Friday, January 7, 2022

தவிர்க்க முடியா முதுமை - 4

 

தவிர்க்க முடியா முதுமை 

(உணர்வோம் உணர்த்துவோம்)

பகுதி - 4

- பாலசாண்டில்யன் (மனநல ஆலோசகர்)

 பலவிதமான முதியோர் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். சிலருக்கு தினமுமே பிஸியோதெரபி செய்ய வேண்டும். கைப்பிடித்து நடக்க கூட்டிச் செல்ல வேண்டும். வீட்டுக்குள் கூட பாத்ரூம் போக குளிக்க கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும். அது மட்டுமா? கூட இருந்து புத்தகம் படித்துக் காட்ட வேண்டும். அவர்களோடு அமர்ந்து டிவி பார்க்க வேண்டும்

 அது மட்டுமா? பாங்க் அல்லது போஸ்ட் ஆபீஸ் சென்று பணம் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் கேட்கும் மருந்து, தின்பண்டங்கள், உணவு வாங்கித் தர வேண்டும். விரும்பினால் கோவிலுக்கு அல்லது தொழுகைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்

 சிலர் படுத்த படுக்கையாக இருக்கக்கூடும். அவர்களுக்கு உடம்பு துடைத்து, துணி மாற்றி, சிறுநீர் மற்றும் மலஜலம் செல்வதை எடுத்து அகற்ற வேண்டும். உணவு ஊட்டி விட வேண்டும். வாய் துடைத்து விட வேண்டும். நகம் வெட்டி, முக சவரம் செய்து விட வேண்டும். பெண்களாக இருந்தால் முடியை வாரி பராமரித்து உதவ வேண்டும். எப்போதும் அருகிலேயே அமர்ந்து இருக்க வேண்டும். நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இரத்த அழுத்தம் மற்றும் சுகர் செக் அப் செய்ய வேண்டும். அந்த விவரங்களை நோட்டில் குறித்து வைக்க வேண்டும். தேவையான சமயத்தில் முதலுதவி செய்ய வேண்டும்

 சில முதியவர்கள் கான்செர் போன்ற கொடிய நோய் பாதிப்பில் இருப்பர். அவர்கள் பல நேரம் வலி வேதனையில் துடிப்பார்கள். அவர்களுக்கு மிக மிக பொறுமையாக சேவைகள் செய்தல் வேண்டும். நேரத்தே மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டும். அதிக கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்

 நிதிநிலை மோசமான முதியவர்களும் நிறைய இருப்பது உண்டு. அவர்களின் நிலையறிந்து உதவிட வேண்டும்

 முதியவர்கள் மற்றும் பராமளிப்பவர்கள் (கேர் கிவர்) உறவுமுறை என்பது நீண்டகால அடிப்படையில் ஆனது. இந்த பந்தம் கெமிஸ்ட்ரி என்று சொல்லக்கூடிய ஒத்துப்போதல் இங்கே மிகவும் முக்கியமாகிறது. அதனால் முதியவர்கள் வீட்டிலேயே தங்கி (அவர்களுக்கும் ஓர் அறை அங்கே வீட்டில் வழங்கப்படலாம்) அந்த சேவையை செய்ய வேண்டி இருக்கலாம். அதற்கேற்ற நபர்களை பணியில் அமர்த்துதல் இங்கே தேவை. திறன் (ஸ்கில்) என்பதைத் தாண்டி இங்கே மனப்பாங்கு (ஆடிட்டூட்) முக்கியத்துவம் பெறுகிறது

 பிட் மற்றும் அன் பிட் (உடற்தகுதி இருப்பவர்கள் மற்றும் சற்றும் உடற்தகுதி இல்லாதவர்கள்) என்று இரண்டு வகையான முதியவர்கள் இருப்பதை நாம் காண்கிறோம்.

 கணவனோ மனைவியோ இழந்தவர்களாக இருக்கலாம். பிள்ளைகள் இல்லாதவர்களாக இருக்கலாம். பிள்ளைகள் வெளியூரில் இருந்து கொண்டு பணம் மட்டும் அனுப்புபவர்களாக இருக்கலாம். இப்படி பலவகைப்பட்ட முதியவர்கள் பற்றியெல்லாம் தான் கடந்த மூன்று  நாட்களாக பார்த்தோம்

 முக்கியமாக, பராமரிக்கும் நபர்கள் வயதில் இளையவர்களாக இருத்தல் நலம். அவர்களும் வயதில் மூத்தவர்களாக இருந்தால் நிறைய சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதே சமயம் வயதில் மிகவும் இளையவர்கள் இந்த பணிக்கு நிச்சயம் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். சற்று முதிர்ச்சி உடையவர்களே இந்த வேலைக்கு பொருத்தமானவர்கள்.   ஆதலால் கேர் கிவர்களும் வயது 25 முதல் 40 வரை இருத்தல் நல்லது. ஏனெனில் முதியவர்களை தூக்கி நிமிர்த்தி அவர்களை தாங்கிப் பிடித்திட அவர்களும் உடற்பலம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் சொல்லுகிற வலி வேதனைகளை தாங்கிக் கொள்கிற மனோபலமும் இங்கே தேவை

 பல நேரங்களில், வீட்டில் சமையல் செய்யும் நபர்களை தினம் தினம் குற்றம் சொல்லுகிற முதியவர்கள் உண்டு. அவர்கள் டிவி பார்க்கும் போது மற்ற நபர்கள் டிவி பார்ப்பதை அவர்கள் விரும்புவதில்லை. அதனால் இன்று பல வீடுகளில் இரண்டு டிவிக்கள் உண்டு. அதே போல உணவுமே வீட்டில் இருக்கும் இளையவர்களுக்கு தனியாக ஒரு மெனு, முதியவர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு வேறு மெனு என்று இருக்கிறது.

 ஆனால், வீட்டுச் சிறுவன் ஒரு இனிப்பு அல்லது ஒரு பூரி சாப்பிடும் பொழுது இந்த முதியவர்களும் ரகசியமாக கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு வாந்தி அல்லது பேதியில் சிக்கித் தவிக்கும் பொழுது வீட்டில் நடக்கும் பெரிய பட்டிமன்றம் : எப்படி யாரால் இந்த நிலைமை வந்தது என்று? மிகச் சரியாக போட்டுக் கொடுப்பான் அந்தச் சிறுவன்.

 அடிக்கடி கால் தடுக்கி விழுகிற முதியவர்கள், கேட்டதையே கேட்டு தொல்லை தருகிற நபர்கள், யார் வந்தாலும் அவர்களோடு பேசுகிறவர்கள், போவோர் வருவோரிடம் மகன் மருமகள் பற்றி குற்றப்பத்திரிகை வாசிப்பவர்கள், தேவையில்லாதவற்றை பேசி வம்பு வளப்பவர்கள், எல்லாவற்றிலும் குற்றம் காண்பவர்கள்இப்படி பலவகை நபர்களை கையாள்வது என்று அன்றாட சவால் என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ?

 சில மறதி மன்னர்கள் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லுவது, அடிக்கடி கை கழுவுவது, ஓயாமல் உடைகளை நனைத்துக் கொள்ளுவது இப்படி பொறுமையை சோதிப்பவர்களும் உண்டு

 அதே போல சில கேர் கிவர்கள் ரோபோக்கள் போல முதியவர்களை புரட்டிப் போட்டு உடம்பு துடைத்து விட்டு, பவுடர் போட்டு, உடை மாற்றி, கழிவுகள் அகற்றி, மாத்திரைகளை வாயில் திணித்து விட்டு தமது இரு சக்கர வாகனங்களில் அடுத்த வீட்டுக்கு பறக்கிற செயலையும் இன்று நிறைய காண முடிகிறது. அவர்கள் அவசரத்தில் சரியாக செய்தார்களா என்பது நாட்கணக்கில் நடக்கும் விவாதமாகவே இருக்கும். ஆனால் அவர்கள் பெறுகிற ஊதியமோ மிகப் பெரிய தொகை. இதில் அவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளும் இடைத்தரகர்களும் ஏஜெண்டும் உண்டு. இது வெளியே தெரியாது.

 அப்படிப்பட்ட கேர் கிவர்களுக்கு ஒத்துழைக்காது தண்ணி காட்டுகிற முதியவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. அது மட்டுமா ? "வந்து விட்டாயா, வா வந்து துடைத்து விட்டு துணி மாற்றி விட்டு ஓடு, உனக்கு எதுக்கு தான் சம்பளமோ?" என்று எகிறி விழுகிற முதியவர்களை சற்றும் சட்டை செய்யாமல் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களைப் பொறுத்தமட்டில் பழகிய ஒரு விஷயமாக மாறி விடுகிறது. பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போல

 "ஆஹா' படத்தில் வருகிற தாத்தா, பெண்மணி அவள் கண்மணி படத்தில் வம்பு இழுத்துக் கொண்டு வரும் 'விசு சார்', பாண்டி படத்தில் வருகிற ராஜ் கிரண்,  பாயசம் படத்தில் வருகிற கோபக்கார டெல்லி கணேஷ் சார், கமல் படத்தில் பார்ப்பதை எல்லாம் திருடுகிற பாட்டி இப்படி உண்மை வாழ்விலும் நம்மால் பல பாத்திரங்களை பார்க்க முடியும். இவர்களை சமாளிப்பது சவாலான விஷயம் என்று நினைக்கிற நாமும் இந்த நிலைமைக்கு வெகு சீக்கிரம் போக இருக்கிறோம். அது தான் தவிர்க்க முடியா முதுமை என்பது. இதில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. இது இயற்கையின் நியதி. இன்றைய காலகட்டத்தில் முதுமை என்பது சுமார் 40 வயது முதலே கூட தொடங்கி விடுகிறது

 நீண்ட ஆயுள் வாழ்வதைக் காட்டிலும், இருக்கும் வரை ஆரோக்கியமாக, யாருக்கும் எந்த சிக்கலும் தராமல் நற்செயல்கள் செய்து விட்டு மறைவது என்பது தான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நாம் மறைந்த பிறகு, "விட்டது சனி" என்று யாருமே சொல்லிவிடக் கூடாது. "தங்கமான மனிதர் அல்லது மனுஷி, இவர்/இவள் போல காண்பதரிது" என்று பெயர் வாங்குவதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

 (இங்கே ஒரு பின்னூட்டம்மாம்பலம்ஆ.சந்திரசேகர் நிறுவன தலைவர்

முதுமை ஓர் வரம் இந்த வரத்தை அடையாமலேயே பலர் பாரதி விவேகானந்தர் உட்பட மறைந்து விட்டார்கள் ஆனால் அவர்களுக்கு கெட்டாத பாக்கியம் தற்காலத்தில் கிடைத்திருக்கிறது முதுமையில் மனம் பழையதை நினைத்து நினைத்து பேசும் ஏங்கும் எனவே மனதிற்கு ஓர் வேலையை கொடுக்கவேண்டும் சும்மா வைத்திருக்க கூடாது தனிமை கூடாது எனவே பக்தி இலக்கியம் அரசியல் தொண்டு கல்வி கற்றுக் கொடுத்தல் என்று நேரத்தை நிரப்ப வேண்டும் ஓரளவு வருமானம் அவசியம் தன்மானம் பார்க்கக்கூடாது ஏதும் முடியாவிட்டால் பராமரிப்பு செய்பவர்களை தன் பாதுகாவலர்களாக நினைத்து அன்பு செலுத்த வேண்டும் அன்பளிப்பும் அளிக்கவேண்டும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் படி உடலையும் மனதையும் வைத்துக்கொள்ள வேண்டும் 80 வயது கடந்தால் தான் இப்போது முதுமை 60 வயதில் ஓய்வு எடுக்க கூடாது அரசியல்வாதிகளை பார்க்கவேண்டும் அவர்கள் எப்போதும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் 90 வயதானாலும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் எவ்வளவு திட்டு வாங்கினாலும் அது அவர்களுடைய கருத்து என்று ஓடிக்கொண்டே இருக்கிறார் அதுவும் ஒரு முன்னுதாரணம் தான் நமக்கு)

 அதே போல நமது வீட்டில் இருக்கும் பெரியவர்களை இருக்கும் போதே நன்கு கவனிக்க வேண்டும். அவர்கள் காலத்திற்கு பிறகு பலருக்கு சோறு போட்டு உடை எடுத்துக் கொடுத்தாலும் நமது குற்ற உணர்வில் இருந்து எளிதில் மீண்டு விட முடியாது. அவர்கள் மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு சொல்லிலோ செயலிலோ வெளிக்காட்டாவிடின் பயனில்லை. அது அவர்களுக்கு புரியப்போவதும் இல்லை. நிச்சயம் மூத்தோரின் ஆசிகள் நம்மை நன்றாக வாழ வைக்கும் என்று நம்புகிற பண்பாடு இந்திய நாட்டின் முக்கியமான ஒன்று

 இயன்ற வரை, முதியோர்களின் ஆசியை, பாசத்தை அனுபவித்து வாழப் பழக வேண்டும். அவர்களையும் தொழில் நுட்ப ரீதியில் நமக்கேற்ப மாற்றி முடிந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, சிறு பரிசுகளை தந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களையும் இந்த மொபைல் உலகத்திற்கு அழைத்து வரலாம். அவர்களை விமானத்தில் அழைத்துப் போகலாம். அவர்களோடு நல்ல புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். நாம் என்ன தருகிறோமோ அதுவே நமக்கு நாளை திரும்பி வரும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

 கேட்டு வாங்குவது இல்லை முதுமை. தானே அந்த அந்த பருவத்தில் வருவது. இன்றெல்லாம் முதுமை சீக்கிரமே வருகிறது என்பதை கவனித்து கனிவுடன் இருப்போம், கவனமாக இருப்போம், அன்புடன் இருப்போம், அகிலத்தை அன்பு மயமாக மாற்றுவோம். முதியோர் முகத்தில் அவர்கள் சிரிப்பில் ஆண்டவனைக்  காண்போம்.

 முதுமை பற்றி உணருவோம். உணர்த்துவோம்.