Saturday, February 3, 2024

மகிழ்ச்சி என்றால் என்ன ?

 மகிழ்ச்சி என்றால் என்ன ?

இதுவரை நமது புரிதல் என்னவென்றால், கடினமாக உழைத்தால் நாம் வெற்றியடைவோம்; மக்கள் நமக்கு நிறைய அங்கீகாரம் வெகுமானம் மரியாதை தருவர்.
இந்த எண்ணம் எங்கே தொடங்கியது ? யோசித்துப் பார்த்தால், ஒவ்வொரு முறை நல்ல மதிப்பெண் எடுக்கும் பொழுதும் தந்தையின் பாராட்டு, பரிசு கிடைத்தது. அது மட்டுமா? ஆசிரியர்கள் புன்னகை பூத்தனர். தட்டிக் கொடுத்தனர். அம்மாவின் அரவணைப்பு கிடைத்தது. சுமார் மதிப்பெண் எடுக்கும் பொழுது அதற்கு எதிர்வினையே ஏற்பட்டது. அதனால், சொல்பேச்சு கேட்கும் ஒரு நாய் போல கீழ்ப் பணிந்து நல்ல மதிப்பெண் எடுக்கவே நாம் முயன்றோம்.
பிறகு நல்ல வேலை கிடைத்தது. அதற்கு பாராட்டும் தான். அங்கே மேலதிகாரி சிறப்பாக வேலை செய்தால் பாராட்டினார், சம்பள உயர்வு கொடுத்தார், சில நேரம் பதவி உயர்வும் தான். வேலை சிறப்பாக செய்யாத பொழுது அதற்குரிய திட்டுகள், வசைகள், தண்டனைகள் கிடைத்தன.
விளைவு : குடிகாரன் போல மனது கேட்டது என்னவோ பாராட்டு தான். விருது தான். அங்கீகாரம் தான். அதற்கு தொடர்ந்து தொய்வின்றி உழைப்பு, கவனம் எல்லாம் கொடுக்க முயற்சி அங்கே தேவைப்பட்டது. அது ஒரு போதை போல ஆனது. நல்ல போதை ஏற நிறைய குடிப்பது போல நிறைய பெரும் புகழும் கிடைக்க உழைப்பு தேவையானது.
திடீரென ஒரு நாள் கண்விழித்து, நமக்கு நாமே கேட்டுக் கொண்டோம். "எத்தனை நாட்கள் தான் இப்படி தொடரப் போகிறாய் ?" விடையாக மனதில் இருந்து வந்த பதில் : நான் ஒன்றும் இதனை பெரிதாக விரும்பவில்லை. ஏற்கவில்லை. ஆனால் இதை விடவும் மனமில்லை.
பின்னர் மகிழ்ச்சி என்றால் என்ன என்று அறிய நூல்கள் படித்தோம்; இலக்கியங்கள் படித்தோம்; சில அறிஞர்கள் உரைகள் கேட்டோம். தியானம் செய்து பழகினோம். பின்னர் தெரிந்தது என்னவென்றால் மகிழ்ச்சி என்பது நமது சாதனை, வெற்றி அல்லது விருதுகள் அல்ல; நம்மிடம் இருக்கும் பணமோ பொருளோ அல்ல. பிறகு அது உண்மையில் என்ன ?
நிச்சயம் நமக்கு ஒன்று புரிகிறது. எல்லாம் இருக்கும் சிலர் பரிதாபமாக இருப்பதும், ஏதும் இல்லாத சிலர் ஆனந்தத்தில் திளைத்து இருப்பதும், எப்போதும் புன்னகையோடு வலம் வருவதும் காண்கிறோமே ! எப்படி இது சாத்தியம் ?
அப்படியென்றால், மகிழ்ச்சி என்பது மனநிலை. சில நேரம் அது மிகவும் செயற்கையாக உருவாக்கப்படுவது. நமது மனதால் உருவாக்கப்படுவது. எண்ணங்களை கட்டுப்டுத்தினால் வருத்தம் மறைந்து மகிழ்ச்சி நிலவுகிறது என்பது புரிய ஆரம்பிக்கிறது.
நம்மைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தால் நிச்சயம் வருத்தமும் வலியும் அதிகமாகிறது. வழி என்னவென்று மனம் தேடித் தவிக்கிறது.
நம்மை சற்று 'தொலைத்து' நின்றால் ஆனந்தமும் மகிழ்ச்சியும் தானே பிறக்கிறது. நம்மை சற்று மறந்தால் மகிழ்ச்சி என்பது புலப்படுகிறது.
அடுத்து என்னவென்றால், ஒப்புக்கொள்ளுதல். நாம் இவ்வளவு தான். நம்மால் இது தான் முடியும் நமக்கு இது தான் கிடைத்துள்ளது. நமக்கு இது தான் சாத்தியம் என்பது தான் அது.
மிகவும் சிறப்பாக இருந்த பாடகர் எஸ் பி பி, நடிகர் விவேக், புற்று நோயால் இறந்து போன இர்பான் கான் திடீரென மரணம் நமக்கு பற்பல பாடங்கள் புகட்டியது.
வாழ்க்கை நம்மை நீண்ட நாட்கள் உயிரோடு வைத்திருக்க வேண்டும். ஆனந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கடமை கட்டாயம் அதற்கு இல்லை.
தலாய்லாமா ஒருமுறை சொன்னது இது தான் : கிடைத்ததை விரும்ப வேண்டும். விரும்பியதை பெறுவதை விட அது சிறப்பு.
நாம் ஏன் அது பெறவில்லை. நாம் ஏன் அவர் போல ஆகவில்லை என்று நினைத்து புலம்பினால், வருத்தம் கொண்டால் மிஞ்சுவது வருத்தமே. அதை விட கிடைத்த ஒன்றுக்கு நன்றி பாராட்டினால், நம்மை நாமே ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் தானே வந்து மனதுள் வந்து கூத்தாடும்.
நிறைவாக, தனிமை நமக்கு மகிழ்ச்சி தராது. நல்ல உறவுமுறை தான் அதனைத் தரும். அப்படியானால், வெறுப்பு என்பது மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக வேண்டும். அந்த இடத்தை மகிழ்ச்சி வந்து நிரப்ப ஆரம்பிக்கும்.
கம்மின்ஸ் (முருகப்பா குழுமம்) நிறுவனத் தலைவர் திரு ரவி வெங்கடேசன் அண்மையில் பேசி வெளியிட்ட வீடியோ கேட்ட பொழுது அதனை மொழிபெயர்த்தேன். விளைவு நீங்கள் மேலே படித்த இந்த சிறு கட்டுரை
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment