Friday, April 21, 2017

Tamil Version

கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
நினைவைப் பற்றிப் பேசுவேன் 
நினைவு எனக்கு வந்தவுடன்.........
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
நிறம் பற்றிப் பேசுவேன் எனது 
நிறம் முழுதும் வெளுத்த பின்னர்
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
ஒரு முறை பார்த்த காரணம் போதை 
ஒரு முறை முறைத்தாள் பிறந்தது கீதை 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
சத்தியம் இறந்தது நான் என்ன செய்ய 
பைத்தியம் பிறந்தது என் மனம் கொய்ய 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
ஜனமும் மரணமும் இங்கு போராட்டம் 
ஜனித்தது புது எண்ணம் அது நீரோட்டம் 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
வாழ்க்கையே என்றும் தள்ளாட்டம் 
வாழ்வது இம்முறை ஒரு வெள்ளோட்டம் 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
(பங்கஜ் உதாஸ் கேட்டதன் பயன்)
- டாக்டர் பாலசாண்டில்யன் 

New composition

காதல் பூமிக்கு அச்சாணி நீ 

என் புலம் சற்று நிற்கின்றது 
என் நிலம் சுற்றி வருகின்றது 
உன் பார்வை என்மீது பட்டால் 
உன் வாசம் எனைத் தீண்டி விட்டால் 

என்னை  என்ன இன்னும் செய்வாய்  
எனையென்று முழுதாகக் கொய்வாய் 
மறக்க முடியா உன் செவ்வாய் - எனை 
மயக்கித் தருமா அமுத மழையாய் 

பருவ மாற்றம் வானிலும் மனதிலும் -இரு 
துருவ மாற்றம் அகமும் புறமும் 
மாறுமா நெருப்பு நீராக வந்து 
மாற்றிப் பார் ஓர் அணைப்பைத் தந்து ..

வெயிலுக்கு நிழலாக வருகின்ற நீ 
மழை போல மனதினைக் குளிர்விக்கிறாய் 
அலை போல வந்து வந்து போகாதே 
அலைந்திட  இனி என்னால் ஆகாதே 

போக்கிரி மனதைத் திருத்த முடியமா - அதன் 
போக்கைத் தான் நிறுத்த முடியுமா 
சாக்கினி சொல்லாது முடிவுகள் வருமா - இல்லை 
காதல் சாவையே  பரிசாகத் தருமா 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

Power of Silence

மௌனமாக இரு 

கோபமாக இருக்கும் பொழுது 
மெளனமாக இரு 

எல்லா உண்மைகளும் தெரியாத பொழுது 
மெளனமாக இரு 

உண்மைக்கதை என்ன என்று விசாரிக்காவிடின் 
மெளனமாக இரு 

எளியவரை உன் வார்த்தை கொல்லுமென்றால் 
மெளனமாக இரு 

கேட்கும் நேரம் இது என்றறிந்தால் 
மெளனமாக இரு 

தூய்மையான விஷயத்தை 'தூ'வென்றாக்கும் மனநிலையில் 
மெளனமாக இரு 

பிறர் பாவங்களை தூற்றும் எண்ணம் வருகையில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தைகளை எண்ணி பின்னால் வருந்துவாய் எனில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தை தவறான அபிப்ராயம் உருவாக்குமென்றால் 
மெளனமாக இரு 

அது உனக்கு சம்பந்தமான விஷயம் இல்லையெனில் 
மெளனமாக இரு 

நீ சொல்லப்போவது பொய் என்று தெரிந்தால் 
மெளனமாக இரு 

உனது வார்த்தை பிறரின் மதிப்பைக் குறைக்குமெனில் 
மெளனமாக இரு 

உனது பேச்சு நட்பை பாதிக்கும் என்றால் 
மெளனமாக இரு 

சத்தமின்றி சொல்ல முடியாது என்றால் தெளிந்து நீ 
மெளனமாக இரு 

உனது பேச்சு விளைவுகளை உண்டாக்கும் எனில் 
மெளனமாக இரு 

உனது பேச்சு நல்ல விளைவை உண்டாக்காது எனில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தையை பின்னாளில் நீயே முழங்க வேண்டுமெனில் 
மெளனமாக இரு 

ஏற்கனவே இப்படிப் பேசியம் பயனில்லை என்றால் 
மெளனமாக இரு 

கெட்டவரை புகழ வேண்டும் என்று தெரிந்து விட்டால் 
மெளனமாக இரு 

பேசுவதை விட நல்ல பணி இருக்கும் பொழுது சற்று 
மெளனமாக இரு 

உனது பேச்சு உனக்கோ பிறருக்கோ நன்மை பயக்காது எனில் 
மெளனமாக இரு 

- தமிழில் டாக்டர் பாலசாண்டில்யன் 
(In English - Murali Srinivasan)

Old is gold - Poem in Tamil

அஸ்தமனம் ஆகாது நினைவுகள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

இளமையும் நம்பிக்கைத் துள்ளலும் 
கைகோர்த்து நடந்த தருணங்கள் அவை 
தூரத்து நினைவுகளாய் மனது தானே 
அசை போடுவது வாலிப வயதைத் தானே 

கடந்த காலம் எப்போதுமே தெரியமெனக்கு 
நடந்த காலம் தான் மீளாது இனி திரும்பி 
நினைவுகள் தான் இனிமை தருகின்றன 
நின்று நின்று பார்க்கிறேன் அவற்றை விரும்பி 

மரியாதை எனக்கல்ல என்றாலும் வயோதிகம் கருதி 
மனிதர்கள் எழுந்து இடம் தருவர் அதுவே தகுதி 
நல்லது கெட்டது எல்லாம் அனுபவம் கற்றுத்தர 
ஞானி போலாகி விட்டேன் அனைத்தையும் விட்டுத்தர 

இளமை ஏற்கனவே களவு போனதால் இன்று 
எதுவுமே தொலைவதில்லை பகட்டாய் திருட்டாய் 
நினைத்த போது உறக்கம் நினைத்த போது உணவு 
நினைவிலில்லை கவலைகள் எல்லோரும் உறவு 

ரவாதோசை வாங்கித் தருகிறார்கள் அன்பொழுக 
ரசித்துக் கடிக்கவியலாது பல்செட்டால் முழுக்க 
ஜீன்சும் டீஷர்ட்டும் பேரன் போடச்சொல்ல போட்டோ 
எடுத்துச் சொன்னான் அவனைப்போல் நானென்று 

பழைய பாடல் பாடச்சொல்லி படம் பிடித்தான் 
பதிவிட்டு இணையத்தில் எனக்கும் இடம் கொடுத்தான் 
முதுமை வரமொன்றும் கேட்டுப் பெறவில்லை நான் 
முழுவதும் ரசிக்கிறேன் வாழ்வின் நொடிகளைத் தான் 

எமன் வந்து அழைத்தாலும் இல்லை கவலை எனக்கு 
எல்லாமொன்றும் விழுவதில்லை காதில் எனக்கு 
நாக்குழற நவில்கிறேன் நாராயணன் நாமம் 
நானிலமே இருக்கட்டும் நல்லபடி  நாளும்