Wednesday, January 29, 2020

சூனியம்


 
நீயில்லை எனில் வீடேசூனியம் 
மனித சகவாசம்  இல்லா வீதி போல்
மணமே சற்று மில்லா மலரைப் போல்  
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 

இருள் சூழ்ந்த வனத்தைப்  போல் 
ஒளியிழந்த விழிகள் போல்  
அலைகள் இல்லாக்  கடலைப் போல்  
நிலவே இல்லா வானம் போல்  
பூக்கள் இல்லா நந்தவனம் போல்  
பொலிவே இல்லா மலையைப் போல்  
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 

வெட்டவெளி குளிர்தென்றல் போல்  
வெற்று மனதுள் கலைந்த நினைவு போல்  
விண்மீன் இல்லா இரவைப் போல்  
தூக்கம் தொலைத்த கட்டிலைப் போல்  
துக்கம் நிறைந்த மெட்டினைப் போல்  
நினைவுகளின் நிழலாக மட்டுமே ஆன   
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 

கண்ணின் நீர் முத்தை களவாடாமல்  
காலத்தின் தூரத்தை நீட்டி விடாமல்  
கணம் கணமிங்கே மாறிடும் மனமே  
கடும்பகல் கடந்து இரவாகிடும் தினமே
கஷ்டங்கள் தாண்டி சுகம் தேடுகையில் 
கதிரவன் வந்து கிழக்கே நரைக்கையில் 
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 
நீயில்லை எனில் வீடே சூனியம் 
மனித சகவாசம்  இல்லா வீதி போல் 
மணமே சற்று மில்லா மலரைப் போல்  
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 
உன் வரவு தான் நான் பெறும் மானியம் 
உன் உறவு தான் எந்தன் பாக்கியம் 


நீயிருக்கும் உலகு தான் சொர்க்கம் 

Tuesday, January 28, 2020

பித்தமும் சித்தமும்


மனதை நிலையில் வைக்காக் காதல் 
மயக்கம் நிறைந்தது பைத்தியமானது 
மகிழ்ச்சிக்கும் மனத் துயரத்திற்கும்  - என்றும் 
மனதுள் பாடல்கள் நல்ல வைத்தியமானது 

பரிவின் முடிவாய் மன்னிப்புக் கேட்பாய் 
ஏரியும் தீயாய் கோபமும் சேர்ப்பாய் 
எங்கே நீ நான் சொல்வதைக் கேட்பாய் - சட்டென 
எளிதில் மறைவாய் காற்றாய்ப் பறப்பாய் (மனதை)

மறைவில் இருந்தே எனை நீ பார்ப்பாய் 
மறைந்திருந்தாலும் உனை நான் பார்ப்பேன் 
சிறை வை என்னை சிந்தையில் அழகாய் - நீ  
சிரித்தால் சாவேன் மீண்டும் பிறப்பேன் (மனதை)

நாணிச் சிவக்கிற உனது முகம் தான்
நான் கரையேற கலங்கரை விளக்கு 
நான் தான் உனக்கு நாணம் விலக்கு - வா 
நானிலம் நமக்கு துணையாய் இருக்கு (மனதை)

- பாலசாண்டில்யன் 

வருவாயா ?


அதே உன் பார்வைக்கு
இன்றுமெனது காத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
உனது நெருக்கம் மனதை உருக்கும்
உனது அணைப்போ நெஞ்சை இறுக்கும்
நினைவில் இருக்கும் எனது மயக்கம்
நீங்காதிருக்கும் நீ வருகிற வரைக்கும்
அதே உன் பார்வைக்கு
இன்றுமெனதுகாத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
உனைக் காணாத மனதின் ஏக்கம்
உள்ளத்தில் நின்று கொல்லும் தாக்கம்
தொலைந்து போனதெந்தன் நிம்மதி தூக்கம்
துரத்திடும் உன் நினைவுகளின் கலக்கம்
அதே உன் பார்வைக்கு
இன்றுமெனது காத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
உனதன் பிற்காக மறந்தேன் எனதுலகம்
உண்டாச்சு உன்னால் என்னுள் கலகம்
நிச்சயம் வைப்பேன் நெற்றித் திலகம்
நிகழுமா சொல் அந்த அன்புச் சங்கமம்
அதே உன் பார்வைக்கு
இன்றுமெனது காத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
- பாலசாண்டில்யன்

Sunday, January 19, 2020

நீ தான் எந்தன் இரவு பகல்

எவையெல்லாம் உன்னுள்
புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
நான் காண்பவை வண்ணங்கள் தான்
உன் அன்பு அல்ல எண்ணங்கள் அல்ல
உன் வாசம் எங்கே உன் சுவாசம் எங்கே
உன் மூச்சும் பேச்சும் நானறிவேனே - அப்படி
எவையெல்லாம் உன்னுள்
புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
உனது வளமும் உளமும் அன்பு தான் உனது மனமும் குணமும் புதிய தெம்பு தான்
உனது ஸ்பரிசம் உனது கருணை இரண்டும்
உனது விரலில் குரலில் நானறிவேனே - அப்படி
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
உனது ஏற்போ உனது மறுப்போ எங்கே 
உனது அணைப்போ உனது தவிப்போ எங்கே 
உனது காதல் பார்வையை படம் பிடிக்க முடியுமா
உனது உருவம் உனது புருவம் வரையத்தான் முடியுமா - அப்படி
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
உன்னை அடையத் தான் எனக்கு விதியில்லையா
உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லையே
உன்னை நேரில் காணாது போனது சதியில்லையா
உனது படம் மட்டும் போதும் என்றால் சரியில்லையே
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
படைத்தவனே உன்னைநேரில் நின்று பார்த்தானா
பார்த்தால் பாராதது போல் கடந்து தான் போவானா
உனைப்போல் படைக்க இனி அவனால் கூட முடியுமா
எனைத்தான் பிரிக்க இனி விதியால் சற்றும் இயலுமா
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
வேண்டாம் இந்தப் படம் ச ச இது வெறும் நகல்
வேண்டும் வா நேரில் நீ தான் எந்தன் இரவு பகல்
இந்தப் புகைப்படத்தில் இல்லை
- பாலசாண்டில்யன்
(முகமது ரபி பாடிய எக்காலமும் நிற்கும் காதல் பண் - சாஹிர் லூதியான்வி அவர்களின் வரிகள், ரோஷன் அவர்களின் இசை, தாஜ் மஹல் படத்தின் ஜோ பாத் துஜ் மெய்ன் ஹை என்ற பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதின் ரம்மியம் கூடுமா குறையுமா ? அந்த தருணத்தை தமிழில் கொணரும் முயற்சி.....நிச்சயம் எனக்கு திருப்தி இல்லை... இருந்தாலும் தோற்கும் முயற்சி செய்வது பெரிய தொல்லை).

Saturday, January 18, 2020

நேர்படப் பேசு

நேர்படப் பேசு

சுற்றி வளைத்துப் பேசாதே 
குற்றம் உரைத்துப் பேசாதே 
நேர்படப் பேசு 

காயப்படுத்திப் பேசாதே 
சாயம் பூசிப் பேசாதே 
நேர்படப் பேசு   

இடுத்துக் காட்டிப் பேசாதே 
இரக்கமின்றிப் பேசாதே 
நேர்படப் பேசு    

வம்பு தும்புகள் பேசாதே 
வதந்தி என்றும் பேசாதே 
நேர்படப் பேசு 

தர்க்கம் செய்து பேசாதே 
குதர்க்க மனதுடன் பேசாதே 
நேர்படப் பேசு 

பின்னால் புறஞ்சொல் பேசாதே 
பிறர்சொல் புரட்டிப் பேசாதே 
நேர்படப் பேசு 

தீச்சொல் சுடுசொல் பேசாதே 
திகட்டும் இழிசொல் பேசாதே 
நேர்படப் பேசு 

சூழ்ச்சி உரைத்துப் பேசாதே 
வீழ்ச்சி  செயும்படிப் பேசாதே 
நேர்படப் பேசு 

வன்மம் காட்டிப் பேசாதே 
வீண் ஜம்பம்காட்டிப் பேசாதே 
நேரப்படப் பேசு 

அச்சுறுத்தி தினம் பேசாதே 
வற்புறுத்தி வஞ்சம் பேசாதே 
நேர்படப் பேசு 

பணிவு மறந்து பேசாதே 
பரிவு மறந்து பேசாதே 
நேர்படப் பேசு 

பக்தியிலாச் சொல் பேசாதே 
சக்தியிலாச் சொல் பேசாதே 
நேர்படப் பேசு 

உழைப்பைப் பழித்துப் பேசாதே 
உண்மைக் கெதிராய்ப் பேசாதே 
நேர்படப் பேசு 

பிழைப்பிற் காகப் பேசாதே 
பிணக்குக் காட்டிப் பேசாதே 
நேர்படப் பேசு 

நெஞ்சுர மின்றிப் பேசாதே 
நியாங்க ளின்றிப் பேசாதே 
நேர்படப் பேசு 

தூக்கி எறிந்து பேசாதே 
துஷ்டத் தனமாய் பேசாதே 
நேர்படப் பேசு 

கள்ளம் கபடம் பேசாதே 
உள்ளம் மறைத்துப் பேசாதே 
நேர்படப் பேசு 

மதிகெட்ட சமயம் பேசாதே 
நிம்மதி குலைந்திடப் பேசாதே 
நேர்படப் பேசாதே 

வாயில் வந்ததைப் பேசாதே 
வஞ்சகக் காரர்போல் பேசாதே 
நேர்படப் பேசு 

செவிகள் கூசிடப் பேசாதே 
செருக்கு டனென்றும் பேசாதே 
நேர்படப் பேசு 

முறை கேடாகப் பேசாதே 
முள்போல் கூராய்ப் பேசாதே 
நேர்படப் பேசு 

ஆத்திரம் கொண்டு பேசாதே 
ரௌத்திரம் காட்டிப் பேசாதே 
நேர்படப் பேசு 

யோசனை இன்றிப் பேசாதே 
ஈசனைப் பழித்துப் பேசாதே 
நேர்படப் பேசு 

நன்றி மறந்து பேசாதே 
நயமிலாச் சொல் பேசாதே 
நேர்படப் பேசு 

மதிப்புக் குறைவாய்ப் பேசாதே 
மதிகெட்டது போல் பேசாதே 
நேர்படப் பேசு 

விஷமம் கலந்து பேசாதே 
விஷமும் கலந்து பேசாதே 
நேர்படப் பேசாதே 

அகந்தை யுடனே பேசாதே 
அறிவை யிழந்து பேசாதே 
நேர்படப் பேசு 

நேர்மை தவறிப் பேசாதே 
சீர்மை தவறிப் பேசாதே 
நேர்படப் பேசு 

- பாலசாண்டில்யன் 

Tuesday, January 7, 2020

மூதூரில் ஒரு கீதம்

மூதூரில் ஒரு கீதம் - அது முழுதும் சொல்லும் 

எனக்கென்ன கோபம் உங்கள் மீது
வாழ்க்கை ஓர் ஆச்சரியம் தானே 
உங்கள் குழந்தைத்தனம் நிறைந்த 
கேள்விகள் கண்டு நான் வெகுண்டு 
வியந்து  தான் போகிறேன் ..சற்று 
பயந்து தான் போகிறேன்.

ஒரு போதும் வாழ்ந்திட நான் 
வழி தேடவில்லை 
வலியைக் கையாளவே 
நினைத்தேன் அதனை 
வலிய நினைத்தேன்
வேறென்ன செய்ய...வலியைக் கொய்ய 

நீங்கள் சிரித்தால் 
மரியாதை காட்டி 
மறுபுன்னகை வீசிடவே கவிதையாய் 
எனது இதழில் கடனை வைத்தேன் 
ஒரு புன்னகை கடனாய் வைத்தேன்
காய்ந்த கண்களில் கரைந்த நீருடன் 
ஒரு புன்னகை கடலென வைத்தேன்.

உங்கள் துக்கங்கள் வாழ்ந்த  
வாழ்க்கையின் கலங்கரை விளக்கு  
வலி மிகுந்த  உறவை 
காட்டிச் சிமிட்டுகிறது  
கடும் வாழ்வைப் புரிய வைக்கிறது 
வெயிலின் சூட்டினை 
குளிர்தரு நிழலினை 
மாறி மாறிப்  பெறுகிறோம் வேறென்ன ?

இது தானே வாழ்க்கையின் லீலை 
இதை விட அதற்கென்ன வேலை 
இதற்கா கொடுத்தோம் பெரும் விலை 
இதுவே மனதின் தொடர் கவலை 

எனக்கென்ன கோபம் உங்கள் மீது 
வாழ்க்கை ஓர் ஆச்சரியம் தானே 
இத்தனைக்கும் பிறகு 
உங்கள் குழந்தைத்தனமான 
கேள்விகள் கண்டு நான் வெகுண்டு 
வியந்து  தான் போகிறேன் ..சற்று 
பயந்து தான் போகிறேன்.

(Tujhse naaraz nahin zindagi.....Heard it a few times again and again...
and had to put this down in Tamil....so much of inspiration Anup Ghoshal creates)
- பாலசாண்டில்யன் 

வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு

மீண்டும் இவ்விரவு
வரலாம் வராமல் போகலாம்
இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு
இல்லாது போகலாம்
மீண்டும் நாம் எதுவும்
சொல்லாது சாகலாம்

வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு

இக்கணம் ஏனோ
நமது வசம்
நம் பேரதிர்ஷ்டம்
வா என்னைப் பார்த்துச் செல்
மனதாரக் கண்டு கொள்
மிக அருகில் ...வான் நடுவில்

வா வந்து தழுவு
மீண்டும் இரவு வா
வந்து தழுவு
பின்பு நீ நழுவு

நிகழுமா இந்நிகழ்வு
மீண்டும் வாழ்வில்
வருமோ வராதோ
இன்பம் தராதோ
கையை மாலையாக்கி
கழுத்தில் நீ போடு
ஆனந்தக் கண்ணீரோடு

வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு

கண்களால் எனைக்கடத்து
அன்பு மடியில் நிறைத்து
இப்பாச மழை
நமை நனைக்க
நினைந்திருப்போம் நம் உறவை
நனைத்து  நிற்போம் இந்த இரவை

வா வந்து தழுவு
மீண்டும் இரவு வா
வந்து தழுவு
பின்பு நீ நழுவு

மீண்டும் இவ்விரவு
வராமல் போகலாம்
இந்த ஜென்மத்தில்
நம் சந்திப்பு
இல்லாது போகலாம்
- பாலசாண்டில்யன்

(Heard Lag ja gale....several times...could not resist writing this)

Anthem for business people

வணிகர்களுக்கு ஓர் ஆந்தெம் 2020:(Recession - Attrition - Downfall in Economy - Inflation - Unemployment)

வளமான வணிகம் என்றும் வேண்டும் வாங்குவோர் மலர்ந்து மகிழ வேண்டும் வாடிக்கையாளர் நல்லுறவு  வேண்டும் வழங்குவோர் ஜொலித்து ஒளிர வேண்டும்

பண்பும் பாங்கும் சிறக்க வேண்டும் பரிவர்த்தனைகள் செழிக்க வேண்டும் பாரிலுள்ளோர் பயனுற வேண்டும் பஞ்சம்பட்டினி மறைய வேண்டும்

நூறாண்டு ஆனாலும் புதுமை வேண்டும் நோன்புபோல் ஊழியர் உழைக்க வேண்டும் நாளுக்கு நாள் வளர்ச்சி வேண்டும் நல்லோர் கனிவுடன் அதற்கருள வேண்டும்

மாறாத புன்னகை முகங்களில் வேண்டும் மலர்ந்திட்ட உள்ளமே நாளும் வேண்டும் மனதார மாற்றங்கள் நிகழ வேண்டும் மகிழ்ச்சியே மனங்களை நிரப்ப வேண்டும்

எளியோரெல்லாம் வளம்பெற வேண்டும் இல்லை என்றிடா ஏற்றம் வேண்டும் எல்லைகளில்லா உயர்வே வேண்டும் எல்லோரும் இன்புற வாழ்தல் வேண்டும்
- பாலசாண்டில்யன்