Friday, August 28, 2026
காகிதச் சிறகைக் கட்டிக்கிட்டு
Kagaz ke do pankh leke uda chale jayire
இந்த அருமையான நாட்டுப்புறப் பாடலை தமிழில் தருகிற முயற்சி: பாலசாண்டில்யன்
தத்திப் போகுதே!
காகிதச் சிறகைக் கட்டிக்கிட்டு
காத தூரம் பறக்குதடி!
போகாதேன்னு சொன்ன இடத்துக்கே
போயி நின்னு மயங்குதடி!
வயசு வகுத்த சட்ட திட்டத்தை
மனசு புரிஞ்சுக்க மறுக்குதடி!
ஆசை காட்டும் மாய உலகத்துல
ஓசையின்றி மயக்குதடி!
தூக்கம் பசி கவலையுமில்ல
காதலு தான் முக்கியம்னு
எல்லை தாண்டி பறக்குதடி
என்ன மனசு இது பித்தானதடி!
முன்னும் பின்னும் பாக்காமத் தான்
எல்லையையும் தாண்டிடுதே...
திசையறியா என் பித்து மனம்
தறிக்கெட்டுத்தான் அலையுதடி!
கோட்டையெல்லாம் ஜெயிச்சு வந்து
சுவரையெல்லாம் உடைச்சப் பின்னும்
காதல் என்னவோ திருட்டுன்னு தான்
கணக்குப் போட்டு பயப்படுதே!
அப்படியா இப்படியான்னு
அலசி ரொம்ப யோசிச்சுத் தான்,
நெஞ்சைக் கொஞ்சம் பந்தைப் போல
துள்ளித் துள்ளி உருட்டுதடி!
வெறும் மண்ணையும் சந்தனம்னு
நெத்தியில அது பூசுதடி!
ஆசை காட்டும் மாய உலகத்துல
ஓசையின்றி மயக்குதடி!
முன்னும் பின்னும் பார்க்காமத் தான்
எல்லையையும் தாண்டிடுதே...
திசையறியா என் பித்து மனம்
தறிக்கெட்டுத்தான் அலையுதடி!
உள்ளம் கேட்க மறுக்குத
Dil hai ke mantha nahi
என்ற அற்புதமான ஹிந்தி திரையிசை மெலடி பாடலை தமிழில் தருகிற முயற்சி: பாலசாண்டில்யன்
பல்லவி
உள்ளம் கேட்க மறுக்குதே – இந்த
உன்னதக் காதல் மாறாதோ?
தவிக்கும் நிலையும் ஏனானதோ – அதைத்
தானும் அறியத் தெரியாமலே...
(உள்ளம் கேட்க மறுக்குதே...)
சரணம் 1
எந்தன் உயிராய் மாறிப் போனதம்மா!
தந்தாய் இதயப் பரிசதனை – என்
தேடல் நீயென் றானதம்மா!
உண்மை அதனை உலகறியும் – அதை
உந்தன் மனது ஏற்காதோ சொல்...
(உள்ளம் கேட்க மறுக்குதே...)
சரணம் 2
உனைத் தானே நேசித்தேன் – வேறு
உலகம் அறியாதென்னஞ்சம்!
வாழ்வில் நீயும் வாராவிட்டால் – இனி
வாழ்வதேதென்ற சொல்லெஞ்சும்!
தவிக்கும் மூச்சும் இமைமூடா விழியும் – உனக்குத் தூது சொல்லி வாய் மொழியும்!
(உள்ளம் கேட்க மறுக்குதே...)
என் நெஞ்சில் என்ன
என் நெஞ்சில் என்ன உண்டு!
படைப்பு: பாலசாண்டில்யன்
(மூலம்: Mere dil mein aaj kya hai)
பல்லவி
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி மகிழ்வேன்!
கூந்தல் அழகு செய்வேன் - கோல
நெற்றித் திலகமிடுவேன்!
கூந்தல் அழகு செய்வேன் - உன்
நல்நெற்றித் திலகமிடுவேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
சரணம் 1
தெய்வமாய் எனை மாற்றி - உந்தன்
தேடலால் பூஜை செய்தாய்!
தெய்வமாய் எனை மாற்றி - உந்தன்
பாடலால் பூஜை செய்தாய்!
காதல் என்னை ஏவுதடி - உனையும்
கடவுளாய் மாற்றத் தோன்றுதடி!
காதல் ஏதோ செய்யுதடி - உனையும்
கடவுளாய் மாற்றத் தோன்றுதடி!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
சரணம் 2
தேடி யாரேனும் வந்தால் - நமைத்
தேட முடியாமல் போகும் ஆஹா!
தேடி யாரேனும் வந்தால் - நமைத்
தேட முடியாமல் போகும் ஓஹோ!
எனை நீ ஒளித்து வைப்பாய் - உனை
எங்கேனும் ஒளித்து வைப்பேன்!
எனை நீ ஒளித்து வைப்பாய் - உனை
எங்கேனும் ஒளித்து வைப்பேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
சரணம் 3
என் தோள்களில் நீ சாய்ந்தால் - உன்
இன்னல்கள் மறைந்தொழியும்!
என் தோள்களில் நீ சாய்ந்தால் - உன்
துயரங்கள் அமைதி கொள்ளும்!
உன் கூந்தலில் நான் மறைந்து - இந்த
உலகின் துயரம் மறப்பேன்!
உன் கூந்தலில் நான் ஒளிந்து - இந்த
உலகின் கவலை மறப்பேன்!
கூந்தல் அழகு செய்வேன் - கோல
நெற்றித் திலகமிடுவேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
காதல் கவிதை / பாடல்
பாலசாண்டில்யன்
பல்லவி
மனதின் சுவாசம் திங்கள் அறியுமோ?
மதியின் வாசம் செவ்வாய் அறியுமோ?
மங்கல நாதம் கிழமை வழங்குமோ?
மாவிலைத் தோரணம் நாளை ஆடுமோ?
சரணம் 1
மௌனத்தின் மொழியை விழிகள் பேசுமோ?
மறந்தநன் னாளும் நினைவில் பூக்குமோ?
தேனினும் இனிய குரல் கேட்குமோ?
தேடிடும் இரு விழிகளில் வெட்கமோ?
உயிரினில் கலந்த உறவின் ரகசியம்
உலகத்தின் காற்றில் ஓசையாய் மாறுமோ?
பயிரினில் துளிர்க்கும் பசுமை போலவும்
பயணத்தின் முடிவில் பந்தம் நீளுமோ?
சரணம் 2
இரவினில் எரியும் சுடரின் தாகமும்
இமைக்குள் தெரியும் உருவின் மோகமும்
வரவெனக் கேட்கும் இளமை ஆசையும்
வார்த்தையில் அடங்கா அன்பின் பாசமும்...
காலத்தின் வண்டியில் கதையாய் ஓடுமோ?
காற்றினில் தென்றலாய் நம்மைச் சேருமோ?
கோலத்தின் புள்ளிகள் இணையும் வேளையில்
கோயில் மணிபோல நாதம் கேட்குமோ? S
Thursday, February 26, 2026
பூங்காத்து
பூங்காத்து - நாட்டுப்புற மெட்டு
பாடல் வரிகள்: டாக்டர் பாலசாண்டில்யன் Balasubramanian Kalyanaraman
பல்லவி:
கூழாங்கல்லு சேராதோ - இந்தக்
கருங்கல்லு கூட்டத்துல?
பொட்டை நிலத்துல - நான்
பட்டுனு வீசும் பூங்காத்து!
உன்னால வெறுங்கையும் - இப்போ
உசிரே ஒட்டும் பூங்கொத்து!
ஒத்தப் பார்வையில - என்ன
ஓரம் கட்டும் பூங்காத்து!
அனுபல்லவி:
கள்ளிக்காட்டு முள்ளுக்குள்ள - ஒரு
கள்ளிப்பூ இப்போ மலந்தாச்சு!
அள்ளி அத நான் சூடிக்க - என்
அறிவும் இப்போ தொலைஞ்சாச்சு!
கல்லு மேல கல்லு வெச்சு
கட்டுன வீடு இது - உன்
சொல்லு மேல சொல்லு வெச்சா
சொர்க்கமா இப்போத் தோணுது!
சரணம்:
ஆள மயக்கும் ஒன் சிரிப்பு
அடிநெஞ்சில் குடி இருக்கு!
நாளப் பாக்கும் காத்துக்கிப்போ
நம்ம வாசம் தெரிஞ்சுருக்கு!
முரட்டுப் பய நானும் - இப்போ
முழுசாத்தான் மாறிப்புட்டேன்!
வரப்பு மேல ஒன் நிழல
வரமாத்தான் ஏத்துக்கிட்டேன்!
வசந்தமே பூக்களைத் தூவ
Baharon mein phool barsao
தமிழில்... ஒரு முயற்சி
- பாலசாண்டில்யன்
வசந்தமே பூக்களைத் தூவு
(பல்லவி)
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
இசை பாடி வா இளந்தென்றல் காற்றே
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 1)
ரோஜாவின் இதழ் போன்ற செந்நிற மருதாணி
அவள் மென்மைக் கரங்களில் அழகு சேர்க்கட்டும்!
கார்மேகம் இறங்கி வந்து அவள்
கூர்விழி ஓரம் மை தீட்டட்டும்!
நெற்றியின் உச்சியில் நிலவைச் சூட்டி மெல்ல
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 2)
எங்கும் பரவும் எழில்மிகு ஒளியில்
ஏனோ அஞ்சும் அவள் குணமன்றோ!
தடுமாறும் இதயத்தை வருடிட இந்த
தலைவன் தேடும் தேவதை வந்தாளோ?
துடிக்கும் மனதைத் திருடிச் செல்ல
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 3)
காதல் மஞ்சத்தைக் கனிவாய் வெல்ல
காலமே கனிந்து கோலம் இட்டதோ?
வாசம் பரப்பிடும் காற்றே நீ வீசு
வந்தாள் என் காதலி இன்று!
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
இரு இதயம் இணைகிறத
இரு இதயம் இணைகிறதே...
பல்லவி:
இரு இதயம் இணைகிறதே - அது
இரகசியமாய் இசைக்கிறதே!
அனைவருக்கும் இது தெரியுமே - மெல்ல
அனைத்துலகும் தெளியுமே!
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
(இரு இதயம்...)
சரணம் - 1:
சுவாசக் காற்றில் ஒரு தவிப்பு - இந்தப்
பாசப் பார்வையில் ஒரு விழிப்பு!
எங்கோ ஓரிடத்தில் மனம் சிக்கினால்
அங்கே அன்றி அது நிற்காது!
உள்ளத்தை மெல்லக் கட்டிப் போடவா?
உள்ளத்தில் செல்லக் கட்டில் போடவா?
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
சரணம் - 2:
ஒன்றும் அறியாப் பாவையைப் போலே
ஒட்டி அமர்ந்தாய் அருகினிலே!
இன்று யாவையும் வெளிச்சமாக
இதயம் உணரும் உண்மையிது!
உதடுகள் மௌனம் சாதிக்கலாம் - ஆனால்
விழிகள் கதைகள் பேசிடுமே!
உள்ளம் உள்ளே நெகிழ்கிறதே - ஒரு
ஊஞ்சல் ஆடி மகிழ்கிறதே!
சரணம் - 3:
நெருப்பு மூளும் முன்னரே - ஒரு
கருப்புப் புகையே மிதக்கிறதே!
எங்கும் இருக்கும் எழில் கோலம்
பொங்கி வழிந்திடும் புது ஜாலம்!
தீயொன்று நெஞ்சில் மூட்டவே - இரு
தேகமும் சமமாய் ஒளி கூட்டவே!
இங்கிருந்து அங்கும் - அந்த
எல்லை தாண்டி இங்கும்...
(இரு இதயம்...)
Do dhil mil rahe hain chupke chupke என்ற அருமையான ஹிந்தி திரையிசைப் பாடலை ஒட்டி எழுதியது
பாடல் : பாலசாண்டில்யன்
Subscribe to:
Posts (Atom)