புயல் போன்ற இயற்கை பேரிடர் நமக்கு எதை சொல்லிக் கொடுக்கிறது ?
- டாக்டர் பாலசாண்டில்யன் (மனநல மற்றும் தொழில் ஆலோசகர், எழுத்தாளர்)
எந்த திசையில் இருந்து எத்தனை வேகமாக காற்று நகரும், எந்த திசை நோக்கி நகரும், எந்தெந்த மாநிலம் அல்லது மாவட்டங்கள் கடந்து செல்லும், அப்போது மழை பெய்யுமா, என்று பல்வேறு விஷயங்களை அறிவியல் மற்றும் வானியல் அறிஞர்கள் கண்டறிந்து முன்கூட்டியே அறிவுறுத்துகிறார்கள். இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை.
ஆனால் சில நேரம் புயல் என்று சொல்லப்படும் அந்த அசுரக்காற்று சொன்னபடி, கணித்தபடி நகருவதில்லை - இடம் நேரம் வேகம் எல்லாமே நிறைய மாறுகிறது. அதன் தாக்கமும் மாறுகிறது. அது தான் இயற்கை. இயற்கை எந்த அறிவியல் அறிவிற்கும் அப்பாற்பட்டது என்று நாம் இது போன்ற தருணங்களில் அறிந்து கொள்கிறோம்.
பொதுவாக ஆல், அரசு, வேல் போன்ற மிகப் பெரிதாக இருக்கும் மரங்கள் பொசுக்கென்று சாயும், வாழை, கரும்பு போன்ற பலவீனமான மரங்கள் வீழும். (குண்டாக காண்பதற்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் தான் அதிகம் நோய்வாய்ப்படுவார்கள், ஒல்லியாக காண்பதற்கு நோஞ்சானாக இருப்பவர் நீடு வாழ்வார்கள் அது போல). இம்முறை 'கஜா' எனும் மகா சீற்றம் கொண்ட புயலின் கோரத்தாண்டவம் எட்டு மாவட்டங்களில் உள்ள தென்னை, பனை, வாழை என்றெல்லாம் பாகுபாடு காணாது சாய்த்து விட்டது. வீடுகளின் கூரைகள், மின்கோபுரங்கள் என்று பறந்தன, சாய்ந்தன.
விளைவு: விவசாயிகளுக்கு நஷ்டம் மட்டும் அல்ல, செல்லும் பாதைகள் மூடப்பட்டு கிடக்கின்றன, பலர் வீடு வாசல் இழந்து நிற்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க முடியாத நிலை, பலருக்கு உடல் மற்றும் நோயால் அவதி, குழந்தைகள் மற்றும் முதியோர் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டு சிரமப்படுகிறார்கள். இத்தனைக்கும் இம்முறை அரசு தனது முன்னனுபவம் கற்றுத் தந்த பாடங்களை மனதில் கொண்டு உயிர் சேதங்களை குறைத்து உள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து பலரை வீட்டில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்து சேதங்களை குறைத்து உள்ளனர்.
இருந்தாலும் பிரதான ஊர்கள், அருகில் உள்ள பெருகிராமங்கள், பின்னர் உள்ளடங்கிய சிற்றூர்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த பெரும்பதிப்பு ஏற்பட்டு உள்ளது இம்முறை. என்ன முன்னேற்பாடு செய்து என்ன பயன்?
2016 ஆம் ஆண்டு சென்னையில் 'வார்தா' புயல் வந்த பொழுது நாம் கண்ட ஒன்று என்னவென்றால் மரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பது தான். கீழே வேரோடு விழுந்த மரங்களில் இருந்து முதலில் மக்கிய நாற்றம், பிறகு அதில் இருந்து வரக்கூடிய நெடி அடிக்கும் துர்நாற்றம் மக்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கின. நகரம் என்பதால் பெரிய பெரிய எந்திரங்கள் கொண்டு அந்த சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன இரண்டு அல்லது மூன்று நாட்களில். மின்சாரம் மூன்று அல்லது நான்கு நாட்களிலும், இணையதள இணைப்பு மற்றும் தொலைபேசி இணைப்புகள் அதிகபட்சம் பத்து நாட்களில் சரிசெய்யப்பட்டது. வீழ்ந்த அந்த மரங்கள் பெரும்பாலும் நிழல்தரு மரங்கள் தானே தவிர மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவல்ல மரங்களாக இல்லை.
அதுவே இந்த 'கஜா' புயல் சாய்த்த மரங்கள் நமக்கெல்லாம் சோறு போட்டு வயிறு நிறைக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சாய்த்து விட்டவை என்று நினைக்கவும் வேதனையாக உள்ளது.
புயல் வந்து போய் விட்ட இந்த நாள் நான்காவது நாள். இருப்பினும் சாய்ந்த மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை, வீழ்ந்த கம்பங்கள் இன்னும் நிமிர்த்தப்படவில்லை, வீட்டை விட்டு புறப்பட்ட மக்களின் அகதி எனும் அவலநிலை இன்னும் மாறவில்லை. மின்சாரம், தொலைபேசி இன்னும் மீளப்படவில்லை. உடைந்த படகுகள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள் இன்னும் சீர் செய்ய முடியாது மக்களும் அரசும் தவிக்கிறது. எவ்வளவு நஷ்டம் என்று இன்னும் கணிக்கக் கூட முடியாத கஷ்டமான சூழல். நினைத்தோ கற்பனையிலோ கூட எண்ண முடியாத அவலநிலை.
தமது தோட்டம், நிலம் சாய்ந்து விட்டதே, தமது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதே என்று மக்கள் நினைத்து நினைத்து அழுகின்றனர். இது மனம் சார்ந்தது. உடல் சார்ந்து காணும் பொழுது, உணவு, குடிநீர், மருந்து, மாற்றுத்துணி, போற்றிக்கொள்ள போர்வை, படுக்க தலையணை, மெழுகுவர்த்தி என்று எதுவுமே கிடைக்கவில்லை என்பதால் பசி தாகம் நோய் எனும் அவஸ்தையில் இன்னும் மக்கள். அது தாண்டி மரங்கள் கண் முன்பு சாய்ந்து கிடக்கும் மீளொணா பெருஞ்சோகம், அதில் இருந்து கிளம்பும் துர்நாற்றம் மற்றும் தொற்று என்று மேலும் மேலும் இன்னல்கள் தான் சொல்லி மாளவில்லை. துக்கத்தில் இருந்து மனங்கள் மீளவில்லை.
மானியம், நஷ்டஈடு கிடைக்கட்டும். உடனே கிடைக்க வேண்டிய உணவு குடிநீர், உடை கூட கிடைக்கவில்லையே. மாநில அரசா மத்திய அரசா யார் தருவார் பாதுகாப்பு என்பது தாண்டி, எதிர்காலம் என்ன ஆகும் எனும் கவலைக்கு உண்டா விடையும் மருந்தும்.
என்ன செய்யலாம் எதிர்காலத்தில்?
- பருவகாலம் வரும் முன்பே ஏரி குளங்களை தூர்வாறுதல்
- புயல் அல்லது மழை ஏற்படுவதற்கு முன்பே மக்கள் தமக்கு (குறைந்தது ஒரு வாரத்திற்கு தேவையான மருந்து, உணவு, குடிநீர் போன்ற) தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
- பாதுகாப்பான இடங்களில் மக்களுக்கு தேவையான பொருட்களும், கழிப்பறைகளும் ஏற்பாடு செய்தல்
- ஊடகங்கள் கிராமங்களில் பல்வேறு தோட்டங்களில் வயல்களில் விழுந்த மரங்களின் புகைப்படங்களை எடுக்க ஏற்பாடு செய்தல்,
- கிராம அதிகாரிகள் தமது வரையறையில் இருக்கும் ஊர்களின் நிலங்களில் செய்யப்பட்டுள்ள பயிர்களின் மதிப்பு, பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களின் அளவு ஆகியவற்றை தெரிந்து வைத்திருத்தல்
- விவசாயிகள் விதைத்த உடனேயே தமது பயிர்கள் மீதும், இயற்கை பேரிடர் குறித்தும் உள்ள சரியான காப்பீடு செய்து கொள்ளுதல் (இழப்பு நேரத்தில் அரசை, கட்சிகளை மக்களை சார்ந்து இருக்காமல் தமது நஷ்டத்திற்கு கவலை இன்றி இருக்க முடியும்)
- ஒவ்வொரு ஊரிலும் தத்தம் ஊரை, தெருவை காத்திட ஓர் ஊர்க்காவல் படையை இல்லை என்றால் ஏற்படுத்தி அவர்களைக் கொண்டு மக்களை மற்றும் அவர்கள் உடமைகளை காத்தல் வேண்டும்
- மாநில அரசு அழைப்பு விடாமலே மத்திய அரசு (எந்த கட்சி ஆண்டாலும்) காலத்தே உதவிட படைகள், அனுப்புதல், நஷ்டங்களை கண்டறிய ஆய்வுக்குழுக்களை அனுப்புதல், உறுதி செய்த நஷ்ட ஈட்டு தொகையை காலத்தே வழங்குதல், ஊடகங்கள் மூலம் மக்களுக்கு ஆறுதல் வழங்குதல் செய்ய வேண்டும். ஊடகங்களும் எப்படி எச்சரிக்கை செய்ததோ அவ்வண்ணம் நம்பிக்கை தரும் விஷயங்களை அதிகம் பேச வேண்டும் - ஒருவருக்கொருவர் குற்றம் சொல்வதை விட்டு விட்டு
- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனடியாக (காலம் தாழ்த்தி அல்ல) நிதி திரட்டி அவற்றைக் கொண்டு மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்
- பெரு நிறுவனங்கள் சிற்றூர்களை தத்து எடுத்து ஆவன செய்ய வேண்டும்
- அந்தந்த ஊர்களில் பிறந்து வளர்ந்து படித்து வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பணி புரிகிறார்கள் என்றால் (கேரளா போல), தமது ஊருக்கு இந்த மாதிரி இடர்காலங்களில் நிதி உதவி அனுப்பி உதவலாம்
- இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டி அவற்றை பேரிடர் கால நிதிக்கு வழங்கலாம்.
- கொடிதினங்களில் நிதி நன்கொடை வழங்குவது போல ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ரூபாய் 100 என்று அளித்தால் (எட்டு கோடி மக்களின் மூலம் கிடைக்கும் தொகை) குறைந்தது 800 கோடி ரூபாய் அரசு வசம் கார்பஸ் நிதியாக இருக்கும். அதை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற வகையில் முதலீடு செய்தால் அதில் இருந்து கிடைக்கும் இன்னும் அதிகமாக இருக்கும்
- சமூக வலைத்தளங்களை மக்கள் எப்படி எப்படியோ தவறாக பயன்படுத்துகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட இடர்காலங்களில் சரியாக பயன்படுத்தி காலத்தே தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும். எல்லாமே அரசு தான் செய்ய வேண்டும் என்று காத்திருத்தல் அவசியம் இல்லை
இன்னும் கூட உங்களிடம் நல்ல யோசனைகள் நிச்சயம் இருக்கலாம். அவற்றை நல்ல பத்திரிகையில் எழுதுங்கள். மக்களுக்கு நல்ல ஆறுதல், தன்னம்பிக்கை, மற்றும் ஊக்கம் அளியுங்கள் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
No comments:
Post a Comment