Thursday, January 26, 2023

நேசப்பற்றை விட தேசப்பற்று முக்கியம்







நேசப்பற்றை
 விட தேசப்பற்று முக்கியம்

- பாலசாண்டில்யன்

 

சோனி டிவி எண்டெர்டைன்மெண்ட் சேனலில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வரும் 'இந்தியன் ஐடல்' இசை போட்டி நிகழ்ச்சி மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இப்போது சீசன் 13 நடைபெற்று வருகிறது. டாப் 8 - எட்டு திறமைசாலிகள் தற்சமயம் பாடிக் கொண்டு இருக்கின்றனர். இசை அமைப்பாளர்கள் ஹிமேஷ் ரேஷமையா, விஷால் சேகர் மற்றும் நேகா கக்கர் ஆகியோர் நடுவர்கள்.

 

கடந்த 22.01.2023 அன்று நடந்த குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான ஒன்றாக இருந்தது. வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் (மொத்தம் 2 மணி நேரம் நடந்த ஒன்று) நடந்த எபிசோட்.

 

முப்படை வீரர்கள், உயர் காவல் அதிகாரிகள், என்சிசி மாணவ மாணவிகள், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர் என்று பலதரப்பட்ட நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்

 

போட்டியிடும் 8 பாடகர்களும் முழுக்க முழுக்க தேசப் பற்று மிக்க ஹிந்தி சினிமா பாடல்களை (ரவீந்திர ஜெயின், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், ஷங்கர் எஹ்சான் லாய் (ஷங்கர் மஹாதேவன்) மற்றும் இசைப்புயல் ஆர் ரஹமான் ஆகியோர் இசை அமைத்த பாடல்கள் - அதிகபட்ச பாடல்கள் இசைப்புயல் இசையில் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

 

அத்தகைய தேச பக்தி பாடல்கள் அந்தக் காலத்தில் 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் வந்திருக்கலாம். சில பாரதியார் பாடல்கள் உண்டு. மற்றபடி அண்மைக்காலங்களில் 'தமிழா தமிழா' போன்ற ஓரிரு பாடல்கள் மட்டுமே தமிழ் சினிமாக்களில் உள்ளன. சரி போகட்டும். அது அல்ல இந்த பதிவின் நோக்கம்.

 

ஒவ்வொரு பாடகர்களையும் உற்சாகப்படுத்த நேரில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். அவர்களின் வீரமிக்க உணர்ச்சிமிகு தேசப்பற்றை தூண்டக் கூடிய கதைகளை பகிர்ந்த பிறகு அவர்கள் தமக்கு பிடித்த ஒரு பாடலை பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டனர்.

 

தனது 23 ஆம் வயதில் கார்கில் போரில் உயிர் நீத்த கேப்டன் அனுஜ் நாயர் அவர்களின் தாயார் ஒரு சிறப்பு விருந்தினர். அனுஜ் இளைய பருவம் முதற்கொண்டு வீரத்தோடு இருந்த ஒருவர். தனது அன்னைக்கு பல சமயம் கடிதங்கள் அனுப்புவார் போர் எல்லையில் இருந்து. ஒவ்வொரு சமயமும் அவரது தாயார் 'எனக்கு பயமாக உள்ளது, நீ வந்து விடு' எனும் போது 'என்னைப் போல பலர் வீடு திரும்பி விட்டால் மக்கள் நிம்மதியாக எப்படி வாழ முடியும் ' என்று பதில் கூறுவாராம்.

 

அப்படிப்பட்டவர் கார்கில் யுத்தம் நடைபெறும் முன்பு தனது அம்மாவிற்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். 'நான் மிகவும் இக்கட்டான பணியில் உள்ளேன். நான் ஒருவேளை வீடு திரும்பாமல் போகலாம். எனக்காக பிரார்த்தனை செய்யவும்'. அவர் முதலில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக சேதி வந்தது. பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் இறந்த செய்தியும் அவர் உடலும். பின்னர் அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. அவரின் சார்பாக அவர் அம்மா தான் பெற்றுக் கொண்டார்.

 

அடுத்து மேஜர் யோகேந்திர சிங் யாதவ் அவர்கள் நேரில் வந்து இருந்தார். அவர்தம் 16ஆவது வயதில் மிலிட்டரியில் சேர்ந்து உள்ளார். தமது 19ஆவது வயதில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.

 

சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ் 1999-இல் நடைபெற்ற கார்கில் போரின் போது, புலி மலையை கைப்பற்றுவதற்கு, பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான இவரது வீர தீரச் செயல்களை பாரட்டும் விதமாக இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம வீர் சக்கர விருது இவருக்கு 1999-இல் வழங்கப்பட்டது. இவர் இந்த புலி மலை (17000 அடி உயரம், அதிகபட்ச குளிரில்) ஏறி பாகிஸ்தான் படை வீரர்களை துவம்சம் செய்து இந்தியக் கொடியை அங்கே நட்டு பறக்க செய்து இருக்கிறார்.

 

சுமார் சில அடி தூரங்கள் பாக்கி இருக்கும் வேளையில் இவருடன் உடன் வந்த மூன்று நான்கு பேர் குண்டு பட்டு இருக்கின்றனர். இவரின் மீது தொடர்ந்து 17 குண்டுகள் பாய்ந்து தாங்கொணா வலியுடன் இவர் விடாமல் முன்னேறி இருக்கிறார். இவர் கைகளில் கால்களில் குண்டு. மூக்கில் காயம். அப்போது இவருக்கு மூக்கில் முதல் உதவி செய்ய ஒரு வீரர் முன்வருகிறார். இவர் கண்ணெதிரில் அவரின் புருவத்திற்கு அருகே ஒரு குண்டு பாய்கிறது. அது துளைத்து அந்த வீரரின் மூளை சிதறிப் பறந்து போய் விழுவதை இவர் தனது கண்ணால் பார்த்து இருக்கிறார்.

 

அந்த அதிர்ச்சி, வலி, பயம் எல்லாம் தாங்கிக் கொண்டு மலையின் உச்சிக்கு ஏறி அங்கிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நால்வரை தமது துப்பாக்கியால் தாக்கி வீழ்த்தி விட்டு கம்பீரமாக நின்று இருக்கிறார். அந்த வீர தீர கதையை தனது வாயால் விளக்கும் பொழுது அனைவருமே கண்ணீர் சிந்தினர். ஆனால் அவர் மட்டும் வெற்றிப் புன்னகை ஒன்றை தாங்கி நின்றார்.

 

2008, 26 நவம்பர், மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், இசுலாமியத் தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகும். ஒரு பள்ளிச் சிறுமி, அவர் தந்தை, மற்றும் தம்பி எதேச்சையாக வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது கண்ணெதிரே தம்பி குண்டடி பட்டு வீழ்கிறான். அந்த குண்டு வீசிய 'அஜ்மல் கசப்' எனும் தீவிரவாதியை நேரில் தான் கண்டதாக கோர்ட்டில் சாட்சி சொன்ன அந்த தேவிகா ரோடாவன் எனும் வீர தீர இளம்பெண் நேரில் வந்து தனது அனுபவத்தை வர்ணித்த பொழுது அரங்கமே எழுந்து பாராட்டியது. அவர் தந்தையும் உடன் வந்திருந்தார்.

 

வீரர்கள் எப்போது வீட்டுக்கு வருகிறார்களோ அன்று தான் நாங்கள் தீபாவளி, மற்றும் ஹோலி கொண்டாடுவோம் என்று பெருமையுடன் சொன்ன ஒரு வீர மனைவி முகத்தில் அத்தனை பெருமிதம், புன்னகை. அவர் மேலும் சொன்னார், "என் கணவருக்கு எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்று தெரிந்து தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். இந்த தேசத்துக்கு அவர் செய்கிற சேவை காரணமாக அடுத்த ஏழு ஜென்மமும் நான் அவரையே திருமணம் செய்வேன் என்றார்.

 

அடுத்து நாம் பார்த்தது சி பி - ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியின் - ஷஹீதா பர்வீன் கங்குலி அவர்கள். அவர் கங்குலி அல்ல; பாயும் புலி. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஒரு தீவிரவாதியை இவர் என்கவுண்டர் செய்து உள்ளார் என்பது வரலாறு. பயம் என்பது இவர் அகராதியில் கிடையாது. இவர் கணவரும் மிலிட்டரி வீரர். இவர் வீட்டை, நாட்டை, கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொண்டு வாழ்ந்த ஒரு உயர் காவல் அதிகாரி. அரங்கத்தில் வந்திருந்த ஒரு இளம் என்சிசி பெண்மணி சொன்னார், "எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள். நீங்கள் எங்களுக்கு பெரிய முன்னுதாரணம். நாங்களும் வரும் நாட்களில் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே ஆசை" என்ற பொழுது அரங்கம் எழுந்து நின்று கைதட்டியது.

 

இப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதரின் கதைகளை அங்கே கேட்ட எல்லோரும் கண்ணீர் மல்க உணர்ச்சி பெருக்குடன் அமர்ந்து இருந்தனர். பார்க்கும் ஒவ்வொரு நேயரும் அப்படியான தேசப்பற்றை மனதில் உணர்ந்தனர். ஒரு நிகழ்ச்சி இப்படித் தான் இருக்க வேண்டும்

 

ஒவ்வொரு பாடல் முடியும் பொழுதும் 'வந்தே மாதரம்' என்ற கோஷம் அரங்கை நிறைத்தது

 

தேசத்திற்கு இப்படி உயிர் தியாகம் செய்து சேவை செய்பவரை கொண்டாடும் நிகழ்வாக அது அமைந்தது. இடையிடேயே 47 வயது நிறைவு செய்த கவிஞர், எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மனோஜ் ஷுக்லா முன்தஷீர் தமது எழுச்சி மிகு கவிதைகள் கொண்டு தனிமுத்திரை பதித்து நிகழ்ச்சியை பல படிகள் முன்னேற்றி நின்றார்

 

'எல்லா நாடுகளும் வானத்தை போற்றுகிறது. நாம் தான் பூமியை தாய் என்று போற்றுகிறோம். இந்த மண்ணை கையில் எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம்' என்றார். மேலும், நமது வீரர்களின் மீது குண்டு பாய்ந்தாலும் அவர்களின் ஆடை என்றும் கரை படியவில்லை என்றார். ஒவ்வொரு தாயும் மார்பில் இருந்து பாலுடன் கலந்து வீரத்தை ஊட்டி உள்ளதால் தான் அவர்கள் நமது எல்லை காக்கிறார்கள். நாம் அமைதியாக வாழ்வை ரசிக்கிறோம் என்றார்

 

அடுத்து ஒரு வித்தியாசமான மனிதர் - அவர் தான் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இசைக்கலைஞர் - மற்றும் இசைப்பள்ளி ஒன்றை நடத்தும் உமேஷ் கோபிநாத் ஜாதவ். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பனி வெயில் மழை குளிரில் தமது பைக் மூலம் 1.2 லட்சம் கிமி தூரம் பயணித்து புல்வாமா அட்டாக் மூலம் உயிர் தியாகம் செய்த பல வீரர்களின் வீடு சென்று அவர்கள் வீட்டில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து  பற்பல கலசங்களில் திரட்டி வந்துள்ளார். பின்னர் திரட்டிய அந்த மண்ணை சிஆர்பிஎப் உயர் அதிகாரியிடம் சமர்ப்பித்து இன்றும் அது ஒரு பொக்கிஷமாக காக்கப்பட்டு வருகிறது. இந்த பணி தொடங்கிய பொழுது அவரிடம் வெறும் 2000 ரூபாய் தான் இருந்தது. வீடு அவரை புறக்கணித்தது. செல்லும் இடமெல்லாம் இவரின் நோக்கம் அறிந்து பலர் இவருக்கு தங்க இடம், குடிநீர், உணவு என்று வழங்கி வாழ்த்தி அனுப்பி உள்ளனர்

 

நாமெல்லாம் ஒரு வீரரோ யாரோ இறந்து விட்டால் ஓம் சாந்தி அல்லது ஆன்மா சாந்தி அடையட்டும் அல்லது ஆர்ஐபி என்று போட்டு விட்டு நமது வேலையை பார்ப்போம். ஆனால் இங்கு தான் உமேஷ் கோபிநாத் வித்தியாசப்பட்டு நிற்கிறார். வெகு விரைவில் தமது அனுபவங்களை நூல் வடிவத்தில் கொண்டு வர போகிறார்

 

பல குடும்பங்கள் இவருக்கு இறந்த வீரர் பயன்படுத்திய பேனா, ஷூ, டைரி, தொப்பி எல்லாம் இவருக்கு பரிசாக கொடுத்து உள்ளனர்.பெரும்பாலும் தமது வண்டியை பெட்ரோல் பங்கில் நிறுத்தி விட்டு சில நாட்கள் பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு தமது பயணத்தை தொடர்ந்து இருக்கிறார்.

 

அடுத்து, நம்ம ஊர் இசைப்போட்டி நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கும் பொழுது கோபமும் வருத்தமும் நிச்சயம் வருகிறது. என்ன செய்ய. இது எனது நோயா? இல்லை இயற்கையில் இப்படி உங்களுக்கும் மனதில் தோன்றுமா? தெரியவில்லை. இயன்றால் நான் சொன்ன 22.01.2023 அன்று நடந்த எபிசோட் பாருங்கள் சோனி டிவியில்.