Friday, January 7, 2022

தவிர்க்க முடியா முதுமை - 3

 

தவிர்க்க முடியா முதுமை 

(உணர்வோம் உணர்த்துவோம்)

பகுதி - 3

- பாலசாண்டில்யன் (மனநல ஆலோசகர்)

 

முதியோர்களை பராமரிக்கும் நபர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? இங்கே சொல்லுவது மகன், மகள், மருமகள் அல்லது உறவினர்கள் பற்றி மட்டுமல்ல, வெளியே இருந்து நாம் பணிக்கு அமர்த்துபவர்களையும் சேர்த்துத் தான்

 

அவர்களுக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டும் ?

- பொறுமை, கனிவு, நிதானம், சற்று மருத்துவ அறிவு, சமயோஜிதம், விழிப்புணர்வு என்று பட்டியலிடலாம்.

- அவர்கள் யாரை கவனிக்கிறார்களோ அவர்களின் வயது, அவர்களுக்கு இருக்கும் நோய், எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உணவுகள், அதன் நேரம், பிறகு அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் முதலில் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற விஷயங்கள் தெரிய வேண்டும். குடும்ப மருத்துவரின் தொலைபேசி எண் கையில் வைத்திருக்க வேண்டும்.

- அது பற்றி அந்த பராமரிப்பாளர்களுக்கு தெரிவி, உற்சாகப்படுத்து, ஊக்கப்படுத்து, தேவையான தகவல்கள் பற்றி பகிர வேண்டும்.

 

முதியவர்கள் ஓய்வு எடுக்கும் பொழுது பராமரிப்பாளர்கள் டிவி பெரிதாக வைத்துப் பார்க்க கூடாது. தொலைபேசியில் பெரிதாக பேசக் கூடாது. ஏனெனில் அவர்கள் ஒரு வேளை நம்மை ஏதோ ஒரு காரணத்திற்கு அழைக்கலாம். அவர்கள் தான் நமக்கு முக்கியம் என்று உணர்த்துதல் இங்கே அவசியம். இதெல்லாம் சட்டமல்ல. இருப்பினும் மிகக் குறைவாக எதிர்பார்க்கும் சில விஷயங்கள்

 

பராமரிப்பாளர்களுக்கு தேவையான உதவியை, உடன் இருக்கும் வீட்டு நபர்கள் செய்தல் வேண்டும். அவர்களிடம் மிக அதிகமாக எதிர்பார்ப்பு வைத்தால் அவர்கள் மறுநாள் முதல் பணிக்கு வராமல் போகலாம்

 

முதியவர்கள் சில நேரம் பராமரிப்பாளர்களிடம் தேவையற்ற தகவல்களை பரிமாறுவது உண்டு, அதனால் அவர்களுக்கு ஆபத்து என்பதை உணராமல். குறிப்பாக வீட்டு நபர்கள் யாரோடு பகை, யார் இவர்கள் பணம் சொத்து மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள், எங்கே எல்லாம் இவர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள். இது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.

 

முதியவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் இடையே வயது, மொழி இனம், கலாச்சாரம் சம்பந்தமான இடைவெளி நிறைய இருக்க வாய்ப்பு உண்டு. அந்த முதியவர்கள் நிறைய படித்திருக்கலாம், பெரிய அனுபவசாலியாக இருக்கலாம், உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். அவர்கள் அவற்றை நிச்சயம் தமது பேச்சில் நடத்தையில் கட்டாயம்  பிரதிபலிப்பர். அதனை உணர்ந்து கொள்ளுவது இங்கே அவசியம்

 

அதுபோல, அவர்களுக்கு நினைவாற்றல் சிக்கல் இருக்கலாம், மனச்சிதைவு இருக்கலாம், நிதிச்சிக்கல் இருக்கலாம், காது கேட்பதில் சிக்கல் இருக்கலாம், உணவை தானே எடுத்து சாப்பிட முடியாத பக்கவாத நோய் இருக்கலாம், மன அழுத்தம் அல்லது உயர் ரத்த அழுத்தம், முன்கோபம் இருக்கலாம், மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாத பழமைவாதியாக இருக்கலாம். இவை எல்லாமே பராமரிப்பாளர்களுக்கு சவாலாக இருக்கும்.  

 

பெற்றோர் மற்றும் முதியவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த சட்டம் 2007 ஆம் உருவாக்கப்பட்டதில் இருந்து பிள்ளைகள், மற்றும் வீட்டு நபர்களுக்கு பெரிய தண்டனை கிடைக்கிற அளவுக்கு இன்று நிலை மாறி இருக்கிறது

 

முதியவர்களுக்கு இருப்பது போலவே ஒரு பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் மற்றும்  பராமரிப்பாளர்களும் தமது சமூக அல்லது நிதி நிலைமை காரணமாகத் தான் இந்த பணியில் வந்து இணைகின்றனர். அவர்களுக்கு இருக்கும் பணி நிமித்த சங்கடங்கள் அல்லது சவால்கள் பல : நேரத்திற்கு உணவு கிடைக்காது, போதிய உறக்கம் இருக்காது, அவர்களின் குடும்ப சூழல் காரணமாக கோபம் எரிச்சல் இருக்கலாம். அவர்கள் வீட்டிலும் மனைவிக்கோ, தாயாருக்கோ, குழந்தைக்கோ அல்லது கணவருக்கோ உடல்நிலை சரியில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. அவர்கள் அதன் காரணமாக தமது வேலையில் பல நேரம் அஜாக்கிரதையாக இருப்பர்

 

விரதம் இருக்கும் முதியவர்கள், மருந்து மற்றும் உணவு சாப்பிட பிடிவாதம் செய்யும் முதியவர்கள், மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகும் உறங்காமல் விழித்துக்கொண்டு இருப்பவர்கள், இருட்டைக் கண்டு பயப்படுபவர்கள், அடிக்கடி சிறுநீர் அல்லது மலஜலம் கழிக்கும் நோய் உள்ளவர்கள், ஏதாவது நொறுக்கு தீனி கேட்பவர்கள், எல்லா டிவி நிகழ்ச்சியையும் பார்க்க விரும்புபவர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் போனில் பேச நினைப்பவர்கள், தினத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உடை மாற்ற வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் - யோசித்து பாருங்கள் என்னென்ன சவால்கள் பராமரிப்பாளர்கள் முன்பு இருக்கிறது என்று

 

சில முதியவர்கள் ஓயாது திட்டுவார்கள், சில நேரம் கை நீட்டுவார்கள், இல்லாததும் பொல்லாததும் சொல்லி பராமரிப்பாளர்கள் பற்றி குடும்பத்தாரிடம் குற்றப்பத்திரிகை வாசிப்பவர்கள் உண்டு. அதே போல முதியவர்களை திட்டுகிற, கைநீட்டி அடிக்கிற, பணம் திருடுகிற, கொடுக்கப்படும் உணவில் பாதியை உண்கிற, அழைத்தாலும் கண்டும் காணாமல் புறக்கணித்து சும்மா இருக்கிற  பராமரிப்பாளர்கள் கூட உண்டு. சற்று சிந்திப்போம் இந்த சூழல் எப்படி சிக்கலானது என்று. இங்கே பொறுமையாக நிலைமையை கையாளும் நபர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

 

நிறைய பராமரிப்பாளர்கள் ஆங்கிலம் அறியாதவர்களாக இருப்பர், தவிர, எந்த சமயத்தில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றும் சிலருக்கு தெரியாது. ஆனால், அன்பாக கனிவாக பேசுவர். நோயாளி வாந்தி எடுத்தால் தமது கையில் கூட வாங்கி கொள்ளுவர். அலுக்காமல் சிறுநீர், மலஜலம் துடைத்து சுத்தம் செய்வர். அது மட்டும் போதுமா என்பதே இங்கு கேள்வி..!

 

ஆனால், சிலரோ இயல்பாகவே கோபம் மிகுந்தவர்களாக, பொறுப்பில்லாதவர்களாக, தமது சொந்தக் கவலைகளில் மூழ்கி இருப்பவர்களாக, நோயாளியோடு அல்லது முதியவரோடு நல்ல உறவுமுறை இல்லாதவராக, தானுமே நோயாளியாக இருக்கக்கூடும். சிலர் தானுமே மனக்கவலையில் புதைந்து போய் கவனக்குறைவாக இருப்பதை காண முடிகிறது. இங்கே எதிர்பாராத போது பெரிய ஆபத்து அல்லது குளறுபடி நிகழும் வாய்ப்பு அதிகம்.

 

இவ்வாறு இருப்பவர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் கொன்செலிங் நிச்சயம் தேவைப்படுகிறது. குறிப்பாக முதியவரின் வயது, அவரின் நோயின் தன்மை, அவரது முக்கிய மற்றும் அன்றாடத் தேவை, அவர்கள் மனநிலை மாற்றங்களுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மனப்பக்குவம் இவை எல்லாமே தேவை.

 

பெரும்பாலான சமயங்களில் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்படும் சமயம் அவர்கள் வர வேண்டிய நேரம், சம்பளம், தவிர அவர்களுக்கு இருக்கும் சில உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றியே சொல்லப்படுகிறது. அவர்கள் பராமரித்து சேவை செய்ய வேண்டிய முதியவர்கள் சில நேரம் மனக்கசப்பால் பொருள்களை விட்டு எரிபவர்களாக இருப்பது, மனவளர்ச்சி குறைந்தவர்கள், மனநோய் அல்லது மனச்சோர்வு உடையவர்கள், சில நேரம் கையாள முடியாத சில செயல்களை செய்பவர்கள் என்கிற விவரங்களை குடும்பத்தார் தெரிவிப்பதில்லை

 

இந்தியாவில் 728 முதியோர் இல்லங்கள் இருப்பதாக திருமிகு கூகுள் தெரிவிக்கிறார். அவற்றில் கேரளா 182, தமிழ்நாடு 151, ஆந்திரா 114, கர்நாடகா 91, மகாராஷ்டிரா 114 என்றும் அறிய முடிகிறது

 

பல்வேறு சமூக அமைப்பு மாற்றங்களால், குடும்ப சூழல்களால் இப்படிப்பட்ட முதியோர் இல்லங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. நமது உறவினர்களை கவனிப்பது, ஊதியம் பெற்று ஒருவரைக் கவனிப்பது இவை எல்லாம் தாண்டி எந்த ரத்த பந்தமும் இல்லாத பலருக்கு இதனையே ஒரு சேவையாக செய்து வரும் சேவாலயா முரளிதரன், நியூ லைப் லலிதா, விஸ்ராந்தி பொறுப்பாளர் (முன்பு திருமதி சாவித்திரி வைத்தி), ஆனந்தம் பாகீரதி இவர்களின் சேவையை எப்படி பாராட்டுவது? நிறைய பேர் அங்கே சென்று பணம் கொடுத்து விட்டு வருகிறோம். ஆனால் நித்தம் நித்தம் அங்கே ஏற்படும் புதுப்புது சவால்களை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது. அவர்களுக்கு எல்லாம் பெரிய சல்யூட்

 

முதுமை பற்றி இன்னும் உணருவோம்.

No comments:

Post a Comment