மெதுவாக உன் மரணம் உறுதி
- டாக்டர் பாலசாண்டில்யன்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
பயணங்கள் செய்து பழகாவிடின்
புத்தகங்கள் படித்து மகிழாவிடின்
வாழ்வின் புதிய சத்தங்கள் கேட்காவிடின்
உன்னையே புரிந்து பாராட்டாவிடின்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
உன் சுயமரியாதை உணராவிடின்
பிறர் உதவி ஒரு போதும் ஏற்காவிடின்
உனது பழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடின்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
நடந்த அதே பாதையில் தொடர்ந்து நடப்பின்
உனது நடைமுறைகளை மாற்றாவிடின்
புதிய வண்ணங்களில் ஆடை அனியாவிடின்
புதியவர்களிடம் புன்னகைத்து பேசாவிடின்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
உனது வேட்கையை சற்றும் உணராவிடின்
வேட்கை தாகத்தின் உணர்வுகளை அறியாவிடின்
உணர்வுகள் உன் கண்ணில் நீர் கொணராவிடின்
உன் இதயத் துடிப்பு சிறிதும் அதிகமாகாவிடின்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
கொஞ்சம் சாகசங்கள் வாழ்வில் பழகாவிடின்
உனது கனவினை வெறியுடன் துரத்தாவிடின்
ஒரு முறையேனும் உலகோரின்
தொடர்பை துண்டிக்க அனுமதியாவிடின்
உன் வாழ்வை விரும்பாவிடின்
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
மெதுவாக உன் மரணம் உறுதி ...!!
No comments:
Post a Comment