பிக் பாஸ் பாடங்கள் - டாக்டர் பாலசாண்டில்யன்
(மனநல ஆலோசகர் - கல்வியாளர் - பயிற்றுனர்)
(மனநல ஆலோசகர் - கல்வியாளர் - பயிற்றுனர்)
சற்றும் யோசிக்க முடியவில்லை. தொலைபேசி, தொலைக்காட்சி, மொபைல், இன்டர்நெட், பிடித்த உணவு, பிடித்த நபர் எதுவுமே கிடையாது. நினைத்த நேரத்தில் உறங்க முடியாது. நினைத்ததை நினைத்தவாறு பேச முடியாது, ஏனெனில் எல்லா மூலையிலும் எப்போதும் கண்காணிக்கும் கேமெராக்கள்.
மணி வாரியாக நமது நடத்தை, பேச்சு, நடை, உடை எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பர். எதை சேனலில் காட்டுவர், எதை காட்ட மாட்டார், எதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும், மக்கள் என்ன நினைப்பர், என்ற சிக்கல் வேறு.
வாரம் இரு முறை வந்து பஞ்சாயத்து - அது ஆண்டவன் கட்டளை.. மக்களுக்கு புரியாத அதே சமயம் சேனலுக்கு மட்டும் தெரிந்த சில பல ட்விஸ்ட் அண்ட் டேர்ன்ஸ்.
நாம் இருப்போமா? யோசிக்க முடியவில்லை. பணம் கிடைக்கும். புகழ் கிடைக்கும். பெயர் கிடைக்கும். அதுவே மாறிக் கூட நடக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே இருந்த கொஞ்ச நெஞ்ச பெயரும் ரிப்பேர் ஆகிடும் வாய்ப்பும் உண்டு. ஐயோ நினைத்தாலே தலை சுற்றுகிறதே.
யார் நம்மோடு இருப்பார்கள் என்ற சாய்ஸ் நமது கிடையாது.
இப்போது கடைசி வாரங்களில் டாஸ்க் என்று சொல்லப்படும் செய்ய வேண்டிய பணிகள் மிகவும் கடினமாக மாறிக் கொண்டு வருகின்றன. உதாரணத்திற்கு, தூக்கி எறியப்படும் துணி மூட்டைகளை ஓடி ஓடி பிடிக்க வேண்டும். அவற்றை இணைத்து தைக்க வேண்டும். சில மூத்த நபர்களுக்கு ஊசி கோர்க்க முடியவில்லை. சிலருக்கு தைக்கத் தெரியவில்லை. ஏற்கனவே ஆட, பாட, நீரில் குதிக்க, சைக்கிள் ஓட்ட, சமைக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, பாத்ரூம் கழுவ, மல்யுத்தம் செய்ய, கபடி விளையாட, ஒரு சின்னக் காருக்குள் ஒன்றாய் விடிய விடிய விளையாட, திருட, கொலை செய்ய, பொய் சொல்ல, பொய் மறைக்க, புறம் பேச, அகம் உரைக்க, என்று எல்லாம் தெரிந்தவர்கள் மட்டுமே பிழைக்க முடியும் என்பதை பார்த்து விட்டோம்.
இன்னும் போகப் போக எப்படி இருக்குமோ தெரியவில்லை. இதில் கூடவே இருந்து குழி பறிப்பவர்கள், ஒட்டியும் ஒட்டாது இருப்பவர்கள், ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்திலே கண் எனும் சிலர், ஏற்கனவே வெளியே அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வந்து தமது விட்ட குறை தொட்ட குறை என்று பழி வாங்கி விட்டு திரும்பியாயிற்று. வீட்டில் உள்ளவர்களும் நெருக்கமானவர்களும் வந்து இருக்கும் இடத்தை பார்த்த பொழுதும் 'பிரீஸ்' Freeze விளையாட்டு மூலம் மனம் திறந்து பேச முடியவில்லை ஒரு சிலர் தவிர. சில காதல் காட்சிகள், சில கண்ணீர் காட்சிகள், சில பாசக் காட்சிகள் என்று எல்லாமே பார்க்க முடிந்தது.
இப்போது ஏற்கனவே இருந்த பெயர்கள் மாறி கெட்ட வார்த்தை, ட்ரிகர், கட்டிப்பிடி, மருத்துவ முத்தம், போலி, சுயநலவாதி, பூஞ்சை, குழந்தை, பெரிசு, மேக் அப் காரி, என்று பலரின் அடைமொழிகள் ஆகி விட்ட நிலையில், வெளியே வரும் பொழுது முந்தைய இமேஜ் மாறித் தான் இருக்கும். பெத்தேன் பிழைத்தேன் என்று ஓடியவர் உண்மையில் ஜெயிக்காவிடினும் பிழைத்துக் கொண்டார் எனலாம்.
இப்போது உண்மை சுபாவம் மாறி எப்படியேனும் ஒருவரை அடித்து தான் ஜெயிக்க வேண்டும் என்ற நிலையில் யார் இயல்பை மாற்றிக் கொள்ளாது அதே சமயம் கொடுக்கப்படும் வேலைகளை செவ்வனே செய்து வெற்றியாளராக வெளியே வருவார் என்று பார்க்க இன்னும் ஓரிரண்டு வாரங்களே உள்ளன.
உண்மையில் நமது வாழ்க்கையில் 100 நாளா வாழப் போகிறோம், இதோ முடிந்து விட்டது, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம் என்றிட...! எவ்வளவு அவமானங்கள், ஏமாற்றங்கள், வெற்றிகள், தோல்விகள், பாராட்டுகள், ஏச்சு பேச்சுகள், உடனிருந்து முதுகு குத்தும் கோமாளிகளின் சூது, செய்ய முடியாத செயல்கள், பேசத் தெரியாத நிலை, உடல் மற்றும் மனநிலையை சீராக வைத்துக் கொள்ளாத பொழுது ஏற்படும் வலிகள் என்று என்னவெல்லாம் சந்திக்க வேண்டி உள்ளது இயல்பு வாழ்க்கையில்..? அதுவும் பிக் பாஸ் வீடு போல டிவி, இன்டர்நெட், புத்தகம், பிடித்தவர் இல்லை, பிடித்த உணவு இல்லை, நேர காலம் தெரியவில்லை என்று இருந்தால் நம்மில் பலர் என்றோ ஓடியிருப்போம் வீட்டை விட்டு.
இதில் எங்கு பார்த்தாலும் கண்காணிப்பு கேமரா, கேள்வி கேட்க ஒரு ஆண்டவர், ஒட்டு போட மக்கள், அதைப் பற்றி தினம் பேசும் வெளியுலக மக்கள், இவை எல்லாம் நமது வாழ்வில் இல்லை. இருந்தால் என்ன ஆகும், யோசித்தால் புரியும்.
பிறருக்கு பெயர் வைக்கும் நாம், நமக்கு என்ன பெயர், நமது பலம் பலவீனம் என்ன, எது தெரியும் தெரியாது, உணர்ச்சிகளை கையாள்வது சரியா என்று நம்மை பற்றிய சுய ஆய்வு செய்து பார்த்தால், பிக் பாஸ் வீடு நமக்கு பல பாடங்கள் 100 நாட்களில் கற்றுத் தந்திருக்கும். கற்ற பாடங்களை நாம் கடைபிடித்தால் இழந்த தோல்விகளை வெற்றியாக மாற்ற முடியும். இழந்த உறவுகளை திரும்பப் பெற முடியும். இழந்த வாய்ப்புகளை மீண்டும் கைப்பற்ற முடியும். யோசிப்போமோ ?
பிக் பாஸ் என்னைப் போன்ற மனநல ஆலோசகருக்கு மிக முக்கிய பாடம். வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி அல்ல. நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், பிறர் என்ன நினைக்கிறார், என்ன மாற்றங்கள் நம்மை மேம்படுத்தும், நம்மை நாமே வேற்று நபர் போல குறும்படம் பார்த்தால் புரியும் எத்தகைய தவறான பேச்சு நடவடிக்கை செய்து உள்ளோம் என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.
ஒவ்வொரு நடவடிக்கையும் வாழ்வில் பிறரை பார்த்துக் கற்றுக் கொண்டது தான் என்பர். (Every behavior is a learned behavior) அது போல எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளும் வாய்ப்பே நமது வாழ்க்கை. வெளியே அனுப்பப்பட்ட ஒரு சிலர் மீண்டும் உள்ளே வந்ததை நாம் எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா? ஒரு வேளை இந்த உலகை விட்டுப் போய் விட்டால், நாம் தவறிய இடங்களில் நம்மை சரி செய்து கொண்டு மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று உணரலாம். உண்மையில் அது இறப்பு என்று பொருள் கொள்ள வேண்டாம். சில விபத்துகள், சில நோய்கள் இவற்றில் இருந்து நாம் பிழைத்து மீளும் பொழுது நம்மை மேலும் செம்மைப் படுத்திக் கொள்ளுதலே சிறப்பு.
அதே போல ஒரு குடும்ப தலைவராக, அல்லது நிறுவனத் தலைவராக இருந்தால் தவறிடும் நபர்களை ஆண்டவர் போல சில நல்ல கேள்விகள் கேட்டு )by asking some great questions, and having a look at our own words and acts like a video with dissociation) குறும்படம் காட்டுவது போல சில நினைவுகள் பேசி சரிசெய்யும் சாதுரியம் கற்க வேண்டும். அவர் வாயாலேயே தமது தவறுகளை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் சிறு சிறு மாற்றங்கள் கொணர்ந்து இணக்கமான மனிதர்களாக அவர்களை மாற்றி நமது வாழ்வையும் சரி செய்து கொள்ள வேண்டும். இன்னும் கூட உங்கள் மனதில் தோன்றி இருக்கலாம். ஆற அமர யோசிப்போம். வெற்றியை நமது சொந்த, குடும்ப, பணி மற்றும் சமூக வாழ்வில் சுவாசிப்போம். நம்மை நாம் முதலில் நேசிப்போம். (Let's all start loving ourselves, forget and forgive wherever possible, learn from our own mistakes, understand and make strategies to tackle difficult people, manage our emotion etc.would certainly help) This applies to me as well. This is not my advice. This is only an experiential sharing.
No comments:
Post a Comment