Thursday, August 12, 2021

Chevaliyar கமல் (62)ஒரு வாழும் சகாப்தம்

 


Chevaliyar கமல்
 (62)ஒரு வாழும் சகாப்தம்


டாக்டர்
பாலசாண்டில்யன்    

சச்சின் அவர்கள் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனையாளர். கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு மேலாக அதே துறையில் இருந்து  சாதித்துக் காட்டியவர். 

இசை ஞானி அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் மிகப் பெரிய சாதனை படைத்து வருபவர் (900+ படங்கள், 4500+ பாடல்களுக்கு இசை) பாடல் எழுதுவது, இசை அமைப்பது, சிம்போனி  ,ரீ ரெக்கார்டிங்நொடேஷன் எழுதுவது என பல்வேறு திறமைகளை வெளிபடுத்தியவர். சுமார் 4 முறை தேசிய விருது பெற்றவர். 

டாக்டர் பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள் பாடுவது தவிர, வயோலா, தபலா, புல்லாங்குழல், என பல வாத்தியங்கள் வாசிப்பது, இசை அமைப்பது, புதிய ராகங்கள் கண்டு பிடிப்பது, தில்லானா புனைவது, தமிழ் தெலுங்கு வடமொழி இவற்றில் பல சாகித்யங்கள் எழுதியது என 76 ஆண்டுகள் சாதனை படைத்த இசை வரலாறு என்றால் மிகையாகாது.

அந்த வரிசையில் கலைஞானி கமல்ஹாசன் அவர்களை பற்றி சிந்தித்து பார்த்தால் அவர் ஒரு நடிகர், கவிஞர், பாடகர், இசைஅமைப்பாளர், நடன கலைஞர், நடன ஆசிரியர், தொழில் நுட்ப நிபுணர், கதாசிரியர், எழுத்தாளர், எடிட்டர்,புகைப்பட நிபுணர், இயக்குனர், தயாரிப்பாளர், மிருதங்க கலைஞர், சிலம்ப கலைஞர், நகைச் சுவை வல்லுநர், தமிழ் (கோவை, மதுரை, சென்னை, இலங்கை என வட்டார வாரியாக) ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகள் அறிந்தவர். இன்று இதே தினம் (12 ஆம் தேதி ஆகஸ்ட், 1960) அவர் வி எம் மெய்யப்ப செட்டியார் அவர்களால் திரை உலகில் 'அம்மாவும் நீயே' எனப் பாடி அதற்கு குடியரசுத் தலைவரிடம் விருதும் பெற்றார். இன்று அரசியலில் கால் பதித்து விட்டார். 'பிக் பாஸ்' எனும் டிவி நிகழ்வை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார். 

 220+ படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.  இன்னும் வர வேண்டிய படங்கள் பல உள்ளன. இவரது ஏக் துஜே கே லியே, சாகர், சனம் தேரி கசம் படங்கள் பார்த்த ஹிந்தி உலகத்தினர் பயந்து போய் இவரை துரத்தி விட்டனர் என்பதே உண்மை. 

 அவரது 'பஞ்சதந்திரம்' கிளைமாக்ஸ் சீனில் நண்பர்களின் மனைவிகளிடம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பேசி அசத்துவது எப்போதும் மறக்க இயலாது. தெனாலி படத்தில் அவரின் சிங்கள மொழி உச்சரிப்பு அபாரம். அதே போல கோவை சரளாவுடன் கோயமுத்தூர் பாஷை பேசுவது, மைக்கேல் மதன காமராஜனில் நான்கு விதமாக வந்ததும், தசாவதாரம் படத்தில் வந்த நாயுடு பாத்திரம் யார் மறக்க இயலும். அபூர்வ சகோதரர்கள் அப்பு, நாயகன் படத்தின் வேலு நாயக்கர், உன்னால் முடியும் தம்பி படத்தின் (எம் எஸ் உதயமூர்த்தியின் கதை பிரதிபலிப்பு) என்றும் நம் கண்களில் நிற்கும். 

சிவாஜி (தேவர் மகன் யார் மறக்கக் கூடும்), MGR, நாகேஷ், கலைவாணர், மனோரமா, ஜெமினி, சாவித்திரி என்று வரலாறு படைத்தவர்களோடு பணியாற்றியவர். நலிந்த பல நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தவர் (வசூல் ராஜா படத்தில் கிரேசியின் அப்பாவாக காக்கா ராதாகிருஷ்ணன், கமலின் தாத்தாவாக நடித்த 'உன்னிகிருஷ்ணன்' - படம் பம்மல் கே சம்மந்தம் என்று பலர் நடித்தனர். இருப்பினும் 'உத்தம வில்லன்' படத்தில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் மற்றும் கே விஸ்வநாத் நடித்தது மிகப்பெரிய பெருமை. 

TKS, பாலமுரளி சார், அனந்து , இசைஞானி, KB, சுஜாதா, பிர்ஜு மஹராஜ், என்று இவருக்கு பல குருமார்கள் உண்டு. அதிலே பிர்ஜு மஹராஜ் அவர்களுக்கு விஸ்வரூபம் படம் மூலம் தேசிய விருது கிடைத்தது.  

 கமல் பாடிய பல்வேறு பாடல்களில் மிக முக்கியமானது 'நானாகிய நதி மூலமே' என்ற பாடல். அவர் தொடும் அந்த உச்ச ஸ்தாயியை யாராலும் தொட முடியாது. 

கமல் சாருக்கு கர்வம் உண்டு. அதனால் தான் அவருக்கு மேலும் மேலும் கஷ்டங்கள் வருகிறது என்று பலர் சொல்வதுண்டு. 

கொஞ்சம் விஷயம் தெரிந்தவருக்கே கர்வம் இருக்கும் போது பாரதியார் சொல்லும் 'ஞானச்செருக்கு' கமலுக்கு ஏன் இருக்க கூடாது?
அவர் வாழும் போதே ஒரு வரலாறு. ஒரு வியத்தகு சகாப்தம். உலக நாடுகளே இவரது திறமைகளை கண்டு வியக்கிறது. இவரது சமூக, கலை அக்கறை மற்றும் திறமை கண்டு மயங்காதவர் இல்லை.  இவருடன் பணி புரிய வேண்டும் என்று ஆசைப் படாதவரே கிடையாது எனலாம்.

இவரது பறந்து விரிந்த திறமைக்கு ஆஸ்கர் விருது கூட சிறியது தான்.

கூடவே இருக்கும் ஒருவரை பற்றி நாம் புரிந்து கொள்ள மாட்டோம். அது ஒரு சாபக் கேடு. அவரை மதிக்க மாட்டோம்.

மாபெரும் கலைஞர் நாம் வாழும் காலத்தில் பிறந்து நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பது நாம் செய்த பாக்கியம்.

இருக்கும் போது பாராட்டாது போற்றாது, ஆதரிக்காது, விரோதமாக பார்த்து விட்டு பின்னாளில் சிலை வைத்தும் பயனில்லை.

நமது நாடு பெற்ற...குறிப்பாக தமிழகம் பெற்ற இந்த கலைஞானியைப் போற்றுவது நம் அனைவருக்குமே பெருமை தான். 62 ஆண்டுகள் தாண்டி மேலும் பல சகாப்தங்கள் படைக்கட்டும்.