Friday, May 3, 2019

நூலைப்படி - கவிதை -


நூலைப்படி - கவிதை - முனைவர் பாலசாண்டில்யன்

படி படி 
நூலைப் படி 
அதன்படி மனதை 
உயர்த்திப் பிடி 

கண்ணைப் படி 
கருத்தை அறிய  - அதன் 
காரணம் அறிய 

எண்ணைப் படி 
எழுச்சிகள் அறிய - அதன் 
விளைவுகள் அறிய 

மண்ணைப் படி 
உழவை  அறிய - மக்கள் 
உயிர் தனைக் காக்க 

மண்ணைப் படி 
மனிதனை அறிய - அவன் 
மாண்புகள் அறிய 

விண்ணைப் படி 
கோள்கள் அறிய - அதன் 
போக்கினை அறிய 

தன்னைப் படி 
வாழ்வின் பொருளறிய - பின்னர் 
பொருளுக்கு வழியறிய 

படி படி 
நூலைப் படி 
அதன்படி மனதை 
உயர்த்திப் பிடி 



பண்ணைப் படி 
பாரினை அறிய - உள்ள 
இன்பங்கள் அறிய 

இசை கலை படி 
இன்பங்கள் அறிய - அதன் 
நுணுக்கங்கள் தெளிய 

கணினி படி 
கையில் உலகை அறிய - பிறகு 
உலகே கையில் என உணர 

ஓவியம் படி 
எழில் உலகம் அறிய - உள்ள 
சூட்சுமங்கள் தெரிய 

சமையல் படி 
பசி நோய் அறிய - பலர் 
வயிறுகள் நிரம்ப 

தையல் படி 
கோர்ப்பது சேர்ப்பது அறிய 
கோலங்கள் மாற்றிடும் வகை அறிய 

சமயம் படி 
பண்புகள் அறிய - பல 
பாங்குகள் அறிய 

படி படி 
நூலைப் படி 
அதன்படி மனதை 
உயர்த்திப் பிடி 

அறிவியல் படி 
தெளிவுகள் அடைய - பல 
குழப்பங்கள் தெளிய 

வரலாறு படி 
வாழ்க்கை அறிய - முன்னோர் 
வாழ்வை அறிய 

நிர்வாகம் படி 
திட்டங்கள் அறிய - அதன் 
நுட்பங்கள் அறிய 

மருத்துவம் படி 
மனிதகுலம் காக்க - அவரின் 
நோய்கள் வலி  பல போக்க 

சட்டம் படி 
அறங்கள் அறிய - மக்களை 
அரணாய் காக்க 

கலைகள் பல படி 
கவினுற வாழ - அதை 
கவனமாய் படி 

படி படி 
நூலைப் படி 
அதன்படி மனதை 
உயர்த்திப் பிடி 

ஒளி ஒலி படி 
விகாரங்கள் அறிய - பற்பல 
விவரங்கள் தெளிய 

இடர்கள் படி 
எழுச்சியாய் வாழ - பல 
ஏற்றங்கள் அடைய 

தொடர்கள் படி 
தொடர்ந்து படி 
தொடர்ச்சியின் முடிவு அறிய 
முடிவின் தொடர்ச்சி தெரிய 

நீரை மழையைப் படி 
நிலத்தின் செழுமை காக்க - மக்கள் 
தாகம் உயிர் காக்க 

கடலைப் படி 
உப்பு மீன் முத்து மாணிக்கம் அறிய 
மனிதன் அறியா வளங்கள் அறிய 
ஆழம் தெளிய அகலம் தெளிய 
அக்கரை எங்கே என்று கண்டு தெளிய 

எல்லை படி 
எல்லையில்லாமல் படி 
எமன் இருக்கும் இடம் தெரிய 
எவரின் அல்லல் களைய 

இருளைப் படி 
ஒளிக்கும் அங்கே இடம் இருப்பதை 
ஓயாமல் அறிய 

ஒளியைப் படி 
இருளை நீக்கிடும் அதன் மகிமை உணர 
ஒளியில் உலகை கண்டு மகிழ 

படி படி 
நூலைப் படி 
அதன்படி மனதை 
உயர்த்திப் பிடி 

நெருப்பைப் படி 
நேரில் இருக்கும் அனைத்தும் உண்ணும் 
நீரில் மட்டும் அணையும் - எனினும் 
நீரும் அதனில் வேகும் என்று அறி 

அணுவைப் படி 
அதன் வீரியம் அறிய - ஆக்கமும் 
அழிவும் கலந்தே இருப்பதை புரிய 

உறவைப் படி 
உலகைப் படி 
உள்ளங்கள் படி 
உன்னதம் வாழ்வில் எதுவென அறிய 
உலகின் பற்பல விகாரங்கள் தெளிய 
உதடுகள் உதிர்க்கும் விவகாரங்கள் புரிய 

துணிவைப் படி - பயங்கள் 
தூசாக்கும் நுட்பம் அறிய - வெட்கம் தயக்கம் 
விரட்டி அடிக்க 

பணிவைப் படி 
பாங்குடன் நடக்க 
பாரினில் இன்னும் கற்றுச் சிறக்க 

படி படி 
நூலைப் படி 
அதன்படி மனதை 
உயர்த்திப் பிடி 

காதல் படி காமம் படி 
மழலை படி மக்கள் படி 
மண்ணில் உள்ள அனைத்தும் படி - அதற்கு 
நூலைப் படி ....பற்பல நூலைப் படி 
முழுதும் படி முழுகிப் படி முடிவாய் படி 
முன்னும் பின்னும் எல்லாம் படி 
எதுவானாலும் விரும்பிப் படி 
வேம்பென எண்ணி அழுது வேண்டாம் 
கரும்பென எண்ணி தொழுது படி 


எண்ணங்கள் வண்ணங்கள் 
ருசிகள் உணர்வுகள் உணர்ச்சிகள் 
ரசனைகள் என்று தேடித் தேடி நீ படி 
ஒவ்வொன்றின் மாறுபாடு படி 
அதன் பல கூறுபாடு படி 
மனித இயல்புகள் நடத்தைகள் 
மனோபாவங்கள் வெற்றி தோல்விகள் என 
கண்ணில் மனதில் தெரிவதெல்லாம் படி 
அதுவே வாழ்க்கையில் உனக்கு கைப்பிடி 

எல்லாம் படித்த பின் 
மேற்படி சொன்ன எல்லாம் படித்த பின் 
பெரியோருக்கு நீ கீழ்ப்படி 
அதுவே வெற்றிக்கு முதற்படி 
முதற்படி தான் முன்னேற்றத்தின் அரிச்சுவடி 
படிப்படியாய் முன்னேறு 
வெற்றி என்றும் உயரத்தில் இல்லை - ஏறும் 
ஒவ்வொரு படியிலும் உள்ளது என்றே தெளி 

பாட்டன் பாரதிதாசன் சொன்னது போல் நீ 
நூலைப் படி அதன்படி 
வாழ்வை உயர்த்திப் பிடி 














No comments:

Post a Comment