Friday, November 23, 2018

Gaja Cyclone

புயல் போன்ற இயற்கை பேரிடர் நமக்கு எதை சொல்லிக் கொடுக்கிறது ?
- டாக்டர் பாலசாண்டில்யன் (மனநல மற்றும் தொழில் ஆலோசகர், எழுத்தாளர்)

எந்த திசையில் இருந்து எத்தனை வேகமாக காற்று நகரும், எந்த திசை நோக்கி நகரும், எந்தெந்த மாநிலம் அல்லது மாவட்டங்கள் கடந்து செல்லும், அப்போது மழை பெய்யுமா, என்று பல்வேறு விஷயங்களை அறிவியல் மற்றும் வானியல் அறிஞர்கள் கண்டறிந்து முன்கூட்டியே அறிவுறுத்துகிறார்கள். இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை. 

ஆனால் சில நேரம் புயல் என்று சொல்லப்படும் அந்த அசுரக்காற்று சொன்னபடி, கணித்தபடி நகருவதில்லை - இடம் நேரம் வேகம் எல்லாமே நிறைய மாறுகிறது. அதன் தாக்கமும் மாறுகிறது. அது தான் இயற்கை. இயற்கை எந்த அறிவியல் அறிவிற்கும் அப்பாற்பட்டது என்று நாம் இது போன்ற தருணங்களில் அறிந்து கொள்கிறோம். 

பொதுவாக ஆல், அரசு, வேல் போன்ற மிகப் பெரிதாக இருக்கும் மரங்கள் பொசுக்கென்று சாயும், வாழை, கரும்பு போன்ற பலவீனமான மரங்கள் வீழும். (குண்டாக காண்பதற்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் தான் அதிகம் நோய்வாய்ப்படுவார்கள், ஒல்லியாக காண்பதற்கு நோஞ்சானாக இருப்பவர் நீடு வாழ்வார்கள் அது போல). இம்முறை 'கஜா' எனும் மகா சீற்றம் கொண்ட புயலின் கோரத்தாண்டவம் எட்டு மாவட்டங்களில் உள்ள தென்னை, பனை, வாழை என்றெல்லாம் பாகுபாடு காணாது சாய்த்து விட்டது. வீடுகளின் கூரைகள், மின்கோபுரங்கள் என்று பறந்தன, சாய்ந்தன. 

விளைவு: விவசாயிகளுக்கு நஷ்டம் மட்டும் அல்ல, செல்லும் பாதைகள் மூடப்பட்டு கிடக்கின்றன, பலர் வீடு வாசல் இழந்து நிற்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க முடியாத நிலை, பலருக்கு உடல் மற்றும் நோயால் அவதி, குழந்தைகள் மற்றும் முதியோர் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டு சிரமப்படுகிறார்கள். இத்தனைக்கும் இம்முறை அரசு தனது முன்னனுபவம் கற்றுத் தந்த பாடங்களை மனதில் கொண்டு உயிர் சேதங்களை குறைத்து உள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து  பலரை வீட்டில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்து சேதங்களை குறைத்து உள்ளனர். 

இருந்தாலும் பிரதான ஊர்கள், அருகில் உள்ள பெருகிராமங்கள், பின்னர் உள்ளடங்கிய சிற்றூர்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த பெரும்பதிப்பு ஏற்பட்டு உள்ளது இம்முறை. என்ன முன்னேற்பாடு செய்து என்ன பயன்? 

2016 ஆம் ஆண்டு சென்னையில் 'வார்தா' புயல் வந்த பொழுது நாம் கண்ட ஒன்று என்னவென்றால் மரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பது தான். கீழே வேரோடு விழுந்த மரங்களில் இருந்து முதலில் மக்கிய நாற்றம், பிறகு அதில் இருந்து வரக்கூடிய நெடி அடிக்கும் துர்நாற்றம் மக்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கின. நகரம் என்பதால் பெரிய பெரிய எந்திரங்கள் கொண்டு அந்த சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன இரண்டு அல்லது மூன்று நாட்களில். மின்சாரம் மூன்று அல்லது நான்கு நாட்களிலும், இணையதள இணைப்பு மற்றும் தொலைபேசி இணைப்புகள் அதிகபட்சம் பத்து நாட்களில் சரிசெய்யப்பட்டது. வீழ்ந்த அந்த மரங்கள் பெரும்பாலும் நிழல்தரு மரங்கள் தானே தவிர மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவல்ல மரங்களாக இல்லை.

அதுவே இந்த 'கஜா' புயல் சாய்த்த மரங்கள் நமக்கெல்லாம் சோறு போட்டு வயிறு நிறைக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சாய்த்து விட்டவை என்று நினைக்கவும் வேதனையாக உள்ளது.

புயல் வந்து போய் விட்ட இந்த நாள் நான்காவது நாள். இருப்பினும் சாய்ந்த மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை, வீழ்ந்த கம்பங்கள் இன்னும் நிமிர்த்தப்படவில்லை, வீட்டை விட்டு புறப்பட்ட மக்களின் அகதி எனும் அவலநிலை இன்னும் மாறவில்லை. மின்சாரம், தொலைபேசி இன்னும் மீளப்படவில்லை. உடைந்த படகுகள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள் இன்னும் சீர் செய்ய முடியாது மக்களும் அரசும் தவிக்கிறது. எவ்வளவு நஷ்டம் என்று இன்னும் கணிக்கக் கூட முடியாத கஷ்டமான சூழல். நினைத்தோ கற்பனையிலோ கூட எண்ண முடியாத அவலநிலை. 

தமது தோட்டம், நிலம் சாய்ந்து விட்டதே, தமது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதே என்று மக்கள் நினைத்து நினைத்து அழுகின்றனர். இது மனம் சார்ந்தது. உடல் சார்ந்து காணும் பொழுது, உணவு, குடிநீர், மருந்து, மாற்றுத்துணி, போற்றிக்கொள்ள போர்வை, படுக்க தலையணை, மெழுகுவர்த்தி என்று எதுவுமே கிடைக்கவில்லை என்பதால் பசி தாகம் நோய் எனும் அவஸ்தையில் இன்னும் மக்கள். அது தாண்டி மரங்கள் கண் முன்பு சாய்ந்து கிடக்கும் மீளொணா பெருஞ்சோகம், அதில் இருந்து கிளம்பும் துர்நாற்றம் மற்றும் தொற்று என்று மேலும் மேலும் இன்னல்கள் தான் சொல்லி மாளவில்லை. துக்கத்தில் இருந்து மனங்கள் மீளவில்லை. 

மானியம், நஷ்டஈடு கிடைக்கட்டும். உடனே கிடைக்க வேண்டிய உணவு குடிநீர், உடை கூட கிடைக்கவில்லையே. மாநில அரசா மத்திய அரசா யார் தருவார் பாதுகாப்பு என்பது தாண்டி, எதிர்காலம் என்ன ஆகும் எனும் கவலைக்கு உண்டா விடையும் மருந்தும். 

என்ன செய்யலாம் எதிர்காலத்தில்?

- பருவகாலம் வரும் முன்பே ஏரி குளங்களை தூர்வாறுதல் 
- புயல் அல்லது மழை ஏற்படுவதற்கு முன்பே மக்கள் தமக்கு (குறைந்தது ஒரு வாரத்திற்கு தேவையான மருந்து, உணவு, குடிநீர் போன்ற) தேவையான  அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
- பாதுகாப்பான இடங்களில் மக்களுக்கு தேவையான பொருட்களும், கழிப்பறைகளும் ஏற்பாடு செய்தல் 
- ஊடகங்கள் கிராமங்களில் பல்வேறு தோட்டங்களில் வயல்களில் விழுந்த மரங்களின் புகைப்படங்களை எடுக்க ஏற்பாடு செய்தல், 
- கிராம அதிகாரிகள் தமது வரையறையில் இருக்கும் ஊர்களின் நிலங்களில் செய்யப்பட்டுள்ள பயிர்களின் மதிப்பு, பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களின் அளவு ஆகியவற்றை தெரிந்து வைத்திருத்தல் 
- விவசாயிகள் விதைத்த உடனேயே தமது பயிர்கள் மீதும், இயற்கை பேரிடர் குறித்தும் உள்ள சரியான காப்பீடு செய்து கொள்ளுதல் (இழப்பு நேரத்தில் அரசை, கட்சிகளை மக்களை சார்ந்து இருக்காமல் தமது நஷ்டத்திற்கு கவலை இன்றி இருக்க முடியும்)
- ஒவ்வொரு ஊரிலும் தத்தம் ஊரை, தெருவை காத்திட ஓர் ஊர்க்காவல் படையை இல்லை என்றால் ஏற்படுத்தி அவர்களைக் கொண்டு மக்களை மற்றும் அவர்கள் உடமைகளை காத்தல் வேண்டும் 
- மாநில அரசு அழைப்பு விடாமலே மத்திய அரசு (எந்த கட்சி ஆண்டாலும்) காலத்தே உதவிட படைகள், அனுப்புதல், நஷ்டங்களை கண்டறிய ஆய்வுக்குழுக்களை அனுப்புதல், உறுதி செய்த நஷ்ட ஈட்டு தொகையை காலத்தே வழங்குதல், ஊடகங்கள் மூலம் மக்களுக்கு ஆறுதல் வழங்குதல் செய்ய வேண்டும். ஊடகங்களும் எப்படி எச்சரிக்கை செய்ததோ அவ்வண்ணம் நம்பிக்கை தரும் விஷயங்களை அதிகம் பேச வேண்டும் - ஒருவருக்கொருவர் குற்றம் சொல்வதை விட்டு விட்டு 
- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனடியாக (காலம் தாழ்த்தி அல்ல) நிதி திரட்டி அவற்றைக் கொண்டு மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் 
- பெரு நிறுவனங்கள் சிற்றூர்களை தத்து எடுத்து ஆவன செய்ய வேண்டும் 
- அந்தந்த ஊர்களில் பிறந்து வளர்ந்து படித்து வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பணி புரிகிறார்கள் என்றால் (கேரளா போல), தமது ஊருக்கு இந்த மாதிரி இடர்காலங்களில் நிதி உதவி அனுப்பி உதவலாம் 
- இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டி அவற்றை பேரிடர் கால நிதிக்கு வழங்கலாம். 
- கொடிதினங்களில் நிதி நன்கொடை வழங்குவது போல ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ரூபாய் 100 என்று அளித்தால் (எட்டு கோடி மக்களின் மூலம் கிடைக்கும் தொகை)  குறைந்தது 800 கோடி ரூபாய் அரசு வசம் கார்பஸ் நிதியாக இருக்கும். அதை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற வகையில் முதலீடு செய்தால் அதில் இருந்து கிடைக்கும் இன்னும் அதிகமாக இருக்கும் 
- சமூக வலைத்தளங்களை மக்கள் எப்படி எப்படியோ தவறாக பயன்படுத்துகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட இடர்காலங்களில் சரியாக பயன்படுத்தி காலத்தே தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும். எல்லாமே அரசு தான் செய்ய வேண்டும் என்று காத்திருத்தல் அவசியம் இல்லை 

இன்னும் கூட உங்களிடம் நல்ல யோசனைகள் நிச்சயம் இருக்கலாம். அவற்றை நல்ல பத்திரிகையில் எழுதுங்கள். மக்களுக்கு நல்ல ஆறுதல், தன்னம்பிக்கை, மற்றும் ஊக்கம் அளியுங்கள் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

Saturday, September 1, 2018

Self Confidence Song




                 
                                                                                                                  
சாமி போல காக்க யாருமில்லை
சாவு தானா வாழ்வின் எல்லை
யாருக்குத் தான் இல்லை தொல்லை
எழுந்து நில் துணிவு கொள் துன்பமில்லை

திறனை நினை வழியை நினை
கருணை நிறை கடவுள் துணை
சவால்க ளெல்லாம் தூள் தூளாகும்
நம்பிக்கை யுந்தன் போர் வாளாகும்

நடந்ததைத் திரும்பிப் பாரா முனைப்பு
நடப்பதில் கவனம் முழு நினைப்பு
நாளையென்பது அவன் பொறுப்பு
நம்பு உன்னை கொள்ளாதே வெறுப்பு

இழந்த வாய்ப்பால் இல்லை பெருமை
எழுந்து முன்னேறு வாழ்வு அருமை
இறையின் ஒளியில் உனது வாழ்க்கை
இன்பம் பிறக்கும் இனியேன் அழுகை

- முனைவர் பாலசாண்டில்யன்
9840027810

Krishna Krishna

ராகம்: தேஷ்                     தாளம்: ஆதி 

குழலூதி வருகின்ற கண்ணன் - அன்பர் 
குரல் கேட்டு வருகின்ற மன்னன்  - குழல் 

அழகான சிலை கூட அவன் பாட மயங்கும் 
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும் 
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும் 
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - அவன் குழலூதி 

மழைமேகம் போல் எந்தன் மனந்தன்னில் புகுந்து 
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து 
இழைந்தோடும் உன் அன்பில் எனை நானே மறந்து 
இமைமூடி இசைபாடி எடுக்கின்ற விருந்து - காண - கான (குழலூதி)

பாடல் மற்றும் இசை: டாக்டர் பாலசாண்டில்யன் 

Monday, August 13, 2018

தேச கீதம்

தேச கீதம்
ராகம்: ரீதிகௌளை

ஜெய ஜெய பாரதமாதா
ஜெயந்தான் உந்தன் மகர்க்கு
என்றுமே எங்குமே (ஜெய ஜெய)

பயமில்லை வாழ்ந்திட பாரத நாட்டிலே
பகையில்லை என்றுமே அன்புடை வீட்டிலே
கயமை பொய்மையிலா தேசம் பாரிலே
கட்டாயம் நம்முடை பாரதம் வேறிலை
- பாடிடு ஆடிடு  (ஜெய ஜெய)

வேற்றுமை புறத்திலே ஆயிரம் இருப்பினும்
ஒற்றுமை அகத்திலே உண்டிங்கு காணீர்
போற்றுவோம் பாரதத் தாயினை அன்பொடு- பறை
சாற்றுவோம் பாரதம் போலில்லை மண்தொடு
- என்றுமே எவருமே  (ஜெய ஜெய)

- டாக்டர் பாலசாண்டில்யன்

Saturday, August 4, 2018

காதல் பூமிக்கு அச்சாணி நீ

Jag goomeya - Salman impact
காதல் பூமிக்கு அச்சாணி நீ
என் புலம் சற்று நிற்கின்றது
என் நிலம் சுற்றி வருகின்றது 
உன் பார்வை என்மீது பட்டால்
உன் வாசம் எனைத் தீண்டி விட்டால்
என்ன என்ன இன்னும் செய்வாய்
எனையென்று முழுதாகக் கொய்வாய்
மறக்க முடியா உன் செவ்வாய் - எனை
மயக்கித் தருமா அமுத மழையாய்
பருவ மாற்றம் வானிலும் மனதிலும் -இரு
துருவ மாற்றம் அகமும் புறமும்
மாறுமா நெருப்பு நீராக வந்து
மாற்றிப் பார் ஓர் அணைப்பைத் தந்து ..
வெயிலுக்கு நிழலாக வருகின்ற நீ
மழை போல மனதினைக் குளிர்விக்கிறாய்
அலை போல வந்து வந்து போகாதே
அலைந்திட இனி என்னால் ஆகாதே
போக்கிரி மனதைத் திருத்த முடியமா - அதன்
போக்கைத் தான் நிறுத்த முடியுமா
சாக்கினி சொல்லாது முடிவுகள் வருமா - இல்லை
சாவையே காதல் பரிசாய்த் தருமா
- டாக்டர் பாலசாண்டில்யன்

Wednesday, August 1, 2018

பிக் பாஸ் - உளவியல் பார்வையில்

பிக் பாஸ் - உளவியல் பார்வையில் 
- முனைவர் பாலசாண்டில்யன் 
மனநல ஆலோசகர் 

உள்ளே இருப்பவர்களை வெளியே இருந்து வேடிக்கை பார்க்கிறது உலகம். அவர்களைப் பற்றிய கருத்துப் பதிவு, காழுப்புணர்ச்சி வெளிப்பாடு, புகழாரம் எல்லாமே சமூக வலைத்தளங்களில் நடக்கிறது. 

நமது அன்றாட வாழ்வில் நாம் என்ன செய்கிறோம், யார் அதனைப் பார்க்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். பேசுகிறார்கள் என்றெல்லாம் நாம் அறிவதில்லை. செய்வதையே செய்ததையே நாம் தொடர்கிறோம் அது தான் சரி என்ற நினைப்புடன். 

யாருடைய அங்கீகாரமோ ஆலோசனையோ அட்வைஸோ நமக்கு தேவையில்லாமல் இருக்கலாம். இருப்பினும் நம்மில் எத்தனை பேருக்கு சுய ஆய்வு செய்யத் தெரியும். 

சில சமயம் என்னுடைய சில நெருங்கிய நண்பர்கள் எனக்கு உள்பெட்டியில் வந்து உங்களின் அதிகமான போஸ்ட்கள் முகநூலில் வருகின்றன. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் சில நேரம் ஏன் இரண்டு மூன்று நாட்களாக ஒரு மாதிரி நெகடிவ் போஸ்ட் போடுகிறீர்கள் என்று கேட்பது உண்டு. அப்போது தான் நாமே உணருவோம் நம்மை பிறர் கண்காணிக்கிறார். நம்மை சிலர் பின்பற்ற நினைக்கிறார். நம் மீது உயர் அபிப்ராயங்கள் வைத்துள்ளார்கள் என்று. 

அப்படித் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும். இதர மொழிகளில் நிறைய சீசன்கள் தாண்டி விட்டன. தமிழில் இது தான் இரண்டாவது சீசன். இதைக் காண்பதே நம்மில் சிலருக்கு அதிர்ச்சியாக கடுப்பாக கோபமாக இருக்கிறது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஏன் இந்த சின்ன சின்ன விஷயங்களுக்கு பஞ்சாயத்து தேவைப்படுகிறது என்று. 

ஒரு விஷயம் என்னவோ உண்மை. அதிகம் பேருக்கு பொதுவாக சகிப்புத்திறன் குறைவாக உள்ளது. மேலும், இணையம், மொபைல், சமூக வலைத்தளம், உறவினர் மற்றும் நெருக்கமானவர்களின் பிரிவு, பிடித்த உணவு கிடைக்காமை, நினைத்த நேரத்தில் நினைத்த செயல், தூக்கம் போல செய்ய முடியாமை என்று எத்தனையோ கட்டுப்பாடுகள் இந்த பிக் பாஸ் வீட்டில் உள்ளன. நிச்சயமாக இது உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கும். தவிர, வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள், வெவ்வேறு பழக்கம் கொண்டவர்கள், வெவ்வேறு வயதினர் என்று ஒரு குழுவோடு வாழ்வது அதுவும் கண்காணிப்போடு வாழ்வது நிச்சயம் மிக மிகக் கடினமான ஒன்று தான். 

என்ன தான் விளையாட்டு என்றாலும், அதற்கு பணம் கிடைக்கிறது என்றாலும், ஒன்றை பெறுவதற்கு பலவற்றை இழக்க நேரிடுகிறது எனும் போது நிச்சயம் அது சிரமமான விஷயம் தான். 

பிறரைப் பற்றி குறை சொல்லுவது எளிது. ஆனால் சரியாக நடந்து கொள்ளுவது கடினம். 

இந்த பின்னணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து அதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன என்று உணர்ந்தால் நமக்கு நிறைய விஷயங்கள் புதிதாக புரிந்து போகும். நாம் இந்த இடத்தில் இருந்தால் இந்த சூழலில் இருந்தால் எப்படி நடந்து கொண்டு இருப்போம், எப்படி அதனை சமாளித்து இருப்போம் என்று கூட சிந்தித்து பார்த்தால் சிறப்பாக இருக்கும். 

யார் வெல்கிறார், யார் தோற்கிறார் என்பதை விட இது ஒரு டிவி விளையாட்டு, சிலரின் உண்மை முகம் இது தான் என்று ஏற்றுக் கொள்ளும் விதமாக அதனை பார்த்தால் நமக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது எண்ணம். 

அந்தப் பஞ்சாயத்துகளை ஒரு வக்கீல் மகன் எப்படி சமன் செய்கிறார், எப்படி அவர்களுக்கு புரிய வைக்கிறார் என்று பார்க்கும் போதும் சில புதிய விஷயங்கள் கற்க முடிகிறது. இது என்னுடைய பார்வை. உங்களது எப்படியோ??

Bala's poems

நீர்' வந்து அணைக்கும் போது
தீ நான் என்ன செய்வேன்
என்னோடு
என் துக்கமும் வெட்கமும் 
பஸ்மமானது கண்டேன்... 
காதலெனும் பருவ நதியே..
அள்ளிச் செல்.. என்னை 
ஆனந்தக் கடலுக்குள்..!
- பாலசாண்டில்யன்

புள்ளிகளும் அரைப்புள்ளிகளும் 
உன் எழுத்து வரியை நிறுத்தலாம்.
பேச்சும் செயலும் தான் நீ யார் என்பதை நிலைநிறுத்துகிறது 
அதுவே பின்னாளில் 
கேள்விக் குறியாக??
கேலிக்குறியாக ?!!
ஆச்சரியக்குறியாக ஆகிறது.!!
- பாலசாண்டில்யன்


உன் மலர்க்கரம் பட்டு
வருகின்ற மெசேஜ்களில்
உந்தன் வாசனை !


காலங்காலமாய் கரை நனைக்கும்
அலைக்கில்லை அலுப்பும் சலிப்பும்...
என்றோ வந்து தரை நனைக்கும்
மழைத்துளியைப் பார்...
ஓவர் டைம் பார்த்த அலுவலர் போல 
அலம்பலும் செருக்கும்...
சற்று நேரம் பார்த்த வேலைக்கே
விருது கேட்பதென்ன ஞாயம்...?!
- பாலசாண்டில்யன்


ஏணிகள் இருந்தும் தோணிகள் இருந்தும்
தாண்ட முடியவில்லையே கரை
உன்னுள் உணர்ந்து பார் இருக்கிறது எத்தனையோ நிறை
உதவத் துடிக்கிறான் இறை
வேண்டாமே உன் மனதில் குறை


எல்லோரையும்
வண்ணம் தீட்ட
ஒரே தூரிகையா?
எல்லோரையும்
கணித்திட
ஒரே எடைக்கல்லா?
எல்லோரிடமும்
ஒரே வார்த்தையா
எல்லோர் மீதும்
அதே பார்வையா?
பலமுறை
பலவகை
பல்நோக்கு
எல்லாம் பலன் தரும்...!!
- பாலசாண்டில்யன்



Wednesday, July 25, 2018

பளிச் கவிதைகள் - பாலசாண்டில்யன்

காணாமல் போன முகவரியை
காட்டுக்குள் தேடுகிறது பறவை
காடுகள் மேடுகள் ஆனது அறியாமல் ...
சீரியல் பாத்திரங்களின் சோகம் 
சகிக்க முடியாது அழுகிறாள்
சீக்காளி கணவன் அதிர்ச்சியில்
இரவு ஏன் விடிந்தது என்று
வருத்தப்பட்டான் தொடர்ந்து
கார் ஓட்டும் கிருஷ்ணன்
மியூட் போட்ட டிவி
குறையாத சத்தம் சண்டை
ரிமோட்டை காணவில்லை நிறுத்த
சுவற்றில் தினம்தொடர்ந்த
எறும்புகளின் ஊர்வலம் நின்றது
நாம் கேட்ட மழை வந்தபிறகு
அங்கே திறக்கப்பட்டது
இங்கே ஓடியது நீர்
காணவில்லை மணல் லாரிகள்
- பளிச் கவிதைகள் - பாலசாண்டில்யன்

Monday, June 11, 2018

Evergreen Actor Mohan - I simply adore




தொலைந்து போன இளைய நிலா

நிலவு தூங்கும் நேரம் தென்றல் வந்து என்னைத் தொடும். அந்த மன்றம் வந்த தென்றலுக்கு தூக்கம் வராது 'நிலாவே வா' எனப்பாடும். அதற்கென்ன என்கிறீர்களா? எனது கவலை அந்த ராஜ ராஜ சோழனைக் காணவில்லையே என்பது தான்

சரியாகத் தான் புரிந்து கொண்டீர்கள் நான் நமது கோகில/மைக் மோகன் பற்றித் தான் சொல்கிறேன்

1956 ஆம் ஆண்டு மே 10 அன்று பிறந்த (இன்று 62 வயது ஆகிறது) நடிகர் மோகன் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மஹிந்திராவின் 'கோகிலா' படம் மூலம் கன்னடத்தில் அறிமுகம் ஆனார்

ஒரு ரஜினியின் ஸ்டைல், கமலின் நடிப்புத்திறன், விஜயகாந்த் சத்தியராஜ் போல சண்டைக் காட்சிகள் இவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது. இருப்பினும் பாலு மகேந்திரா, ஆர் சுந்தரராஜன், மற்றும் உலகம் போற்றும் மணிரத்தினம் ஆகியோர் படங்கள் இவரை பல உயரங்களுக்கு தூக்கி நிறுத்தின

ரொமான்ஸ், ஹீரோயின் சப்ஜெக்ட் அல்லது பாடல்களை மட்டும் மையமாக வைத்த படங்களுக்கு என்றே இவர் விதிக்கப்பட்டவர்.

நடிகர் பிரபு, ரகுவரன், முரள, கார்த்திக் இவர்களை மிஞ்சும் திறமை இவருக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். இருப்பினும் இவருடைய நடிப்புக்கு பிரபல பின்னணி பாடகர் எஸ் என் சுரேந்தர் குரலில் டப்பிங், இசைஞானி இளையராஜாவின் இசை, தேன்குரல் எஸ் பி பி அவர்களின் பாடல், வாலி மற்றும் வைரமுத்து அவர்களின் பாடல்கள் - வேறென்ன வேண்டும் ஒருவர் முன்னணியில் நிற்க?

1977 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும், 1990 களுக்கு பிறகு இந்த 28 ஆண்டுகளில் வெறும் 5 படங்கள் மட்டுமே நடிக்க முடிந்தது திரு மோகனால். அதற்கு முக்கிய காரணம் அவருக்கு குரல் கொடுத்த திரு எஸ் என் சுரேந்தர் இருவருக்கும் ஏதோ சிக்கல் என்று சொல்லப்படுகிறது. அதெல்லாம் நமக்கெதற்கு?

சிலர் இடையில் அவர் மிகவும் நோய்வாய் இருக்கிறார், அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் கதை கட்டி விட்டனர். இருப்பினும் நேற்றைய கதாநாயகிகள் ரேவதி, ராதிகா மற்றும் சுஹாசினி ஆண்டு தோறும் கூடி மகிழும் நிகழ்வுகளில் நிச்சயம் மோகன் இருக்கிறார் என்று இணையதளம் சொல்கிறது

ஒரு புறம் இவை எல்லாம் இருக்கட்டும். ஒரு 72 படங்களில் நடித்த ஒருவர் எத்தனை வெள்ளி விழா படங்கள் வழங்கி உள்ளார்? அவரது திரைப்படப் பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை என்று தான் சொல்ல வேண்டும்பாடுநிலா எஸ் பி பி அவர்கள் 40 ஆயிரம் பாடல்கள் பாடி இருந்தாலும் அவருடைய டாப் 10 பாடல்களில் ஒன்றாக இருப்பது மௌன ராகம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நிலாவே வா' என்ற பாடல் தான். இதற்கு இளையராஜா அவர்கள் இசை. வாலி அவர்கள் பாடல் எழுதி உள்ளார். இது எல்லோருக்கும் பிடித்த பாடல்

அண்மையில் திரு எஸ் பி பி அவர்களின் பிறந்த நாள் என்று ஒரு தனியார் சேனல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய எல்லா பாடல்களையும் ஒளிபரப்பு செய்தது. அதில் ஜெமினி, சிவாஜி, MGR, ஜெய்சங்கர், சத்தியராஜ், பிரபு, ரஜினி, கமல், கார்த்திக், விஜய், அஜித், என்ற பட்டியலில் ஏனோ அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் நடிகர் மோகன் அவர்களுக்கு பாடிய ஓரிரு பாடல்களோடு நிறுத்திக் கொண்டார். அது எனக்கு மனசு கேட்கவில்லை. ராஜா + எஸ்பிபி + மோகன் எனும் அந்த காம்பினேஷன் நிச்சயம் இசைப் பிரியர்கள் யாராலும் மறக்க இயலாது

மூடுபனி, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, தீராத விளையாட்டு பிள்ளை, பாசப்பறவைகள், இதய தீபம், மனிதன் மாறிவிட்டான் என்று (1980 - 2017 வரை) என்று பட்டியல் நீளலாம்

இவற்றில் நெஞ்சத்தை கிள்ளாதே 365 நாட்கள், கிளிஞ்சல்கள் 250 நாட்கள், பயணங்கள் முடிவதில்லை 300 நாட்கள், கோபுரங்கள் சாய்வதில்லை 200 நாட்கள், சரணாலயம் 175 நாட்கள், இளமை காலங்கள் 200 நாட்கள், மனைவி சொல்லே மந்திரம் 175 நாட்கள், விதி 500 நாட்கள், வேங்கையின் மைந்தன் 175 நாட்கள், நூறாவது நாள் 200 நாட்கள், நான் பாடும் பாடல் 200 நாட்கள், ஓசை 175 நாட்கள், உதய கீதம் 200 நாட்கள், தென்றலே என்னை தோடு 250 நாட்கள் (ஆறு பாடல்களும் ஹிட்), குங்கும சிமிழ் 175 நாட்கள், இதய கோவில் 200 நாட்கள், பிள்ளை நிலா 200 நாட்கள், டிசம்பர் பூக்கள் 175 நாட்கள், உயிரே உனக்காக 175 நாட்கள், மௌன ராகம் 250 நாட்கள், மெல்ல திறந்தது கதவு 200 நாட்கள், ரெட்டை வால் குருவி 175 நாட்கள், தீர்த்த கரையினிலே 175 நாட்கள், சகாதேவன் மஹாதேவன் 175 நாட்கள் - இப்படி ஓடின நடிகர் மோகனின் படங்கள்

என்ன மேலே சொன்ன பட்டியல் கண்டு மயக்கம் வருகிறதா? மிக அதிகமான திறமைசாலி நடிகர்கள் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் பொழுது அதிகம் திறமை இல்லாத நிறைய பலவீனங்கள் மட்டுமே கொண்டிருந்த ஒரு நடிகர் மாபெரும் வெற்றிப்படங்களை வழங்கி உள்ளார். இப்போது ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே வெற்றிகரமான பத்தாவது நாள் என்று போடுகிறார்கள். 40-5- நாட்களில் அந்த படம் வந்ததே மக்களுக்கு நினைவில் இல்லை

இந்த சூழலில் இன்னும் நமது நினைவுகளில் நீங்கா இடத்தைப் பிடித்து இருக்கும் நடிகர் மோகன் நிச்சயம் நாம் எல்லோரும் கொண்டாடப்பட வேண்டியவர். குறிப்பாக 1980 படங்களை போற்றுகிறவர்கள் இன்னும் சினிமா பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்

மோகன் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என்று நான்கு தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயார் செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் கசிகிறது. நிச்சயம் அவருடைய படங்கள் மக்கள் விரும்பி ஏற்பர் அதற்கு ஆதரவு தருவர் என்று நம்புவோம்

மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா? இதுவே எனது கேள்வி

அந்த சில நாட்களை, 24 மணி நேரம் நினைக்கா விடினும், நான் உங்கள் ரசிகன் என்று சொல்லி அவரது வெற்றிக்கு உனக்காக ஒரு ரோஜா என்று சொல்லுங்கள். அந்த நடிகரின் உள்ளத்தில் ஆயிரம் பூக்கள் மலரட்டும், மெல்ல கதவு திறந்து மனதில் மௌன ராகம் பாடட்டும். அவரின் அன்றைய பாச மழையில் நனைந்து நெஞ்சமெல்லாம் நீயே இன்றும் மோகன் என்று சொல்லுங்கள். அன்பின் முகவரியில் என்றும் கோபுரங்கள் சாய்வதில்லை அதனால் தான் சொல்கிறேன் மோகன் அவர்களின் பயணங்கள் முடிவதில்லை

நமக்கு மிக நல்ல படங்களையும் பாடல்களையும் வழங்கிய நடிகர் மோகன் நீடு வாழ அது ஒரு தொடர் கதையாக மாறட்டும்