கதையல்ல நிஜம் - 12
- டாக்டர் பாலசாண்டில்யன்
ரமேஷ் கஸ்பேகர் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர் அசிஸ்டென்ட் ஆக வேலை பார்த்த கல்பனா எனும் தமிழ்ப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தார். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.
ஒரு நாள் ஆபீஸ் நேரம் முடிந்ததும் கல்பனா வீட்டிற்கு நிறைய பழங்கள் மற்றும் பூ வாங்கிக்கொண்டு போய் நேராக பெண் கேட்டார். கல்பனாவின் அம்மா (அப்பா இறந்து விட்டதால் அவர் தான் குடும்பத் தலைவி) வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்.
ரமேஷ் வீட்டில் கூட்டுக் குடும்பம் என்பதால் நிறைய பேர் இருந்தனர். வீட்டில் எல்லோரும் மராட்டி மொழியில் பேசினர். கல்பனாவிற்கு ஹிந்தி தெரியும். இருப்பினும் மராட்டி மொழி புரியாததால் பல சமயம் தன்னைப் பற்றி ஏதோ தப்பு தப்பாக பேசுவதாக யூகிக்க ஆரம்பித்தாள். அந்தக் கோபத்தை ஆபீசில் காட்ட ஆரம்பித்தாள். ரமேஷ் தனக்கு நேருகின்ற அவமானங்களை மாற்ற நினைத்து கல்பனாவை வேலையை விட்டு விட சொன்னார்.
கல்பனா சரி என்று அன்றே ராஜினாமா செய்தாள். ஆனால் நேராக தனது வீட்டிற்கு சென்றாள். ரமேஷ் அன்று சும்மா இருந்தார். மறுநாள் போனில் கூப்பிட்டார். கல்பனா அங்கு இருந்தால் தானே...அவள் தனது அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு திருச்சி வந்து சேர்ந்தாள்.
கல்பனாவிற்கும் சரி அவள் அம்மாவிற்கும் சரி திருச்சியில் மும்பை அளவு சௌகரியமாக வாழ முடியவில்லை என்றாலும் ஏதோ சமாளித்து வந்தனர். ரமேஷ் கல்பனாவின் நெருங்கிய தோழி சித்ரா மூலம் திருச்சி முகவரி தெரிந்து கொண்டு ஒரு நாள் வீட்டில் வந்து நின்றார். கல்பனாவை தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சிப் போராடிப் பார்த்தார். கல்பனாவின் ஒரே பதில் தனிக் குடித்தனம் வைப்பது பற்றி தான். பாரம்பரியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ரமேஷ் செய்வது அறியாது தவித்தார். வந்த வழியே கிளம்பினார் எதுவும் சொல்லாமல்.
மும்பை திரும்பிய ரமேஷ் தனது குடும்ப சம்மதத்தோடு தனிக்குடித்தனம் வைக்க வீடு பார்த்தார். கல்பனாவும் வந்து சேர்ந்தாள். ஆனால் ரமேஷ் அவர் வீட்டிற்கு ஒரு போதும் போகக்கூடாது, தானும் வர மாட்டாள் என்று நிபந்தனை விதித்தாள். பெண் குழந்தை பிறந்தது. அவளைக் கொண்டு போய்க் கூட ரமேஷ் பெற்றோரிடம் காட்டக்கூடாது என்றாள். போகப் போக கல்பனா - ரமேஷ் இடையில் நிறைய இடைவெளி ஆரம்பம் ஆனது. மீண்டும் கல்பனா ஒரு நாள் குழந்தையுடன் திருச்சி கிளம்பி விட்டாள்.
திரும்பி வந்த போது கல்பனாவின் அம்மாவும் இறந்து விட்டார். தனிக்குடும்பம் நடத்திய அவள் தினம் தினம் மனப் போராட்டத்துடன் வாழ்ந்தாள். ரமேஷ் நிலையும் கிட்டத்தட்ட அதே தான்....! கல்பனாவின் மகள் வளர்ந்து பெரிய பெண் ஆகி நிறைய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள் ...!
No comments:
Post a Comment