Friday, May 21, 2021

கொரோனா காலத்தில்

 கொரோனா காலத்தில் யாருக்கெல்லாம் திண்டாட்டம் ?

- பாலசாண்டில்யன் 

- பள்ளிகளுக்கு, நண்பர்கள் வீட்டுக்கு, அருகில் உள்ள பூங்காவிற்கு போக முடியாத சிறுவர்களுக்கு 

- தொடர்ந்து வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ ஓட்டுனர்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுனர்கள், மருந்து கடைக்காரர்கள், காவல் அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள், கார்பொரேஷன் ஊழியர்கள் 

- தபால் நிலைய ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் 

- உணவு மற்றும் முக்கிய பொருட்களை இல்லத்தில் டெலிவரி செய்யும் டென்ஸோ, ஸ்விக்கி ஊழியர்கள் 

- வீட்டில் இருந்தே கடினமான சூழலில் உழைக்கும் 'ஒர்க் பிரம் ஹோம்' ஊழியர்கள் 

- ஊடக நண்பர்கள்  (பிரிண்ட் மற்றும் டிவி மீடியா)

- அரசு ஊழியர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 

- வீட்டில் உடல்ரீதியாக கஷ்டப்படும் முதியவர்களை வைத்துக் கொண்டு சிரமப்படும் பிள்ளைகள் 

- முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 

- மிகுந்த சிரமத்துடன் வணிகம் நடத்தும் சிறு குறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள் 

- இன்னும் பரீட்சை எழுத முடியாமல் தவிக்கும் +2 மாணவ மாணவிகள் 

- படிப்பு முடிந்து  வேலை கிடைக்குமா என்று தவிக்கும் இளைஞர்கள் 

- யாரையும் சந்திக்க முடியாமல் உள்ளுக்குள் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள். 

- எல்லாவற்றையும் விட ஏற்கனவே பல ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி அடுத்த வேளைக்கு என்ன சமைக்கலாம் என்று சிந்தித்து, சமையல் செய்து, துணி துவைத்து, வீட்டில் தொடர் சேவை செய்யும் இல்லத்தரசிகள். (நன்றி பாராட்டு எதிர்பாராத பாவப்பட்ட ஜென்மங்கள்)

யாருக்கு கொண்டாட்டம் ?

- கண்டபடி விலை ஏற்றி விற்கும் காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் 

- உயிர் காக்கும் மருந்துகளை (மாஸ்க், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் உட்பட) இஷ்டத்திற்கு விற்கும் வணிகர்கள் 

- உயிர் இழந்த பிறகும் செம்மையாக பணம் கறக்கும் தனி நபர்கள் 

- தினம் ஒரு 'பிரேக்கிங் நியூஸ்' போடத் துடிக்கும் சில மலிவான ஊடகங்கள் 

- தோன்றியதை எழுதி சமூக வலைத்தளங்களில் வதந்தி மற்றும் பயத்தை கிளப்பி விடும் விஷக் கிருமிகள் 

- பாட்டரி, பெட்ரோல், பொருட்கள் திருடும் கயவர்கள் 

Wednesday, May 19, 2021

சூப்பர் சிங்கர் செய்யும் இசைக்க(கொ)லை

 சூப்பர் சிங்கர் செய்யும் இசைக்க(கொ)லை 

- பாலசாண்டில்யன் 

டிவி நியூஸ், டிவி சீரியல் பிடிக்காது என்பதால் சில நேரம் டிவி விவாதங்கள் (அதுவும் நல்ல பேச்சாளர்கள் இருந்தால் மட்டும்), நீயா நானா என்று பார்ப்பது வழக்கம். விடாது பார்ப்பது இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள். 

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பல சீசன்களாக பார்த்து வருகிறேன். அதில் இருந்து வெளியே வந்துள்ள சாய் சரண், மாளவிகா, விக்ரம், ஸ்ரீகாந்த், பிரியங்கா, ஸ்ரீஷா, சத்யபிரகாஷ், பிரகதி, ஷிவாங்கி, மூக்குத்தி முருகன்  என்று பற்பல நல்ல திறமையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றாலும் இப்போது இரண்டொரு சீசன்களாக வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிச்சயம் ஒரு கேலிக்கூத்து தான். இசைக்கு செய்யும் பெரிய துரோகம் தான். நிச்சயம் சந்தேகம் இல்லை. 

மிகவும் வருந்தத்தக்க விஷயமே மிகவும் இசை ஞானம் மிக்க நடுவர்களாக வரும் திரு உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் போன்றோரின் நிலை தான். நிகழ்ச்சியில் வரும் மிமிக்ரி, நடனம், கெட்ட கெட்ட வசனம், கிறுக்கு ஜோக்குகள், சிறுபிள்ளை விளையாட்டுகள், நேரத்தை வீணடிக்கும் வெட்டிப் பேச்சுக்கள் என்று இசை தவிர எல்லாமே உண்டு இந்த நிகழ்ச்சியில். அவற்றை சகித்துக் கொண்டு இந்த நடுவர்கள் அமர்ந்து கொண்டு இருப்பது தான் மிகவும் கொடுமை. சில நேரம் இந்த அச்சுபிச்சு விளையாட்டுகளில் நடுவர்களையும் சேரச் சொல்லி அவர்களையும் கீழ் நிலைக்கு தள்ளுவது ...!!

தற்போது நடக்கும் சீசனில் மானசி, அபிலாஷ்,பரத், அனு, ஸ்ரீதர் சேனா என ஐந்தாறு திறமைசாலிகளின் பாடல் கேட்க இசைப் பிரியர்கள் வீணடிக்கும் (அல்லது வீணடிக்கப்படும் நேரம்) நேரம் இரண்டு எபிசோடுகள். எவ்வளவு நேர, பண, சக்தி விரயம்.

அதுவே ஓர் ஒப்பீடுக்கு என்றாவது - ஹிந்தி மொழி தெரியாவிட்டாலும், நீங்கள் ஓர் இசைப்பிரியர் என்றால் சோனி எண்டெர்டைன்மெண்ட் சானெலில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30 க்கு 'இந்தியன் ஐடல்' வைத்துப் பாருங்கள். 

நடுவர்களாக இசை அமைப்பாளர்கள் திரு ஹிமேஷ் ரேஷமையா, திரு விஷால், பின்னணி பாடகி நேஹா கக்கர் மூவரும் எப்படி கண்ணியமாக, இசையை ரசிக்கிறார்கள், உண்மையாகப் பாராட்டுகிறார்கள், எப்படி போட்டியாளர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்கள் என்று கவனித்தே ஆகவேண்டும். 

அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும் (உதித் நாராயணன் மகன்) ஆதித்ய நாராயண் எத்தனை நகைச்சுவையுடன், கவிதை ரசனையுடன், தேவையில்லா குறும்புகள் இல்லாமல் அழகாக செய்கிறார் என்று பார்த்தால் புரியும்.

அதில் வருகிற சிறப்பு விருந்தினர்கள் என்று பார்த்தால் நடிகர் தர்மேந்திரா, ஜிதேந்திரா, ஹேமமாலினி, நடிகை ரேகா, பிரபல இசை அமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹமான், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, அஜய் அதுல், ஜெயப்பிரதா, ஜாக்கி ஷ்ரோப் என்று மிகப்பெரிய நபர்கள் வருகிறார்கள். அவர்கள் அதில் பங்கு பெறும் ஒவ்வொருவரின் பின்னணி, மற்றும் அவர்களின் முந்தைய பாடல்கள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு வருகிறார்கள். 

இயன்றவர்கள் பரிசு அளிக்கிறார்கள், சிலர் வாய்ப்பு அளிக்கிறார்கள், சிலர் பொன் பொருள் தருகிறார்கள்.

இங்கே சொல்லியே ஆக வேண்டியது பாடுகிற திறமைசாலிகள் - ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலங்களில் வந்தவர்கள். வெவ்வேறு மொழி பேசுபவர்கள். ஆனால் பாடுவது ஹிந்தி பாடல்கள். ஒவ்வொருவரின் பின்னணியும் மிகவும் வித்தியாசமானது. உதாரணத்திற்கு, சவாய் பாட் எனும் ஒரு இளைஞர் ராஜஸ்தானை சேர்ந்தவர். தெருவில் பொம்மலாட்டம் செய்து பாடிப் பிச்சை எடுத்து குடும்பத்தை காப்பாற்றுபவர். 

அருணிதா(மேற்கு வங்கம்), பவன் தீப் - ஹார்மோனியம், ட்ரம்ஸ், டோல் கி, பியானோ என்று சகலமும் வாசிக்கும் திறன் கொண்டவர் (உத்தராகண்ட்), ஷண்முகப்ரியா (ஆந்திரா), நேஹால், சாயலி, குல்கர்னி (மஹாராஷ்ட்ரா), மொஹம்மத் தானிஷ் (டில்லி), அஞ்சலி கைக்வாட் (ஹிந்துஸ்தானி இசை பாடுபவர்) என்று திறமையின் உச்சத்தை பெற்றவர்கள் அனைவருமே. இவர்களில் கடைசி 5 பேரை தேர்வு செய்வதே மிக கடினம். ஒவ்வொரு வாரமும் இவர்கள் அனைவரும் பைனல் நிகழ்வில் பாடுவது போல பாடுகிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் இவர்களின் திறன் மேம்பட மிகவும் உழைக்கிறார்கள். இசையே இவர்களின் உயிர்நாடி என்று இருக்கும் இந்த இளைய தலைமுறை தான் அடுத்த பத்து ஆண்டுகள் நாம் கேட்க இருக்கும் பின்னணி குரல்கள் என்று சொல்லி விடலாம். அத்தனை திறமை வாய்ந்தவர்கள். இவர்களின் பாடல்கள் கேட்டாலே மனதின் பாரம் மற்றும் கவலை காற்றில் பஞ்சாகப் பறந்து விடும். இவர்கள் அனைவருக்குமே கந்தர்வ குரல் என்று சொல்லலாம். ஏற்கனவே சிலர் போட்டி நடந்து கொண்டிருக்கும் சமயத்தியிலேயே சில ஆல்பங்கள் பாடி விட்டார்கள். 

இசை நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் 'இந்தியன் ஐடல்' தான். நான் சற்றும் மிகைப்படுத்தவில்லை. நீங்களே நிகழ்ச்சியை கண்டு களித்து பிறகு சொல்லுங்கள். நிச்சயம் இந்த இளம் திறமையாளர்கள் பின்னாளில் தமிழ் மொழியிலும் பாடலாம் ஒரு உதித் நாராயண், ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம், போல. 

உண்மையில் வடநாட்டு இளைஞர்கள் இசைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள். இசையும் இருக்கட்டும், இல்லை என்றால் ஐடி வேலைக்கு போகலாம் என்றில்லை இவர்கள். தொடர்ந்து தம்மை மேம்படுத்தி உயர் தர இசையை தருகிறார்கள். இது தான் மிகைப்படுத்தாத உண்மை.

Monday, May 17, 2021

கர்ணன் தனுஷ்

 கர்ணன் தனுஷ்

- பாராட்டுரை
- பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், பாடகர், கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், நூலாசிரியர் என்பதை எல்லாம் தாண்டி நான் நல்ல கலை ரசிகன்.
அந்த வகையில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் தனுஷ் அவர்களை பல்வேறு படங்களில் கண்டு அவரது பரிமாண வளர்ச்சியைக் கண்டு வியந்து போய் இருக்கிறேன்.
எனது பயிற்சி வகுப்புகளில் மகேந்திர சிங் தோனி மற்றும் நடிகர் தனுஷ் பற்றி அடிக்கடி குறிப்பிடுவேன். குறிப்பாக அவர்களின் தொடர் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து.
2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை', 2003 ல் திருடா திருடி போன்ற படங்களில் அவர் நடித்த பொழுது மிகவும் எரிச்சலாக, கோபமாக பார்த்ததுண்டு. அவருக்கு யார் எழுதித் தந்ததோ, "என்னை எல்லாம் பார்த்தால் பிடிக்காது, பார்க்கப் பார்க்க பிடிக்கும்" என்று அவர் பேசிய வசனம் நிச்சயம் அவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல.
தனுஷ் எனும் மனிதர் ரஜினியின் மாப்பிள்ளை, இயக்குனர் செல்வராகவன் தம்பி, இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்றெல்லாம் ஆரம்ப காலத்தில் கால் பதிக்க உதவி இருக்கலாம். அதன் பிறகு நடிப்பு, நடனம், நீச்சல், வாகனம் ஓட்டுதல், சண்டை போடுதல், தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்குதல், வசன உச்சரிப்பு என்று பல திறன்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு மிகச் சிறந்த இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து படிப்படியாக முன்னேறிய முழுமையான நடிகர் இன்று.
பல பிலிம் பேர் விருது, தேசிய விருது என்று பெற்று விட்ட கலைஞன் தனுஷ் ஆடுகளம், மரியான், வி ஐ பி, மாரி, படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம், கொடி என்று பல வேடங்களில் நடித்து தனது காலை சரியாக ஊன்றிய பிறகு 'ஷமிதாப்' எனும் ஹிந்தி படம் (உயர்ந்த மனிதர் அமிதாப் பச்சனுடன்), பிறகு ராஞ்சனா (அம்பிகாபதி) எனும் மற்றொரு ஹிந்தி படம் - இரண்டிலும் சொந்தமாக ஹிந்தி மொழி கற்று சொந்தக் குரலில் டப்பிங் பேசியது பெரிய பாராட்டுக்கு உரியது.
அண்மையில் ஆங்கிலம் மொழியில் - பிரெஞ்சு படமாகிய 'பகிர்' (பக்கிரி) படத்தில் என்ன ஒரு ஸ்டைல், லாவகம், அற்புதமான பாடல் என்று காண்பவர் மனதைக் கவரும் தனுஷ் அசுரன் படத்தில் ராட்ஷசன் போல நடித்து தேசிய விருது பெற்றார். இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். எதுவுமே புதிய செய்தி இல்லை.
அண்மையில் 'கர்ணன்' படம் பார்த்த பொழுது அதிக ஆர்ப்பாட்டம், சத்தம் எதுவுமே இல்லாமல் ஆனால் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்திருக்கும் விதம் மிகவும் அருமை. படத்தில் வரும் கால்கள் கட்டிய கழுதை, குதிரை, வீச்சரிவாள் வெட்டு படும் மீன், பூனை, அவ்வப்போது சாமியோ பூதமோ என்று வந்து போகும் ஹீரோவின் இறந்து போன தங்கை எனும் குறியீடுகள் கதைக்கு மிகவும் வலு சேர்த்துள்ளது.
அது மட்டுமா ? உன்னிப்பாக கவனித்தால் மஹாபாரதத்தில் கண்ணபிரான் எல்லோரையும் - கர்ணன் உட்பட அழிப்பது போல இந்த படத்தில் கர்ணன் கண்ணபிரான் எனும் அதிகாரியை வதம் செய்வது - அதிகார வர்க்கத்தை அழுத்தப்பட்ட வர்க்கம் கணக்கு தீர்ப்பது போல வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். நிச்சயம் இந்த படத்திற்கும் ஒரு விருது உண்டு தனுஷ் அவர்களுக்கு.
இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகம் பல மாநிலங்களில் பல கிராமங்களில் வாழ முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த படத்தில் யாரும் மது அருந்தவில்லை, குழந்தைகள், மற்றும் மனைவியை அடிக்கவில்லை. மோசமான வசனங்கள் இல்லை.
என்ன இருந்திருக்கலாம் ? ஹீரோ படித்தவனாக இருந்திருக்கலாம். கிராமத்தில் போராடி அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், சிறுதொழில் வாய்ப்புகள் என்று உருவாக்கித் தருபவனாக, அந்த கிராமத்தை 'ஸ்மார்ட் கிராமமாக' உருவாக்கும் ஒருவனாக சித்தரித்து இருந்தால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும் என்பது எனது ஆதங்கம்.
நிறைவாக மீண்டும் அற்புதமான நடிகர் தனுஷுக்கு எனது பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
. இன்னும் இது போன்ற நல்ல படங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்.

Sunday, May 16, 2021

இணைப்பு துண்டிக்கப்பட்ட முதியவர்கள்

 இணைப்பு துண்டிக்கப்பட்ட முதியவர்கள் 

- டாக்டர் பாலசாண்டில்யன் 
(மனநல ஆலோசகர்)
Thought Leader/Transformation Coach/Senior Corporate Trainer

மனிதனின் அடிப்படித் தேவைகளில் மிக முக்கிய ஒன்று 'சமூக தேவை'. மனிதனை ஒரு சோசியல் அனிமல் (சமூக விலங்கு) என்று அழைப்பர். 

ஒருவரோடு சந்திப்பது, பேசுவது, கருத்துக்கள் பரிமாறுவது, சுக துக்கங்களை பகிர்வது, நல்ல மற்றும் கெட்ட விசேஷங்களில் பங்கேற்பது என்ற ரொடீன் எனும் வழக்கம் இப்போது சுமார் ஒன்றரை வருடங்களாக இல்லை. உறவினர்கள், நண்பர்களை சந்திக்க முடியவில்லை.

யாரிடமும் நேரடித் தொடர்பு இல்லை. ஒருவர் மற்றொருவரின் இல்லத்திற்கு செல்லுவதில்லை. காலை நடைபயிற்சி, கோவில் மசூதி மற்றும் தேவாலயங்களுக்கு செல்ல முடியாமை, நண்பர்களை சந்தித்து அளவளாவி ஒரு தேநீர் பருக முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் எதுவுமே முன்போல் இல்லை. காரணம் இந்த கொரோனா தொற்று தான். 

தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும், நோய்த் தொற்றின் தீவிரம் இப்போது அதிகரித்து வரும் நிலையில் யாருமே வெளியே இயல்பாக செல்ல முடியாத நிலை, அதுவும் முதியவர்கள் நிச்சயம் செல்ல முடியாத நிலை. 

இது அவர்களை மனதளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ? சமூக, அரசியல், இலக்கிய, ஆன்மீக கூட்டங்கள் எதுவுமே நடக்கவில்லை. முதியவர்களால் (வீட்டில் எல்லோருமே அடைந்து கிடப்பதால்) போதிய சுதந்திரத்துடன் நடந்து கொள்ள முடியவில்லை. டிவி மற்றும் ஊடகங்கள் மிகவும் அச்சம் தருகின்றன. 

வீட்டில் எதுவுமே முன்பு போல நேரத்தில் எழுதல், உணவு தயாரித்தல் இல்லை. சிறிய சிறிய உடல் உபாதைகளுக்கு கூட மருத்துவமனை செல்ல முடியவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் யாருமே அவரவர் வேலையில் மூழ்கி இருப்பதால் இவர்களோடு அமர்ந்து உரையாடுவதில்லை. இப்போது முதியவர்கள் என்ன தான் செய்வார்கள் ?

தவிர, அவர்களின் பல நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் பலரின் இறப்புச் செய்தி அவர்களை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்கி இருக்கிறது. அப்படிப்பட்ட சில துயரச் சம்பவங்களுக்கு அவர்களால் நேரில் கூட செல்ல முடிவதில்லை. 

முதியவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு சிறிதும் நேரம் இல்லை. என்ன செய்ய ? 

தமது வழக்கமான ரொடீன் மாறி விட்டால், முதியவர்களால் நிச்சயம் அதனை அவ்வளவு எளிதில் ஏற்க முடியவில்லை.  வீட்டில் எப்போதும் இரைச்சல், விவாதங்கள், சச்சரவுகள் என்று இருப்பதால் அவர்களுக்கு நிம்மதியான உறக்கம் இல்லை. நள்ளிரவு வரை விளக்குகள் ஏறிகின்றது. விடிந்த பிறகும் பலர் வீட்டில் விடியவில்லை. நல்ல பழக்கங்கள் கொண்ட முதியவர்களால் இந்த சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எப்போ வருமோ இங்கே பழைய காலம் ? எப்போ தொலையும் இந்த பாழும் கொரோனா காலம் ? வினா வினா அதே வினா. விடை தருவார் யாரோ ! விரைவில் எல்லாம் சரியாகட்டும். நல்ல தீர்வு கிடைக்கட்டும். இயல்பு வாழ்க்கை திரும்பட்டும். பிரார்த்திப்போம்.

இளைஞர்களின் மாறிவிட்ட பழக்கங்கள்

 இளைஞர்களின் மாறிவிட்ட பழக்கங்கள் 

- டாக்டர் பாலசாண்டில்யன் 
(மனநல ஆலோசகர்)

கல்வியாண்டை கல்வி பயிலும் இளையவர்களை நினைத்தாலே மனம் கவலை கொள்ளுகிறது. 

கடந்த 14-15 மாதங்களாக பிள்ளைகள் (10 ஆம் வகுப்புக்கு கீழ்) பள்ளி செல்லவே இல்லை. கட்டிய கட்டணத்திற்கு ஏதோ ஒன்று இணைய வழி நடந்து கொண்டிருக்கிறது. எனினும், ஆசிரியர் மாணவர் இருவரின் நேரடி இன்டெராக்ஷன் எனப்படும் தொடர்பு நிச்சயம் இல்லை என்பதால், கற்பிக்கும் விஷயத்திலும் கற்கும் விஷயத்திலும் அதிகமான சவால்கள் உள்ளன என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. யாரும் மறுக்கவும் முடியாது. 

பிள்ளைகள் இணைய வழியில் இணைந்து கொள்கிறார்கள். அதில் அவர்கள் ஆசிரியர்களை விட புத்திசாலி என்பதால், தனது வீடீயோவை ஆஃப் செய்து விட்டு, வேறு ஏதோ செய்கிறார்கள். 

அடுத்தடுத்து கொரோனா அலை 2,3, மற்றும் 4 என்று வரலாம் எனும் அச்சம் இருக்கும் போது பள்ளிகள் முழுமையாக எப்போது திறப்பார்களோ தெரியாது. சில பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகளாக வேறு மாறிவிட்டன. இந்த சூழலில் பிள்ளைகள் தமது கல்வியை நிச்சயம் தீவிரமாக தொடர வேண்டும். இல்லையேல் அவர்களின் கற்கும் திறன், மனப்பாங்கு, கற்கும் விருப்பம் எல்லாமே குறைந்து போகும். அது நிச்சயம் அபாயகரமானது. 

இதில் சில வகுப்புகள் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்று ஆகி விட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துப் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, கிடைத்த வேலைக்கு போய் பணம் ஈட்ட தொடங்கி விட்டார்கள். இது அவர்களுக்கும் குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் இந்த கடினமான சமயத்தில் என்றாலும், அவர்கள் இயல்பு நிலை திரும்பும் பொழுது வேலையை விட்டு விட்டு மீண்டும் படிக்க வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியே !!

மேலும் பள்ளி இறுதி (+2) படிப்பவர்களின் எதிர்காலம் நிச்சயம் பெரிய கேள்விக்குறி தான். அவர்கள் மேற்கொண்டு படிக்க நினைக்கும் படிப்பில் சேர முடியுமா ? தெரியாது. தவிர, ஏற்கனவே படிப்பில் சேர்ந்து இருக்கும் இளங்கலை, முதுகலை, சட்டம், சி ஏ போன்ற தொழில்முறை படிப்புகள், இவற்றில் சேர்ந்துள்ள மாணவர்களின் நிலை இன்னும் கடினமாக உள்ளது.

கவலைக்குரிய விஷயமே, நிறைய வீடுகளில் பெற்றோர் இருவரும் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள். பிள்ளைகளை கவனிக்க போதிய அவகாசம் அவர்களிடம் இல்லை. பிள்ளைகள் எல்லோரும் பொறுப்புடன் இல்லை. உறங்குவது, எழுவது, குளிப்பது, உண்பது, என்று அவர்கள் செய்யும் எல்லா வேலைகளின் (வேளைகளின்) நேரமே முற்றிலும் மாறி விட்டது. அவர்களின் பழக்க வழக்கங்கள் மிகவும் மாறி விட்டன. 

பெரும்பாலும் மொபைல், டிவி, நண்பர்களுடன் சாட், அதிக நேரத் தூக்கம் என்று அவர்கள் ஆகி விட்டார்கள். அதிலும் சில பிள்ளைகள் வெளியூர் சென்று படிக்க சென்றார்கள். அங்கே கல்லூரிகள் மூடிய நிலையில் சொந்த ஊருக்கே திரும்பி விட்டார்கள். அவர்களின் பாடு இன்னும் திண்டாட்டம் என்று சொல்லவே தேவை இல்லை. 

உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, போதிய உறக்கம் என்று எல்லாமே கெட்டு மாறி விட்ட நிலையில் பிள்ளைகள் உள்ளபடியே நார்மல் என்று சொல்லக்கூடிய சாதாரண வழக்கத்திற்கு மீண்டும் திரும்ப படாத பாடு பட வேண்டி இருக்கும். 

படிப்பை முடிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு கடைசி செமஸ்டர் தேர்வு இன்னும் முடியவில்லை. வழக்கமான கேம்பஸ் நேர்முகங்கள் (வேலையில் சேர) நடைபெறவில்லை. நிறுவனங்களின் பொருளாதாரம் மிகவும் மந்தநிலையில் உள்ளதால் புதிய நபர்களை எந்த நிறுவனமும் வேலைக்கு எடுக்கத் தயாராக இல்லை. இருப்பவர்களுக்கே அவர்களால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. அப்படி என்றால் இந்த இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும் ? பல பெற்றோரின் பிள்ளைகளின் கவலை இதுவாகத் தான் இருக்கிறது. இதற்கான தீர்வு யாரிடமும் இல்லை.

இந்த கொரோனா நோய் முழுமையாக குறைந்து விரட்டி அடிக்கப்பட்டாலே ஒழிய இந்த சிக்கல் தீராது. அது எப்போது என்பது அரசின் கையில் இல்லை. இயற்கையின் கையில் தான் உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பலர் விடுமுறைக்கு இந்தியா வந்து விட்டு திரும்ப முடியாத நிலை. வெளிநாட்டில் படிக்கச் சென்றவர்கள் படிப்பை முடித்த பிறகும் வீடு திரும்ப இயலா நிலை. இப்படி பல்வேறு சிக்கல்கள் தீர்வின்றி வரிசை கட்டி நிற்கின்றன.

இங்கே நிறைவாக சொல்லப்படும் கருத்து இதுவே : இளைஞர்கள் இந்த கிடைத்திருக்கும் நேரத்தில் புதிய பல விஷயங்களை, திறன்களை கற்றுக்கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும். இயன்றால், இணையம் வழி படிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம். அதற்குரிய சரியான விஷயங்களை தேர்வு செய்து அதில் முனைப்புடன் இறங்கி செயல்பட்டால் எதிர்கால பயம் தேவை இருக்காது.  அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதே நிறைவுச் செய்தி.

எச்சரிக்கை மணி

 எச்சரிக்கை மணி

- டாக்டர் பாலசாண்டில்யன் 
தொழில் ஆலோசகர் - CEO www.visionunlimited.in
Thought Leader/Transformation Coach/Psychologist.

ஆட்டோமேஷன் என்று சொல்லக்கூடிய இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் வேகம் சற்று குறைவு தான் என்றே சொல்ல இயலாது. சூடு பிடித்து விட்டது எனும் இந்த எச்சரிக்கை மணியை நான் தயங்காமல் அடிக்க விரும்புகிறேன்.

முழுமையாக துணி தோய்த்து தரும் வாஷிங் மெஷின், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மால்களில் இயங்கும் எஸ்கலேட்டர், வங்கிகளில் பணம் எண்ணும் இயந்திரம், மற்றும் பாஸ்புக் என்ட்ரி போடும் இயந்திரம், பணம் பெறும் இயந்திரம், பார் கோட் பில்லிங் இயந்திரம், இப்படி ஏற்கனவே நாம் காண்கின்ற அல்லது பயன்படுத்துகின்ற இயந்திரங்களைப் பற்றி நான் இங்கே சொல்லவில்லை. 

பல தொழிற்சாலைகளில் மூளையை அதிகம் பயன்படுத்தாத ரொட்டின் (routine)  என்று சொல்லக்கூடிய வழக்கமான செயலப்பாடுகளை மனிதர்கள் செய்கிறார்கள் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை. அங்கே ரோபோ என்று சொல்லக்கூடிய தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடு இன்று அதிகமாகி வருகிறது. 

இதன்  காரணமாக பல பன்னாட்டு உற்பத்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹெல்பர் என்று சொல்லக்கூடிய உதவியாளர்களுக்கு வேலை போய் விட்டது. அங்கே ஒரு ரோபோ வந்து அதிவேகமாக அற்புதமாக அசுரத்தனமாக வேலை செய்கிறது. அதிக உற்பத்தி, உற்பத்தித்திறன், சீரான தரம், செலவுக் கட்டுப்பாடு, லாபம் இவற்றை முன்வைத்து இந்த நடவடிக்கைகளில் நிறுவனங்கள் சில முடிவுகளை எடுக்கின்றன.

கிட்டத்தட்ட 1200 கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரு ரோபோவை ஒரு இந்திய தனியார் வங்கி அறிமுகம் செய்து உள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது உற்பத்தி துறை தவிர வணிகம் மற்றும் சேவை துறைகளிலும் இந்திரமயமாக்கல் அதிவேகமாக பரவி வருகிறது என உணரலாம்.

தவிர 'டிஜிட்டல் இரா' எனும் இந்த நவீன யுகத்தில் கண்ணுக்கு புலப்படாத போட்டியும் நிலவுகிறது. நிகான் கேனோன் போன்ற கேமரா நிறுவனங்களுக்கு போட்டி சாம்சங் மற்றும் விவோ மொபைல் போன்கள் எனலாம். எச்எம்வி மற்றும் சோனி நிறுவனங்களை விட அதிகமாக இசையை விற்பது ஏர்டெல் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் தான் என்று எனது நண்பர் முனைவர் மேகநாதன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.

இந்த நிலை பல்வேறு இடங்களில் நடக்கலாம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது துணிமணிகள் விற்கும் ஒரு மால் ஆக இருக்கலாம். வாடிக்கையாளர்களோடு அளவளாவி வணிகம் பெருக்கும் ஒரு விற்பனையாளருக்கு பதில்  வெறுமனே அவர்களின் சந்தேகங்களுக்கு மட்டும் விடை அளிக்கும் ஒரு கஸ்டமர் கேர் மனிதர் மட்டுமே அங்கு இருக்கிறார் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை என்ற ஒரு நிலை உருவாகி வருகிறது. அப்போது இன்று இருப்பது போல பிரம்மாண்டமான துணிக்கடைகளில் அதிகம் படிக்காத பல சேல்ஸ்மேன்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலை இழக்க நேரிடும் என்ற ஒரு கணிப்பு உருவாகி உள்ளது.  அவர்கள் வேறு சில திறன்களை வளர்த்துக் கொண்டால் பிழைத்தார்கள்.

மேலும் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விட மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களே இதற்கு சாட்சி. 

பண பரிவர்த்தனை செய்ய  மக்கள் இன்று வங்கிகளுக்கு செல்லுவதற்கு பதில் மொபைல் ஆப் பலவற்றின் வாயிலாக அதனை செய்கிறார்கள் என்பது யாவருமே அறிந்தது தான். 

குற்றங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில் துப்பு துலக்க நாய்களுக்கு பதில் பெரும்பாலும் சிசிடிவி காமெராக்கள், மொபைல் ஆடியோ மற்றும் விடீயோக்கள் தான் பயன்படுகின்றன. 

ஹோட்டல்களில் உணவு கொண்டு வந்து மேசையில் பரிமாற இனி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் (ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளது போல) பயன்பாட்டில் விரைவில் வரும். அப்போது உணவு சப்ளையர்கள் பலருக்கு வேலை போய் விடும் என்பது ஏற்க கடினமான ஒன்று என்றாலும் உண்மை நிலை அது தான். பெட்ரோல் பங்கில் கூட பணியாளர்கள் வேலை இழக்கலாம்.

துணிக்கடைகளில் ட்ரையல் ரூம் செல்ல வேண்டாம் எனும் தொழில்நுட்பம் அதிவேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட கேமெராக்கள் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட ஆடையில் எப்படி இருப்போம் என்று பட்டனை அழுத்தினால் தெரிந்து விடும். போட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஓகே பட்டனை அழுத்தினால் அந்த துணி தானாகவே கேஷ் கவுண்டருக்கு சென்று விடும். இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் வந்து விட்டால் பலருக்கு வேலை போய் விடும்.

அயல்நாடுகளில் பிள்ளைகளுடன் செல்ல ரோபோ குரு உருவாக்கி உள்ளார்கள். இது மாணவர்களோடு பள்ளி சென்று எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அங்கே ஒரு படி மேலே சென்று மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை அன்று பள்ளி செல்ல முடியவில்லை எனும் சூழலில் அவர்களுக்கு பதில் இந்த ரோபோ குரு பள்ளி செல்லும் என்று சொல்கிறார்கள். 

இந்த நிலையில் வெகு விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ குரு வரலாம். பள்ளி மேற்படிப்பு, மற்றும் கல்லூரி மேற்படிப்பு, திறன் மேம்பாடு இவற்றிற்கு மட்டும் ஆசிரியர்கள் இருப்பார்கள். மற்ற இடங்களில் அங்கே இயந்திரம் வந்து விடும் எனும் அபாயம் உருவாகி வருகிறது. நிறைய பாட்டு வாத்தியார்கள் இன்று ஸ்கைப் மூலம் பல வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.

இயந்திர காதலிகள், காதலர்கள், சமைக்கும் ரோபோக்கள், என்று கூட அயல்நாடுகளில் முயற்சி செய்யத் தொடங்கி விட்டார்கள். இங்கு அவை எல்லாம் வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி விட முடியாது. 

கையில் அணியும் வாட்ச் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, எவ்வளவு நடந்து இருக்கிறோம், எத்தனை கலோரி செலவு ஆகி உள்ளது, போன் பேசுதல், போட்டோ எடுத்தல், உடலில் உள்ள நோய் அறிகுறிகள் எல்லாமே தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. அப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பல இயந்திரங்கள், கருவிகள் இவை எல்லாம் பயனற்று போய் விடும் நிலை உருவாகி வருகிறது. சில கருவிகளை இயக்கம் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகும்.

ஐபிஎல் பார்க்கிறோம். முன் போல ஒரு கபில்தேவ், ரவி சாஸ்திரி இவர்கள் மட்டுமா ஆல்ரௌண்டர்கள் ? ரெய்னா, ஜடேஜா, பிராவோ, என்று ஒவ்வொருவரும் ஆல்ரௌண்டர்கள் தான். பன்முகத்தன்மை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறார்கள்.

இங்கே பலருக்கு வேலை போய் விடும் எனும் எச்சரிக்கை மணி இந்த கட்டுரை என்று கொள்ள வேண்டாம். பழையன கழிந்து புதியன புகுகின்ற நேரம் என்று கொள்ள வேண்டும். அதாவது ஏற்கனவே நம்மிடம் இருக்கும் திறன் இனி பயனற்று போகும். புதிய திறன்களை அறிய வேண்டி வரும். நாம் செய்யும் தற்போதைய வேலைக்கு பதில் புதிய வேலை செய்யும் நிலை உருவாகும். 

ஏற்கனவே மனிதர்கள் செய்யும் கைமுறை வேலைகள் பலவற்றை இன்று கருவிகள் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். அப்படி நாளுக்கு நாள் மேலும் இயந்திரமாக்கும் சூழல் உருவாகும் பொழுது நாம் அந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியம் ஆகிறது. 

வாக்கிய அமைப்பு, இலக்கணம் இவற்றிற்கு எப்படி கணினி உதவுகிறதோ, போட்டோக்கள் மற்றும் எக்ஸ்ரே இவை ஈரத்தை காய வைக்காமல் உடனே கணினி மூலம் பிரிண்ட் ஆகி வருகிறதோ, திரைப்படப் பாட்டுகள் இசை அமைப்பதில், அசுரவேக பிரின்டிங் என்று பலதுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. 

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிடும் இந்த சூழலில், வருங்கால இளைஞர்கள் அதற்கேற்ப உள்ள படிப்புகளை தேர்வு செய்து படித்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏதாவது ஒரு இருக்கின்ற படிப்பை படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது இனி கூடாது. அதே போல ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் புதிய மாறி வரும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டால் அவர்கள் வேலை பிழைக்கும். இல்லையேல் நோக்கியா போன்ற நிறுவனங்களில் திடீர் என்று வேலை போனது போல பலருக்கு நேரிடலாம். அதனைத் தவிர்க்க அன்றாடம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எச்சரிக்கை மணி. 

ரெடிமேடாக காம்பௌண்ட் சுவர்கள் கூட தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து விட்ட இந்த தருணம், குறைந்த பட்சம் ஒவ்வொரு மனிதரும் நான்கு அல்லது ஐந்து திறன் கொண்டிருத்தல் வேண்டும். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்று இல்லாமல் இருக்கும் புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ளுதல் தான் இதற்கு முக்கிய தீர்வு. 

இயந்திரமயமாக்கல் ஒரு புறம் வேகமாக பரவி வந்தாலும், சிந்திக்கும் செயல்படுத்தும் பணிகள் எப்போதும் மனிதர்களே செய்வர். ஆகவே சிந்திக்கும் புதிய யுக்திகளை செயல்படுத்தும் நுட்பமான மனிதர்களாக நாமும் மாறுவோம். மாற்றத்தோடு வேகமாக நாமும் மாறுவோம். மாற்றம் தான் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுவோம். 

செயற்கை நுண்ணறிவு எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் மிக அதிகமாக ஒவ்வொரு துறையிலும் நுழையக் காத்திருக்கும் மிக முக்கிய தருணம் இது. இதில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்பது மிகவும் பொருத்தமான வரி தான்.

என்னைப் போலவே என் மாணவர்கள்

 என்னைப் போலவே என் மாணவர்கள்

- டாக்டர் பாலசாண்டில்யன்
(மனநல/கல்வி/தொழில் ஆலோசகர், மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர்)
அது 1987 ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வேலை பார்த்து விட்டு, ஓராண்டு மஸ்கட்டில் வேலை பார்த்து விட்டு சென்னை திரும்பி விட்டேன். நான்கைந்து மாதங்கள் வேலை எதுவும் கிடைக்கவில்லை. திரும்பவும் மும்பை அல்லது வெளிநாடு செல்லலாமா என்று குழம்பித் திரிந்த பொழுது இண்டோ இன்டெர்நேஷனல் எனும் தோலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் வேலை கிடைத்தது. அப்போது இளங்கலை படிப்பிற்கு பிறகு ஐந்து பட்டயங்கள் பெற்று இருந்தேன். ஹிந்தி நன்றாக பேசத் தெரியும்.
இரவு பகலாக உழைத்தேன். அடிமட்ட உழைப்பாளி தோழனிடம் கூட வேலை கற்றுக் கொண்டேன். பிறகு தைக்கத் தெரியாது. மற்றபடி பல்வேறு விஷயங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு தோலை எடுத்து முகர்ந்து பார்த்தாலே அது ஷீப் அல்லது கோட் அல்லது கௌ லெதர் என்று சொல்லி விடும் அளவிற்கு தேர்ந்து போனேன். இரண்டே வருடங்களில் பேக்டரி மேனேஜர் ஆனேன். பிறகு ஹெட் ஆபீஸில் அமர்ந்து நான்கு பேக்டரிகளை மேனேஜ் செய்யும் அளவிற்கு உயர்ந்தேன். நல்ல பல தொடர்புகள் ஏற்பட்டது. வெளிநாடுகள் சென்று வந்தேன். அதற்குள் மேலும் நான்கு பட்டய படிப்புகள் முடித்தேன்.
பத்து ஆண்டுகள் நிறைவு. பிறகு 1997 ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் அப் லெதர் ப்ராடக்ட்ஸ் எனும் தொழிற்கல்வி நிறுவனத்தின் செயல் இயக்குனராக சேர்ந்தேன். அங்கே 2007 ஆண்டு வரை பணியாற்றினேன். கிட்டத்தட்ட பத்தரை ஆண்டுகள். அங்கே காலணி, தோலாடை மற்றும் தோல் பொருட்கள் என்று மூன்று பிரிவிலும் சான்றிதழ், பட்டயம், மற்றும் பிஜி டிப்ளமோ படிப்பு இருந்தது. ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 300 கும் மேற்பட்டவர்கள் படித்து முடித்து பணிக்கு சென்றார்கள். ஆண்டுக்கு இருமுறை அட்மிஷன் செய்தோம்.
தவிர எங்கள் பயிற்சி நிறுவனம் குறித்து பல தனியார் தொலைக்காட்சிகளில் எனது பேட்டி வந்தது. எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, மற்றும் மைனாரிட்டி வகுப்பை சார்ந்தவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து இலவசமாக பயிற்சி, உதவித்தொகை, வேலை வாய்ப்பு என்று 5000 மாணவர்களுக்கு மேல் பயன்பெற்றார்கள். மேலும் சுய உதவிக் குழு பெண்கள், ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்கள், சாலைகளில் பங்க் கடை வைத்து காலணி தைப்பவர்கள் 150 பேருக்கும் மேலாக எங்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பலன் பெற்றார்கள். தோலாடை பற்றி முதன்முதலாக நூல் எழுதி வெளியிட்ட பெருமை எனக்கு கிடைத்தது.
இந்த கதை ஒரு புறம் இருக்கட்டும்.
2008 ஆம் ஆண்டு விஷன் அன்லிமிடெட் என்ற மனிதவள பயிற்சி நிறுவனம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்து ஒன்றரை லட்சம் பேருக்கு மேலாக பயிற்சி அளிக்கும் வாய்ப்பினை பெற்றேன். இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளேன். தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் பயிற்சி அளித்துள்ளேன். அரசு ஊழியர்கள், நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், நிறுவன அதிபர்கள், மேலாளர்கள், வங்கி அதிகாரிகள் என்று நான் சந்திக்காத துறை கிடையாது. ஆனால் தோல் துறையில் 20 ஆண்டுகள் பணி செய்த பிறகும் ஓரிரு நிறுவனங்கள் தவிர வேறு எந்த தோல் துறை சார்ந்த நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளவில்லை. அவர்களுக்கு பயிற்சியும் தரவில்லை. இப்படித்தான் என்னிடம் பயின்ற மாணவர்களும் என்பதை பின்னாளில் அறிந்த பொழுது ஆச்சரியம் கொண்டேன்.
பல சம்பவங்கள் இருந்தாலும் மூன்று நிகழ்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு முறை விருகம்பாக்கத்தில் எனது நண்பர் முனைவர் தென்காசி கணேசன் அவர்களின் இல்லம் செல்ல வேண்டும். நான் சென்ற ஓலா வண்டி என்னை எங்கோ தவறுதலாக வேறு தெருவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அங்கே குடிநீர் சப்ளை செய்யும் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வந்தார். சார் நீங்க இங்கே யாரைத் தேடுகிறீர்கள் என்றார். நான் விவரம் சொன்னேன். ஏறுங்கள் வண்டியில், நான் உங்களிடம் பயின்ற மாணவன், என்று இரண்டு தெரு தள்ளி இருக்கும் விலாசத்தில் கொண்டு போய் இறக்கும் பொழுது சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எனக்கு அவரை நினைவில் இல்லை.
அடுத்த சம்பவம் அதை விட ஆச்சரியம். என் மகள் ஒரு முறை பீச் சென்ற பொழுது தனது பர்ஸை தொலைத்து விட்டார். தெரியாத நபர் ஒருவர் எனக்கு போன் செய்து உங்கள் மகளின் ஆதார் கார்ட், லைசன்ஸ், போன்ற டாக்குமெண்ட்ஸ் என்னிடம் உள்ளது. நீங்கள் டி.நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பேசியவர் சற்று கறாராக பேசினார். நானும் அங்கே போய் காத்துக் கிடந்தேன். ஆட்டோ ஒன்று வந்து யு டர்ன் போட்டு நின்றது. இறங்கியவர் என்னைக் கண்டு ஆச்சரியத்தோடு இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு, "சார் உங்க பொண்ணுடையதா?" என்றார். நான் ரொம்ப வெகுளியாக உங்களுக்கு என்னை முன்பே தெரியுமா என்று கேட்டேன். அவர் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சார் நான் உங்கள் ஐஐஎல்பி மாணவர். நல்லா இருக்கீங்களா என்று எனது காலைத் தொட வந்தார். நான் தடுத்து நிறுத்தினேன். நான் அவருக்கு கொடுத்த பெட்ரோல் செலவு பணத்தை வாங்க மறுத்தார். பிறகு அவர் சட்டைபையில் பணத்தை போட்டு விட்டு தாங்க்யூ சொன்னேன்.
இன்று நடந்ததும் சற்று ஆச்சரியம் தான். தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ள 2017 ஆண்டு பிரசுரம் செய்துள்ள நூல்களுக்கு பரிசு எனும் திட்டத்தின் படி விண்ணப்பம், வரைவோலை, மற்றும் நூலின் பத்து பிரதிகள் கொடுக்க தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகம் சென்றேன். முதலில் ஒரு அதிகாரியை சந்தித்தேன். அவர் ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்து விட்டு அங்கே அமர்ந்து இருக்கும் ஒருவரின் பெயர் சொல்லி அவரிடம் இந்த நூல்களையும் விண்ணப்பத்தையும் கொடுத்து விடுங்கள் என்றார். நான் அவர் சீட்டை தேடிச் சென்றேன். என்னை ஒரு முறை இரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு எழுந்து நின்று வணக்கம் சொன்னார். உங்களுக்கு என்னைத் தெரியுமா? என்று கேட்டேன் வழக்கம் போல. அவர் புன்னகையுடன் சார் நான் உங்கள் மாணவன் ஐஐஎல்பி நிறுவனத்தில் 2002 ஆம் ஆண்டு படித்தேன். இங்கே மூன்று ஆண்டுகளாக பணியாற்றுகிறேன் என்றார். என்ன ஆச்சரியம். மன்னிக்கவும் எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லை என்றேன். அவர் நன்றாக வளர்ந்து நடிகர் விஜயசேதுபதி போல இருந்தார்.
என்னைப் போலத்தான் எனது மாணவர்களும். ஒருவரும் தான் படித்த லெதர் துறையில் இல்லை. எங்கெங்கோ பணியாற்றி வாழ்க்கையை வெற்றிகரகமாக நடத்தி வருகிறார்கள். (லெதர் துறை சரியாக வாய்ப்புகள் மற்றும் வருமானம் தரவில்லை என்பதும் ஒரு காரணம்). உங்கள் மாணவர் என்று சொல்லும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு எல்லையே இல்லை. ஏதோ ஒரு விதத்தில் ஒரு சிறு மாற்றம் என்னால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் பொழுது மனநிறைவு ஏற்படுகிறது. எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லா வளங்களும் பெற்று இன்பமாக இருக்கட்டும். இதுவே எனது பிரார்த்தனை.

அர்த்தமுள்ள உறவுகள்

 அர்த்தமுள்ள உறவுகள்

- முனைவர் பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர்/மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
திரும்பிப் பார்க்கையில் நாம் விரும்பிப் பார்த்த சந்திப்புகள் மூலம் பல ஆயிரம் நபர்களை நாம் சந்தித்திருக்கக் கூடும், ஆனால் அவர்கள் இன்னும் நம்மோடு தொடர்பில் நட்பில் உறவில் இருக்கிறார்களா என்றால் விடை 'இல்லை' என்று தான் இருக்கும்.
பல தொடர்புகள் கடந்து போகும் அல்லது கடந்து போய் விட்ட உறவுகளாகவே இருக்கின்றன. ஒருவேளை நாம் ஓரிரு முறை மட்டும் அவர்களோடு தொடர்பில் இருந்து விட்டு பிறகு நமது வாழ்வில் அவர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லாத பொழுது அவர்களை மறந்திருக்கக் கூடும். மனதில் சிற்சில சிற்றலைகள் மட்டும் ஏற்படுத்தி விட்டு அவர்கள் நமது வாழ்வில் வந்தார் சென்றார் என்று ஆகிவிட்டார் எனலாம்.
அதே சமயம் வெகு சிலர் பல்லாண்டுகளாக நமது வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து இன்னும் கூட இருக்கிறார்கள். அவர்களோடு நாம் தொடர்ந்த தொடர்பில் இல்லாவிடினும், மீண்டும் தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம் அந்த நட்பு உறவு உயிர்பெற்று விடுகிறது. தழைத்து ஓங்குகிறது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
சிலர் தொழில்முறை நட்பு அல்லது உறவு தொடராது மற்றும் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்லக்கூடும். எனது அனுபவம் வேறு. இன்றும் பல்லாண்டுகளாக தொழில் ரீதியாக தொடங்கிய சிறு தொடர்பு பின்னாளில் நல்ல நட்பாக நெஞ்சில் நிலைத்த உறவாக மாறிவிட்ட ஆனந்தம் என் மனதை இன்னும் நிரப்புகிறது.
கடந்து போகிற உறவு மற்றும் கடவுள் போல கூடவே துணை நிற்கும் உறவு என்று இருவிதமான உறவுகள் எல்லோருக்கும் உண்டு. நமது மனதை முழுமையாக திறந்து நட்பு பாராட்டி அன்பு நீர் வார்க்கும் முன்னரே மேம்போக்காக இருக்கும் போதே சில உறவுகள் முறிந்து போவதுண்டு. அவை தான் கடந்து போகும் உறவு என்பது. அப்படிப்பட்ட நண்பர்களோடு நாம் நமது உண்மை முகத்தை, சிரமங்களை, வெற்றிகளை, ரகசியங்களை பகிர்ந்து இருக்க மாட்டோம். அது ஒரு மேலோட்டமான உறவு மட்டுமே.
உண்மையான நட்பு அல்லது உறவு என்பது காலத்தை வெல்லும் ஒன்று. தினம் தினம் நேரில் சந்திக்காவிடினும், முகநூல், ஈமெயில், வாட்ஸ் அப் என்று ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த உறவு என்பது நிபந்தனைகளற்ற எதிர்பார்ப்பற்ற அர்த்தமுள்ள உறவாக இருக்கும்.
நிறைய நண்பர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் நினைத்ததுண்டு. ஏதோ ஓர் அற்ப காரணங்களுக்காக அவை முற்றிலுமே முறிந்து போன அனுபவமும் உண்டு. சிறு உரசல், சிறு புரிதலின்மை, இவைகளால் உறவு முற்றிலும் முறிந்து போன போது நான் வியந்து போய் இருக்கிறேன். இதற்கு நேர் மாறாக எவ்வளவோ தவறுகள் கோளாறுகள் புரிதலின்மைகள் இருந்த பொழுதும் சில நண்பர்கள் நமக்கான ஒரு இடத்தை அவர்கள் மனதில் அளித்து நம்மை உள்ளவாறே ஏற்றுக் கொண்டதால் தான் அந்த உறவு தப்பித்தது என்று என்னால் உறுதிப்பட சொல்ல முடியும்.
அவர்கள் நமது ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருந்து அழைக்காமல் வலிய வந்து உதவி நம்மை உயர்த்தியவர்கள் என்று சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது.
சில நண்பர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மோடு ஒட்டிக் கொண்டு விட்டு அவர்களின் 'அந்த' ஒரு நோக்கம் நிறைவேறிய பின்னர் தானாகவே மெதுவாக பின்வாங்கி நம்மிடம் இருந்து விலகி விடுவார்கள். இவர்களையும் நமது நண்பர்கள் என்று பட்டியலில் சேர்ப்பது நிச்சயம் தவறு.
நமது வாழ்வியல் மதிப்பீடுகள், ஒத்த கருத்துக்கள், விருப்ப வெறுப்புகள், வாழ்க்கை முறையில் ஒற்றுமை, கண்ணோட்டங்களில் சமன்பாடு என்று ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு ஒத்துப் போவதால் தான் சிலர் கடைசி வரை நமது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
மேம்போக்கான சில உறவுகளை நெருக்கமான ஒன்று என்று தவறாக நான் புரிந்து கொண்டு பின்னர் உணர்ந்ததும் உண்டு. சில உறவுகள் அர்த்தமற்றவை, தேவையற்றவை என்று கருதியது தவறு என்று உணர்த்துவது போல நீங்கா இடம் பிடித்து இன்னும் தொடர்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சிலர் வெளியேறும் நோக்கோடு தான் நமது உள்ளத்தில் வந்தார்கள் என்பதை நமது உள்ளுணர்வே சில சமயம் உணர்த்தி விடும். உங்களுக்கும் அது நேர்ந்து இருக்கிறதா? நகமும் சதையும் ஆக நம்மோடு இரண்டற கலந்து நிற்கும் சில உறவுகளின் நட்புகளின் வலிமை மற்றும் உண்மைத்தன்மை புரிந்து கொண்டோம் என்று சொன்னால் நாம் ஒரு நாளும் அந்த நட்பை இழக்கத் துணிய மாட்டோம்.
சில உறவுகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட தளிர் போல வளர்ந்து மேம்படாத ஒன்றாக இருக்கும். அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். சில உறவுகள் நாம் எதிர்பார்த்ததை விட ஆன்மீக வலிமை கொண்ட ஒன்றாக இருக்கும்.
எல்லா உறவுகளையும் நட்புகளையும் நம்மால் தக்க வைத்துக் கொண்டு கடைசி வரை பராமரிக்க முடிவதில்லை. கடந்து போகிற ரயில் சிநேகம் போன்ற நட்புகளை எண்ணி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கண்களைப் போல காக்க வேண்டிய சில உறவுகளை நட்புகளை வளர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் காணாமல் போய் விட்ட உறவுகளை எண்ணி கவலை கொள்ளாமல் இருக்கும் உறவை உன்னதமாக போற்றிடுவோம். அர்த்தமுள்ள உறவுகளே வாழ்க்கையின் ஆதாரம். மீதமெல்லாம் சேதாரமே. மனதுக்கு தெரியும் உறவின் மகத்துவம். மனம் சொல்வதை சில நேரம் மௌனமாக இருந்து தான் கேட்க வேண்டும்.

கொரோனா கர்மவினை

 கொரோனா கர்மவினை :- பாலா

கொரோனாவை கட்டுப்படுத்த நம்ம கையில் ஒன்றும் இல்லை என்றாலும், நாம் அடிக்கடி கை கழுவித் தான் ஆக வேண்டும்.
ஆக்சிஜன் தரும் மரங்களை வெட்டிக் குவித்து லாரியில் ஏற்றி அனுப்பினோம் அன்று. இன்று ஆக்சிஜன் சிலண்டர்களை லாரியில் ஏற்றி வருகிறோம்.
பிழைத்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தால் அன்று மிகவும் மகிழ்ந்தோம். ஐ சி யு வில் இடம் கிடைத்தால் இன்று மகிழ்கிறோம்.
இவர் எந்த மதம், புதைப்பதா எரிப்பதா என்று விவாதங்கள் நடந்தது ஒரு காலம். இன்று யாராக இருந்தாலும் மூட்டை கட்டி முகம் கூடக் காட்டாமல் எரிக்கும் கொடுமை இக்காலம்.
ஊரடங்கில் வெளியே வந்தால் தண்டனை கொடுத்தது ஒரு காலம். இன்று அவர்களுக்கு நிற்க வைத்து பூஜை செய்து பாடம் புகட்டுவது இக்காலம்.
ஆயிரம் பொய் சொல்லி ஆயிரம் பேரை அழைத்து திருமணம் செய்தவர்கள் இன்று காதும் காதும் வைத்தது போல வாயை மூடி நான்கைந்து பேரை வைத்து திருமணம் செய்கிறார்கள்.
பிள்ளைகள் மொபைல் பார்த்தால் திட்டிய பெற்றோர், இன்று புதிய புதிய மொபைல் வாங்கிக் கொடுத்து பாடம் படிக்க சொல்லுகின்றனர்.
காய்கறி நறுக்குவதற்கு கூட அடம் பிடித்த குழந்தைகள் இன்று சமையலறையில் புதிது புதிதாக ரெசிபி செய்து போட்டோ எடுத்து அலப்பறை செய்கிறார்கள்.
விருந்தாளிகளுக்கு பன்னீர் தெளித்து வரவேற்போம் அன்று. இன்று அவர்கள் சென்ற உடனே அந்த இடத்தை சானிடைசர் தெளித்து சுத்தம் செய்கிறோம்.
விதவிதமாக பரிசு அளித்தவர்கள் இன்று மாஸ்க், சானிடைசர் என்று பரிசளிக்கிறார்கள்.
ஆபீஸ் ஏன் வரவில்லை என்று கேட்டவர்கள் இன்று ஆபீஸ் மட்டும் வராதீர்கள் என்று சொல்லும் நிலை.
புயல் வெள்ளம் என்றால் மக்கள் தங்குவது பள்ளி மற்றும் கல்லூரியில், இன்று நோயாளிகள் சென்று அங்கு தங்குகின்றனர். பாடம் நடப்பதில்லை..மாறாக சிகிச்சை.
மால் தியேட்டர் என்று சுற்றியவர்கள் இன்று மருத்துவமனை, மருந்து கடை என்று அலைகிறார்கள்
திருமண வீட்டில் சாப்பிடும் ஒருவர் பின் நின்று அவர் சாப்பிட்ட உடன் அந்த சீட்டை பிடிப்பது உண்டு. இன்று ஒருவர் டிஸ்சார்ஜ் ஆனால் அவர் படுக்கையை இடம் பிடிக்கிறார்கள்.

உங்கள் இல்லத்தில் குழந்தைகள் உள்ளனரா ?

 உங்கள் இல்லத்தில் குழந்தைகள் உள்ளனரா ?

வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா !!
- டாக்டர் பாலசாண்டில்யன் (மனநல ஆலோசகர்/ கல்வியாளர்/ மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்)
கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்த கொரோனா நோய் காரணமாக முறையான (Formal and systematic) கல்வி பிள்ளைகளுக்கு இல்லை. பள்ளிகள் திறக்கவில்லை. இணையவழிக் கல்வியே நடக்கிறது.
அதனால் இங்கே சில யோசனைகள் :
தினம் ஒரு பக்கம் ஏதாவது ஒரு புத்தகத்தில் அல்லது செய்தித்தாளில் இருந்து தமிழ், மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் ஒரு பக்கம் எடுத்துக்கொண்டு சத்தமாக வாசிக்க வேண்டும்.
தினமும் அதே போல ஒரு பாரா (பத்தி) எடுத்துக் கொண்டு நோட்டில் எழுதிப் பழக வேண்டும். அப்போது தான் கையெழுத்துப் பழக்கம் மறந்து போகாமல் இருக்கும்.
அதே போல 10 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகள் டேபிள்ஸ் என்று சொல்லக்கூடிய வாய்ப்பாடு எடுத்து சொல்லி மற்றும் எழுதிப் பார்க்க வேண்டும்.
பாட்டு கிளாஸ் போகக் கூடிய குழந்தை என்றால் தினம் ஒரு பாட்டு நிச்சயம் பாடிப் பழக வேண்டும்.
நடனம் என்றால் சில நிமிடங்களாவது நடனம் செய்து பழக வேண்டும்,
தொடராத ஒன்று தொடராது. பழக்கம் விட்டுப் போனால் அதுவே பழக்கமாக மாறும்.
பெரிய பிள்ளைகள் என்றால், ஆன்லைன் மூலமாக ஏதாவது ஒரு பரீட்சை எழுதிப் பார்க்கலாம்.
நிறைய இலவசமான இ - கோர்ஸ் இருக்கின்றன. அவற்றில் இணைந்து பல புதிய சான்றிதழ்கள் பெறலாம். கற்ற எதுவும் வீணாகாது.
அயல் நாட்டு மொழி, வேறு ஒரு மொழி (ஹிந்தி, தெலுங்கு போல ) கூட சிறிது சிறிதாக பயிற்சி பெறலாம்...எந்த கட்டணமும் இல்லாமல்.
மீதிப் பொழுதில் புத்தகம் வாசித்தல், இசை கேட்டல், டிவி நிகழ்ச்சிகள் அல்லது படங்கள் பார்த்தல் இவை எல்லாம் செய்யலாம்.
முறைகள் அற்ற பொழுது தான் நம்மை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் தான் நாளையை உருவாக்குகின்றன.
இங்கே சொல்லப்பட்டவை எல்லாம் பொதுவான யோசனைகள்.
அவரவர் வீட்டிற்கு, பள்ளிக்கு, வயதுக்கு ஏற்ப நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், நிச்சயம் பிள்ளைகள் பயனுள்ள விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுவது மிகவும் அவசியம். (Getting engaged usefully for a better future)
யாருமே சொல்லாமல் இவற்றை செய்யும் பிள்ளைகளுக்கு பெற்றோர் நிச்சயம் பரிசுகள் பாராட்டுக்கள் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.
அதுவும் முக்கியம். எப்போதும் கத்துவது, குறை சொல்லுவது மட்டும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தாது. நினைவிருக்கட்டும்.