Thursday, April 3, 2014

Be aware of repeated inputs through our 5 sensory organs

காய் கவர்ந்தற்று ...! – Dr. Balasandilyan
எல்லோரும் செய்வதை செய்யாமால், எல்லோரும் கேட்பதைக் கேட்காமல் ஒரு சாதாரண மனிதன் (ஆம் ஆத்மி) இருக்க முடியுமா ?

முடியும். அப்போது தான் நாம் வித்தியாசப் படுகிறோம். நம்மை உலகோர் கவனிக்கிறார்கள். இது தான் உண்மை.

ஊர் விட்டு ஊர் வந்து (திருச்செந்தூரிலிருந்து சென்னை) வியாபார நிமித்தம் இடம் பெயர்ந்து வாழும் பலரில் இவரும் ஒருவர்.

பொதுவாக நகரம் வருவோர் புதிய பழக்கங்கள் ஏற்படுத்திக் கொள்வது இயல்பு.

45 வயது ஆன ஜெயராம் என்கிற இந்த இளைஞருக்கும் ஒரு புதிய பழக்கம் தொற்றிக் கொண்டது. இவர் காய் கறி கடை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். கூடவே இளநீர் வியாபாரம் உண்டு.

அதிகாலை தனது இரு சக்கர ஊர்தியில் போய் மொத்த அங்காடியில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து அவற்றை மிக அழகாக பரப்பி வைத்து கஸ்டமர் மனம் உவந்து வாங்கும் வகையில் வைப்பதில் இவர் கில்லாடி எனலாம்.

அசிஸ்ட்டண்ட் யாரும் கிடையாது. தானே முழு நாள் வியாபாரத்தையும் புன்னகை முகத்துடன் கவனிப்பார். எப்போதும் சிரித்த முகம். அமைதியான வாழ்க்கை. அனாவசிய பேச்சு கிடையாது.

இதற்கு முக்கிய காரணம் உண்டு. அது தான் இவர் கடையில் பல மணி நேரம் ஒலித்துக் கொண்டு இருக்கும் ஆல் இண்டியா ரேடியோ. குறிப்பாக அதிலும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள். அடிப்படையில் சங்கீத ஞானம் இல்லாதவர்கள் இப்படிப்பட்ட இசை தனை தவிர்த்து திரைப்பாடல்கள் அல்லது செய்திகள் கேட்பர். போவோர் வருவோரிடம் அரசியல் பேசுவர்.

ஆனால் இவரது வாடிக்கையாளராகிய என்னிடம் இவர் பேசுவது எல்லாம் இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் தான்.
இவருக்கு மிகவும் பிடித்தது நாதஸ்வரம், புல்லாங்குழல் இசை. பிடித்த மற்ற இசைக் கலைஞர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், விஜய் சிவா.

இவர் மனதில் பதிந்து நிற்கும் பாடல்களின் முதல் வரிகள் - சின்னஞ்சிறு கிளியே, எப்போ வருவாரோ போன்ற தமிழ் பாடல் வரிகளே.

நான் இவர் கடைக்கு அடிக்கடி போவது உண்டு. நான் அப்போதெல்லாம் ஆச்சரியத்துடன் கண்டு வியந்தது இவர் கேட்கும் இசை நிகழ்ச்சிகள் தான்.

பேச்சு கொடுத்த போது ஜெயராமன் சொன்னது இது தான்.
மனதை வருடும் நல்ல இசை கேட்பது எனக்கு பழக்கமாகி விட்ட ஒன்று. இப்போது வரும் எந்த பாடலும் கேட்கும் படி இல்லை. எனக்கு இசை அறிவு இல்லாவிடிலும் என் மனதை அமைதிப் படுத்துவது கர்நாடக இசை மட்டுமே. எனக்கு வியாதி, கவலை, டென்ஷன் எதுவும் கிடையாது. கோபம் வராது. மனதில் எப்போதும் ஒரு நிம்மதி. எல்லாமே நான் கேட்கும் இந்த இசையினால் தான். என்ன தெளிவு ...என்ன ஆச்சரியம் ?

அசோக் நகர் 7 வது அவென்யுவில் KVB வங்கி எதிரில் இருக்கும் இவர் கடையில் போக்குவரத்து அதிகம். வாங்குவோர் வந்தால் வியாபாரம். யாரும் வரவில்லை என்றால் இசையொலி. வருவோர்க்கு காய் கவரும். இவருக்கோ காதில் நுழையும் இசை கவரும். இப்படியும் சில அலாதியான நல்ல மனிதர்கள்....காண்பது அரிது..!

நாம் கேட்பது, காண்பது, சுவைப்பது, தொடுவது, நுகர்வது - 5 அவயங்களின் செயல் தான் நமது எண்ணம், செயல், நடத்தை இவற்றிற்கு காரணம். இவையே நம் சுக துக்கம் மற்றும் வெற்றி தோல்வி இவற்றை நிர்ணயிக்கிறது. சாய்ஸ் நமதே...!

No comments:

Post a Comment