Saturday, November 22, 2014

To live without Re'marks'...

கதையல்ல நிஜம் - 5
- டாக்டர் பாலசாண்டில்யன்
எப்போதும் நான்கு மணிக்கே வீடு திரும்பும் யாமினியை இன்னும் காணவில்லை. 'ப்ரெண்ட் வீட்டிற்குப் போயிருப்பாளோ?' துடிதுடித்துப் போனாள் காயத்ரி.
மணி ஆறு ஆயிற்று. யாமினி இன்னும் வந்தபாடில்லை. காயத்ரி ராமனுக்குப் போன் செய்தாள். "ஏங்க யாமினி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை"
எதிர்ப்புறத்திலிருந்து ராமன் நிதானமாக, "வருவாள், ஏன் பதறுகிறாய் ? சும்மா போன் செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே" என்றான்.
மணி 8 ஆயிற்று. வீடு வந்து சேர்ந்த ராமனும் குழம்பித் தான் போனான்.
யாமினியின் வகுப்பு தோழர்களுக்கு தோழிகளுக்கு எல்லாம் ஒவ்வொருவராய் போன் செய்தான் ராமன். உஷா, சந்திரா என்ற இன்னும் இரண்டு பெண்கள் வீடு வந்து சேரவில்லை என்று தெரியவந்தது.
ராமனுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.
திடீரென்று கோபாலிடம் (யாமினியின் வகுப்புத் தோழன் ) இருந்து போன் வந்தது. "சார் நான் கோபால் பேசறேன் ..யாமினி, உஷா மற்றும் சந்திரா மூவரும் ரயிலில் ஏறி வெளியூர் போகத் திட்டம் போட்டுள்ளனர். வண்டி சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பத்து மணிக்குப் புறப்படுகிறது."
போனை அவசரமாக வைத்து விட்டு ராமனும் காயத்ரியும் ஆட்டோ பிடித்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் விரைந்தனர்.
சரியாக 9.35 இருக்கும். ராமன் ஒவ்வொரு பெட்டியாகத் தேடிக் கொண்டே ஓடினான். காயத்ரி இன்னொரு புறம் ஓடினாள். போலீஸ்காரர் ஒருவர் முன்பு மூன்று பள்ளி மாணவிகள் யூனிபார்முடன் நின்று கொண்டிருந்தனர். மூவரில் ஒருவர் யாமினி. பின்னால் இருந்தே அடையாளம் தெரிந்தது ராமனுக்கு.
முன்னால் வந்து யாமினியைப் பார்த்து அங்கேயே மயக்கம் அடைந்தான்.
காயத்ரியும் அங்கு வந்து சேர்ந்தாள். யாமினியை கன்னம் கன்னமாக அறைந்தாள்.
கூனிக் குறுகிப் போன ராமனும் காயத்ரியும் மறுநாள் பள்ளி பிரின்சிபால் முன்பு செய்வதறியாது கைகளைப் பிசைந்தபடி நின்றார்கள்.
'படி படி ...இந்த மார்க் பத்தாது' என்று கத்திய பெற்றோர் பலர் கதியும் இது தானோ ..?!

Thursday, November 20, 2014

Being Grateful brings more power in life

கதையல்ல நிஜம் - 4
- டாக்டர் பாலசாண்டில்யன்

கல்யாணி பன்னிரண்டு வயதுச் சிறுமி. அவள் தந்தை வாசுதேவன் குடிபழக்கத்திற்கு அடிமையாகிப் போனவன். தினமும் குடித்து விட்டு வருவதும், மனைவியை மற்றும் மகளை அடிப்பதும் அவனுக்கு வாடிக்கையானது. வாசுவின் மனைவி மரகதத்திற்கு தனது கணவனை எப்படி திருத்திக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை. 

வாசுவின் இந்தப் பழக்கம் அவனை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தது. மரகதம் விட்டுக் கொடுக்காமல் வீட்டையும் பார்த்துக் கொண்டு கணவனையும் பார்த்துக் கொண்டாள். மூன்று மாதப் போராட்டம் சோக முடிவாகிப் போனது. வாசுவின் இறுதிப் பயணம் மரகதத்தை சற்று உலுக்கத் தான் செய்தது. கல்யாணியை வளர்த்து ஆளாக்குவது பெரிய சவால் ஆனது.

இந்த நிலையில் குடும்ப நண்பர் பட்டாபி வலிய முன்வந்து கல்யாணியை தனக்குத் தெரிந்த ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுவதாகப் பரிந்துரைத்தார். அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும் என்றும் சொன்னார். கல்யாணி மறுநாளே ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்டாள். அங்கே படிப்பு, தியானம், பஜனை, கைவேலை என்று பல்வேறு விஷயங்கள் அவளுக்கு கற்றுத் தரப்பட்டது.

கல்யாணிக்கு ஏனோ படிப்பில் நாட்டம் இல்லை. தினமும் அப்பா வந்து அவளையும் அவள் அம்மாவையும் அடிப்பது போலவே கண்முன் காட்சி வந்து அவளைத் தொந்தரவு செய்தது. அவள் மனநிலையைச் சரியாக்க ஆஸ்ரிம குருஜி அவளை பாட்டு வகுப்பில் சேர்க்கச் செய்தார். கல்யாணியின் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் இசையில் முன்னேறினாள். அருகில் சில நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தாள். பட்டாபியும் மரகதமும் அவ்வப்போது அவளை சென்று பார்த்து உற்சாகம் அளித்தனர். 

ஆஸ்ரமதிற்கு அடிக்கடி வந்து போகும் ஒரு பணக்காரர் மூலம் கல்யாணிக்கு வெளிநாடு புறப்படும் யோகம் அடித்தது. அவள் இப்போது 19 வயது யுவதியாக இருந்தாள் என்பதால் அந்த பணக்காரர் அவளுக்கு அமெரிக்காவிலேயே ஒரு சங்கீதப் பள்ளி வைத்துத் தருவதாக சொன்னார்.

தலைகால் புரியாத கல்யாணி அவள் அம்மாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் சொல்வது போல் சொன்னாள். மரகதத்தின் அழுத்தம் காரணமாக கல்யாணி பட்டாபி வீட்டிற்கு போனாள். அவரிடம் அவள் சொன்ன விஷயமும் சொன்ன விதமும் பட்டாபியை மனம் அதிரச் செய்தது. "அங்கிள், இனி நான் உங்களுக்கும் அம்மாவுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. வெளிநாடு போகிறேன். என்றாவது திரும்பி வந்தால் பார்க்கலாம்" 

எதையும் எதிர்பார்த்து உதவவில்லை என்றாலும் நன்றி கெட்ட தனது நண்பரின் மகளை நினைத்து பட்டாபி மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளானார். மரகதத்திடம் ஏதும் சொல்லவில்லை...தனக்குள் நினைத்துப் புலம்பினார்....! எங்கு சென்றாலும் நன்றாய் இரு என்று அவரை அறியாமல் தனது பிரார்த்தனையில் சொன்னார்.

Wednesday, November 19, 2014

Music can heal...

எந்த ராகம் என்ன என்ன நோய்களைக் குணப்படுத்தும் ?
ஆகிர் பைரவி - அஜீரணத்தையும் ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தை, மற்றும் மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது.
பைரவி - முட்டி வலி மற்றும் முழங்கால் வலி 
சந்திரகௌன்ஸ் - பசியின்மை 
தர்பாரி கானடா - தலைவலி 
தீபக் - அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் 
குஜரி தோடி - இருமல், சளி 
ஜோன்புரி - வாயுக் கோளாறு, பேதி, மலச்சிக்கல் 
ஜெய் ஜெய் வந்தி (த்வஜாவந்தி ) - பேதி, தலைவலி, மூட்டுவலி 
மால்கௌன்ஸ் - குடல் வாயு 
பூர்வி கல்யாணி - இரத்த சோகை, டென்ஷன், குடல் எரிச்சல் 
பூர்ய தனஸ்ரீ - இரத்த சோகை 
வசந்த பஹார் - குடற்கற்கள் 
யெமன் கல்யாணி - மூட்டு வலி 

தெய்வீக ஓசையாக ஒலியாக விளங்கும் 'ஓம்' என்னும் சப்தம் மனதுக்கு ரம்மியமானது. இசைக்கு அதுவே ஆதார ஸ்ருதி ஆகும். ஓம் என்று தொடர்ந்து சொல்வதால், ஜெபிப்பதால் நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகிறது. மன அழுத்தம் மற்றும் நரம்புத் தளர்ச்சி சரியாகிறது. சஹாஸ்ராரா சக்ரா எனும் நிலையில் ஓம் ஜெபித்தால் வலிப்பு நோய் குணமாகிறது.

இசை ஒரு வியாதியை, நோயின் தன்மையை, முழுமையாகக் குணப்படுத்தாவிட்டாலும் மனதையும் உடலையும் செம்மையாக ரம்மியமாக வைத்துக் கொள்ள நிச்சயம் உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. மனிதனின் தகவல் தொடர்பை மேம்படுத்த, வெற்றிக்கு வழிவகுக்க, துக்க நிலைகளை சமாளிக்க, சுயமரியாதை மேலோங்கச் செய்ய இசை நிச்சயம் உதவுகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆன்மீக மனநிலை உயர நாம் இருக்கும் நிலையிலிருந்து உயர இசை உதுவுகிறது என்பதை உணர்வோம்.

சப்தஸ்வரமுமே (ஸ ரி க ம ப த நி ஸ) இசை வைத்தியம் தான். இவற்றால் உருவாக்கப்பட்ட ராகங்கள் இதற்கு மூலமாக இருக்கின்றன. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்து சாம வேத ராகத்தின் தன்மைகளை எடுத்துரைக்கிறது. ராகங்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்துகின்றன. இன்னும் இது பற்றிய ஆராய்ச்சி தொடர்கின்றது.மகிழ்ச்சி ஹார்மோன் வெளிவருவதும், பல உடல்ரீதியான வேதியல் மாற்றம் நிகழ்வதும் இசையால் சாத்தியம் என்று நிரூபித்து வருகின்றனர். மன அழுத்தம் குறைய மன அமைதி பெற இசை உதுவுகிறது. செய்ய வேண்டிய கஷ்டமான வேலைகளை எளிதாய் செய்ய முடிக்க இசை உதவுகிறது என்பதால் பல நிறுவனங்களில் மெல்லிய இசை ஓசை தொடர்ந்து கேட்கச் செய்கிறார்கள்.

Are you retired....be aware...beware.

கதையல்ல நிஜம் - 3
- டாக்டர் பாலசாண்டில்யன் 

ரவிச்சந்திரன் தனது 52 வது வயதில் பணி விருப்ப ஓய்வு பெற்றார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று வரவழைத்துக் கொண்டதால் அடிக்கடி தலை சுற்றல், கை கால் நடுக்கம் என்று உடல் உபாதைகள். தனியார் நிறுவனம் என்பதால் ஓய்வு பெற்ற போது கிராஜுவிட்டி என்று நான்கு லட்சம் ரூபாய் தான் வந்தது.

தனது பெண் ரமாவின் திருமணத்திற்கு மூன்று லட்சம் செலவானது. மீதம் ஒரு லட்சத்தில் கடன் வாங்கிய ஐம்பதாயிரம் கரைந்து போனது. மீதி பணம் பிக்செட் டெபாசிட்டில் வங்கியில் போய் உட்கார்ந்தது.

ரவிச்சந்திரனுக்கு திடீரென்று காது இரண்டும் கேட்காமல் போனது. தினமும் மகன் கணேஷிடமும் மனைவி பானுவிடமும் அர்ச்சனை தான். ரவிச்சந்திரன் தான் உண்டு தன் செய்தித்தாள் மற்றும் டிவி உன்று என்று இருப்பது வழக்கமாகிப் போனது.

கணேஷிற்கு கல்யாணம் ஆனது. ரவிச்சந்திரன் ஹோமுக்கு அனுப்பப்பட்டார். மனைவி பானு மகனுக்கு அடிமை ஆனாள். ரவிச்சந்திரனுக்கு அப்படி இப்படி என்று வயது அறுபது ஆனது. கண்ணிலும் கோளாறு. அடிக்கடி பல் பிரச்சனை வேறு. கேட்பாரற்று இருந்த அவர் நிலைமை நாளுக்கு நாள் மோசமானது.

முதியோர் இல்லத்திலிருந்து ரவிச்சந்திரன் என்கிற ஓர் அநாதை இறந்து விட்டதாக 
குரோம்பேட்டை ராகவுனுக்கு ஒரு நாள் போன் வந்தது, ராகவன் அநாதைப் பிணங்களுக்கு ரட்சகன் என்பதால் மகனைப் போல் இருந்து காரியங்கள் முடித்து வைத்தார். 

மகன் மகள் மனைவி யாவரும் இருந்தும் அநாதையான இந்த கதி...அப்பப்பா...
வர வேண்டாம் யாருக்கும்....!

Tuesday, November 18, 2014

Cousins in love

கதையல்ல நிஜம் - 2
- டாகடர் பாலசாண்டில்யன் 

கதையல்ல நிஜம் - 2
- டாகடர் பாலசாண்டில்யன்
குமார் மற்றும் கோபு இருவரும் அத்தை பையன் மாமா பையன் உறவு முறை. ஒரே நாளில் ஒரே முற்றத்தில் பிறந்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். சிறு வயதில் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு திரிந்து ஒருவருக்கொருவர் அன்புப் பாசப் பிணைப்போடு நாளும் இருந்தவர்கள்.
குமார் இன்ஜினியரிங் டிப்ளமா படித்து மத்திய அரசு வேலையில் சேர்ந்தான். கோபுவின் பெற்றோர் ரொம்ப சாதாரணமானவர்கள். பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்ட கோபுவிற்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளர் வேலை கிடைத்தது.
சாதாரண வேலை என்பதால் சாதாரண வாழ்க்கை, அவனுக்கேற்ற மனைவி என்று சாதாரண நிலையிலேயே வாழ்ந்து வந்தான் கோபு. ஆனாலும் குமார் கோபு இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். கோபு குமார் வீட்டிற்கு வாரம் ஒரு முறையாவது வருவான். குமார் எப்போதும் கோபுவிற்கு ஏதாவது உதவி செய்வது வழக்கம். அது சட்டை, பேன்ட், கடிகாரம், பணம் என்று ஏதாவது இருக்கும்.
கோபுவின் பிள்ளையின் படிப்பிற்கு குமார் உதவி செய்தான். குமாரின் மனைவியும் குமாரின் மகன் கண்ணனும் ஒரு போதும் குமார் கோபுவிற்கு உதவி செய்வதை தடை செய்தது கிடையாது. கோபுவின் மகள் திருமணத்திற்கும் குமார் நிறைய பணம் கொடுத்து உதவினான். கடனாகத்தான். அந்தக் கடனை திருப்பித் தர முடியாத கோபு குமார் வீட்டிற்கு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.
அது பற்றி குமார் ஒரு போதும் கவலைப்படவில்லை.
குமார் ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டான். அந்த விஷயம் கேள்விப்பட்டு அவனைப் பார்க்க வந்தான் கோபு. தான் பெற்றுக் கொண்ட கடனை திரும்பத் தர முடியாது போனது குறித்து கண்ணீர் மல்க மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்டான். குமார் கோபுவின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்னான்.
அடுத்த மாதம் குமார் இறந்தே போனான். துக்கத்திற்கு வந்த கோபு குமாரின் மகன் கண்ணனைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னான். உன் தந்தை போல யார் உண்டு என்றான் கோபு.
உள்ளே ஓடிப் போன கண்ணன் கைகளில் ஒரு ஸ்படிக மணி மாலையோடு வந்தான். "இது குமார் அணிந்த ஒன்று தானே" என்று கேட்டான் கோபு. "ஆமாம், இனி இதனை அணிய சரியான நபர் நீங்கள் தான்" சொல்லும் போதே அழுது விட்டான் கண்ணன். "நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்கு ஏதாவது கொடுப்பார் அப்பா. இனி தருவதற்கு அவர் இல்லை. ஆனால் நான் இருக்கிறேன்" என்று சொல்லி கோபுவின் கால்கள் தொட்டு வணங்கினான் கண்ணன்.
அந்த ஸ்படிக மாலை அணிந்து கொண்டு நின்ற கோபுவின் மனதில்
கண்ணன் குமாராகத் தான் தென்பட்டான்.

God's Child Amutha

கதையல்ல நிஜம் :
- டாக்டர் பாலசாண்டில்யன் 

திரு மற்றும் திருமதி சாமுவேல் நடத்துகின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் கிட்டத்தட்ட அறுபது குழந்தைகள் இருந்தன. அமுதா எனும் புதிய சிறுமி சேர்க்கப்படுகிறாள்.

பத்து நாட்கள் கழித்து மிகப் பெரிய பணக்காரர் வருகிறார். அத்தனை குழந்தைகளுக்கும் பெரியதொரு பொம்மை வாங்கித் தருகிறார். பொம்மை நிஜமான குழந்தை போல அழகாக இருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் அந்த பொம்மையைக் கட்டிப் பிடித்து விளையாடுகின்றன.

அமுதா மட்டும்  அவளுக்கு கிடைத்த பொம்மையை உற்று உற்றுப் பார்க்கிறாள். அந்த பொம்மையின் கண்ணை விரல் விட்டுத் தோண்டி எடுக்கிறாள்.

திருமதி சாமுவேல் என்கிற 'அம்மா' அதைக் கவனித்து அமுதாவிடம் விரைந்து 'பளார் பளார்' என்று அமுதாவை அடிக்கிறார். "எப்படிப்பட்ட கிராதகி வயிற்றில் பிறந்தவளாக நீ இருக்க வேண்டும். இப்படி செய்து விட்டாயே" என்று அறை அதிரும்படி கத்துகிறாள். அமுதா விசும்பி விசும்பி அழுது துடிக்கிறாள்.

அரை மணி நேரத்திற்குப் பின்பு அமுதா மெல்ல திருமதி சாமுவேல் அருகில் சென்று "அம்மா ...அம்மா ! நம் இல்லத்தில் கோமதி ஆயாவுக்கு கண் இல்லையே. அவருக்கு வைக்கலாமே என்று தான் பொம்மையின் கண்ணைத் தோண்டி எடுத்தேன்" என்றாள்.

திருமதி சாமுவேலுக்கு தன்னை யாரோ அறைந்தது போல் இருந்தது.

இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த சாமுவேல் தன் மனைவியிடம் சொன்னார் நிதானமாக .."நமக்குப் பிறகு இந்த இல்லத்தைச் சரியாக கவனித்துக் கொள்ளப் போவது இந்தக் குழந்தை அமுதா தான். இது ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தெய்வக் குழந்தை. இவளை நாம் கவனமாக வளர்க்க வேண்டும்."

திருமதி சாமுவேல் தனது தவறை உணர்ந்தவராக அமுதாவை உற்றுப் பார்த்தாள் ஆச்சரியத்தோடு....!

Monday, November 17, 2014

After retirement - it is a must

பணி ஓய்வுக்குப் பிறகு செய்வது அவசியம் :
- நேரத்தில் குளிப்பது 
- காலை உணவு மற்றும் மருந்து உட்கொள்ளல் 
- நடப்பது, புத்தகம் படிப்பது, நண்பர்களை தொடர்பு கொள்ளல் 
- முடி, நகம் வெட்டுதல் 
- மீசை தாடி சரி செய்து கொள்ளுதல் 
- சரியான 'பளிச்' உடைகள் அணிவது 
- வாய் துர்நாற்றம் இன்றிப் பார்த்துக் கொள்வது 
- அநாவிசியமாக சாப்பிட்டு வியாதி வராது காத்தல் 
- சேமிப்பு மற்றும் பண விஷயங்களில் கவனமாக இருத்தல் 
- யாரையும் சார்ந்து இல்லாது இருத்தல்