Saturday, December 12, 2015

Chennai Rains - Final part

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் - நிறைவுப் பகுதி - (5)
டாக்டர் பாலசாண்டில்யன் 

அரசுக்கு என்னென்ன சவால்கள் என்று ஒரு எழுத்தாளனாக, பயிற்சியாளனாக, மன நல ஆலோசகராக, பிசினஸ் ஆலோசகராக, சமூக ஆர்வலராக யோசித்துப் பார்த்தேன். 

இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மத்திய அரசு கேட்ட அளவு நிவாரணத் தொகை வழங்கவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மாற்று வசிக்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது, குப்பை கூளங்கள் இன்னும் பல வீதிகளில் அள்ளப் படவில்லை. 

தாழ்வுப் பகுதி வசிக்கும் மக்களை அகற்ற என்ன செய்யலாம்? அவர்களை எங்கே கொண்டு பத்திரமாக வைக்கலாம்? எவ்வளவு சீக்கிரம் அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கலாம்? இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை எவ்வளவு விரைவில் திரும்பக் கொண்டு வரலாம்? 

சிக்கல் இல்லாமல் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கலாம்? இழந்த சான்றிதழ்கள், மற்றும் ஆவணங்கள் மக்கள் பெற்றிட எப்படி பணியை முடுக்கி விடலாம்? வங்கி கடன் வழங்க மற்றும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேலைகளை எப்படி துரிதப் படுத்தலாம் ? உடைந்து போன, சிதைந்து போன சாலைகளை எவ்வளவு சீக்கிரம் சரி செய்யலாம்? எந்த முக சுளிப்பும், புகாரும் இல்லாமல் மக்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை போன்றவை எப்படி வழங்கலாம்? அவதூறு பேசுகிறவர்களை எப்படி சமாளிக்கலாம்? 

மீண்டும் மழை பெய்தால் எப்படி முன் ஜாக்கிரதையாக இருக்கலாம்? 

தள்ளிப் போன பள்ளி, கல்லூரி பரிட்சைகளை எப்படி செவ்வனே நடத்தலாம்? இழந்த உற்பத்தி சேதங்களுக்கு எப்படி உழைத்து மீளலாம்? தடை இல்லா மின்சாரம் வழங்க, பெட்ரோல் காஸ் மக்கள் பெற எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு எப்படி கவுன்செலிங் மூலம் ஆற்றுப்படுத்தலாம்? 

நனைந்து போன அரசு ஆவணங்களை எப்படி மீட்கலாம்? விரிசல் விட்டிருக்கும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இவற்றை எப்படி சீர் செய்யலாம்? 

ஏற்கனவே பெற்றிருக்கும் நிதி ஆதாரங்களை எப்படித் திட்டமிட்டு செலவு செய்யலாம்? இன்னும் எவ்வளவு நஷ்ட ஈடு மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும்? 

எல்லா அணைக்கட்டுகளின் நிலை என்ன? கால்வாய் நிலை எப்படி உள்ளது? விவசாயிகளின் இழப்பு எவ்வளவு? எவ்வளவு பயிர் நாசம்? 

முறையின்றி கட்ட்டப்பட்டுள்ள வீடுகளை எப்படி முறைப் படுத்தலாம்? ஏரி, குளங்களில் பிளாட் போட்டுள்ள நிறுவனங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்? 

மருத்துவ ரீதியாக முன் எச்செரிக்கை நடவடிக்கை என்னென்ன செய்ய வேண்டும்? இந்த பேரிடரில் எந்தெந்த இடங்கள் பாதிக்கப் பட்டன? அடுத்து இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதனை எப்படி எதிர் கொள்ளலாம்? பிளாஸ்டிக் மற்றும் இயற்கை மாசு இவற்றை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வரலாம்? மக்கள் நம்பிக்கையோடு மீண்டு வந்து தமது வாழ்வை எப்படி எதிர் கொள்ளச் செய்யலாம்? இந்த இடர் சமயத்தில் ஏற்பட்ட மத நல்லிக்கணத்தை எப்படித் தொடரலாம்? நிதி அளித்து உதவிய தனி நபர்கள், நிறுவனங்கள், வேற்று மாநில அரசுகள் அவர்களுக்கு எப்படி நன்றி செலுத்தலாம்? 

பேரிடர் சமயத்தில் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் ஏற்பாடு செய்வது, இளைய சமூகத்திற்கு மழை மற்றும் இயற்கை குறித்த விஷயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த ஆவன செய்தல், வலைத்தளம், மொபைல் இவை தாண்டிய மனித நேயம் கொண்ட வாழ்வை எப்படி வருங்கால சந்ததியர் வாழ வேண்டும் என்பதை எப்படி பள்ளிக் கூடங்களிலேயே எடுத்துச் சொல்லலாம் ? 

இப்படி இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இந்த ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது. நாம் பெற்றதை விட இழந்தது அதிகம் என்றால் மிகை ஆகாது. நிறைய முக்கியப் பிரமுகர்கள், கலைஞர்கள், இந்த ஆண்டு இயற்கை எய்தி இருக்கிறார்கள். வரும் ஆண்டு நல்லதாக அமைய, புத்தாண்டு மற்றும் பொங்கலை மக்கள் இன்முகத்தோடு எதிர்கொள்ள கூட்டுப் பிரார்த்தனைகள் நிறைய நடைபெற வேண்டும். எல்லோரும் இந்த இழப்பிலிருந்து மீண்டு புதியதொரு நல்ல வாழ்வினை ஏற்படுத்திக் கொள்ள அரசு, சமூகம், ஊடகம், நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். 

No comments:

Post a Comment