Monday, October 25, 2021

காஞ்சி மகான் பற்றிய பாடல்

காஞ்சி மகான் பற்றிய பாடல் 

எனது கானம் - இசைக்குட்பட்டது
(நாட்டுப்புற மெட்டு - பிரீ சிங்கிங்)
- பாலசாண்டில்யன்

காஞ்சி மகான் பேரைச் சொல்ல 
கவலைகள் தீருமே 
வாஞ்சையுடன் வணங்கி நிற்க 
வாழ்க்கை வசமாகுமே  (காஞ்சி)

வாட்டமுடன் வருபவரின் 
வருத்தங்கள் போகுமே 
நாட்டமுடன் தாள் பணிந்தால் 
நன்மை பல சேருமே  (காஞ்சி)

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர ஹர ஹர சங்கர    (காஞ்சி )

(தனன்ன தானென்ன தானன தானன )

தீராக்கவலை யெல்லாம் உன்னால் 
தீதின்றிப் பறக்குமே 
வாராச் சுகம் கூட நம்மை 
வந்து நலம் சேர்க்குமே 

பாராமுகம் கொள்ளா நின் 
பாதுகையை வணங்கினால் 
பாதகங்கள் பறந்தோடி நற் 
பலன்களும் கூடுமே 

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர ஹர ஹர சங்கர    (காஞ்சி )

கண்களினால் கருணை செய்த 
கண்கண்ட அற்புதமே 
கலியுகம் காத்து நிற்கும் 
காஞ்சியின் மாமுனியே 

அற்புதங்கள் பல செய்து 
அருள்மழை பொழிந்தவரே 
ஆட்கொள்ளும் குருநாதா 
அகிலத்தைக் காத்து நிற்பாய் 

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர ஹர ஹர சங்கர    (காஞ்சி )

(தனன்ன தானென்ன தானன தானன )
(காஞ்சி)

Sunday, October 10, 2021

அன்பின் நிறம் வெண்மை

 அன்பின் நிறம் வெண்மை

அறிந்து கொள் மனமே -
அன்பின் நிறம் வெண்மை

அந்த வெண்மையில் நாமும்
அந்த உண்மையில் நாமும்
ஒன்றரக் கலந்தால்
இல்லை இனி பேதமே

(அன்பின்)
ஆண்டவன் நிறம் வெண்மை
ஆண்டவன் நிறம் வெண்மை
அவனுடன் கலந்தால்
அவனருள் இருந்தால்
இல்லை இனி மன இருளே (அன்பின்)

அன்பின் நிறம் அது
வெண்மை தானே
அன்பின் நிறம் அது
வெண்மை தானே (அன்பின்)


குறிப்பு: சுமார் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பானிபெட் சென்றிருந்தேன் நண்பர் சுரேகாவை அழைத்துக் கொண்டு ஒரு பயிற்சி வகுப்பு ஹிந்தியில் எடுப்பதற்கு.

டில்லி விமான நிலையத்தில் இருந்து பானிபெட் காரில் செல்ல இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. வழியில் ஒரு டாபாவில் நிறுத்தி தேநீர் குடித்து சமோசா சாப்பிட்டு திரும்பிய போது 'ரேகா பரத்வாஜ்' அவர்கள் பாடிய ஒரு சூஃபி சிடி கண்ணில் பட்டு அதை வாங்கினோம். உடனே கேட்க ஆரம்பித்தோம். முதல் பாடலே 'இஷ்க் கா ரங் சபேத்' பாடல்.

சுமார் 50 முறை கேட்டு இருப்பேன். பிறகு அந்த பாடலை அதே மெட்டில் கிட்டத்தட்ட அதே அர்த்தம் பொதியும் வண்ணம் தயார் செய்த பாடல் தான் இது.

இங்கே தந்திருப்பது இரண்டு சரணம் தான். மொத்த பாடலையுமே மொழிபெயர்த்தேன் என்று இங்கே சொல்லி ஆகவேண்டும். 

Friday, October 8, 2021

Tamil Ghazal

 எனது கானம் - இசைக்குட்பட்டது

- பாலசாண்டில்யன்
கேயி கேயி மாஜே வாசே
- மராட்டி அபங் மெட்டு
கேவிக் கேவி நான் அழுதேன்
கேட்கலையோ கண்ணா உனக்கு
பாவி யென்னைப் பாராமல்
பாராமுகம் கொண்ட தேனோ ? (கேவி)
தாவி யென்னைச் சேர்த்தணைத்து
தழுவி நிதம் கொள்வாயோ ?
ஆவி பொருள் உடலனைத்தும்
அறியாமல் செய்வாயோ ? (கேவி)
ஆவல் மிகக் கொண்டதாலே
அளவிலாத துயருற்றேன்
காவல் செய்யவே யெனக்கு
கண்ணா நீ வருவாயோ ? (கேவி)

இது நவராத்திரி ஸ்பெஷல் பாடல்

எனது கானம் - இசைக்குட்பட்டது 

இது நவராத்திரி ஸ்பெஷல் பாடல் 

ராகம் : ஆனந்தபைரவி    

தாளம் : திஸ்ர கதி 


-பாலசாண்டில்யன் 



துர்கையும் நீயே பார்வதியும் நீயே 

துக்கங்கள் போக்கிடும் மீனாட்சி நீயே 

துரிதமாய் காத்திடும் காமாட்சி நீயே 

துஷ்டரை அழித்திடும் திரிசூலி நீயே   (துர்கை)


நற்பவியும் நீயே நாராயணி நீயே 

நற்கதி தருகின்ற நாகேஸ்வரி நீயே 

நல்லவை செய்கின்ற பரமேஸ்வரி நீயே 

நானிலம் ஆளுகின்ற மாகாளி நீயே  (துர்கை)


சாரதா நீயே சரஸ்வதியும் நீயே 

சகலமும் அருள்கின்ற ராஜேஸ்வரி நீயே 

சங்கடம் போக்குகிற லலிதாம் பிகையே 

சக்தியெனும் மாயே நீ சர்வேஸ்வரி தாயே  (துர்கை)


அன்பின் வடிவமே அகிலாண் டேஸ்வரியே 

அடைக்கலம் ஆனவர்க்கு அபிராமி நீயே 

ஆதார ஸ்ருதி நீயே நாதமும் நீயே 

அகில சராசரமும் உனதாட்சி தாயே (துர்கை)