Sunday, January 5, 2014

அகம் மலர முகம் மலரும்

அகம் மலர முகம் மலரும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய மொழி. மனதில் ஓடும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
பயத்தில் முகம் வெளுப்பதும், கோபத்தில் சிவப்பதும், வருத்தத்தில் கறுப்பதும்
நாம் அறிந்தது தான்.
சிக்கலில் சிக்கித் தவிக்கும் போது முகம் உடைத்துச் சிதறிய தேங்காய் போல தெறித்துப் போனது தெளிவாய் தெரியும்.
வெற்றிக் களிப்பில், ஈடுபாட்டில் ஒரு செயல் செய்யும் போது, மனம் லயித்து சிலிர்க்கும் போது, குழப்பத்தில் தவிக்கும் போது, ஆணவத்தில் திமிரும் போது, அடக்கமாய் இருக்கும் போது, கோபத்தில் வெகுண்டு எழும் போது, வெக்கத்தில் குழையும் போது - இப்படி ஒவ்வொரு சமயத்திலும் முகம் அதனை சரியாக காட்டிக் கொடுத்து விடும்.
இது தவிர ஆச்சரியம், ஆத்திரம், உண்மை, பொய், யோசனை, நினைவு படுத்தி பார்த்தல், இப்படி என்ன செய்தாலும் அடுத்தவருக்கு நம் மனதின் போராட்டத்தை, எண்ணத்தை வெளிபடுத்துவது முகம் தான். அதிலும் குறிப்பாக நமது கண்கள், உதடுகள் சேர்ந்து கொள்ளும்.
உணர்ச்சி வசப்பட்டு நிறைவு உரை தந்த சச்சின் முகத்தை நினைவு கூர்ந்து பாருங்கள். அடுத்த நாள் பாரத ரத்னா பெற்ற மகிழ்வில் பேட்டி கொடுத்த போது அவரது முகத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.
கமல் சார் கலைஞன், பஞ்ச தந்திரம் படங்களில் மகிழ்வுடன் நடித்த போது இருந்த முகத்தையும், விஸ்வரூபம் படம் சிக்கலில் மாட்டிய போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது இருந்த முகத்தையும் யோசித்துப் பாருங்கள்
எந்த சூழலிலும் அக முக உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க சிலர் முழு தாடி வைத்திருப்பர். சிலர் பேசும் போது முகத்தில் கை வைத்து மறைத்துப் பேசுவர். தமது உணர்வுகளை மறைக்கும் முயற்சி தான் அது.

இலக்குகளை அடைந்து விட்ட பிறகு சிலர் முகத்தில் மலர்ச்சியை காணலாம். ஆஸ்கர் விருதுக்கு பிறகு ரஹ்மான் சார் முகம், உலகக் கோப்பை ஜெயித்த பிறகு தோனி முகம் நல்ல உதாரணம்.
சிலரின் முகம் மலர்ந்து காணப் படுவது ஒரு வயதுக்கு பிறகு, சில சாதனைகளுக்கு பிறகு, சில வலிகளுக்கு பிறகு. எல்லாம் அடைந்து விட்ட திருப்தியில் அமிதாப் சார் முகம், குழந்தை பெற்று எடுத்த எந்த தாயின் முகம், நோயிலிருந்து விடுபட்டு வந்த பிறகு மனிஷா கொய்ராலா முகம் ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
யோகம், த்யானம், சில சாதகங்கள் செய்த பிறகு சிலர் முகம் களையாய் தேஜசாய் மாறி இருக்கும், உதாரணத்திற்கு மஹா பெரியவாளின் முகம், குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் முகம், ஸ்ரீ மஹாத்ரயா ராவின் முகம் சில நல்ல உதாரணங்கள்.
தனது தொழிலை, செயலை ரசித்து வாழும் சிலரின் முகம் சில வருடங்களுக்குப் பிறகு மலர்ச்சியை காட்டும் - சுதா ரகுநாதன், நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீதேவி, டி எம் கிருஷ்ணா, பில் கேட்ஸ், ரத்தன் டாடா.
முன்பை விட இன்னும் அழகாக நாம் காணும் நயன்தாரா, ஆர்யா, ஜீவா, சிம்பு, தனுஷ், பாடகர் ஸ்ரீனிவாஸ், ஆமிர் கான், பிரியாங்கா சோப்ரா, செய்னா நேஹ்வால், தத்தம் துறையில் மகிழ்வுடன் இருப்பது காரணமாக இருக்கலாம்.
தொடர் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், இழப்புகள் நம் அகத்தை சீர் குலைத்து முகத்தில் பிரதிபலிக்கும். கணவனை இழந்த பாடகி நித்யஸ்ரீ, குழந்தையை இழந்த பாடகி சித்ரா, மனைவியை இழந்த இசை ஞானி, விளையாட்டில் புறக்கணிக்கப்பட்ட கம்பீர், எதிர்பாரா தோல்வி கண்ட விஸ்வநாதன் ஆனந்த், இவர்கள் முகங்கள் சாட்சி.
அழுக்கு துணியை காலையில் சுமக்கும் போதும், வெளுத்து சுத்தமான துணியை மாலையில் சுமக்கும் போதும் முகத்தை ஒரே மாதிரி வைத்துக் கொள்ளும் கழுதை நமக்கு மிகப் பெரிய ஆசான். வெற்றி-தோல்வி, வருத்தம்-மகிழ்ச்சி, திருப்தி-ஏமாற்றம் எது வந்தாலும் அகத்தையும் முகத்தையும் ஒரே மாதிரி வைத்துக் கொள்ளக் கற்பது அரிய கலை, வித்தை. எல்லோருக்கும் அது சாத்தியம் அல்ல. எந்த உணர்வுமே காட்டாத நரசிம்ம ராவ் போல இருத்தல் கூட கடினம் தான்.
நல்ல அல்லது கெட்ட நிகழ்வுகளில் தலையை காட்ட வேண்டும் என்பார்கள். ஆனால் ஒரு போதும் முகத்தை காட்ட கூடாது தானே...! யாரையும் கை காட்டவும் கூடாது.
விரல் ஆட்டினால் செயல் நடக்கும் சில சமயம். கண் அசைத்தால் காரியம் நிறைவேறும் சில சமயம். எதுவானாலும் முகத்தினை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறர் நம்மை எடை போடாதவாறு. அதற்கு அகம் தனை சரியாக வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
பிரார்த்தனை, பக்தி, நம்பிக்கை, தியானம், யோகா, நல்ல நம்பிக்கைகள், செயல்பாடுகள் நம் அகத்தை சீராகவும் முகத்தை நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ள உதவும். அகம், முகம் மலர அகிலமே மலரும். அதற்காக வேண்டுவோம், நலமே நாளும் நாடுவோம்.

No comments:

Post a Comment