Sunday, August 14, 2016

இந்தியா 70 புதிய கவிதைகள்

இந்தியா 70
புதிய கவிதைகள் - டாக்டர் பாலசாண்டில்யன்
கணிதம் யோகா மருத்துவம் கலாச்சாரம் - உலகோர்க்கு
கற்றுத் தரும் இந்தியா என் தேசம்
நல்லரசு நாட்டின் புதல்வரெலாம் அறிஞர் - அதனால்
வல்லரசு ஆனதின்று வானவரும் அறிவர்
உலகோரின் உயர்ந்த புருவம் இறங்கவில்லை
உயர்ந்தோர் உழைப்போர் வேறெங்கும் பிறக்கவில்லை
ஆண்டவனே ஆண்ட தேசம் பாரதம் - எத்தனை
ஆண்டுகள் ஆயினும் மாறுமோ வேர் அதன் ?
அறிவியலின் ஆன்மிகத்தின் ஆணிவேர் இந்தியா
அகிலத்து வர்த்தகத்தின் அச்சாணி இந்தியா
யாருக்கும் முன்னோடியாய் ஓர் உன்னதம்
பாருக்குள் ஒரு தேசம் நம் பாரதம்
பாரதத்தாய்
அழகும் அறிவும் கலந்த நவமணி
உழைப்பும் உயர்வும் இணைந்த பெண்மணி
அன்பும் அமைதியும் கனவாகி விட்ட - உலகில்
பண்புடன் உயர்ந்து நிற்கும் பாரதம் பாரீர்
கல்வி மருத்துவம் தொழில்நுட்பம் கலைகள்
கலாச்சாரம் இவற்றின் சுருக்கமே இந்தியா
இந்தியா
உழைப்பின் வாசம் வீசும் தேசம் - இங்கு
உயர்வே ஒவ்வொருவரின் சுவாசம்
கடலில் கலக்கா இந்திய நதியே வியர்வை - அது
கடின உழைப்பில் ஒளிர்ந்து நிமிர்த்தும் உயர்வை
எழுவது என்பது உழைப்பின் அடையாளம் - இந்தியா
எழுபது என்பது உதிரிரத்தின் அடையாளம்

இந்தியா 2047

உரத்த சிந்தனை வெளியிட்ட "ஆனந்த சுதந்திரம் 50"
சுதந்திரப் பொன்விழா கவிதைகள் நூலில் இருந்து 
டாக்டர் பாலசாண்டில்யன் எழுதிய கவிதை (ஆகஸ்ட் 1998 பதிப்பு )

இந்தியா 2047
--------------------------

ஆண்கள் பெண்கள் என 
அனைவரின் கைகளில் ஒயிலாக கைபேசி 
நடை மறந்த கால்களுடன் 
மணிபர்ஸ் நிறைய கடன் அட்டைகள் நிரப்பியபடி 

பெண்கள் ஜீன்ஸில் பீடுநடை 
- உயர் காவல் துறை அதிகாரிகளாய் 
- நாடாளுமன்ற உறுப்பினர்களாய் 
- விமான ஓட்டுனர்களாய் 
- தொழில் அதிபர்களாய் 

டீசல் பெட்ரோல் இல்லா 
பாட்டரி கார்கள் தெருக்களில் பறக்கும் 
புகை நமைச்சல் கண்கள் மறக்கும் 
புதிய பல மேம்பாலங்கள் வந்து அதன் மேல் 
பறக்கும் ரயில்கள் பல்லவனை ஒழிக்கும் 

அமேரிக்கா இந்தியர்கள் ஆளுமையில் 
புதிய பல நிறுவனங்கள் நம் வசம் இருக்கும் 
அவை ஆண்டுக்கு இருமுறை போனஸ் அளிக்கும் 

குடிசைகள் என்பது அகராதியில் மட்டுமிருக்கும் 
அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஆயிரமாய் மலிந்திருக்கும் 

பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் 
கம்ப்யூட்டர் உடனே வழங்கும் 
வங்கிகள் வைப்பு நிதியை வீடு வந்து வசூலிக்கும் 

பள்ளிச் சிறுவர்கள் பாடப்பை விடுத்து 
டேப்லெட் மட்டும் சுமப்பர் 

லஞ்சம் என்ற சொல்லுக்கு அர்த்தம் 
தெரியாது பிறக்கும் எண்ணிலா இந்தியக் குழந்தைகள் 

இங்கு படித்தவர் இங்கே தொழில் செய்வர் 
என்றும் இந்தியராய் ...அகிலத்தை வென்றவராய் ..!!

Wednesday, August 10, 2016

Today's Film Music Industry in Tamil and Hindi

தமிழ் திரை இசையில் என்ன நடக்கிறது ?
- டாக்டர் பாலசாண்டில்யன் 
(கவிஞர், எழுத்தாளர், இசை ஆர்வலர், பாடலாசிரியர், பாடகர், மனநல ஆலோசகர்)

இசை ஞானியை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் அவர்கள் நேற்று மறைந்த செய்தி கேட்ட போது, தமிழ் திரை இசையில் என்னென்னெ மாற்றம் நடக்கிறது என்று அசை போட்டது மனது. 

ஒரு இசைப் பிரியனாக, சிறிது இசை கற்றவனாக, பாடல் எழுதும் கவிஞனாக, ஒரு நோக்கராக இருந்து பார்க்கும் போது சில விஷயங்களை கவனிக்க முடிந்தது. அதிக இசை அறிவு இல்லாத ஒருவனாக இசை பற்றியோ பாடல்கள் பற்றியோ பேசுவது தவறு. கடினம் கூட.

இசை உருவாக்கம் எனும் போது அதில் நான் நூற்றுக்கு ஜீரோ தான். ஆகவே அது பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேச எனக்கு அருகதை இல்லை என்றாலும் ஆவலை அடக்க முடியவில்லை. எனவே தான் இந்தக் கட்டுரை. 

இசை என்ன மொழியில் இருந்தாலும், யார் குரலில் இருந்தாலும் கேட்டு ரசிக்க என்னைத் தூண்டுவது எனது ஆர்வம் தாண்டி எனது மகள்கள் இருவரும் தான். ஆகவே அணமைக் கால தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உற்றுக் கேட்கிறேன். 

சினிமா மூலம் இசை பலர் காதில் நுழைந்திருக்கிறது என்றால் அதற்கு நேற்று தொடங்கி இன்று வரை பல இசை அமைப்பாளர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். சாஸ்திரிய சங்கீதம், கர்நாடக சங்கீதம், நாட்டுப்புற சங்கீதம், சுபி, பாப், ராப், கஜல், நாட்டிய சங்கீதம், என்று பலவகை இசை திரையில் வந்து கொண்டிருக்கிறது. மக்களை கவர்கிறது. பாமரனை சுண்டி இழுக்கிறது. அதில் குத்துப் பாடல், கானா பாடல் இவையும் அடக்கம். 

இசை அமைப்பாளர்கள் என்று பார்க்கும் போது எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், வசந்த் தேசாய், ஓ பி நய்யர், லஷ்மிகாந்த் ப்யாரேலால், கே வி மஹாதேவன், எம் எஸ் வி, இசைஞானி இளையராஜா என்று தொடங்கும் ஒரு பட்டியல் மெதுவாக நீண்டு ஏர் ஆர் ரஹமான், தேவா, பரத்வாஜ், வித்யாசாகர், தேவா, ரமேஷ் விநாயகம், சங்கர் கணேஷ், இமான், என்று தொடங்கும் பட்டியல் இன்று சங்கர் எஹசான் லாய், ஹிமேஷ் ரேஷமையா, அங்கித் திவாரி, அமல் மாலிக், அட்னன் சாமி, அனு மாலிக், சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிரோ மஸ்தானி புகழ்), விஷால், ஜஸ்டின் பிரபாகரன், ஜி வி பிரகாஷ், அனிருத், தீனா, சத்யா, சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயண் என்று வந்து நிற்கிறது.

அதே போல கவிஞர்கள் என்று பார்க்கும் போது பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், பிறைசூடன் என்று தொடங்கும் பட்டியல் இன்று விவேக், யுகபாரதி, நா முத்துக்குமார், தாமரை, விவேக் வேலுமுகன், கானா பாலா, பாலன் காஷ்மீர், முத்தமிழ், கார்த்திக் நேதா, அருண்ராஜ் காமராஜ், விக்னேஷ் சிவன், ரோஷன் ஜாம்ரோக், தனுஷ், சிம்பு, சென்னை தமிழன், உமா தேவி, லொள்ளு உதயா, சங்கர் தாஸ் என்று நீளுகிறது. 

தமிழ் இசையில் புரட்சி என்று பார்க்கும் போது முழுக்க முழுக்க கர்நாடக கச்சேரி பாடல்கள் போலவே இருந்தது மாறியது என்றால் எம் எஸ் வி அவர்கள் காலத்தில் தான் என்றால் மிகையாகாது. அதன் பிறகு 80 களில் இசைஞானி அவர்களின் அறிமுகம் மூலம் மீண்டும் மிகப் பெரிய ஒரு புரட்சி - கிராமிய மணமும் கர்நாடக இசையின் குணமும் கலந்து அற்புதமான ஆயிரம் பாடல்கள் நம்மால் கேட்டு ரசிக்க முடிந்தது. 

சூழலுக்கு ஏற்ற பாடல் வரிகள், நல்ல குரல்கள், இனிமையான இசை, பின்னணி இசை, வாத்திய அற்புதம் என்று இருந்த போது வந்தது இசைப் புயல் ஏ ஆர் ரஹமான் அவர்கள் வந்து மற்றொரு புரட்சி இசை தந்து மக்களை மயக்கினார். இன்னும் மயக்கிய வண்ணம் இருக்கிறார். 

இதற்கிடையில் ஓசைப் படாமல் சில ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்றால் அவர்கள் தேவா, ஜி வி பிரகாஷ், வித்யாசாகர், பரத்வாஜ், ரமேஷ் விநாயகம், இமான், என்று நீளும் போது திடீர் என உள்ளே நுழைந்திருப்பவர் சந்தோஷ் நாராயணன் அவர்கள். 

அவர் ஆஸ்திரேலியாவில் இசை ஏற்பாடு செய்து இங்கு வெளியிடுகிறார் என்று ஒரு புறம் செய்திகள் கசிந்தாலும் ஆசை ஒரு புல்வெளி, மோகத்திரை, பூ அவிழும் பொழுது, ஆகாயம் தீ பிடிச்சா, போன்ற மனதை வருடும் பாடல்கள் கொடுத்த பின்பு மாயநதி மற்றும் நெருப்புடா பாடல்கள் மூலம் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்த இவர் இசையை உயர்த்தி இருக்கிறாரா என்று கேள்வி புதிதாய் கிளம்புகிறது.

இதற்கு இடையில் அடியே அழகே, வா மச்சானே, கண்ணான கண்ணே, மனசுல சூரக்காத்து, போன்ற பாடல்கள் பாடி மனத்தைக் கொள்ளை அடித்து வருபவர் பிரபல மிருதங்க வித்வான் ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவ் மற்றும் பத்மா சாண்டில்யன் அவர்களின் மகன் ராகவேந்திர ராஜா என்கிற சீயன் ரோல்டன் எனும் இசைக் கலைஞன். 

அதே போல நேஹா பாஸின், அர்ஜித் சிங், ரஹத் பாத்தே அலி கான், பாம்போன் போன்ற ஹிந்தி இசைக் கலைஞர்கள் நம்மை மகிழ்வித்து வருகின்ற இந்த தருணம் எங்கே போயினர் நமது எஸ் பி பி, சித்ரா, ஸ்ரீனி, சங்கர் மஹாதேவன், ஹரிஹரன், சுஜாதா போன்றவர்கள் எனும் கேள்வியும் எழுகிறது? 

அதே போல பாடல்கள் எழுதுகின்ற வைரமுத்து, நா முத்துக்குமார், கபிலன், பிறைசூடன், அறிவுமதி, பழனிபாரதி, தாமரை இவர்களுக்கும் ஓய்வு அளிக்கப் பட்டு விட்டதா? என்ற கேள்வியும் மனதில் வந்து போகிறது. 

ஐ டி நிறுவனங்களில் அதிக சம்பளம் கொடுக்க முடியாத போது நிறைய சம்பளம் வாங்குபவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு குறைவான கூலியில் அதிகம் வேலை பார்ப்பவர்களை அமர்த்துகிறார்கள் அது போல தமிழ் மட்டும் ஹிந்தி படங்களில் புதிய நட்சத்திரங்கள், பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என்று மாற்றப் படுவதை நான் பார்ப்பது போல் நீங்களும் கவனித்தீர்களா ?

இன்று ஹிந்தி படங்களில்  அதிகமாக போஜ்புரி மற்றும் பஞ்சாபி பாடல்கள் தான் இடம் பெறுகின்றன - இதற்கு அதில் பங்கு பெறும் கலைஞர்கள் தான் காரணமா? அது போல் தான் இங்கு தமிழ் படங்களில் ஹீரோவே பாடல் எழுதுகிறார் பாடுகிறார், அல்லது புதிய நபர்கள் தான் படத்தை இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், எழுதுகிறார்கள், இசை அமைக்கிறார்கள், பாடுகிறார்கள் - இது வரம் மற்றும் சாபம் தான். 

புதியவர்களுக்கு திறமை இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், திறமையான பரிச்சயமான நபர்கள் ஏன் காணாது போனார்கள் ? கண்டுபிடித்து சொல்லுங்கள். 

முன்பெல்லாம் ஜெமினி படம் என்றால் பி பி எஸ் அல்லது ஏ எம் ராஜா பாடுவார். சிவாஜி எம்ஜிஆர் இருவருக்கும் டி எம் எஸ் பாடுவார், எப்போதாவது எஸ் பி பி பாடினார் - சற்று பொருந்தாவிட்டாலும். பிறகு கமல் மற்றும் ரஜினி என்றால் எஸ் பி பி தான் பாடுவார். 

இன்று பிரதீப் மற்றும் அருண்ராஜ் காமராஜ் ரஜினிக்கு பாடினால் சற்று வித்தியாசமாக இருக்கிறது எனக்கு. உங்களுக்கு எப்படி?

சமீபத்தில் கூட விஜய் படத்தில் ஹரிஹரன் பாடி ஒரு ஹிட் பாடல் கொடுத்தார். 

ஹிட் கொடுக்க ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ், ஒளிந்து இருந்து பாடி வந்தவர்கள், வீட்டு ஸ்டுடீயோவில் பாடியவர்கள் என்று  ஒரு கூட்டமே கிளம்பி விட்டது. கேட்டு ரசிக்க, ரசித்துக் கேட்க நாம் தயாரா? ஒரு கிடார் ஒரு தாள வாத்தியம் வைத்துக் கொண்டு மிக மிக குறைந்த செலவில் பாடல்கள் இன்று ரெடி. சில பாடல்கள் இந்தக் கட்டுரையில் மேலே சொன்னது போல ஹிட் ஆகி விட்டன. 

இசை வெல்லட்டும். மனம் ரசிக்கட்டும். ஆன்மா லயிக்கட்டும். எல்லோரும் ஜெயிக்கட்டும் என்று வாய் சொன்னாலும் இசைஞானி, ரஹ்மான், வைரமுத்து, முத்துக்குமார், எஸ் பி பி, ஹரிஹரன், சுஜாதா இவர்கள் இல்லாத திரை இசையை ஏனோ ஏற்க முடியவில்லை. செலவு எனும் பெயரில் இவர்களை தள்ளி வைக்கும் புதிய திரை உலகம் நமக்கு இனி நல்லவை தருமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

கொஞ்சம் 'மகிழ்ச்சி'யுடன் அதிக கவலையுடன் சோகத்துடன் முடிக்கிறேன் திரை இசை பற்றிய இந்தக் கட்டுரையை...

Thursday, August 4, 2016

Recent composition of Balasandilyan

காதல் பூமிக்கு அச்சாணி நீ 

என் புலம் சற்று நிற்கின்றது 
என் நிலம் சுற்றி வருகின்றது 
உன் பார்வை என்மீது பட்டால் 
உன் வாசம் எனைத் தீண்டி விட்டால் 

என்ன என்ன இன்னும் செவ்வாய் 
எனையென்று முழுதாகக் கொய்வாய் 
மறக்க முடியா உன் செவ்வாய் - எனை 
மயக்கித் தருமா அமுத மழையாய் 

பருவ மாற்றம் வானிலும் மனதிலும் -இரு 
துருவ மாற்றம் அகமும் புறமும் 
மாறுமா நெருப்பு நீராக வந்து 
மாற்றிப் பார் ஓர் அணைப்பைத் தந்து ..

வெயிலுக்கு நிழலாக வருகின்ற நீ 
மழை போல மனதினைக் குளிர்விக்கிறாய் 
அலை போல வந்து வந்து போகாதே 
அலைந்திட  இனி என்னால் ஆகாதே 

போக்கிரி மனதைத் திருத்த முடியமா - அதன் 
போக்கைத் தான் நிறுத்த முடியுமா 
சாக்கினி சொல்லாது முடிவுகள் வருமா - இல்லை 
காதல் சாவையே  பரிசாகத் தருமா 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

Wednesday, August 3, 2016

மதிப்பெண் முறையைத் தாண்டிய கல்வி Education beyond marks

மதிப்பெண் முறையைத் தாண்டிய கல்வி
- டாக்டர் பாலசாண்டில்யன்

நிகழும் பல சம்பவங்களுக்கு நமது கல்வி முறையை பலரும் குற்றம் சொல்வதைக் காண்கிறோம். ரவீந்திரநாத் தாகூர் கூட நீண்ட கட்டுரைகள்  எழுதியதுண்டு. ஒரு சில விஷயங்கள் மாறி இருக்கிறது. விளைவு ஐஐடி, ஐஐஎம், சட்டக் கல்லூரிகள், சிறப்புக் கல்வி நிலையங்கள் உருவாகி உள்ளன. இருப்பினும் 90 சதவீதம் மதிப்பெண் தாண்டிய மாணவர்களை உருவாக்கும் நோக்கம் தான் இன்றும் தொடர்கிறது.
அதிக மதிப்பெண் பெறவும், முதன்மை கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறவும் தான் இளைஞர்கள் இன்று கல்வி பயில்கிறார்கள். முன்பொரு காலத்தில் வங்கியில் பணி பெற, அரசு உயர் பதவிகள் பெற முயற்சி எடுத்தது போக இன்று பொறியாளராக, ஐடி நிறுவனங்களில் நிறைய சம்பளம் பெறும் நோக்கமாக மாறி இருக்கிறது.
படைப்பாற்றலுடன் கூடிய கல்வி என்று இல்லாமல் எலிப் பந்தயத்தில் ஜெயிக்கக் கூடிய ஏட்டுச் சுரைக்காய் கல்வி தான் இன்னும் தொடர்கிறது. சமூக அந்தஸ்து பெறவும், பொருளாதார அந்தஸ்து பெறவும் இந்தக் கல்வி போதுமானது. இதில் போட்டி போட முடியாத மாணவர்கள் ஓடி ஒளிகிறார்கள், தவறான முடிவுகளும் எடுக்கிறார்கள்.
இளையவர்கள் என்றும் கற்பனை சக்தி கொண்டவர்கள். பயம் இல்லாதவர்கள். ரிஸ்க் எடுக்க தயார் மனநிலை கொண்டவர்கள். அதனால் தொழில் முனைவோர்களாக வரும் தகுதி படைத்தவர்கள். இருப்பினும் போகப்போக இந்த குணாதிசயங்கள் மாறி கை கட்டி சேவகம் செய்பவர்களாக வெளிவருகிறார்கள்.
காரணம், தோல்வி தவறு; தோல்வி நல்லது அல்ல என்று பள்ளிகள் கல்லூரிகள் சொல்லித் தருவது தான். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிகள் என்று நெப்போலின் ஹில் சொன்னது பள்ளியில் செல்லுபடி ஆகவில்லை.
தோல்வியை சந்திப்பது இலக்கை நோக்கி உறுதியோடு பயணிக்க, தவறுகளில் இருந்து பாடம் கற்க, தன்னம்பிக்கை வளர உதவும் என்று ஊக்குவிக்கப்பட்டால், அவர்கள் வெகு சுலபமாக இலக்கில் இருந்து விலகவோ, இலக்கை மாற்றிக் கொள்ளவோ மாட்டார்கள்.
திறன் சார்ந்த கல்வி வாழ்நாள் முழுதும் ஒருவருக்குப்  பயன்படும். அறிவை விட திறன் சக்தி வாய்ந்தது. நினைவாற்றல் அதிகம் கொண்டவர்களை விட திறன் அதிகம் கொண்டவர்கள் போற்றப்படும் கல்வி முறை என்றும் மிகச் சிறந்தது. படைப்பாற்றல், சொந்த சிந்தனை, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளல் கல்வி ஆகாது. மாறாக பயன்படுத்தலே...!
புதிய முறைகளில் பாடம் சொல்லிக் கொடுப்பவர்களும் இன்று வேண்டும். அதிக வருமானம் பெற, நிறைய ஓய்வு நேரம் பெற, அழுத்தம் குறைவான பணி ஆசிரியப் பணி என்ற எண்ணம் மாறி எதிர்கால சமுகத்தை மாற்றி அமைக்கும், மகத்தான ஆக்கப்பூர்வ பணி ஆசிரியப் பணி என்ற மனநிலை வர வேண்டும்.
இணையதள காலத்தில் அவை சொல்லாத வாழ்வியல் விஷயங்களை எடுத்துரைக்கும் சூப்பர் ஆசிரியர்கள் நிறைய அவசியம். அவர்கள் நல்ல தலைவர்களை, தொழில் அதிபர்களை, உருவாக்கும் செயலில் ஈடுபட வேண்டும்.
புதிய இலக்கு என்பது கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் முனைவோர்கள், விளையாட்டு வீரர்கள், பொருளாதார நிபுணர்கள், தரமான சமூகம் அமைப்பவர்கள்  இவர்களை உருவாக்கும் கல்வி முறையும், அதற்கேற்ற கல்வி நிலையங்களும், ஆசிரியர்களும் தான் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.
அதிக திறன் வாய்ந்த சுமார் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பரவாயில்லை; நினைவாற்றல்  மட்டும் கொண்ட திறனே இல்லாத நல்ல மாணவர்கள் நாளைய பாரதத்திற்கு பயன் இல்லை.
சுமார் முகம், சுமார் உணவு, சுமார் தேநீர்  நமக்குப் பிடிக்காது, ஆதலால் நல்ல திறன் கொண்டவர்கள் மட்டுமே நாட்டை நிமிர்த்தி வல்லரசாக ஆக்க முடியும்.. தேர்வு நன்றாக எழுதத் தெரிந்தவர்கள் மதிப்பெண் பெறுவரே ஒழிய, வெற்றி வாகை சூடி வாழ்வில் நன் மதிப்பைப் பெற முடியாது.

அன்றே இந்தியாவின் நாளந்தாவில் மிகச் சிறந்த படிப்புகள் இருந்தன. உலகிற்கு உதாரணமாக இருந்தவர்கள் நாம். நமது நாட்டு அறிவாளிகள் இங்கேயே இருந்து நம்மை உயர்த்தும்  கல்வி முறை மாற்றமும், சமூக மாற்றமும் வர வேண்டும்.  வேலை தேடும் இளையவர்களை உருவாக்காமல் வேலை தரும் நம்பிக்கை மிக்க நபர்களை உருவாக்குவது தான் இன்றைய தேவையும் கடமையும் ஆகும்.