Sunday, September 22, 2013

Love and affection - yesterday and today - a poetic thought

அன்பு அன்றும் இன்றும்
- டாக்டர் பாலசாண்டில்யன்

இதயத்திலிருந்து கண்களிலிருந்து சிரித்தார்கள் நேற்று
இதழிலிருந்து பல்லை மட்டும் காட்டி சிரிக்கிறார்கள் இன்று
அவர்கள் கண்கள் என் நிழலுக்குப் பின் எதையோ தேடுகிறது !
இதயபூர்வமான நெருக்கத்தோடு கை குலுக்கினார்கள் நேற்று
இதமின்றி மனமின்றி இறுக்கத்தோடு ...இன்று ..!
அவர்களின் மற்றொரு கை என் சட்டைப்பையைத் துழாவுகிறது !
தங்கள் இல்லம் போல கருதுங்கள் அடிக்கடி வாருங்கள்
என்றார்கள் நேற்று ..
முகத்தில் கதவை அறைகிறார்கள் ஏனோ இன்று ..!
செல்லமே ! விளைவு என்ன தெரியுமா ?
பல முகங்கள் அணிய நானும் கற்று விட்டேன் ...உடையைப் போல ...!
இல்ல முகம் ...இல்லை முகம்...
அலுவலக முகம்.. பணி முகம் ..
தெரு முகம்...திருமுகம் ...
வரவேற்கும் செயற்கை முகம்
தேநீர் கோப்பை முகம்... வானவில்லாய் வளைந்த முகம்
தொலைக்காட்சியில் தொலைபேசியில் தொலைந்த முகம்
சுவர் நோக்கும் சிரிப்பிழந்த வெற்று முகம்
எங்கே என் பழைய முகம் ?
சிலையாய் ஓவியமாய் போலிப் புன்னகையோடு நான் ! அய்யோ ..!
பல்லை மட்டும் காட்டி சிரிக்கப் பழகி விட்டேன் ...கை குலுக்கவும் தான்..
மனப்பூர்வமாய் இன்றி மானசீகமாய் ..!
சந்திப்போம் மீண்டும் என்கிறேன் மனதில் வெறுப்போடு
சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறேன் மனதில் குறைகளோடு
அலுத்துப் போன அளவலாவலுக்குப் பின்
தங்களுடன் பேசியதில் நெகிழ்ந்து போனேன் என
நெஞ்சுருகி சொல்லப் பழகினேன் ..!
என்னை நம்பு செல்லமே ! முன்பு போல் நானில்லை
சகஜமாய் இருக்கத்தான் விழைகிறேன் ...சட்டென குழைகிறேன் ..!
போலியாக தற்போது கற்றவற்றை
தற்காலிகமாக நினைவிலிருந்து கூட அகற்றிட நினைக்கிறேன் ..!
மனம் விட்டு சிரிக்க மலை போல் ஆசைப்படுகிறேன்
கண்ணாடி முன்பு பாம்பாய் பல் காட்டுவதை வெறுக்கிறேன் ..!
உன் வயதில் நானிருக்கையில்
எப்படி விஷமின்றி விஷமமின்றி
சிரித்தேன் பழகினேன் என்று
நினைத்துப் பார்த்தாலும் நினைவு கொள்ள இயலவில்லை !
வஞ்சம் இன்றி வாஞ்சையோடு
பஞ்சம் இன்றி பாசத்தோடு
நெஞ்சம் நிறைந்த அன்போடு
கர்வமின்றி காயமின்றி
ஆர்வத்துடன் பயமின்றி
கனிவுடன் கடமைக்காக அன்றி
இயல்பாக இயற்கையாக சிரித்துப் பழக
எனக்கு நீ சொல்லித்தா என் செல்லமே !
இளங்கன்று பயம் அறியாது ..! இருப்பினும்
இளங்கன்று பாசம் அறியும் ..!

No comments:

Post a Comment