Wednesday, January 5, 2022

தவிர்க்க முடியா முதுமை - 2

 தவிர்க்க முடியா முதுமை 

(உணர்வோம் உணர்த்துவோம்)

 

பகுதி - 2

- பாலசாண்டில்யன் (மனநல ஆலோசகர்)

 

வயது என்பது பல உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையது. இதய நோய், முதுமறதி என்று சொல்லப்படும் அல்ஜிமெர், வழக்கமாக 40 வயதிலேயே வந்து பற்றிக் கொள்கிற ரத்த அழுத்தம், நீரிழுவு நோய், பல வகையான புற்று நோய், முதுமை காரணமாக வரும் முட்டி வலி, முதுகு வலி, சிறுநீர் பாதை நோய்த் தொற்று, என்று நீளுகிற பட்டியலை என்ன என்று சொல்ல ?

 

இதைத் தாண்டி கண் மங்குதல், கண்ணில் நீர் வடிதல், காது கேளாமை, பல் வலி அல்லது பல் விழுதல், தவிர தோல் வியாதிகள் என்று இன்னும் பல உண்டு. ஆனால் மக்கள் வயதாகும் பொழுது ஒவ்வொரு வயதான நபரும் அவற்றைப் பெறுவதில்லை. அவர்களின் இளமைக்கால ஒழுக்கம் மற்றும் மரபணு காரணமாக சிலர் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றனர். இருந்தாலும் தனிமை எனும் நோய் மிகவும் பொதுவானது எனலாம்.

 

வயதானவர்களை குடும்பத்தில், பொது இடத்தில், அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில், கடைகளில், எப்படி தவறாக நடத்துகிறார்கள் என்று பார்க்கும் சமயம் நிச்சயம் நமது மனம் நொந்து போகிறது. குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள், அந்நியர்கள், சுகாதார வழங்குநர்கள், கேர் கிவர் என்று சொல்லப்படும் பராமளிப்பாளர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் வயதானவர்களை காயப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதை இன்றைய கால கட்டத்தில் அதிகமாக பார்க்கலாம் "என்ன பெரிசு சும்மா கெட" என்பன போன்ற மனம் புண்படுத்தும் வசனங்களை இன்று ஆங்காங்கே காண்கிறோம்

 

முதியவர்களின் உடல் காயம், அவர்களின் ஆரோக்கியமற்ற அழுக்கு உடம்பு அல்லது உடை, உடைந்த எலும்பு, தீக்காயங்கள், உடல் சத்தின்மை, எடை குறைவு, மன சிதைவு அல்லது மனக்கவலை, விளக்காத பணப் புழக்கங்கள், பணம் காணாது போதல், குடும்பத்தில் விலகி இருத்தல் அல்லது விலக்கி வைக்கப்படுதல் எல்லாமே அவர்கள் நடத்தப்படும் விதம் எனும் துஷ்பிரயோகம் அல்லது உதாசீனம் வகையை சேரும்

 

தவிர, முதியோரின் விடமுடியாத தீய பழக்கங்கள் புகையிலை, பீடி, சிகரெட், மது இவற்றால் அவர்கள் பெரும் ஆபத்தை அவமரியாதையை சந்திக்கிறார்கள்

 

போதிய வருமானம் இன்மை, உதவித்தொகை இல்லாமை, உதவிக்கு யாரும் இல்லாமை, இருந்தும் புறக்கணிப்பு மற்றும் நிராகரிப்பு போன்ற விஷயங்கள் முதியவர்களை பெரிதும் பாதிக்கின்றன

 

பல நேரங்களில் முதியவர்கள் எதிர்பார்ப்பது நமது பணிவு, கனிவு, மரியாதை, சரியான உடல்மொழி இவை தான். பெரும்பாலும் இன்று ஆகி விட்ட தனிக்குடித்தனம் என்ற அமைப்பினால் (மறந்து போன அல்லது புறந்தள்ளப்பட்ட பழைய கூட்டுக்குடித்தனம் காரணமாக) மூத்தோருக்கு மரியாதை என்பது மிகவும் குறைந்து போய் விட்டது எனலாம்

 

அதனால் முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. அதற்கு காரணம், நிறைய குடும்பங்களில் இளையவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு சென்று விட்டது தான் என்பதில் சந்தேகம் இல்லை

 

முதியோரிடம் முகம் கொடுத்து பேச விருப்பமில்லாத இளைய சமூகத்தை பரவலாக காண முடிகிறது. ஒன்றாக சேர்ந்து உண்ணுவது, டிவி பார்ப்பது, வெளியில் செல்லுவது, ஊர்களுக்கு கோவில்களுக்கு செல்வது, அவர்களோடு சாதாரண சம்பாஷணையில் ஈடுபடுவது என்று எதுவுமே இன்று நடைபெறவில்லை என்பது நிச்சயம் வேதனையான ஒரு விஷயம்

 

முதியவர்களில் பல விதம் உண்டு. வயதான பிறகும் உடலாலும், மனதாலும், நிதி நிலையாலும் பிறர் தயவில்லாமல் வாழும் நபர்களைப் பற்றிய விஷயங்களை இங்கே பேசுவதில் பயனில்லை

 

பிரதானமாக, இங்கே எடுத்து முன்வைக்கும் விஷயமே எழுந்திருக்க முடியவில்லை, காது கேட்கவில்லை, வெளியே (வங்கிக்கு, கடைக்கு) போகமுடியவில்லை, கண் தெரியவில்லை, தொடர் நோயால் அவதிப்படும் நிலை, உதவிட பிள்ளைகள் இருந்தும் இல்லாத நிலை இவை பற்றித் தான்

 

சிலருக்கு எல்லாமே இருக்கும். அவர்களுக்கு பேச்சுத் துணைக்கு யாரும் இல்லை என்று தனித்து விடப்பட்ட அல்லது தனியாக ஆகிவிட்ட நிலை. அப்போது அவர்கள் எதிர்பார்ப்பது உட்கார்ந்து நாலு வார்த்தை பேசுவது, கண்ணோடு கண் வைத்து பார்த்து பேசுதல், முதியவர் என்ற மரியாதையை தருதல், எதுவும் செய்யா விட்டாலும் (பகிர்ந்தால் பாதி பாரம் குறையும், அல்லது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்) என்பதே

 

நிறைய இடங்களில் கணவருக்கு மனைவி, மனைவிக்கு கணவர் தான் பரஸ்பர உதவி என்ற நிலை. சில இடங்களில் மகன் மருமகள் இவர்களை சார்ந்து அவர்களின் உதவி பெறுதல் என்ற நிலை. சில இடங்களில் மகள் மற்றும் மாப்பிள்ளை உதவுகிற சூழலை காண முடிகிறது

 

யாருமே இல்லை எனும் போது முதியோர் இல்லங்களை நாடிச் செல்ல வேண்டிய கட்டாய அவலம் ஏற்படுகிறது.

 

பண வசதி கொண்டவர்கள் வீட்டோடு கேர் கிவர் என்று சொல்லக்கூடிய பராமளிப்பாளர்களை நியமித்துக் கொள்ளும் நிலையும் இன்று பல இடங்களில் காண முடிகிறது

 

ஒரு சில இடங்களில் மகனோ மகளோ அவர்களும் முதியோர் பட்டியலில் வந்து விட்ட நிலையில், பெற்றோரை பராமரித்து சேவை செய்ய வேண்டிய நிலையும் காண்கிறோம். இங்கே தான் பற்பல சிக்கல்கள் உண்டாகிறது. அந்த மகள் அல்லது மகன் தனது சொந்த வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாத நிலை ஏற்படுகிறது

 

மகன், மகள், மருமகள், உடன்பிறப்பு என்று பராமளிப்பாளர்கள் இருந்து விட்டால் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அல்லது பாராட்டு கிடைக்கா விடினும் 'என்ன பெரிதாக செய்து விட்டாய்? கடமை தானே?' என்பதும், செய்த சேவைகளில் குற்றம் காண்பதும் நிச்சயம் அவர்களை மிகவும் காயப்படுத்துகிறது என்பதை இன்று அதிகமாக  காண்கிறோம்

 

பராமரிப்பது என்பது மிகப்பெரிய வேலை. அதை உறவினர்களோ, இரத்த பந்தங்களோ, அல்லது பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் செய்தாலும் அவர்களுக்கு என்ன பொறுப்பு, சிரமங்கள், சவால்கள் இருக்கிறது என்று இங்கே நாம் சிந்திக்க வேண்டும். அதே போல முதியவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள், தர வேண்டும், அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியும் அடுத்த பகுதியில் விளக்கமாக பார்ப்போம் 

 

முதுமை பற்றி இன்னும் உணருவோம்

No comments:

Post a Comment