டாக எடை அதிகமாக பார்க்க பருமனாக இருக்கும். அவர்கள் எப்போதும் மந்தமாகத் தான் இருப்பர். அதே போலத்தான் அதிக தகவல்களால் சூழ்ந்து கிடப்பவர் நிலையும். ஓவர் தகவல் ஒடம்புக்கு ஆகாது.
பெரும்பாலும் சுயசிந்தனை, கற்பனை, படைப்பாற்றல் எல்லாமே மூட்டை கட்டி வைக்கப்படுகிறது என்பது தான் சாயம் பூசப்படாத உண்மை.  சாதனங்கள் நம்மை ஆட்படுத்தி அடிமைப் படுத்துகின்றன நமது மூளையின் 'இன்ப மையம்' (ப்ளெஷர் சென்டர்) எனும் பகுதி எப்படி மீண்டும் புகைக்க வேண்டும், மது அருந்த வேண்டும், புகையிலை மெல்ல வேண்டும் என்று நினைக்க வைக்கிறதோ, அப்படித் தான் நம்மை மீண்டும் மீண்டும் மீள முடியா வண்ணம் இந்த சாதனங்கள் நம்மை முடக்குகின்றன. இது ஒருவிதமான போதை தான். இப்போது குடிநோயில் இருந்து விடுபட உள்ள 'மீட்பு மையம்' போல இந்த கைபேசி போதை மயக்கத்தில் இருந்து மீட்கும் மையங்கள் சில இடங்களில் தொடங்கி விட்டனர் நமது நாட்டில். சிலர் மனசிதைவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர் என்பதும் கிடைக்கும் செய்தி.  என்ன ஆச்சரியமா? இல்லை ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா?
எது நூடுல்ஸ், பிச்சா, சிப்ஸ், கோலா என்று குழந்தைகளை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுகிறதோ, எது பெரியவர்களை புகைக்க, மது அருந்த, புகையிலை மெல்லத் தூண்டுகிறதோ அதே 'கெமிக்கல்' விஷயம் தான் கைபேசி போதையில் மனிதனை ஆட்படுத்துகிறது. 
மனிதர்களோடு நட்பு கொள்ள, வணிகம் பெருக்க, செல்ப் பிராண்டிங் எனப்படும் சுய முத்திரையை நிலைநாட்ட, வந்திருக்கும் மின்னஞ்சல்களை பார்க்க, தமது விஷயங்களை பிறருக்கு தெரிவிக்க, காதல் செய்ய, சமூகத் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள என்று தான் வலைத்தளங்களில் நுழைகிறோம். ஆனால் வலையில் சிக்கிய மீன்கள் போல ஒரு முறை நுழைந்தால் மீண்டு வர முடியாது சிக்கித் தவிக்கின்றோம்.  அவர்களை மீட்க எண்ணும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோருமே இதே நிலையில் உள்ளபடியால் யார் வந்து யாரை மீட்பது. குழியில் விழுந்த ஒருவரை மேட்டில் நிற்கும் ஒருவரால் தானே தூக்கி விட்டு காப்பாற்ற முடியும்? இருவருமே குழியில் படுகுழியில் இருந்தால்? 
சரி, இந்த டிஜிட்டல் டயட் என்பது என்ன? இந்த ஸ்மார்ட் போன் நேரத்தை குறைத்தல், தூங்கும் போது அவற்றை 'ஸ்லீப் மோடில்' (விமானத்தில் போகும் போது 'பிளேன் மோட்' மாற்றுவது போல்) மாற்றுவது, கண்களுக்கு கைகளுக்கு கழுத்துக்கு சற்று ஓய்வு கொடுத்து இயற்கை காட்சிகளை ரசித்தல், அருகில் இருக்கும் ஒருவரோடு அளவளாவுதல், ஓரிரு மணி நேரமாவது நெட்டில் இருந்து போனை துண்டிப்பது, என்று பலவாறாக உபவாசம் இருந்து விரதம் இருந்து நோன்பு காப்பது போல இருப்பதே இந்த டிஜிட்டல் டயட் என்பது. தவிர இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை குறைந்தது இருபது வினாடிகள் நமது கைகளுக்கு கண்களுக்கு ஓய்வு தேவை. அதுவே மூன்று முறை இந்த இருபது நிமிடங்கள் நிறைவடைந்த பிறகு சுமார் ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடம் வரை இயற்கை அல்லது பசுமை விஷயங்களை பார்த்து கண்களுக்கு மனதிற்கு ஓய்வு தர வேண்டும். இல்லையேல் கண்களில் இருக்கும் நீர் வறண்டு எரிச்சல் தொடங்கி விடும். 
சாதனங்களில் இருந்து வருகிற கதிர்கள் நமது உடலின் பெரும்பாலான முக்கிய பகுதிகளை பாதிக்கிறது என்றும் அறிவியல் சொல்லுகிறது. இன்று 95 சதவீதம் மக்கள் இந்தியாவில் செல்பேசி பயன்படுத்துகின்றனர். மேலும் கணினி இல்லாத துறையே இல்லை எனலாம்.
தொழில்நுட்பம் நமது வாழ்வின் மிகப்பெரிய வரப்பிரசாதம் தான். சில சமயம் வரமே  ஒரு மிகப்பெரிய சாபமாக மாறிவிடக் கூடாது என்பது நமது கையில் தான் இருக்கிறது. கத்தி கொண்டு ஒரு கனியை நறுக்கலாம். கழுத்தையும் நறுக்கலாம். ஒரு தீக்குச்சியால் விளக்கு ஏற்றலாம். ஒரு காடையே கொளுத்தலாம். அதே போலத்தான் இந்த தொழில்நுட்பம் மற்றும் அது குறித்த சாதனங்கள், அவை நமக்கு நல்லது செய்ய, அறிவைப் பெருக்க, அறிவுப்பளு குறைக்க அல்லது மேம்படுத்த உதவலாம். ஆனால் அப்படி ஆக்கும் சக்தி படைத்த ஒன்றே அழிக்கும் சக்தியாக மாறிடாது இருக்க இந்த டிஜிட்டல் டயட் மிகவும் முக்கியம். இது செவ்வாய், சனி விரதம் போலத்தான்.
நாம் உட்பட எல்லாமே மிகச் சரியாக அழகாக இயல்பாக சீராக இயங்கும் நாம் சற்று நேரம் இந்த சாதனங்களின் ஒயரை பிடுங்கி வைத்தால். ஆனால் முடியுமா? ஆபத்தில் இருக்கும் நம்மை காக்கும் 'காவலன்' கூட இந்த சாதனத்தில் தானே இருக்கிறது. 'கடவுளை'க் கூட அந்த அளவுக்கு நம்ப முடியாத காலத்துக்கு வந்து விட்டோமே !! அகால நேரத்தில் கோவிலுக்குள் யார் வந்தார், யார் சிலை போன்ற திருட்டு வேலைகள் செய்தார் என்று அறிய நமக்கு சில சாதனங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும் எதுவமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான். தெரிவோம். தெளிவோம். உபவாசம் எப்போது?

Monday, December 23, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 45

:

ஏனென்ற கேள்வி இல்லாத வாழ்வா?
ஏன்? இந்தக் கேள்வி பல விடைகளைக் கொடுக்க வல்லது. பல பூட்டுக்களைத் திறக்கவல்லது. 
ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? அதற்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்? ஏன் இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்? ஏன் நான் இவ்வளவு கற்க வேண்டும்? புதியவற்றை அறிய வேண்டும்? ஏன் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும்? ஏன் அவற்றை எல்லாம் நான் பார்க்க வேண்டும் என் வாழ்வில்? ஏன் நான் பல பொருட்களை வாங்கிட வேண்டும்?
ஏன் அறிவை விருத்தி செய்ய வேண்டும்? ஏன் நான் புதிய புதிய பொறுப்புகக்ளை நிறைய பொறுப்புக்களை ஏற்க வேண்டும்? ஏன் நான் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? ஏன் பிறர் போல நானும் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும்? ஏன் எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும்? ஏன் நான் பெற்றோரை மற்றோரை திருப்திப்படுத்த வேண்டும்? 
புதிய திறன்களை பெருக்குதல், புதிய வளங்களை உருவாக்குதல், சொத்து சேர்த்தல், எல்லோருடனும் போட்டி போடுதல், எனது அறிவை பகிர்தல், பணத்தை பகிர்தல், குழந்தைகளைக் காத்தல், மனைவியைத் திருப்திப்படுத்தல் இப்படி ஏன்  இவ்வளவு விஷயங்களை செய்ய வேண்டும் ? யாருக்காக? (யாருக்காக இது யாருக்காக ....இந்த மாளிகை வசந்த மாளிகை பாடல் நினைவுக்கு வருகிறதா?)
ஏன் காண்பவற்றை எல்லாம் பெற வேண்டும்? நினைத்ததை எல்லாம் செய்ய வேண்டும்? எல்லாமாக  ஏன் மாற வேண்டும்? 
இந்த 'ஏன்' எனும் கேள்வி ஆகச் சிறந்த கேள்வி எனலாம்.  ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. 
இதோ இன்னொரு கேள்வி : 'ஏன் இருக்கக் கூடாது ?' 'ஒய் நாட்' என்பார்கள் ஆங்கிலத்தில். 
ஏன் நிறைய சம்பாதிக்கக் கூடாது? ஏன்  நிறைய படிக்கக் கூடாது? ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாது? ஏன்  முன்னேறக் கூடாது? ஏன் புதிய விஷயங்களை கற்கக் கூடாது? புதிய விஷயங்களை கண்டுபிடிக்கக் கூடாது?  புதிய மனிதனாக  ஏன் மாறக்கூடாது..ஏன்? ஏன் ஒரு செல்வாக்கை பெறக்கூடாது? ஏன்  பிறருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது? ஏன்  சிரமங்களில் இருக்கும் பல்லாயிரம் மக்களை மீட்கக் கூடாது? ஏன்  பிறருக்கு உதவும் மனிதராக, பிறருக்கு அறிவு மற்றும் ஞானம் தருபவராக மாறக்கூடாது?
ஏன்  நல்லதொரு எழுத்தாளனாக, கவிஞனாக, ஓவியனாக, இசைக் கலைஞராக, விஞ்ஞானியாக, விளையாட்டு வீரனாக, புதிய தலைவனாக ஆகக் கூடாது? எனவே ஏன் இருக்கக் கூடாது எனும் கேள்வி மிகவும் தூண்டும் ஒன்று தான். வல்லமையைத் தரக்கூடியது தான். வலிமை மிக்கது தான்.
அடுத்த ஒன்று 'ஏன் அது நானாக இருக்கக் கூடாது? என்பது. பிறர் வெற்றி பெறட்டும். செல்வந்தர் ஆகட்டும். உதவும் வள்ளல் ஆகட்டும். நீங்கள் ஆகக் கூடாது என்று யார் சொன்னது?  உங்களுக்கு அந்த அறிவு இருக்கிறது, திறன் இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது, நல்ல சூழல் இருக்கிறது, அதற்கான நேரம் இருக்கிறது, அதற்கான வசதி இருக்கிறது, அதற்கான ஊக்கம் இருக்கிறது, அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் திட்டமிடுவதும், இலக்கு நிர்ணயிப்பதும், வெற்றி பெறுவதும், யார் கையில் உள்ளது. யார் உங்கள் சிறகுகளை பறக்க முடியாமல் பிடித்துக் கொண்டு தடுப்பது? உற்று நோக்கினால் வேறு யாருமே அல்ல. அது நாம் தான். நமது மனநிலை தான். நமது இயலாது என்ற எண்ணம் தான். நம்மை முடக்கும் அவநம்பிக்கைகள் தான். சுய சந்தேகங்கள் தான். இதில் என்ன உங்களுக்கு மாற்றுக் கருத்து?
இது உங்கள் வாழ்க்கை. நீங்கள் வெகு சீக்கிரம், சில நாட்களில் வேகமாக முன்னேறலாம். பிறரை முன்னேற்றலாம்.உங்கள் கனவுகளை நனவாக்கலாம். உங்கள் குடும்பத்தை சமூகத்தை பெருமைப்படுத்தலாம். நீங்கள் ஆரோக்கியமானவர்களாக, சக்தி வாய்ந்தவர்களாக, செல்வந்தர்களாக, அறிவாளிகளாக, தலைவர்களாக ஆகலாம். ஏன் நீங்கள் ஆகக் கூடாது? இங்கே கேட்கப்படுவதும் 'ஏன்' தான்? இது முழுக்க முழுக்க நம்மைப் பற்றியது என்பது அறிவோம்.
சரி, இன்னொரு கேள்வி உண்டு என்னிடம். இவ்வளவு கேள்வி கேட்டோம் நம்மை நாமே? "ஒய் நாட் நவ்" ? ஏன் அதனை இப்போதே தொடங்கக்கூடாது? அதற்கென்று நேரம் இருக்கிறதா? கனவை இலட்சியத்தை கையில் எடுங்கள். அவற்றை நிறைவேற்றுங்கள். அதன் பலனைப் பாருங்கள். பெறுங்கள். ஆனந்தத்தை அனுபவியுங்கள். மற்றவருக்கும் அளியுங்கள். உங்களுக்குள் இருக்கும் அந்த அக்னிக்குஞ்சை ஒரு பிழம்பாக மாற்றுங்கள். வயிற்றுக்குள் எரியும் அந்த வேட்கை நெருப்பு உலகோர் வாழ்க்கையில் ஒளியாகட்டும். ஏன் அப்படி நடக்கக் கூடாது?
ஒரு முக்கிய விஷயத்தை விளக்கும் ஒரு கதை.  ஒரு காகம் நினைத்தது நான் ஒரு அன்னப்பறவை போல ஏன் வெளுப்பாக இருந்திருக்கக் கூடாது? அந்த அன்னம் நினைத்தது ஒரு பஞ்ச வர்ணக்கிளியைப் பார்த்து நான் ஏன் இப்படி வெள்ளையாக இருக்கிறேன் என்று. பஞ்ச வர்ணக்கிளி நினைத்தது நான் ஒரு மயில் போல அழகாக தோகை விரித்து ஆடக் கூடாது என்று? அந்த மயில் நினைத்தது நான் ஏன் இந்த காகம் போல நினைத்த இடத்திற்கு பறக்க முடியவில்லை. அவைகளைப் போல கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்று. இந்த பழைய கதை ஒன்றும் உங்களுக்கு புதிது அல்ல.


இல்லாத ஒன்றை நினைத்துத் தானே இந்த உலகில் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஓலமிடுகிறோம்? நம்முள் இருப்பதை பிறர் தானே பார்க்கின்றனர்? நாம் ஏன் அதனைப்  பார்க்கவில்லை? நம்முள் ஆயிரம் இருக்கும் போது வேறு ஒருவரிடம் இருக்கும் நம்மிடம் இல்லாத மற்றொன்றை நினைத்து நாளைக் கழித்து நமக்குக் கிடைத்தமைக்கு நன்றி சொல்லாது வருத்தத்துடன் வாழ்கிறோம். ஏன் ? இது தான் இந்த கட்டுரையில் நான் கேட்கும் கடைசி 'ஏன்'..!! இந்த கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக மாற்றப்போவது நிச்சயமாக நீங்கள் தான். 

Sunday, December 22, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 44



கொண்டாட்டமா திண்டாட்டமா ?
பண்டிகைக் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, மற்றும் தைத்திருநாள் என்று எல்லோரும் மகிழ்வோடு எதிர்நோக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்று பண்டிகைகளும்  கொண்டாட்டங்களும் பெரிய அளவிலான உலகளாவிய பொருளாதார தூண்டுதல்களாக மாறி வருகின்றன. 
சுமார் மூன்று டிரில்லியன் பணம் உலகளவில் செலவாகும் இந்த பத்து பதினைந்து நாட்களில் என்று சொல்லுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். பெரும்பாலும் ஐரோப்பா, லண்டன், அமேரிக்கா, ஜெர்மனி  போன்ற பல நாடுகளில் ஏறத்தாழ பத்து நாட்களுக்கு யாருமே வேலைக்கு செல்ல மாட்டார்கள். தமது இல்லம் விட்டு பல புதிய இடங்களுக்கு பயணம் செய்வார்கள். சிலர் இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்றிட நினைப்பார்கள். 
நமது நாட்டு இளைஞர்களும் அயல்நாட்டு நிறுவனங்களில் பணி புரிவதால் அவர்களும் இங்கே கட்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளாக திரிவார்கள் இக்காலங்களில். சேர்த்த பணத்தை எடுத்து விட்டு சந்தோஷ தருணங்களை வாங்கிட எண்ணும் காலமாக இருக்கிறது இந்த சமயம்.
உலகம் முழுவதும் தமது இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் நடுவதற்கு காட்டில் இருக்கும் கோடிக்கணக்கான சவுக்கு (பைன் ) மரங்களை வெட்டிச் சாய்ப்பார்கள். ஒரு வார காலத்திற்குப் பிறகு அவையெல்லாம் தூக்கி வீசப்படும் பயன் இழந்து. சுமார் 60 மில்லியன் மரங்கள் ஐரோப்பா நாட்டில் மட்டும் என்று சொல்லப்படுகிறது. 
தவிர, கோழிகள், ஆடுகள், மாடுகள், மீன்கள் என்று அப்பாவி விலங்குகள் தமது உயிரை இழக்கும் மனிதர்கள் உண்டு அனுபவிக்க. சுமார் 10 மில்லியன் வான்கோழிகள் தமது உயிரை வானுக்கு அனுப்பி அடுப்பில் வேகும் ஐரோப்பாவில் மட்டும். என்கிறார் ஒரு நிபுணர். 
நுகர்தல், வீணடித்தல், கொண்டாட்ட படுகொலை, போதை, சூதாட்டம் என்று இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டு புது வருடக் கொண்டாட்டங்கள் உலகளவில் கழிகின்றன. புத்தாண்டு மீண்டும் பிறக்கிறது. 
எல்லோருமே பிரார்த்தனை செய்கிறார்கள் இந்த ஆண்டும் நல்லபடி வணிகம் பெருகி செல்வம் கொழிக்க வேண்டும் என்று. குழந்தைகள் பிரார்த்தனை செய்கிறார்கள் நிறைய பரிசுகள் அவர்களுக்கு வந்து சேர வேண்டும் என்று (சொந்த துப்பாக்கிகளும் இதில் அடங்கும்). சாண்டா வேஷமிட்டு முதியவர்கள் பலர் ஆங்காங்கே சென்று குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்விக்கிறார்கள். ஆனால் யாரும் நன்றி சொல்லவில்லை என்பது வேறு விஷயம். 
இம்முறை நமது கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி கூட சாண்டா வேடமிட்டு ஆதரவற்ற இல்லம் ஒன்றிற்கு சென்று அங்கே இருக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு பரிசளித்து மகிழ்வித்து இருப்பதாக பத்திரிகை செய்தி சொன்ன பொழுது மனதில் தோன்றியது பண்டிகைகள் இப்படித்தானே கொண்டாடப்பட வேண்டும் என்று. 
இதெல்லாமே 'நான்' 'எனக்கு' எனும் கலாச்சாரத்தின் உச்சம். எனக்கு இது வேண்டும், அது வேண்டும். அவற்றை எப்படிப் பெறலாம் என்பதே. இதுவா பண்டிகைக்கால கொண்டாட்டங்கள்? சுற்றி இருக்கும் மக்களை விரும்புவது, அவர்களுக்கு உதவுவது, இயன்றதைத் தருவது, சலுகைகள் மற்றும் வசதிகள் குறைந்த மக்களை மகிழ்விப்பது இவை தானே கொண்டாட்டமாக இருக்க முடியும்? 
ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் கொண்டாட்டத்தைப் பற்றி இங்கே சொல்லவில்லை. இப்போதெல்லாம் எல்லோரும் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டாவது நான் குடிக்க மாட்டேன், மிருகவதை செய்ய மாட்டேன், மரங்களை வெட்ட மாட்டேன், வெறுமனே புத்தாண்டு சத்தியங்கள் மற்றும் உறுதிமொழிகள் தர மாட்டேன் என்று மக்களால் சொல்ல முடியுமா? 
சமூக சேவை செய்வது, மரங்களை நடுவது, ஆதரவற்றவர்களுக்கு பரிசுகள் வாங்கித் தருவது என்று வேறு மாதிரி புதிதாக யோசிக்க முடியுமா? ஹாலிடேஸ் என்பதை ஹோலியாக புனிதமாக பரிசுத்தமாக கொண்டாட முடியுமா அல்லது அவை வழக்கம் போல ஜாலி டேஸ் தானா? 
உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களை, அறிவை, அனுபவங்களை பிறருடன் இந்த ஆண்டு முடிவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பகிர்வதைப் போல பரிசொன்று இருந்து விட கூடுமா? அப்படிப்பட்ட பரிசுகள் நீண்ட நாட்கள் நிலைக்கும். அவை நிச்சயம் கொண்டாட்டத்தின் உணர்வை புது விதமாக நமக்குத் திரும்பக் கொணரும். இவை எல்லாம் நான் சொல்லவில்லை. இன்று எனக்கு வந்த ஒரு வீடியோ செய்தி இப்படி எழுத வைத்தது. அதுவே உண்மை. 
நமது நாட்டில் கூட நமது பிரதேசங்களில் கூட புத்தாண்டு மற்றும் பண்டிகைகள் படாடோபமாக மாறி வருகிறது. அவற்றில் பெரிய விருந்துகள், பெரிய பரிசுகள், அதிகமான பானங்கள், மற்றும் கானங்கள், விருந்துகள் என்றே இருக்கின்றன. புத்தாண்டு என்றால் மதுபானம் அருந்தி விட்டு ஆண் பெண் பேதமின்றி கூடுவது ஆடுவது, கூச்சலிடுவது, கேக் வெட்டுவது, வீதிகளில் வாகனங்களில் வேகமாக பறப்பது, கூட்டம் கூட்டமாக அலைவது என்று இருப்பது தானா? ஏன் வேறு மாதிரி வித்தியாசமாக இருக்கக்கூடாது?
உண்மையில் அந்த நிலையற்ற தற்காலிக சந்தோசம் தான் நமக்கு கொண்டாட்டமா? வேறு என்ன செய்யலாம் புது விதமாக என்று அடுத்த தலைமுறை மக்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும். அதுவே உலகின் வளர்ச்சி. புது எழுச்சி. எல்லோருக்கும் மகிழ்ச்சி. 


இந்த பதிவு அல்லது கட்டுரை அறிவுரை அல்ல. ஆதங்கவுரை மட்டுமே. இப்படியெல்லாம் ஆதர்சமாக மாறி விட்டால் அது அதிர்ஷ்டமே. நடக்குமா அந்த அதிசயம் அல்லது அற்புதம்? காத்திருப்போம் அந்த இனிய நாட்களின் கொண்டாட்டங்களுக்கு. மனங்கள் மாறினால் மனிதம் மாறும். மாறுவோம். மாற்றுவோம். அதற்கு முயற்சிகள் ஏற்கனவே மேற்கொன்டு விட்ட சிலரை மனதார போற்றுவோம்.

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 43


ஈக்களும் தேனீக்களும் ஒன்றல்ல 

தேனீக்கள் பொதுவாக கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஈக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். தேனிக்கள் மனிதர்களை தேள் போல கொட்டும். அந்த வலி பொறுத்துக்கொள்ள முடியாது. தேனீக்களுக்கு புரோபோஸ்கிஸ்  என்ற நாக்கு உண்டு. அவை பூக்களில் இருந்து தேனை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. ஈக்களுக்கு இரண்டு இறக்கைகள் உண்டென்றால் தேனீக்களுக்கு நான்கு உண்டு. 

உலகெங்கும் சுமார் 20,000 வகை தேனீக்கள் உள்ளதாக அறிகிறோம். அவை குளவிகள் எறும்புகள் பூச்சிகள் வகையை சார்ந்தது என்று அறிவியல் சொல்லுகிறது. தேன், தேனீ மெழுகு  மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு இவை பெயர்பெற்ற ஒன்றாகும்.

ஈக்களில் ஒரு லட்சம் இனங்கள் இருப்பதாக அறிகிறோம். குதிரை ஈக்கள், ஹோவேர் ஈக்கள் மற்றும் கிரேன் ஈக்கள் போன்ற வகைகள் உண்டு. வீட்டு ஈக்கள் எனப்படும் வகை ஈக்கள் மூலம் வாந்தி பேதி  காலரா காசநோய் டைபாய்டு போன்ற சுமார் 65 விதமான மிகக் கொடுமையான நோய்கள் மனித இனத்திற்கு பரவுகின்றன. கோடை நாட்களில் ஈக்கள் மிகவும் ஏரிச்சல் ஊட்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றன. ஆண் ஈக்கள் பெண் ஈக்களை விட சிறியவையாக இருக்கும். 

தேனீக்களின் செய்யும் சப்தமும் மாறுபடுகிறது. தேனீக்கள் ஏற்படுத்தும் சப்தம் அவைகளுக்குள் செய்யப்படும் தகவல் பரிமாற்றம் என்றும் ஈக்களின் சப்தம் அர்த்தமற்றதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அடடா இது என்ன 'ஈ' படம் போல விடாது கருப்பு என்று இருக்கும் பூச்சியியல் பற்றிய கட்டுரையா?  அலுப்பு தட்டும் முன் முக்கிய விஷயத்தில் நுழைகிறேன் இதோ.

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான். உண்டால் அவை வேறு வேறு தான் என்பார்களே, அது போல நாம் இங்கே மிக முக்கிய மையப்புள்ளியை நெருங்கி விட்டோம்.நமது உறவுமுறையை மேம்படுத்த மிக முக்கியமான சில பாடங்களை இந்த ஈக்களும் தேனீக்களும் கற்றுத் தருகின்றன.

தேனீக்கள் மலர் விட்டு மலர் தாவிப் பறக்கின்றன தேனைத் தேடி. (நதி எங்கே போகிறது கடலைத் தேடி, நாளெங்கே போகிறது இரவைத் தேடி, நிலவெங்கே போகிறது மலரைத் தேடி, நினைவெங்கே போகிறது உறவைத் தேடி என்று பாடல் இருந்தாலும்) என்று நமக்குத் தெரியும். மலர்களை சற்றும் தொந்தரவு செய்யாமல் தேனைத் தேடுகிறது தேனீ (பூவுக்கே தெரியாமல் தேனை ருசிக்க வேண்டும் என்பது போல) அதனை சுவைக்க மட்டும் அல்ல தேனடையில் சேர்த்து வைக்கவும் தான். 

தேனீக்களின் மனதில் தேன் மட்டுமே இருக்கும். அது தேடும் மலர் குப்பை மேடோ குளமோ சாக்கடையோ, நாம் தேனை நாடிச் செல்ல வேண்டும் என்பதே அதன் கவனம். அங்கே அவை வேண்டாத குப்பைகளின் மீது கவனம் வைப்பதில்லை.  அதற்காக அவை பல மைல்கள் கடந்து பறந்து திரிகின்றன.நமது உறவுமுறையிலும் அப்படித்தான் செய்தல் வேண்டும். (அல்லவை  தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் என்றும் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்றும் வள்ளுவர்  சொன்னது இதைத்தான்).

ஒவ்வொரு  மனிதருக்குள்ளும்  இருக்கும் நல்லவை மற்றும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டும் எப்படி கவனித்து ஏற்றுக் கொள்ளுவது தவறுகளை கண்டு கொள்ளாது இருப்பது என்பதை உணர்த்திக் கற்றுக் கொடுக்கின்றன இந்த தேனீக்கள். எதிர்பாராத இடத்தில் தேன் இருக்கும் மலர்களைத் தேடிப் போகும் தேனீக்கள் நமக்கு நல்லவர்களைத் தேடுவது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற நல்ல விஷயங்களைத் தேடிக் கற்பது என்பதே அது.

தேனீக்கு எதிர்மாறாக ஈக்கள் தான் சென்று அமரும் ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் கெட்ட தொற்று உறைகளை விடாமல் பற்றிக் கொண்டு அவற்றை தாம் செல்லும் இடங்களில் எல்லாம் பரப்புகிற தீய பணியை தவறாமல் செய்கிறது. ஈக்களும் பல மலர்களை சந்திக்கும். ஆனால் அவை தேடுவதே அதில் உள்ள குப்பைகளை, அவை வெளியேற்றும் தொற்றுக்கழிவுகளை. ஈக்கள் மலத்தின் மீதும், பிணத்தின் மீதும், குப்பை கூளங்கள் மீதும் அமர்ந்து விட்டு நம் மீதும், நாம் உண்ணும் உணவின் மீதும் வந்து அமர்ந்து மிக அழகாக தொற்றைப் பரப்பும்.

அப்படி மனிதர்களும் தாம் சந்திக்கிற மனிதர்களின் கெட்ட விஷயங்களை நோக்குவதும், அவற்றைக் கற்றுக் கொள்ளுவதும் செய்கிறார்கள். அது மட்டுமா? ஈக்கள் போல சிலர் தேடித் தேடி கெட்டவர்களையே நாடுகிறார்கள்.பிறகு அவர்களிடம் பெற்ற கெடுதலான விஷயங்களை சமூகத்தில் பரப்புவதையே செய்கிறார்கள்.

ஈக்கள் அழகான தோட்டங்களில் பூவனங்களில் கூட அவை காண்பது கெட்ட அழுக்கு மற்றும் தொற்றுக்களையே என்பது மிகவும் அறுவருக்கக் கூடிய விஷயம் என்றால் அது மிகையாகாது.குற்றங்களை குறைகளை தேடும் மனநிலை என்பது மிகவும் எளிது. நல்லவற்றை நன்மையை மட்டும் தேடித் தேடிக் காண்பது மிக அரிது.

இது தான் தேனீக்களுக்கும் ஈக்களுக்கும் வித்தியாசம் என்று சொல்லலாம். குறை காண்பது எளிதென்பதால் அதனை சிலர் வெறித்தனமாக செய்கின்றனர் ஈக்கள் போல. குறைகளைக் கூட அழகாக மனம் நோகாமல் ஆக்கபூர்வமாக எடுத்துச் சொல்ல முடியும்.

ஒவ்வொரு மலரிலும் இருக்கிற தேனின் அளவு சிறிதென்றாலும் தேனீக்கள் அம்மலர்களை விடுவதில்லை. கொட்டும் குணம் இருக்கும் தேனீக்களை வளர்க்கிறார்கள். கொட்டாமல் கடிக்காமல் வெறுமனே நம்மை மொய்க்கும் ஈக்களை விரட்டவே பார்க்கிறோம் நாம். 

இருட்டிலும் வெளிச்சத்தைக் காண்பது சிலரால் மட்டுமே முடியும். குறையிலும் நிறையினைக் காண வெகு சிலரால் மட்டுமே இயலும். நாம் ஈக்களா அல்லது தேனீக்களா ? அது நமது மனநிலையைப் பொறுத்தே அமைகிறது