Thursday, July 29, 2021

பிரமுகர்கள் பலரின் கருத்தூட்டங்கள்

 

எனது நீங்கா நினைவலைகள் தொடர் (34 பகுதி) நேற்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பிரமுகர்கள் பலரின் கருத்தூட்டங்களை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். உள்ளம் நெகிழ்கிறேன். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி மலர்களை சமர்ப்பிக்கிறேன்.

 மிகச்சிறப்பான அனுபவங்கள். மிகச்சிறப்பான வாழ்க்கை. எழுத்தாளரின்உன்னத எழுத்துக்கு அடிமையாகி விட்டேன்.

வாழ்த்துகள்

ஆர்னிகா நாசர்

----------------------------------------------------------------------------------------------------

 ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நினைவுகளைத் திரும்பவும் மீட்டெடுத்து, மனதில் ஓட விடுவது ஒரு கலை. பல சமயங்களில் அது ஒரு டைம் மெஷின் போல, நம் நினைவுகளுடன் பல வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த பல அனுபவங்கள், இடங்கள், மனிதர்கள் என நம்மை அழைத்துச் சென்றுவிடும்! பாலாவின் நினைவலைகள் பெளர்ணமியின் ஒளியில் எழும்பியடிக்கும் கடலலைகளைப் போல அவருடன், வாசித்த நம்மையும் நனைத்து, குளிர்வித்தது என்றால் அது சற்றும் மிகையல்ல!

மத்தியத் வர்க்கக் குடும்பங்களின் மூத்த குழந்தைக்கு நேரும் அத்தனை சோதனைகளும், சவால்களும் பாலாவுக்கும் ஏற்பட்டுள்ளன. மேற்கு மாம்பலம், பம்பாய், துபாய் எனச் சென்ற இடங்களிலெல்லாம் அனுபவம் என்னும் செல்வத்தைச் சேகரித்த விதத்தை தனக்கே உரிய இயல்பான நடையில் ஒரு மாதமாக, நம் தோள் மீது கைபோட்டபடி சொல்லிவந்த பாலா பாராட்டுக்குரியவர். எத்தனை மனிதர்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், மாற்றங்கள் - இன்றைய பன்முகத் தன்மைக்குப் பின் நீண்ட நெடிய அனுபவச் சிதறல்கள். ஒவ்வொருவரும் வாசித்து உணர வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்! நம்பிக்கை, எதிர்பார்ப்பு, அன்பு, ஆச்சர்யம், நன்றி .. எத்தனை சம்பவங்கள். மிக அழகாகக் கோர்வையாக, சுவாரஸ்யமாக தன் வாழ்க்கையை விமர்சித்தபடியே விவரிப்பது ஒரு வரம். அது பாலாவுக்கு வாய்த்திருக்கிறது, வாழ்த்துகள்!

அழகான, சுவாரஸ்யமான, உபயோகமான புத்தகமாக வருவதற்கான அத்தனை லட்சணங்களும் பொருந்தியுள்ள நினைவலைகள் - அனுபவங்களைப் பேசுகின்ற கட்டுரைகள்! காத்திருக்கிறோம் பாலா!

 நெஞ்சார்ந்த வாழ்த்துகள் உங்கள் நினைவலைகளை எங்கள் மீதும் பாயந்து குளிர்வித்தமைக்கு!

ஜெ.பாஸ்கரன்.  

-------------------------------------------------------------------------------------------------

பால சாண்டில்யனின்நீங்கா நினைவலைகள்”, முகநூலில் முப்பத்துநான்கு பகுதிகளாக வந்து முத்திரை பதித்துள்ளது. இத்தொடரைத் தொடர்ந்து படித்து வந்த பலருள் நானொருவன்

எத்தனை நிகழ்வுகள் எத்தனை அனுபவங்கள் எத்தனை சந்திப்புகள்; எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், அடடா ஒரு த்ரில்லரைப் படிப்பது போல் இருந்தது. அவருடைய மும்பை வாசம் ,வெளிநாட்டுப் பணி, மற்றும் அவருடைய தந்தை தாய் குடும்ப உறவுகள் பற்றிய பகுதிகள் என்னை நெகிழ வைத்தன. அவருடைய தன்னம்பிகையும், கடும் உழைப்பும், எந்நேரத்திலும் சோராத உற்சாகமும் என்னை வியக்கவைத்தன. அவர் மேற்கொண்ட பயணத்தில் துணையாக வந்த பல பெருமக்களை சரியாக நினைவுகூர்ந்து பதிவு செய்துள்ள அவரது நன்றிக்கடன் போற்றத்தக்கது.

டோர்மேன் டு சேர்மேன் வரை சுமார் இரண்டு லட்சம் பேர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளார் ! இன்னும் தொடர இருக்கும் இந்த சாதனைக்கு என் கரவொலிகளும் வாழ்த்துகளும்……. 

அன்போடும், பண்போடும் மிக எளிமையாகப் பழகிக் கொண்டிருக்கும் என் இளைய நண்பரின் வாழ்க்கை நிகழ்வுகள் இத்தனை ஆழமும் அர்த்தமும் கொண்டவையாக இருப்பது எனக்கு ஓர் இனிய வியப்பு.

எந்த இடத்திலும் சுவை குன்றாமல் தன் வாழ்க்கை அனுபவங்களை, உண்மைத்தன்மை மாறாமல் சொல்வது மிகப் பெரிய திறமை. அது நூற்றுக்கு நூறு பாலாவிடம் உள்ளது. இது நூலாக வந்தால் சாதனை புரிய விரும்பும் பல இளைஞர்கள் படித்துப் பயனடைவார்கள்.

அன்புடன் வே சு 

------------------------------------------------------------------------------------------------------

*சாதனைகளும்* *வேதனைகளும்* *நிறைந்த* *வலிமையான* *பயணம்

 பொதுவாக சுய சரிதையில் ஒருவருடைய குடும்பம் சார்ந்த செய்திகளே அதிகம் இடம் பெறும். மாறாக தன் கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் குறித்தப் போராட்டங்கள் , அவற்றை உடைத்தெறிந்து முன்னேறிய விதம் இப்படி தன்னைப் பின்னோக்கிப் பார்த்திருக்கிறார் என் இனிய நண்பர் பாலசாண்டில்யன்.

 35 ஆண்டுகளுக்கு மேலாக என்னைப் போன்று பலருடன் அன்புடன் கலந்த நட்புப் பாராட்டியிருக்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக இந்த தொடர் அமைந்திருப்பது  அவரின் பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டுஇத்தனை பேரையும், இத்தனை சம்பவங்களையும் நினைவில் நிறுத்தி 35 நாட்களுக்குள் முகநூல் வாயிலாக ஒரு முழுமையான நூலைத் தயாரிக்க எடுத்த  அசுர சாதனை முயற்சியென்று தோன்றுகிறது.

நினைப்பதை நிறைவேற்றி ஜெயிப்பது நிஜம் என்று தன் Unlimited Vision    விரிவுபடுத்தி வியக்க வைத்திருக்கிறார். அடுத்த 35 ஆண்டுகளின் இவரது சரித்திரத்தைப் படிக்க எல்லாம் வல்ல இறைவன் எனக்கு ஆயுளைக் கூட்டிக் தர வேண்டுகிறேன். (ஹி..ஹி.. பொது நலத்தில் சுயநலம் தப்பில்லீங்க )

 உதயம் ராம்

----------------------------------------------------------------------------------------------------------

காலவெள்ளத்தில் கரைந்த நினைவுகளையும் காதல் உள்ளத்தில் உறைந்த நினைவுகளையும் அலை அலையாய் மீட்டெடுத்து அழகிய நினைவலைகளாய் தவழவிட்ட பாலா சாரின் சுயசரிதம் சொல்கிறது அவரின் பெருமிதம்

நல்ல சுய சரிதை நூல்கள் நிகழ்வுகளை வெளிப்படையாகப் பேசும், உணர்வுகளை வாசகர்கள் உணரும் வண்ணம் வீசும் ... அந்த வகையில்

நினைவலைகள் எல்லா உணர்வுகளையும் அனுபவங்களின் குவியலாய் கொட்டித் தந்திருக்கிறது

 நினைவலைகளின்...அழகிய நினைவுகள் இன்பத்தைத் தருகிறது

சாதனை நினைவுகள் ஊக்கத்தைத் தருகிறது

சோதனை நினைவுகள் படிப்பினைத் தருகிறது

இயல்பாகவே சுயசரிதைப் படைப்புகள் தன்னுணர்வுச் சார்ந்தவை. துல்லியமாக நினைவுகளை மீட்டுக் கொண்டு வருவதற்கு இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் சுயசரிதைகளில் பிழையான தகவல்கள் தரப்படும்.

அவ்வாறு இல்லாமல் பாலா சாரின் நினைவலைகள் ஒரு மலைவழிப் பயணம் போல் ஏற்றங்களையும் இறக்கங்களையும் வளைவுகளையும் சுளிவுகளையும் ஒளிவு மறைவின்றி உண்மையை உரக்க பேசுவதை நன்கு உணர முடிகிறது.

படிக்கப் படிக்க சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படியாகவும் வழங்கியதற்குப் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் ...உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் பாலா சார்

என்றும் அன்புடன் ரெமோ

------------------------------------------------------------------------------------------------------------

முனைவர் பாலசாண்டில்யன் அவர்களின் சுயசரிதை தொடர், உண்மையில் ஒரு வெளிப்படி தன்மையாக இருந்தது குறித்து மிகவும் பெருமை கொள்கிறேன்... Dr பாலா அவர்களுடனான என்னுடைய நட்பு இருபத்து ஏழு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் பட்சத்தில், அவர் பகிர்ந்த இந்த தொடர்கள் மூலம் இன்னமும் அவர் மீதான மரியாதை பன்மடங்கு பெருகியது.. 

எத்தனை சவால்கள், தடைகள், நெருக்கடியான சூழ்நிலைகள்.... வேறு யாராயினும் துவண்டு, சோர்ந்து, அவைகளையே காரணம் காட்டி தன்னை தானே முடக்கி இருப்பார்கள்; 

இவரை பார்க்கும் பொழுது எனக்கு பிரமிப்பு இன்னமும் மும்மடங்காக உயர்கிறது.. ஒரு மனிதன் எத்தனையோ சக பயிற்றுனர்களுக்கு வாய்ப்பளித்து, பயிற்சி துறையில் போட்டி மிகுந்த இந்த காலகட்டத்தில் அனைவரையும் அன்போடு, அக்கறையோடு, அதே சமயத்தில் மிக மரியாதையோடு நடத்தும் பாங்கு.... அஹா ஆஹா.... மிக பெருமை.

Dr பாலாஅவர்களின் தொடர் பதிவிகளிருந்து பார்க்கையில், கடைநிலை ஊழியர் முதல் ஆளும் வர்க்கத்தை சார்ந்த ஆட்சியாளர்கள் வரை அவர் பயிற்சி தந்திருப்பது ஆபாரம்.... அவருடன் நான் சேர்ந்து பயிற்சி அளிக்கும் சந்தர்பங்களில் கண்டிருக்கிறேன் அவர்தம் ஆற்றலை... அனைவரையும் பாடல்கள், விளையாட்டுகள், பங்கேற்ப்பு மூலமான குழுப்பயிற்சிகள் மூலமாக் சுண்டியிழுக்கும் பேராற்றல் கொண்டவர்.. எங்கள் இருவரையும் “சச்சின் – சேவாக்” என்றே அழைப்பார்கள்;

அன்பான மனைவி, அறிவார்ந்த பிள்ளைகள், பெருமைக்குரிய பெற்றோர்கள், உன்னதமான உடன்பிறப்புக்கள் பற்றி அவர் எழுதிய பதிவுகள் உண்மையில் மனதை பிரமிக்கத்தக்க விதத்தில் இருந்தது.  உண்மைதான், இவரின் வெற்றியில் அவர்களின் பங்கு மகத்தானது... எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அருளும இந்த பல்கலை குடும்பத்திற்கு தொடர வேண்டுமாய் பிராத்திக்கிறேன்.. 

தோல்விகளை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை எவருக்கு இருக்குமோ, அவர்கள் வெற்றியாளர்களே.... அவர் சந்தித்த பிரச்சனைகள் தான் எத்தனை எத்தனை.... 

சோதனை, வேதனை, போதனை..... சாதனை. இப்படியாக Dr பாலா அவர்கள் சந்தித்து, எதிர்க்கொண்டு சாதித்த தருணங்கள் குறித்த அவரின் பதிவுகள் சில மணித்துளிகள் நம்மை நெகிழ வைத்தது.. இவற்றின் மூலம் அவர் வெளிபடுத்திய சில முக்கிய தலைமைப் பண்புகள் (குறிப்பாக சிக்கலான சூழ்நிலையிலும் முடிவெடுக்கும் திறன்....) நிச்சயம் இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.....

அவரின் பரந்த நட்புவட்டம் பலருக்கு ஆச்சரியமான ஒன்று... ஏனெனில், அவர் தினமும் பதிவிடுகையில் குறைந்தது 30 – 40 பேர்களையாவது அங்கீகரிப்பார்!! என்னை பொறுத்தவரையில் அது உண்மையான பட்டியல்.. அவரின் பதிவுகளுக்கு பின்னூட்ட கருத்துக்களை வாசிக்கும்போது, அடுத்த பதிவில் DR பாலாவோடு தங்களின் தொடர்புகள் குறித்து நிச்சயம் வரும் என்கிற ஆவலை என்னால் உணர முடிந்தது.. Dr பாலா அவர்கள் ஒரு கூகுள் தளம்... எதையும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கும் கேட்ட மாத்திரத்தில் தகவல் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தி தரும் ஒரு நடமாடும் களஞ்சியம்... காரணம் அவர்தம் பரந்த நட்புவட்டம்.. 
Dr பாலா அவர்களின் பதிவுகளை தொடர்ச்சியாக பார்க்கையில், அவர் விட்டுவைத்த துறை / தளம் எது தான் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்... இசை, எழுத்து, கவிதை, நடிப்பு, பயிற்சி, நல வள ஆலோசகர், நிறுவன மேலாண்மை, நிகழ்வு ஒருங்கிணைத்தல், பள்ளி – கல்லுரி – பல்கலைக் கழகங்களில் நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர், அனைத்து தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்ப்பு (ஏதோ ஒன்றிரண்டு அல்ல, நூற்றுக்கணக்கில்...).... ஆக இப்படி ஒரு மனிதரால் வெற்றி தொடர்கிறது என்றால் பெருமை அல்லவா.... ஆம், ஆவருடன் என் தொடர்பு என்பது என் பெருமையே!!

குளித்தலை துவங்கி, சென்னை பட்டப்படிப்பு, மும்பை வாசம், வெளிநாடு வேலை, மீண்டும் சென்னை பிரவேசம் வரையிலான வாழ்க்கை பயண பகிர்வு அருமை... பள்ளி, கல்லுரி நட்பு வட்டம், பயிற்றுவித்த ஆசிரியர்களின் பெருமை, உறவினர்கள் உபசரிப்பு, பெற்றோர் பெருமை, இனிதே அமைந்த இல்லாள் – இல்லறம், அறிவார்ந்த (பெண்) பிள்ளைகள் வளர்த்த விதம், வாய்த்த மாண்புமிகு மாப்பிள்ளை அவர்தம் குடும்பம், சகோதர – சகோதரிகள் – மைத்துனர்கள் – சொந்த மற்றும் ஒன்றுவிட்ட உறவுகளின் ஒத்துழைப்பு, தொழில்சார் அனுபவங்களை பயிற்றுவித்த மேலதிகாரிகளின் ஊக்கம், பயிற்சிதுறையில் அறிமுகம் செய்து மற்றும் மிக சிறந்த வாய்ப்புகளை தந்த ஆளுமைகளை பற்றிய அங்கீகாரம், அரசு அதிகாரிகளின் பாராட்டு, தொண்டு நிறுவனங்களில் பங்கு..... இப்படியாக Dr பாலா அவர்கள், “உள்ளதை சொல்லுகிறேன், உண்மையை உரைக்கிறேன்” என்கிற பாணியில் எழுதிய சுயசரிதை பதிவுகள் கண்டு மனம் குளிர மகிழ்ந்தேன்... பெருமை கொண்டேன் ...

அவரும், அவர்தம் குடும்பமும் எல்லாம் நலமும் வளமும் பெற்று, Dr பாலா அவர்களின் சீரிய பணி இன்னமும் பல்லாண்டு காலம் தொடர என் மனமார்ந்த பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துகள்!! வாழி!!! 

முனைவர் குரு ஆறுமுகம்