Tuesday, January 4, 2022

தவிர்க்க முடியா முதுமை

 

தவிர்க்க முடியா முதுமை 

(உணர்வோம் உணர்த்துவோம்)

பகுதி - 1

- பாலசாண்டில்யன் (மனநல ஆலோசகர்)

 

முதுமை என்பது ஒரு படிப்படியான தொடர்ச்சியான இயற்கை மாற்றமாகும். இது இளமைப் பருவத்திலேயே தொடங்குகிறது. நடுத்தர வயதின் ஆரம்பத்தில், பல உடல் செயல்பாடுகள் படிப்படியாக குறையத் தொடங்குகின்றன. எந்தவொரு குறிப்பிட்ட வயதிலும் மக்கள் வயதானவர்களாகவோ அல்லது முதியவர்களாகவோ மாற மாட்டார்கள்

 

மனிதர்களில் ஆரோக்கியமான முதுமை மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவை மரபணு மற்றும் மரபணு அல்லாத காரணிகளின் அதிர்ஷ்ட கலவையால் மாற்றியமைக்கப்படுகின்றன. குடும்ப ஆய்வுகள் மனித ஆயுளில் 25% மாறுபாடு மரபணு காரணிகளால் ஏற்படுகின்றன என்பதை நிரூபித்துள்ளன.

 

முதுமை குறித்த முக்கிய பிரச்சனைகள் : உடல் ரீதியான பிரச்சனைகள், அறிவாற்றல் பிரச்சனைகள் (நினைவாற்றல் இதில் அடக்கம்), உணர்ச்சிப் பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள் 

 

பொதுவான முதுமை சிக்கல்கள் : நாள்பட்ட சுகாதார நிலைமைகள், அறிவாற்றல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், உடல் காயம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணர்வு குறைபாடுகள்.

 

முதியவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்று பார்க்கலாமா? முதலில் அன்பு, கனிவு, கருணை, மரியாதை, சொல்பேச்சு கேட்டல், மதித்தல், சரியாக நடத்தப்படுதல், அவர்களுக்கு உரிய உரிமையை தருதல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்

 

முதியவர்களின் உரிமைகள் என்பது மூத்த குடிமக்களுக்கு (அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) கோரப்படும் உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகும். இவை எல்லாம் சரியாக கிடைக்கிறதா என்பதே இன்றைய முக்கிய கேள்வி

 

நா ஆதரவு கொண்ட ஆய்வின் படி, வேகமாக முதுமையடைந்து வரும் உலகில் முதியோர்களின் நல்வாழ்வு குறித்த ஆய்வு ஒன்றில் 91 நாடுகளின் பட்டியலில் இந்தியா 73 ஆவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி இந்தியாவில் கிட்டத்தட்ட 104 மில்லியன் முதியவர்கள் (60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) உள்ளனர். இதில் 53 மில்லியன் பெண்கள் மற்றும் 51 மில்லியன் ஆண்கள். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2026 ஆம் ஆண்டுக்குள் முதியோர்களின் எண்ணிக்கை 173 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே 2030 ஆம் ஆண்டு 194 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது

 

இந்த நிலையில் இந்த முதுமையை எதிர்கொள்ள முதியவர்கள், குடும்பம், சமூகம், அரசாங்கம் என்ன ஏற்பாடுகளை செய்து உள்ளது, அல்லது செய்து வருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி மட்டுமல்ல ஆச்சரியக்குறி

 

70 வயதை தாண்டிய முதியவர்களுக்கு இந்தியாவில் மருத்துவ காப்பீடு கிடையாது, வண்டி ஓட்ட உரிமம் மறுக்கப்படுகிறது, கடன் கட்டும் எம் மறுக்கப்படுகிறது, பணி நியமனம் கிடையாது, அவர்கள் சுயமாக இருக்க வேண்டிய (சார்ந்திருக்கா நிலை) சூழல் ஏற்படுகிறது.

 

ஆனால் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும், அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு வரி உண்டு, இப்படி முதியவர்கள் பல நாடுகளில் கொண்டாடி மகிழும் பல சலுகைகள் இங்கே கிடையாது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

 

முதுமையின் கொடுமை என்ன ? தனிமையில் வாழும் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தோழமை இல்லாமை, உடல்நலக்குறைவு, நடமாட்டம் இன்மை, இவற்றால் படிப்படியான மனச்சோர்வு மற்றும் பிற மனநல கோளாறுகள் ஏற்படுகின்றன

 

இந்திய முதியவர்களில் பெரும்பாலும் விதவைத் திருமணம், விவாகரத்து, அல்லது பிரிவினை காரணமாக பிறரை சார்ந்திருப்பவர்கள். மேலும் முதியவர்கள் பட்டியலில் தனியாக வாழும் ஆண்களை விட பெண்களே மிக அதிகம் என்று ஆய்வு கூறுகிறது

 

இந்தியாவில் முதியோர் நிதி துஷ்பிரயோகம் அதிகம் எனலாம். அதாவது வயதான நபரின் வளங்களை சட்டவிரோதமான, அங்கீகரிக்கப்படாத அல்லது முறையற்ற முறையில் பயன்படுத்துவது ஆகும். முதுமையின் காரணமாக, அவர்கள் நிர்கதி நிலைமை உணர்ந்து இப்படிப்பட்ட ஒன்று நிகழலாம்

 

வாழ்க்கையின் காரணமாக சேர்ந்திருக்கலாம், வயதின் காரணமாக சற்று சோர்ந்திருக்கலாம். ஆனால் ஒரு நாளும் ஒரு போதும் ஒருவரும் பிறரை சார்ந்திருக்கக் கூடாது. ஆனால் உண்மை நிலை அதுவல்ல. சார்ந்திருக்கிற போது ஏற்படுகிற துன்பம் அளப்பரிய ஒன்று. பட்டியலிட்டு சொல்லி விட முடியாது

 

"நடையும் தளர தேகம் ஒடுங்க, நாவது குழற, கண்கள் மங்க என்ன செய்வார் துணை யார் வருவார் ...ஈசன் மலர்ப் பதமே" என்று பாபநாசம் சிவன் அவர்கள் எழுதினார். அது போல அகத்தியர் பாடல் ஒன்றும் உண்டு : "நீடு கபம் கோழை நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது" என்று

 

முதுமை பற்றி இன்னும் உணருவோம்.

No comments:

Post a Comment