Tuesday, March 22, 2022

தாயெனும்

 

மீண்டு பிறப்பேனோ என் தாயே 

மீண்டும் பிறப்பேனோ உன் சேயாய் - உன் 

அன்பின் வண்ணம் முழுவதுமறிய 

அணைப்பின் வாசம் உணர்ந்து தெளிய   

(மீண்டு)

 

உயிர் நான் உடல் நீயென உயிர்த்து 

உனையே என் தாயாய் அடைய 

காலன் தடுத்தாலும் காலம் மறைந்தாலும் - உன் 

காலடியில் கிடக்க காலமெலாம் சுகிக்க 

(மீண்டு)

 

பாசம் காட்டும் தவிப்பே பரிதவிப்பாய் 

ஆக்கப் பிறந்தவனாய் ஆக்கம் அறிந்தவனாய் 

ஞானம் கிடைத்தவனாய் யோகம் தெளிந்தவனாய் 

மலராக மணமாக ஒளியாக உன் நிழலாக 

(மீண்டு)

 

(ஒவ்வொரு வரி முடிவிலும் மீண்டு பிறப்பேனோ என்று பாடிப் பார்க்கலாம்)

 

- பாலசாண்டில்யன் 

 

புன்னகையால் மனம் வென்றிடுவாள் - ஒரு 

கண்ணசைவில் அன்பைத் தந்திடுவாள் 

தன்னிகரில்லா கனிவைச் சுரந்து - நல்ல 

தாயவளென்று உணர்த்திடுவாள்  (புன்னகை)

 

ஆனந்தம் தான் அவள் மடியினிலே - புது 

அன்புமழை அவள் வடிவினிலே 

ஆரம்பமே அவள் உறவினிலே - என் 

அகிலமே ஆனவள் உருவினிலே   (புன்னகை)

 

தன்னையே உருக்கிடும் தியாகியவள் - என்றும் 

தன்னலம் அறியா யோகியவள் 

தாயெனும் இலக்கணமாய் ஆகியவள்   - வாழ்வின் 

தனிப்பெருங் கவிதையாய் மாறியவள் 

 

- பாலசாண்டில்யன் 

Monday, March 21, 2022

நெகிழி எனும் எமன்

 நெகிழி எனும் எமன் 

 

நெகிழி எனும் எமன் 

நாம் தூக்கிச் சுமக்கும் 

பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்குக் கயிறு

தெரியுமா ? 

 

அதனைத் 

தருபவருக்கு பெறுபவருக்கு 

இது புரியுமா ?

 

முதிர்ந்த பூமித்தாய்.தலையில் 
நரைத்த முடி போல 
நாடெங்கும் பாலிதீன் பைகள்
முளைத்தது காணீர் 


நெகிழி உபயோகத்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டு போகுமாம் 

ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகுமாம் 

அன்னை போல் நமைக்காக்கும்  

நதி ஓடும் தடங்கள் 
அதிவிரைவில் வற்றிவிடுமாம் 

புத்தனைப் போல் இருந்தாலும் 
புற்றுநோய் முற்றி விடுமாம் 

கால்நடை இறப்புக்கும்
சாக்கடை அடைப்புக்கும்
காரணமிந்த நெகிழி

சுகாதார கேடுக்கும்
சூதறியா நாடுக்கும்
இதுவே கூனி...புதிய சகுனி 

மழை பொய்த்தால் 
தவிக்கும் நமக்கு
எதுக்கிந்த பிளாஸ்டிக்?

பிளாஸ்டிக் உபயோகம் 

முற்றிலும் தவிர்ப்போம் 
நாளை நம் பிள்ளைகள் வாழ
நல்லதோர் உலகு சமைப்போம் 

 

- பாலசாண்டில்யன்