மதிப்பெண் முறையைத்
தாண்டிய
கல்வி
- டாக்டர் பாலசாண்டில்யன்
நிகழும்
பல சம்பவங்களுக்கு நமது கல்வி முறையை
பலரும் குற்றம் சொல்வதைக் காண்கிறோம்.
ரவீந்திரநாத் தாகூர் கூட நீண்ட
கட்டுரைகள் எழுதியதுண்டு.
ஒரு சில விஷயங்கள் மாறி
இருக்கிறது. விளைவு ஐஐடி, ஐஐஎம்,
சட்டக் கல்லூரிகள், சிறப்புக் கல்வி நிலையங்கள் உருவாகி
உள்ளன. இருப்பினும் 90 சதவீதம் மதிப்பெண் தாண்டிய
மாணவர்களை உருவாக்கும் நோக்கம் தான் இன்றும்
தொடர்கிறது.
அதிக மதிப்பெண் பெறவும், முதன்மை கல்வி நிறுவனங்களில்
அட்மிஷன் பெறவும் தான் இளைஞர்கள்
இன்று கல்வி பயில்கிறார்கள். முன்பொரு
காலத்தில் வங்கியில் பணி பெற, அரசு
உயர் பதவிகள் பெற முயற்சி
எடுத்தது போக இன்று பொறியாளராக,
ஐடி நிறுவனங்களில் நிறைய சம்பளம் பெறும்
நோக்கமாக மாறி இருக்கிறது.
படைப்பாற்றலுடன்
கூடிய கல்வி என்று இல்லாமல்
எலிப் பந்தயத்தில் ஜெயிக்கக் கூடிய ஏட்டுச் சுரைக்காய்
கல்வி தான் இன்னும் தொடர்கிறது.
சமூக அந்தஸ்து பெறவும், பொருளாதார அந்தஸ்து பெறவும் இந்தக் கல்வி
போதுமானது. இதில் போட்டி போட
முடியாத மாணவர்கள் ஓடி ஒளிகிறார்கள், தவறான
முடிவுகளும் எடுக்கிறார்கள்.
இளையவர்கள்
என்றும் கற்பனை சக்தி கொண்டவர்கள்.
பயம் இல்லாதவர்கள். ரிஸ்க் எடுக்க தயார்
மனநிலை கொண்டவர்கள். அதனால் தொழில் முனைவோர்களாக
வரும் தகுதி படைத்தவர்கள். இருப்பினும்
போகப்போக இந்த குணாதிசயங்கள் மாறி
கை கட்டி சேவகம் செய்பவர்களாக
வெளிவருகிறார்கள்.
காரணம்,
தோல்வி தவறு; தோல்வி நல்லது
அல்ல என்று பள்ளிகள் கல்லூரிகள்
சொல்லித் தருவது தான். ஒவ்வொரு
தோல்வியும் வெற்றிக்கான படிகள் என்று நெப்போலின்
ஹில் சொன்னது பள்ளியில் செல்லுபடி
ஆகவில்லை.
தோல்வியை
சந்திப்பது இலக்கை நோக்கி உறுதியோடு
பயணிக்க, தவறுகளில் இருந்து பாடம் கற்க,
தன்னம்பிக்கை வளர உதவும் என்று
ஊக்குவிக்கப்பட்டால், அவர்கள் வெகு சுலபமாக
இலக்கில் இருந்து விலகவோ, இலக்கை
மாற்றிக் கொள்ளவோ மாட்டார்கள்.
திறன் சார்ந்த கல்வி வாழ்நாள்
முழுதும் ஒருவருக்குப் பயன்படும்.
அறிவை விட திறன் சக்தி
வாய்ந்தது. நினைவாற்றல் அதிகம் கொண்டவர்களை விட
திறன் அதிகம் கொண்டவர்கள் போற்றப்படும்
கல்வி முறை என்றும் மிகச்
சிறந்தது. படைப்பாற்றல், சொந்த சிந்தனை, ஆராய்ச்சி,
புதிய கண்டுபிடிப்புகள் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளல் கல்வி ஆகாது.
மாறாக பயன்படுத்தலே...!
புதிய முறைகளில் பாடம் சொல்லிக் கொடுப்பவர்களும்
இன்று வேண்டும். அதிக வருமானம் பெற,
நிறைய ஓய்வு நேரம் பெற,
அழுத்தம் குறைவான பணி ஆசிரியப்
பணி என்ற எண்ணம் மாறி
எதிர்கால சமுகத்தை மாற்றி அமைக்கும், மகத்தான
ஆக்கப்பூர்வ பணி ஆசிரியப் பணி
என்ற மனநிலை வர வேண்டும்.
இணையதள
காலத்தில் அவை சொல்லாத வாழ்வியல்
விஷயங்களை எடுத்துரைக்கும் சூப்பர் ஆசிரியர்கள் நிறைய
அவசியம். அவர்கள் நல்ல தலைவர்களை,
தொழில் அதிபர்களை, உருவாக்கும் செயலில் ஈடுபட வேண்டும்.
புதிய இலக்கு என்பது கண்டுபிடிப்பாளர்கள்,
கலைஞர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் முனைவோர்கள், விளையாட்டு
வீரர்கள், பொருளாதார நிபுணர்கள், தரமான சமூகம் அமைப்பவர்கள் இவர்களை
உருவாக்கும் கல்வி முறையும், அதற்கேற்ற
கல்வி நிலையங்களும், ஆசிரியர்களும் தான் என்பதை புரிந்து
கொள்ளல் வேண்டும்.
அதிக திறன் வாய்ந்த சுமார்
மதிப்பெண் பெறும் மாணவர்கள் பரவாயில்லை;
நினைவாற்றல் மட்டும்
கொண்ட திறனே இல்லாத நல்ல
மாணவர்கள் நாளைய பாரதத்திற்கு பயன்
இல்லை.
சுமார்
முகம், சுமார் உணவு, சுமார்
தேநீர் நமக்குப்
பிடிக்காது, ஆதலால் நல்ல திறன் கொண்டவர்கள் மட்டுமே
நாட்டை நிமிர்த்தி வல்லரசாக ஆக்க முடியும்.. தேர்வு
நன்றாக எழுதத் தெரிந்தவர்கள் மதிப்பெண்
பெறுவரே ஒழிய, வெற்றி வாகை
சூடி வாழ்வில் நன் மதிப்பைப் பெற
முடியாது.
அன்றே இந்தியாவின் நாளந்தாவில் மிகச் சிறந்த படிப்புகள்
இருந்தன. உலகிற்கு உதாரணமாக இருந்தவர்கள் நாம். நமது நாட்டு
அறிவாளிகள் இங்கேயே இருந்து நம்மை
உயர்த்தும் கல்வி
முறை மாற்றமும், சமூக மாற்றமும் வர
வேண்டும். வேலை
தேடும் இளையவர்களை உருவாக்காமல் வேலை தரும் நம்பிக்கை
மிக்க நபர்களை உருவாக்குவது தான்
இன்றைய தேவையும் கடமையும் ஆகும்.
No comments:
Post a Comment