என்ன கொடுமை சரவணா - டாக்டர் பாலசாண்டில்யன்
பேசுவதே தொழிலாகக் கொண்ட எனக்கு நேற்று மாலை முதல் என்ன ஆயிற்று ?
ஞாயிறு அன்று எனது மகளுக்கு சில பொருட்கள் வாங்கித் தர ஷாப்பிங் சென்றேன் குடும்பத்தோடு. பகல் உணவு வெளியே. பாட்டில் தண்ணீர் தான். மாலை காபி சமயம் எதோ நினைவாக ஹோட்டல் கொடுத்த குடிநீர் சற்று பருகி விட்டு காபி குடித்தேன். மாலையே எங்கள் உரத்த சிந்தனை அமைப்பின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம். அங்கே சுமார் போண்டா ஒன்று. பாதியில் குடிக்க முடியாமல் கொட்டி விட்ட காபி. அதன் பிறகு இடையே அந்த பிசினெஸ் சென்டர் வைத்திருந்த பாட்டில் தண்ணீரில் ஒரு முழுங்கு. ஒரு சின்னக் கரகரப்புடன் தான் படுக்க சென்றேன். ஏதோ இருந்த ஒரு அவசர உதவி மாத்திரை எடுத்துக் கொண்டு.
நேற்று அதிகாலை சென்னைக்கு வெளியே இருக்கும் மிகப் பெரிய நிறுவனத்தில் எனது பயிற்சி வகுப்பு. நல்ல மைக். பாட்டில் தண்ணீர் தான். பிறகு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக எனது மிக உற்சாகமான பயிற்சி. பயிற்சி. வெகு சிறப்பாக சென்றது. ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என்று. "சார் நீங்கள் ஒரு பிளே பாக் சிங்கர் தானே? உங்கள் குரல் ரொம்ப சூப்பர் என்றார்கள் இரண்டு பங்கேற்பாளர்கள். பயிற்சியில் நல்ல பீட் பாக் வேறு.
பயிற்சி முடிந்ததும் கம்பெனி காரில் சொகுசாக வந்து இறங்கினேன் மாலை நேரத்தில். அப்போதே குரல் மீண்டும் சற்று கரகரப்பாக இருந்தது. பிறகு பேச முடியவில்லை. ரேவதி போல காற்று தான் வருகிறது. கூடவே அழுகையும் சிரிப்பும் கலந்தே வருகிறது. வீட்டிற்குள் நுழைந்ததும் பயிற்சி சூப்பர் என்று சொல்லி விட்டு ஒரு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டேன். எழுந்தேன் ஒரு டீ குடிக்கலாம் என்று. என் மனைவியை அழைக்கிறேன். அவள் பெயரே வரவில்லை. காற்று வருகிறது. எழுந்து போய் குரலும் செய்கையும் கலந்து டீ வேண்டும் என்றேன். என்ன ஆச்சு அண்ணா என்று எனது வீட்டு வேலை செய்யும் பிரியா வினவினாள் மிகுந்த ஆதங்கத்தோடு.
சுக்கு, துளசி, மிளகு என்று கிடைத்ததெல்லாம் போட்டு ஒரு கஷாயம் கொடுத்தார் என் மனைவி. கொஞ்சம் சன்னமாக குரல் வந்தது. பிறகு குறைவாகப் பேசி விட்டு இரவு உணவு எடுத்துக் கொண்டு சீக்கிரமே உறங்கப் போனேன். காலை எழுந்ததும் இன்னும் வினோதமான நிலை. இருமல் இல்லை. சளி இல்லை. தொண்டை வலி இல்லை. ஆனால் பேசிட குரலும் வரவில்லை. காலை 10 மணிக்கு ஒரு முக்கிய பிசினெஸ் மீட்டிங். முக்கிய நிறுவனம். பெரிய அதிகாரி. அவர் வெளியூர் சென்று விடுவார் இன்று சந்திக்கவில்லை என்றால். என்னை முதலில் சந்தித்த அதிகாரிக்கு போன் செய்து சற்று காற்று கலந்து சார் "பாலா பேசுகிறேன், எந்த பிளோர் வர வேண்டும்". அவருக்கு எனது குரல் புரியவில்லை என்பதால் போன் கட் செய்தார். பிறகு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
கூடுதல்மீ செய்தி: ட்டிங் செல்வதற்கு முன்பு மருத்துவர் நண்பர் டாக்டர் பாஸ்கர் அவர்களுக்கு எனது பிரச்சனையை செய்தியாக அனுப்பினேன். அவர் திருப்பிக் கூப்பிட்டு கிளினிக் வரச் சொன்னார். நான் எனக்கு மீட்டிங் இருக்கிறது. சற்று காற்று குறைவாக குரல் கூடுதலாக வருகிற சீக்கிர வழி உண்டா? என்று கேட்டேன். எனது வி டி வி கணேஷ் குரல் கேட்டு மிரண்டு போன டாக்டர் "அதிகம் பேச வேண்டாம், மருந்து மெசேஜ் அனுப்புகிறேன் வாங்கி சாப்பிடுங்கள், சரியாகி விடுவீர்கள்" என்று தைரியம் கொடுத்தார்.
மருந்து வாங்கி சாப்பிட்டு விட்டு மீட்டிங் போய் தைரியமாக காற்று அதிகமாக குரல் குறைவாக ஓரளவுக்கு புரியும் படி ஆக்சன் கலந்து முக்கிய அதிகாரிகளை சந்தித்து விட்டு இதோ வந்து விட்டேன். ஓலா கார் புக் செய்ய முடியவில்லை. சைகையில் ஒரு ஆட்டோவை நிறுத்தி புரிந்தும் புரியாதவாறு எனது வீட்டு விலாசம் சொல்லி, அவரோடு ஆட்டோ சத்தம் பற்றி பேரம் சத்தமாக பேச முடியாமல் செய்கையில் பேசி, அவரை தொட்டு தொட்டு ரைட், லெப்ட் என்று சொல்லி வீடு வந்து சேர்ந்த அனுபவம் மிகவும் புதிது. "நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே" - இந்த பாட்டு வரியை யாருக்கும் கேட்காத குரலில் முணுமுணுத்தக் கொண்டே இதோ அந்த அனுபவத்தை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
ஒரு நாள் பேச முடியவில்லை என்பதே இவ்வளவு சிரமமாக இருக்கிறது என்றால் பேசவே முடியாது என்பவர்கள் எப்படி தனது வாழ்வை நகர்த்துகிறாரக்ள். ஆச்சரியம் தான். அவர்கள் பாவம் தான். யாருக்கும் வேண்டாம் இந்த காற்று நோய்.
குறிப்பாக நான் சந்தித்த அந்த அதிகாரிகள் மிகச் சரியாக எனது சிரமத்தை புரிந்து கொண்டு வெந்நீர் கொண்டு வரச் சொன்னார். இல்லை என்று சொல்லாமல் அந்த நபர் சூடாக காபி கொண்டு வந்தார். அவர்கள் நீங்கள் அதிகம் பேசாதீர்கள். சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் அலுவலகம் சென்று மெயில் போடுங்கள் என்றனர். எனக்கு பதில் எனது ப்ரொபைல் பேசியது. பயந்து கொண்டே போன காரியம் ஒரு வழியாக நன்றாக நடந்து முடிந்தது. நாளை வேறு ஒரு முக்கியக் கூட்டம்.
குரல் வருமா? காற்று வருமா? காற்று கலந்த குரல் வருமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும். டாக்டர் பாஸ்கர் மருந்து சாப்பிட்டு இருக்கிறேன். நிச்சயம் நன்றாகி விடுவேன். இன்று ஒரு நாள் குரலை சேமித்தால். நம்பிக்கை தானே வாழ்க்கை.
நீதி: குரலை வைத்து பிழைக்கின்ற என்னைப் போன்றவர்கள் தண்ணீர் கண்ட இடத்தில் அருந்தக் கூடாது. அப்படி அருந்தினால் தண்ணீர் ஆவியாகி காற்று தான் வெளி வரும். ஆக இன்று கட்டாய மௌன விரதம். வீட்டு மனிதர்களுக்கு மகிழ்ச்சி தான். குரல் போனால் என்ன? விரல் இருக்கிறதே...!! அங்க பாஷை உதவும் என்று நம்புவோம். நீர் இன்றி கலையாது குரலும்.
No comments:
Post a Comment