Wednesday, July 27, 2022

சிவரஞ்சனியும் சில பெண்களும் - திரைப்படம்

 

பெண்டிரைப் போற்றிப் பாடியது அந்நாள் மட்டுமல்ல ...இந்நாளிலும் தான்.

இரண்டு நாட்கள் முன்பு பெருமதிப்பிற்குரிய திரௌபதி மர்மு என்ற பட்டியலிடப்பட்ட பழங்குடி இனத்தை சார்ந்த ஒருவர் நமது நாட்டின் ஜனாதிபதி ஆகி உள்ளது பெருமைக்குரிய விஷயம்.

சிவரஞ்சனியும் சில பெண்களும் - திரைப்படம் 

இயக்கம் வசந்த் சாய். இசை இளையராஜா.

 அசோகமித்திரன் அவர்களின் 'விமோசனம்', ஆதவன் அவர்களின் 'ஓட்டம்' மற்றும் ஜெயமோகனின் 'தேவகிச் சித்தியின் டைரிஇந்த மூன்று கதைகளின் சங்கமம் தான் இந்தப்படம். 68ஆவது தேசிய விருது இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.

 சிறந்த துணை நடிகை விருது லட்சுமிப்ரியா சந்திரமௌலிக்கு கிடைத்துள்ளது. தவிர சர்வதேச மற்றும் பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இந்தப் படத்தை அண்மையில் பார்த்தேன்.

முந்தைய சமுதாயத்தில் மகளிருக்கு மிக உயர்ந்த இடம் இருந்தது என்பது பெருமைக்கு உரியது. பெண்கள் தான் ஞானிகளாக அறிவு சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். கோஷா, அபலா, லோபாமுத்ரா, விஷ்வரா, சூர்யா, இந்திராணி, யாமி, ரோமாஷா எனும் பெயர்கள் வேத புராண காலங்களில் பெறுமதிப்பிற்குரிய பெயர்கள்

 மனுஸ்ம்ரிதி 3.56 படி "யத்ர நரயஸ்து பூஜ்யந்தே" என்று தொடங்கும் துதியில் பெண்களை பற்றி மனு சொல்லுவது யாதெனில், "பெண்கள் எங்கு உரிய மதிப்பு பெறுகிறார்களோ அங்கு தான் இறைவனும் தேவதைகளும் உறைகின்றனர். அவர்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் எந்த செயலும் வெற்றி பெறுவதில்லை"

 வேதங்களும் உபநிஷத்துகளும் பெண்களை உயர்ந்த இடத்தில்வைத்து இருந்தது. கார்கி, மைத்ரேயி போன்றவர்கள் வேத உபநிடதங்களால்  போற்றப்பட்டவர்கள். ஆச்சார்யா என்று ஆண்பாலை சொல்லுவது போல ஆசார்ய என்றும் குருவின் மனைவியை ஆச்சார்யினி என்றும் அழைத்தனர்

பாரத் மாதா (தாய் நாடு), தாய் மொழி என்று தான் சொன்னார்கள் நமது முன்னோர்கள். இந்திய நதிகளின் பெயர்கள் காவேரி, கோதாவரி, நர்மதா, கங்கா, சிந்து, சரஸ்வதி, அமராவதி என்று பெண்கள் பெயரால் அழைக்கப்பட்டது. இசையில் ஸ்ருதி 'மாதா' என்று அன்னையை குறித்துச் சொன்னார்கள். கறவை இனங்கள் 'அம்மா' என்றே அழைத்தன. பசுவை தெய்வமாக வழிபட்டனர் நமது முன்னோர்கள்

 சீதா தேவி, திரௌபதி, குந்தி, சகுந்தலா, மீரா, ஜிஜாபாய், ஜான்சி ராணி, ஆண்டாள் நாச்சியார் இவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக இருந்தனர்

 பின்னாளில் உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்திய பெண்கள் என்ற பட்டியலில் நீங்கா இடம் பிடித்தவர்கள் இந்திரா காந்தி, சகுந்தலா தேவி, எம் எஸ் சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர், பர்வீன் சுல்தானா, கஸ்துரிபாய், மல்லிகா சாராபாய், பத்மா சுப்ரமணியன் ஆகியோர். இந்த வரிசையில் பி டி உஷா, கிரண் பேடி, கல்பனா சாவ்லா, சானியா மிர்சா, மேரி கோம், சுமதி அய்யர் போன்ற விளையாட்டு வீராங்கணைகளை காலம் மறக்காது

 கிரண் மஜும்தார் ஷா, ஸ்வாதி பரிமல், மல்லிகா ஸ்ரீனிவாசன், நீலம் தவான், ராதிகா ராய், வந்தனா லூத்ரா, இந்திரா நூயி போன்ற இந்திய பெண் தொழிலதிபர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள்

 பெண்களை உயரிய இடத்தில் வைத்து அழகு பார்த்தவர்கள் ராஜா ராம் மோகன் ராய், ஜ்யோதிராவ் புலே, மஹரிஷி கார்வே, பீம்ராவ் அம்பேத்கர், தந்தை பெரியார், மகாகவி பாரதியார் ஆகியோர் எனலாம்

 மகளிர் மேம்பாடு என்றால் என்ன?

சரி இப்போது கேட்கிறேன்மகளிர் மேம்பாடு என்றால் என்ன? உடனே எல்லோரின் மனதில் வருவது என்ன? ஆண் பெண் சமத்துவம், பெண்ணியம், பெண் இயக்கம், இளம் பெண்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இவை தானே? உண்மையில் இது இருக்கிறதா?

 மகளிர் மேம்பாடு என்பது நகரத்துப் பெண்கள், வேலைக்கு போகும் பெண்கள்  மட்டும் என்று அடக்கி விட முடியாது. தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமங்கள் இங்கு உள்ள பெண்களும் தங்கள் குரல் வெளியே கேட்கும் படி எழுந்து விட்டார்கள். எந்தப் பெண்ணும் இன்று ஆண்களின் அடுத்த அல்லது இரண்டாவது குரலாக இருக்க விரும்பவில்லை. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று வித்தியாசம் இன்றி அனைவருமே சமூக அரசியல் உரிமைகளைக் கோரத் தொடங்கி விட்டார்கள். பெண்கள் தாமும் இருப்பதை இன்று தெரியப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்இது மிக ஆரோக்கியமான நிலை தான்

 துரதிர்ஷ்டவசமாக அதிகமான பெண்கள் இன்று ஏமாற்றம், கொடுமை, துன்புறுத்தல் என்று பலவிதமான இடர்பாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.. உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக, மனதளவில், பாலியல் தொல்லைகள், கற்பழிப்பு, பாலியல் வன்முறை, அறிவு சார்ந்த வன்முறை என்று பலவிதமாக அவர்கள் சந்திக்காத துன்பங்களே இல்லை எனலாம்

 தொடரும் அவலநிலை :

இவை எல்லாம் தாண்டி, இன்னும் கூட தனியாக மளிகை கடைகள், துணிக் கடைகளுக்கு செல்ல பெண்களுக்கு பல்வேறு மாநிலங்களில் அனுமதி இல்லை. இன்னும் 50% வீடுகளில் கணவர் தான் வீட்டில் என்ன உணவு சமைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்

 இன்னும் அதிக பட்ச பெண்கள் தமது கணவர்களை மணமேடையில் தான் முதல் முதலில் சந்திக்கிறார்கள். பல மாநிலங்களில் பெண்களுக்கு தனி

அறை அல்லது கழிப்பறை இன்னும் இல்லை. இன்றும் பல மாநிலங்களில் ஆஸ்பத்திரி செல்ல பெற்றோர், கணவர் அல்லது மாமியார் அனுமதி தேவைப்படுகிறது பெண்களுக்கு. ஆடை, உணவு, படிப்பு, ஓட்டுரிமை, வேலைக்கு சேருதல், மேற்படிப்பு படித்தல், பணம் செலவழித்தல் எல்லாவற்றிற்கும் இன்றும் ஆண்களின் தலையீடு தொடர்கிறது நம் நாட்டில்

 மொத்தம் 27 பெண்கள் மட்டுமே ராஜ்ய சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். 66 பெண்கள் மட்டுமே லோக் சபையின் உறுப்பினர்கள் - அதாவது பெண் எம் பிக்கள் (12.15%). இதுவே 1951 ஆம் ஆண்டு 22 பெண்கள் மட்டுமே லோக் சபையில் இருந்தனர்.

 ஒட்டுமொத்த தேசத்தில் போலீஸ் ஆய்வுக் குறிப்பின் படி மொத்தம் 442 பெண்கள் காவல் நிலையங்களே உள்ளன (இது 2012 ஆம் ஆண்டின் படி). இதில் 196 மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 5500 எஸ் மகளிர் அதிகாரிகள் உள்ளனர் (2017 கணக்குப் படி) அவர்களில் 290 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

 27 சதவீதம் பெண்கள் தான் வேலைக்குப் போகிறார்கள். பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ள 131 நாடுகளில் இந்தியா 120 ஆவது இடத்தில் உள்ளது. இருப்பினும் தமது கணவர்களை விட அதிகமாக வருமானம் பெறும் பெண்கள் இந்தியாவில் 19 சதவீதம் என்று சொல்லப்படுகிறது

 ஊட்டச்சத்து குறைபாடு, வயதுக்கோளாறு, தாய்மை மற்றும் மகப்பேறு காரணமாக பெண்கள் தமது வேலையை ராஜினாமா செய்து விட்டார்கள் என்று பல நிறுவனங்கள் கூறுகின்றன

 வீட்டுக்குள் கூட்டிப் பெருக்கி சமைத்துக் கழுவி துவைத்துப் பிழிந்து கலைத்துப் போன மனைவிகள் காத்திருக்கிறார்கள் ஊர் உலகு பார்க்க. உறங்கப் பொழுதின்றி ஊர் உலகு சுற்றி உழைத்துக் களைத்து கணவர்கள் காத்திருக்கிறார்கள் தனது விடுமுறையில் வீட்டில் ஓய்வெடுக்க என்ற நிலை மாறி இருவருமே உழைத்து களைத்து நிற்கிறார்கள். இங்கே மகளிர் மேம்பாடு என்பதை விட மனநல மேம்பாடு என்பதே தலை தூக்கி நிற்கிறது

 இருப்பினும்,பெண்களை சக்திமயமாக்கும், மகளிர் மேம்பாட்டு விஷயங்கள் உண்மையில் சாத்தியமாக வேண்டும் என்றால் பெண்கள் தமது பலம் பலவீனங்கள் மற்றும் வாய்ப்புகளை முற்றிலும் உணர்தல் வேண்டும். பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கூற்றை முற்றிலும் முறியடிக்கும் விதமாக சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்

 தமது திறமைகளை முழுமையாக புரிந்து கொண்டு அவற்றை மென்மேலும் மேம்படுத்தி அதன் மூலம் வளர்ச்சி காண வேண்டும். சரியான இலக்குகளை நிர்ணயித்து அதற்கு யார் வந்தாலும் எது வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வேட்கையுடன் வென்று நிற்க வேண்டும். சுய முன்னேற்றம் குறித்த, சுய மதிப்பு குறித்த நேர்மறை எண்ணங்களை பெண்கள் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்

 கல்வி பயிலுதல், வேலைக்கு செல்லுதல் இவை தாண்டி தொழில் முனைவோர்களாக பெண்கள் அதிகம் பேர் வர வேண்டும். அதுவே நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும். அதே போல அரசியலிலும் அவர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும்

 நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்பட பெண்களின் பங்களிப்பு மிக அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது

 இருண்ட பாதையில் நடந்து செல்லும் போது நிழலைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. எங்கோ ஒளி இருக்கிறது என்பதால் தானே நிழல் விழுகிறது. அது போல மகளிர் மேம்பாடு என்பது ஒரு பகல் கனவு அல்ல என்ற நம்பிக்கை ஒளி மனதில் இருக்கிறது. அதில் ஒரு பெண்ணின் நிழல் தெரிகிறது.  சிறு முள் நகரும்நிச்சயம் புது நாள் விடியும்நம்மால் இது முடியும்

இது மேற்படி படத்திற்கு எனது விமர்சனம் அல்ல. இந்தப் படத்தில் வரும் சம்பவங்களுக்கு எனது பிரதிபலிப்பு. மிக அருமையான மூன்று சிறுகதைகளை எடுத்துக் கொண்டு மிகவும் ஞாயம் செய்துள்ளார் இயக்குனர், நடிகர்கள் மற்றும் நடிகைகள்

அடிமட்ட தளத்தில் , நடுத்தர வகுப்பில், சற்றே உயர் நடுத்தர வகுப்பில் இருக்கும் மூன்று பெண்களுக்கும் பொதுவான சிக்கல்களும், ஆணடிமை தனங்களும் எப்படி பெண்களின் வாழ்வை பாதிக்கின்றன என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ள இந்தப் படம் எல்லோரும் பார்க்க வேண்டிய, பார்த்து விட்டு பெண்டிரை சரியாக மதிக்க வேண்டும் என்று கற்க வேண்டிய படம். வழக்கமான விஷயங்களை எதிர்பார்த்து உட்கார்ந்தால் ஏமாறுவீர்கள். 

நிச்சயம் படம் பார்க்கப் பார்க்க கதாபாத்திரத்தோடு ஒன்றி விடுவீர்கள் என்பது நிச்சயம் 

- பாலசாண்டில்யன், மனநல ஆலோசகர். எழுத்தாளர்