Tuesday, March 22, 2022

தாயெனும்

 

மீண்டு பிறப்பேனோ என் தாயே 

மீண்டும் பிறப்பேனோ உன் சேயாய் - உன் 

அன்பின் வண்ணம் முழுவதுமறிய 

அணைப்பின் வாசம் உணர்ந்து தெளிய   

(மீண்டு)

 

உயிர் நான் உடல் நீயென உயிர்த்து 

உனையே என் தாயாய் அடைய 

காலன் தடுத்தாலும் காலம் மறைந்தாலும் - உன் 

காலடியில் கிடக்க காலமெலாம் சுகிக்க 

(மீண்டு)

 

பாசம் காட்டும் தவிப்பே பரிதவிப்பாய் 

ஆக்கப் பிறந்தவனாய் ஆக்கம் அறிந்தவனாய் 

ஞானம் கிடைத்தவனாய் யோகம் தெளிந்தவனாய் 

மலராக மணமாக ஒளியாக உன் நிழலாக 

(மீண்டு)

 

(ஒவ்வொரு வரி முடிவிலும் மீண்டு பிறப்பேனோ என்று பாடிப் பார்க்கலாம்)

 

- பாலசாண்டில்யன் 

 

புன்னகையால் மனம் வென்றிடுவாள் - ஒரு 

கண்ணசைவில் அன்பைத் தந்திடுவாள் 

தன்னிகரில்லா கனிவைச் சுரந்து - நல்ல 

தாயவளென்று உணர்த்திடுவாள்  (புன்னகை)

 

ஆனந்தம் தான் அவள் மடியினிலே - புது 

அன்புமழை அவள் வடிவினிலே 

ஆரம்பமே அவள் உறவினிலே - என் 

அகிலமே ஆனவள் உருவினிலே   (புன்னகை)

 

தன்னையே உருக்கிடும் தியாகியவள் - என்றும் 

தன்னலம் அறியா யோகியவள் 

தாயெனும் இலக்கணமாய் ஆகியவள்   - வாழ்வின் 

தனிப்பெருங் கவிதையாய் மாறியவள் 

 

- பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment