Wednesday, January 25, 2023

கருப்பு நாய் நம்மைத் தான் கடிக்குமா ?

 


கருப்பு நாய் நம்மைத் தான் கடிக்குமா ?- பாலசாண்டில்யன்

பயணங்கள் எனும் பொழுது பல பேர் முன்கூட்டியே திட்டமிட்டு நல்லதொரு இனிய பயணம் மேற்கொள்கிறார்கள். சிலர் திடீரென கிளம்பினாலும் சௌகரியமான பயணம் செய்கிறார்கள்.
தேவையான சமயம் நாம் திட்டமிடுகிறோம். பயணம் செய்கிறோம். அதில் தான் என்னென்ன சிரமங்கள் ?
அலுவல் நிமித்தம் சென்னையில் இருந்து ஒரு நாள் பயணமாக கும்பகோணம் செல்ல வேண்டும். எட்டு நாட்கள் முன்பு பயணப் பதிவிற்கு முயற்சி. வழக்கமாக செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் செகண்ட் ஏசி எக்கச்சக்க வைட் லிஸ்ட். நிச்சயம் கிடைக்காது. அடுத்த ஆப்ஷன் முதல் நாள் இரவே திருச்செந்தூர் ரயிலில் மாலை 4.05 க்கு கிளம்பி இரவு 10.10 க்கு சென்றடைதல். அந்த ரயிலிலும் நோ டிக்கெட்.
இங்கே தான் கருப்பு நாய் (சனி பகவான் லீலை என்று கூட சொல்லலாம்) நம்மை கடிக்க வருகிறது.
நமது கண்ணில் பட்ட அந்த ஆப்ஷன் டிபிஜே ஸ்பெஷல் ட்ரெயின். மாலை 4.25 அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 11.30 க்கு கும்பகோணம் அடைகிறது. டிக்கெட் போதுமான அளவு இருக்கிறது. ஆனால் டிக்கெட் விலை அதிகம். இரவே ஹோட்டல் ரூம் போட வேண்டும். எல்லாம் கருத்தில் கொண்டு டிக்கெட் போட்டாகி விட்டது.
மதியம் ஒரு மணி அளவில் எனது உடன் பயணிக்கும் மற்றொரு நண்பர் நிபுணர் இணையத்தை பார்த்து "சார் நம்ம வண்டி அகமதாபாத்தில் இருந்து வருகிறது. சுமார் மூன்று மணி நேரம் லேட். இப்போது தான் கடப்பா தாண்டி இருக்கிறது. சென்னை எழும்பூர் மாலை 6.45 க்கு வரலாம் என்றார். அப்படி என்றால் அது கும்பகோணம் நள்ளிரவில் கொள்ளி வாய் பிசாசு போல 1.30 மணிக்கு மேல் தான் போய் சேரும்.
நம்ம வீட்டில் இந்த இன்டர்நெட்டை நம்ப வேண்டாம். நீங்கள் சீக்கிரமே ஸ்டேஷன் போய் விடுங்கள். ட்ரெயின் வரும் போது வரட்டும் என்றனர். அங்கே நண்பர் வீட்டிலும் அப்படியே சொல்ல இருவரும் 4.30 மணிக்கே நடைமேடை 4 க்கு வந்து புறப்பாடு போர்டுக்கு கீழே நல்ல இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்.
புறப்பாடு 5.10 என்றும் எந்த பிளாட்பார்ம் என்று போடவில்லை. மொபைலை பார்ப்பது, புறப்பாடு போர்டை பார்ப்பது என்று இரண்டு மணி நேரங்களை கழித்தோம். ட்ரெயின் ராயபுரத்தில் போட்டுக் கிடப்பதாக மொபைல் (இணையம்) கூறியது. சரி இன்னும் சற்று நேரத்தில் வந்து விடும் என்றால், அது பற்றி காட்டுக்கத்தலாக அலறிக் கொண்டிருந்த அம்மணி எந்த தகவலும் சொல்லவில்லை. இப்போது அறிவிப்பு போர்ட் 6.45 மணி என்று காட்டியது. எங்கள் கடிகாரம் ஏற்கனவே 6.50 காட்டியது.
வந்து அமர்ந்து மூன்று மணி நேரம் ஆகப்போகிறது. எதிர் கடையில் இருந்து அந்த 'படு சுமார்' காபி வாங்கி மிகவும் சிரமப்பட்டு உள்ளே தள்ளினோம். மனமும் உடலும் சோர்வாக இருந்தது. காபி எந்த மாறுதலும் தரவில்லை. இப்போது எங்கள் வண்டி நடைமேடை 5 ல் வரும் என்று போர்ட் அறிவிப்பு வந்து விட்டது. எங்கள் பெட்டிகளை உருட்டிக் கொண்டு படிகள் குறைவாக இருக்கும் அலுமினிய பெயிண்ட் அடித்த படிகளில் ஏறி 5 வந்து சேர்ந்தோம்.
மீண்டும் மொபைலை பார்த்தால் வண்டி இப்போது கோட்டை ஸ்டேஷனில் இருக்கிறது என்று காட்டியது. எங்கள் 2A - A1 எங்கே வருகிறது என்ற விவரமும் மொபைல் காட்டியது. S12 க்கு அடுத்தது என்று சொல்லியது. சரியாக அந்த இடத்தில், அதாவது நடைமேடை 5 ன் முடிவில் நின்றோம். மணி 7.10 (4.25 க்கு புறப்பட்டு இருக்க வேண்டிய ஒன்று) விளக்கொளி காட்டி சப்தத்துடன் நுழைந்தது வண்டி.
எங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் தான். இந்த இடத்தில் தான் நமது பெட்டி நிற்குமா என்று. நிறைய சமயங்களில் நமது உள்ளுணர்வு சரியாக தான் இருக்கும். வண்டி கடக்க ஆரம்பிக்கும் பொழுது நாங்கள் தவறாமல் கவனித்த விஷயம் எங்கள் பெட்டி ஏசி கோச் எஞ்சினில் இருந்து நான்காவது. அந்த வண்டி மிகவும் நீளமான ஒன்று. நாங்கள் உடனே பெட்டிகளை உருட்டி நடைமேடை 6க்கு அருகில் ஓட்டமும் நடையுமாக செல்ல ஆரம்பித்தோம்.
மூச்சு வாங்குகிறது. அந்த 6ஆம் நடைமேடையில் அடுத்த வண்டிக்கு காத்திருப்போர் இடையூறு செய்தபடி நின்று இருந்தனர். அதனை சமாளித்து நாங்கள் பிடி உஷாவாக மாறி ஓடிக் கொண்டு இருக்கும் அந்த நேரம் திடீர் மழை தொடங்கியது. நடுநடுவே நடைமேடையில் கூரையை காணவில்லை எனும் பொழுது நாங்கள் மழையில் நனைந்த படி ஓடினோம். இப்படி மூன்று இடங்கள் தாண்டி (ஏழு கடல் ஏழு மலை என்பது போல) ஒரு வழியாக எங்கள் பெட்டிக்குள் ஏறினோம். குளிர் காலத்திலும் உள்ளே நல்ல சூடு.
எங்கள் இருக்கையில் அமர்ந்து சற்று நேரத்தில் வண்டி புறப்பட்டது. டிடி வந்து பெயர் மட்டும் கேட்டு டிக் செய்து கொண்டார். "சார் இந்த பில்லோ பிளாங்கெட் இதெல்லாம் கிடைக்குமா". உடனே வந்தது பதில் "இது ஸ்பெஷல் ட்ரெயின், அதெல்லாம் கிடையாது."
நாங்கள் கொண்டு போன இரவு உணவை சாப்பிட்டு சற்று நேரம் பேசி இருந்து விட்டு 9 மணிக்கே கட்டாந்தரையில் படுப்பது போல படுத்தோம். ஏசி ஒடத் தொடங்கியது. கூடவே எங்களுக்கு குளிரும். அப்படியே சுருண்டு கொண்டோம். நண்பர் எத்தனை மணிக்கு கும்பகோணம் போகும் என்று மீண்டும் கூகுளாரை கேட்டார். அவர் இரவு 1.30 என்று சொன்னது. மீண்டும் அந்த பக்கம் ரொம்பவும் பலவீனமாக நடந்து போன டிடி சாரிடம் கேட்டோம். "அதெல்லாம் சொல்ல முடியாது சார். இது ஸ்பெஷல் ட்ரெயின். மற்ற வண்டிகளுக்கு முதலில் வழிவிட்டு இது பிறகு தான் செல்லும்" என்றார்.
"ஓஹோ அந்த அளவிற்கு ஸ்பெஷல் போலும்" என்றார் எனது நண்பர். ஏற்கனவே நான்கைந்து மணி நேரமாக அடக்கி வைத்த 'ஒன்றை' ரிலீஸ் செய்ய டாய்லெட் கதவை திறந்தேன். நேற்று யாரோ போன 'இரண்டுக்கு' இன்னும் நீர் வார்க்காமல் நல்ல மணம் வீசியது. எதிர் கதவை திறந்தேன். பரவாயில்லை. கொஞ்சம் அதிகமாக அழுத்திய பொழுது தண்ணீர் வந்தது. ஸ்பெஷல் வண்டி ஆயிற்றே.
இரவு 1 மணிக்கு சிதம்பரம் தாண்டி வைத்தீஸ்வரன் கோவில் ஸ்டேஷனில் வண்டியை ஒரு அரை மணி நேரம் போட்டான். தூக்கம் போனது. அடுத்து மயிலாடுதுறை நிறுத்தம். அங்கே வஞ்சனை காட்டாமல் மீண்டும் அரை மணி நேரம். இந்த ஓய்விற்கு பிறகு கும்பகோணம் வந்தது. மணி நள்ளிரவு 2.35.
வழக்கமான உழவன் எக்ஸ்பிரஸ் என்றால் இறங்கும் பெட்டிக்கு எதிரிலேயே நுழைவு வாயில் இருக்கும். இவர் தான் ஸ்பெஷல் வண்டி அல்லவா?
எழும்பூரில் எத்தனை தூரம் பெட்டியை நோக்கி ஒடினோமோ அத்தனை தூரம் பெட்டி உருட்டி நடந்தால் தான் நுழைவு வாயில் வரும். அந்த நள்ளிரவில் எங்களைப் போல சிலர் கம்பெனி தர நுழைவு வாயில் வந்து சேர்ந்தோம். எனது ஆவல் மிகுதியால் எம்ஐ பிட் ஆப் மொபைலில் பார்த்தேன். 4 ஹார்ட் பாயிண்ட். கிட்டத்தட்ட 700 மீட்டர். 6.5 நிமிட நடை.
வெளியே 40க்கும் மேற்பட்ட நபர்கள் வண்டியில் வந்திருந்தார்கள். அங்கே நான்கு அல்லது ஐந்து ஆட்டோக்கள் இருந்தன. எங்களுக்கு முன்னர் அவை கண் முன்னே பயணிகளை ஏற்றுக் கொண்டு இடத்தை காலி செய்தன. கடைசி ஆட்டோ என்னை கடக்கும் போது என்னை அறியாமல் கத்தினேன்," அண்ணே இன்னும் ஒரு ஐந்தாறு ஆட்டோக்கள் அனுப்புங்கள்". அவர் என்ன செய்தாரோ தெரியவில்லை. நான் கேட்டது நடந்தது. ஐந்து ஆட்டோக்கள் வந்தன. ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை.
நாங்கள் 'ராயாஸ் கிராண்ட்' (1.5 கிமி தூரம்) செல்ல வேண்டும். பெட்டி உருட்டி நடந்து செல்ல மனதிலும் உடம்பிலும் தெம்பு இல்லை. கண்ணெதிரில் மேலும் இரண்டு மஹானுபவர்கள் ஆட்டோவுடன் வந்தார்கள். ஒன்றில் நாங்கள் ஏறி அவர் கேட்ட கூலி கொடுத்து ஹோட்டல் வாசலில் இறங்கினோம்.
சப்தநாடி அடங்கி கிடந்தது ராயாஸ். தட்டி கத்தி கூப்பிட்டு கதவை திறக்க செய்து, உள்ளே உறங்கும் ரிசெப்ஷன் நண்பரை எழுப்பி ஏற்கனவே புக் ஆகி இருந்த விஷயத்தை மொபைலில் காட்டி ரூம் சாவி பெற்றோம். உடன் வந்த சிப்பந்தி உருட்டு பெட்டி வாங்கிக் கொண்டார். ரூமில் செட்டில் ஆகி தூங்கப் போன பொழுது அதிகாலை 3.05 இருக்கும்.
நான் எச் ஆர்க்கு "குட் மார்னிங்" மெசேஜ் போட்டு விட்டு காலை பயிற்சி 9.30 க்கு பதில் 10.00 என்று மாற்றுங்கள் ப்ளீஸ் என்றும் சொன்னேன். பாவம் அவரும் தூங்கவில்லை போலும். 'நோ ப்ராப்ளம்' என்று பதில் போட்டார்.
மாலை 6.15க்கு முடிக்க வேண்டிய பயிற்சி 7 மணி வரை சென்றது. திரும்பும் ரயில் மறுநாள் அதிகாலை 3.50க்கு மாம்பலத்தில் இறக்கி விட்டார். வீடு வந்து மீண்டும் சிரமப்பட்டு தூக்கம் வரவழைத்து 8.45க்கு எழுந்தேன்.
இது போல கருப்பு நாய் உங்களையும் கடித்து இருக்கும்....பயணங்களில் இது போன்ற சிரமங்களும் தானே அடங்கும்....

No comments:

Post a Comment