Monday, April 15, 2024

"அறுசுவை" நூல் பற்றி...

 மடிப்பாக்கம் Venkatasubramaniam Venkat அவர்கள் எழுதியுள்ள "அறுசுவை" நூல் பற்றி...

மகிழ்வுரை:
சின்ன வயசுல இருந்து எனக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை. படிப்பு தவிர எது படிச்சாலும் அப்பா திட்டுவார்கள். வார மாத இதழ்கள் வாங்க மாட்டார்கள். நான் பாம்பே மஸ்கட் மற்றும் தோல் துறையில் பணியாற்றிய போதும் வாசிக்க நேரமில்லை. 1976 முதல் கவிதை, 1990 முதல் கட்டுரை, 2000 முதல் சிறுகதை எழுதுகிறேன்.
இதுவரை 14 நூல்கள் எழுதி உள்ளேன். இரண்டு கவிதை நூல்கள், ஒரு சிறுகதை தொகுதி உட்பட. நிறைய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் பல்வேறு முன்னணி பத்திரிகையில் பிரசுரம் ஆகி உள்ளன.
அண்மையில் நான் எழுதிய பரிசு பெற்ற சிறுகதை 'என் பெயர் கமலா' ஒரு பிரபல பத்திரிகையில் வெளிவந்தது. உடனே (இவர் தான் என்று நினைவு) ஒரு நண்பர் இது புஷ்பா தங்கதுரை தலைப்பு என்றார். அவர் சொல்லி தான் எனக்கு தெரியும். 'அப்படியா எனக்குத் தெரியாது நண்பா' என்றேன்.
நான் இதுவரை படித்துள்ளது மிஸ்டர் வேதாந்தம், யவனராணி. அவ்வளவே. சிறுகதைகள் படித்தது இல்லை. சிவசங்கரி அம்மா கதைகள், பாலகுமாரன் கதைகள் சில, சுஜாதா கதைகள் சில வாசித்து இருக்கிறேன். அண்மையில் மிகப்பெரிய பத்திரிகையில் நடந்த போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்ட போது நிறைய கதைகள் படித்தேன். அதற்கு முன்பு விக்கிரமன் சாரின் இலக்கிய பீடம் சிறுகதை போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்ட போது இரண்டு முறை நிறைய கதைகள் படித்தேன். அவ்வளவே.
மற்றபடி இதுவரை நான் 35+ நூல்களுக்கு அணிந்துரை அளித்திருப்பேன். அதனால் அந்த நூல்களை பரீட்சைக்கு வாசிப்பது போல் வாசித்து இருக்கிறேன்.
நேற்று நண்பர் மடிப்பாக்கம் வெங்கட் தனது அறுசுவை நூலை தபாலில் அனுப்பி படித்து விட்டு தங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்து இருந்தார். இடம் சற்று தூரம். எனது வழக்கமான சோம்பேறித்தனம் காரணமாக போகவில்லை. அப்படித்தான் அண்மையில் பல நல்ல நிகழ்வுகளுக்கு செல்லவில்லை. சில நேரங்களில் நான் வெளியூரில் வேலை விஷயமாக இருந்ததும் உண்டு.
இப்போது சுமார் ஒரே நாளில் இரண்டு மூச்சில் இந்த நூலை படித்து முடித்தேன். நூலில் நிறைய கடல மாவு இருந்ததால் ஜெலுசில் குடிச்டு கன்டின்யு பண்னேன் ஒரு ப்ரேக் எடுத்.... இருப்னும் புத்தக் நல்ல ருசிகர...
இப்போது நூலுக்கு வருவோ...
40 கட்டுரைக்கதைகள் கொண்ட இந்த நூல் 132 பக்கங்கள் கொண்டது. புஸ்தகா வெளியீடு. விலை ₹150/-
அட்டைப்படமே இது எது பற்றிய நூல் என்பதை தலைப்புக்கேற்றவாறு கூறுவது அட்டகாஷ்.
'சிரிப் வர்ல', நடக்காத், அப்டியே பண்ட்டாப் போச்... இதெல்லாம் மவெ யின் டிரேட் மார்க்.
மயிலை கோபி, மயிலை பட்டாபி, அயன்புரம் சத்திய நாராயணன், மேலை பழ நாகப்பன், சிம்மவாஹிணி, எஸ்வி ராஜசேகர் மற்றும் திருவண்ணாமலை சண்முகம், அய்யாறு வாசுதேவன் எல்லோரின் பெயர்களும் வராத பத்திரிகைகளே கிடையாது. அப்படித்தான் மவெ அவர்களும். இவர்கள் அனைவரும் உறுப்பினராக இருந்த உரத்த சிந்தனை அமைப்பில் நானும் இணைந்தேன் 1988ல். அப்போதிருந்தே மவெ அவர்களும் பழக்.
வாசகர் கடிதம், கேள்வி பதில், துணுக்கு, பெட்டி செய்தி மேற்சொன்ன நண்பர்களில் பலர் தாண்டவில்லை திருவண்ணாமலை சண்முகம் தவிர... இதோ இப்போது நல்லதொரு நூல் எழுதி உள்ளார் வெங்கட் அவர்கள். மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்னர் வெங்கட் பல்வேறு பேட்டிகள் சுவாரஸ்யமான பதிவுகள் நிறைய பத்திரிகையில் எழுதி உள்ளார்.
சில பல ஆண்டுகள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தோம் நாங்கள் இருவரும். திடீரென முகநூல் எங்களை மீண்டும் இணைத்தது. மத்யமர் குழுவில் நான் கிடையாது.
மீண்டும் நூலுக்கு வருவோ...
திரு சப்தரிஷி லாசரா அவர்களின் அணிந்துரை மற்றும் மருத்துவர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஜெ பாஸ்கரன் அவர்களின் வாழ்த்துரை இந்த நூலுக்கு ரெட்டை மகுடம் போல அழகு சேர்க்கிற...
நூலில் பன்னீர் பஜ்ஜி, செவ்வாழப் பழ அல்வா, கார பூரணம் நெறச்ச சப்பாத்தி போன்ற பல ரெசிபிகள் உள்ள....
யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை நூல் முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. செம்மங்குடி மாமா பேட்டி, அலுவலக அனுபவம் இப்படி ஓரிரண்டு வேற ஜெனர். கடைசிக் கட்டுரைக் கதையில் நிச்சயமாக அழ வைக்றார்.
அக்கால நினைவுகள், அவர் வாழ்வில் கடைபிடிக்கும் அனுஷ்டானங்கள், வாழ்வை லைட்டாக எடுத்துக் கொள்ளும் பாங்கு, அவருக்கு உணவின் மீது இருக்கும் மோகம் எல்லாமே இந்த நூலில் பாத்திரப் படைப்புகளாக அவர் மனைவி வடிவில் வலம் வருகின்றன. அவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடல்கள் மனதை லேசாக்குகின்றன.
அவரது கோவிட் அனுபவங்கள் நமக்கும் இருந்தாலும் இப்படி எழுத வரவில்லை...
நான் கொஞ்சம் சீரியஸான சப்ஜெக்ட் தான் எடுத்துக் கொள்வேன் கட்டுரை கதைகளில். நகைச்சுவை தனியாக பேசும் போது வரும். எழுத்தில் ஏனோ எனக்கு வருவதில்லை. மவெ அவர்களுக்கு அது வெகு இயல்பாக கைகூடி வருகிறது. அதற்காக அவர் ஒருபோதும் மெனக்கெடல் செய்வதில்லை என்று வாசிக்கும் போது புரிகிறது.
எனக்கு இந்த நூலில் ஞானப் பூனை 😺, கொரோனா வளையல், பீச் காத்துல சுண்டல், நகைச்சீட்டு, காயத்ரி (ஆழமான கருத்துள்ள கதை), கண்ணாடிக் குருவி இவையெல்லாம் மிகவும் பிடித்த படைப்புகள் என்பேன்.
இந்த நூலை நீங்களும் வாங்கிப் படிக்கலாம். பிறருக்கு பரிசு அளிக்கலா ங்...
நிச்சயமாக இவரது அடுத்த நூல் (தயாரிப்பில் உள்ளது) பெரிய அளவில் பாராட்டு பெறும் என்பது திண்ணம்.
ஜிப்பா, குறுக்கே மாட்டிய பேக் மற்றும் அவரது புன்னகை மடிப்பாக்கம் வெங்கட் அவர்களின் டிரேட் மார்க் எனலாம். இனி எழுத்தாளர் மவெ அவர்களின் நகைச்சுவை நினைவுக்கு வரும்.
எனது திருமணம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் பத்திரிகையில் அந்த காலத்திலேயே எழுதி என்னை மகிழ்வித்து ஆச்சரியம் தந்தவர். அதனால் என் மனைவிக்கும் இவர் நன்கு பரிச்சயம் தான்.
இவர் நல்ல தேக ஆரோக்கியம், மகிழ்ச்சி, கீர்த்தி, போன்று 16ம் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
பணிவுடன்
பாலசாண்டில்யன்.
9840027810

No comments:

Post a Comment