அரிய ஆயுதங்கள்
பார்வை
- டாக்டர் பாலசாண்டில்யன்
தமிழன்னைக்கு முதல் வணக்கம்
கணேசனின் குரு பார்வை என் மீது வெகுநாள் கழித்து...
கவியரங்க தலைமைக்கு சிறப்பு வணக்கம்
செவி மடுக்கும் பார்வையாளர்கள் உங்களுக்கு பணிவான வணக்கம்
சிக்நலில் சிவப்பு விழுந்தாலும் ப்ரேக்ஸ் இன்றி நிற்காது ஊர்தி
நிறுவனத்திற்கு பல கோடி வணக்கம்
என்ன பார்வை உந்தன் பார்வை
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்
என்றும் மௌனம் வேண்டாம்
ஆயிரம் அர்த்தம் சொல்லும்
அந்த ஒற்றைப் பார்வை உலகை வெல்லும்
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமோ
பறவையின் பார்வை இருந்தால்
பிரச்சனைகள் சிறிதாகும்
அன்னையின் அன்புப் பார்வை
அழுகை நிறுத்தும் அரவணைப்பை தரும்
தந்தையின் கண்டிக்கும் பார்வை
குற்றங்கள் தடுக்கும்
ஆசிரியரின் கோபப் பார்வை
விழிகளுக்குள் விடைகள் நினைவூட்டும்
காதலியின் ஓரப் பார்வை
உயிரை உருக்கும் தூக்கம் விரட்டும்
மனைவியின் ஏளனப் பார்வை
மன்னிப்பு கோர வைக்கும்
அதிகாரியின் அர்த்தமுள்ள பார்வை
அனைத்தையும் உணர்த்தி விடும்
மகளின் கெஞ்சல் பார்வை
மணிபர்ஸை காலி செய்யும்
நண்பனின் நக்கல் பார்வை
நம்மையே நமக்கு அறிமுகம் செய்யும்
வாடிக்கையாளரின் மகிழ்வுப் பார்வை
வணிகத்தைப் பெருக்கி நிற்கும்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
சிலர் பார்வை பட்டால்
சீக்கெல்லாம் குணமாகும்
சிலரின் அப்படி இப்படி பார்வை
சிதைக்கும் மனதை குப்பையாய்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
மேலதிகாரியின் பார்வை நம் மீது விழ
மேன்மை பல பிறக்கும்
கடவுளின் கருணைமிகு கடைக்கண் பார்வை
கஷ்டங்கள் போக்கி விடும்
கிரகங்களின் பார்வை சிலருக்கு
கெட்டதெல்லாம் போக்கி விடும்
நீ பார்த்த பார்வைக்கு நன்றி
அப்படிப் பார்க்கறது வேண்டாம்
அக்கறைப் பார்வை ஒன்று தா என
அனைவரையும் கேட்கும் மனது
பார்வையது விசாலமானால்
பார்வையது மாறி விட்டால்
பண்புகள் தானே மாறிப் போகும்
பண்புகள் மாறி விட்டால் - மனப்
பாங்கு தான் மாறி விடும்
பாங்கு மாறி விட்டால்
எண்ணமும் செயலும் மாறும் - பின்
எல்லாமே வெற்றியாய் நிச்சயம் மாறும்
பார்வை என்பது மனதால் அறிவால்
பார்ப்பது எனப் புரிந்து கொள்வோம்
கண்ணால் மட்டும் பார்ப்பது
காட்சி தானே ஒழிய காரியம் முடிக்காது
காடு திறந்தே கிடக்கிறது காற்று மலர்களைத் துடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது
கண்திறந்து பார்ப்பது இனி வேண்டாம்
மனம் திறந்த பார்வை கொள்வோம்
மனித நேயத்துடன் உலகைப் பார்ப்போம்
பார்வையெனும் அரிய ஆயுதம் கொண்டு
பாரினை வெல்வோம் பரவசம் கொள்வோம்
பிரபஞ்சத்தை அன்பால் வெல்வோம்
உன் பார்வைக்கு நீயே பொறுப்பு
உலகளாவ மனம் விரி..உயிருள்ளவரை நீ சிரி