Thursday, August 29, 2019

மகள் திருமண அனுபவங்கள்



மகள் திருமண அனுபவங்கள்
மூத்த மகள் சுபாஷிணியின் திருமணம் ஏப்ரல் மாதக் கடைசியில் நிச்சயம் செய்தோம். மே மாதம் கிட்டத்தட்ட ஜவுளி எடுத்தல், மண்டபம் புக் செய்தல், அழைப்பிதழ் தயாரித்தல், முக்கிய உறவினர்களை, வீட்டின் மூத்தவர்களை நேரில் சென்று அழைத்தல் என்று திருமண வேலைகளை கத்திரி என்று கூட பாராமல் நல்லதொரு நாள் பார்த்து தொடங்கி போய்க் கொண்டிருந்தது. அழைக்கப் போன இடங்களில் சில உறவினர்கள் என்ன இவ்வளவு முன்பே அழைக்கிறீர்கள். மறந்து போய் விடுவோம் என்றனர் விளையாட்டாக. மீண்டும் நினைவூட்டுகிறோம் என்று சொன்னேன்.
எல்லாமே இறைவன் எழுதிய ஸ்கிரிப்ட் என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் தான்.
ஜூன் மாதம் 17 ஆம் தேதி எனக்கு மிகப்பெரிய இடி போல் அதிர்ச்சி காத்திருந்தது. (ஜூன் 18 எனது பிறந்த நாள். நான் 59 முடிந்து 60 க்குள் கால் பதிக்கும் இனிய நாள் - அதனை எப்படிக் கொண்டாடுவது என்று எனது இரண்டு மகள்களும் சில இன்ப அதிர்ச்சி தரும் திட்டங்கள் தீட்டி இருந்தார்கள் போலும்) இரண்டு பெண்களும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு மிக அருகே ஒரு மாஜிக் கால் டாக்ஸி திடீர் பிரேக் போட்டதால் இவர்களும் பிரேக் போட்டு வண்டியில் விழுந்து சரியான காயம் பட்டுக் கொண்டார்கள். இளையவளுக்கு வலது கால் பாதத்தில் ஹேர் லைன் எலும்பு முறிவு. திருமணப் பெண்ணுக்கு அதே வலது காலில் முட்டிக்கு கீழ் இருக்கும் எலும்பில் முறிவு ஏற்பட்டு ஐந்து துண்டுகளாகி அதற்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்து பிளேட் ஸ் வைத்தார் மூத்த எலும்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சுப்பையா. உடன் இருந்து உதவியவர் மூத்த மருத்துவர் (குடும்ப நண்பர்) டாக்டர் பாஸ்கர். இந்த தருணத்தில் மிகவும் அக்கறையோடு உதவி எனது மகளை ஊக்கப்படுத்தியவர்கள் பிசியோ லக்ஷ்மணன் மற்றும் எங்கள் மீது அளவிலாத அன்பு செலுத்தும் நண்பர் முருகன் அவர்களும் தான்.
இரண்டு மகள்களுக்கும் காலில் கட்டு போட்டு அடுத்த அடுத்த கட்டிலில் படுத்த அன்று எப்படி பிறந்த நாள் கொண்டாட முடியும். போனில் அழைத்த பல நெருக்கமான நண்பர்கள் எனது குரல் சற்று சுருதி குறைந்து இருப்பதைக் கண்டுபிடித்து என்னவென்று கேட்க நடந்த அசம்பாவிதத்தை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. நானும் எனது மனைவியும் நெஞ்சு அடைத்துப் போனோம். எப்படி இந்தத் திருமணம் நடக்கப் போகிறது என்று. ஆனால் அங்கே தான் இறைவன் தனது அருளையும் (சோதனையுடன்) காட்டுகிறார். வீட்டுக்கு வர இருக்கும் மாப்பிள்ளை திரு சந்தோஷ் மற்றும் அவரின் பெற்றோர் மிகவும் தங்கமான மக்கள். அவர்களின் நல்ல உள்ளம், பிரார்த்தனை, மற்றும் ஆறுதல் சொல்லில் அடக்கிட முடியாது. அதே போல என்னுடைய (உரத்த சிந்தனை) நண்பர்கள், அக்கறை கொண்ட மற்ற நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரின் பிரார்த்தனையால் எனது மகள் சுபாஷிணி படிப்படியாக குணமாக ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக திருமண வேலைகள் அப்படியே முடங்கிப்போயின்.நானும் எனது மனைவியும் தான்.
இடையே எனது பணி நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிட்டது. அப்போதெல்லாம் எனது மனைவி மற்றும் இளைய மகள் (ஓரளவுக்கு குணமாகி விட்டபடியால்) மூத்த மகளை காரில் கூட்டிப்போய் முடிக்க வேண்டிய இதர ஷாப்பிங் செய்து முடித்தார்கள். இந்த சமயத்தில் தினமும் 108 முறை பிரார்த்தனை காலில் முட்டி போட்டபடி செய்தவர் ஜீ டிவி புகழ் ராக் ஸ்டார் ரமணி அம்மாள். சிதம்பரம் கஸ்தூரிபாய் கம்பெனியின் திரு முத்துக்குமார் அவர்கள். கல்யாணப்பெண் எப்படியோ நாலு கால் வைத்த வாக்கரில் இருந்த இரண்டு ஒற்றைக் கால் வாக்கர் பிடித்து நடக்க ஆரம்பித்தாள். இருப்பினும் எப்படி திருமணத்தில் நடக்கப் போகிறாள், நிற்கப் போகிறாள் என்ற பயம் இருக்கவே செய்தது. அவள் எந்த நம்பிக்கையை மட்டும் பிடிமானமாக வைத்து வாக்கரை ஓரம் கட்டி விட்டு திருமண மண்டபத்தில் நம்பிக்கையுடன் நடந்தாள் என்றால் அதற்கு ஊக்கம் தந்தது லண்டனில் இருந்து தனது இரண்டு மகள்களுடன் வந்திருந்த எனது மைத்துனி ஸ்ரீவித்யா மற்றும் எங்களுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசிக்கும் மாடி வீட்டு திரு ராஜா அவர்களும் தான். எல்லாம் இறைவன் அருள். மகளின் தீராத மன உறுதி. மாப்பிள்ளை சந்தோஷ் அவர்களின் அன்பு மற்றும் கரிசனம் இவற்றால் மகளும் நடந்தாள் நம்பிக்கையுடன். திருமணமும் மிக விமர்சையாக நடந்தது.
அதற்கு மிகவும் உறுதுணை கேட்டரிங் கான்ட்ராக்டர் அப்பு வெங்கட்ராமன், போட்டோகிராபர் விக்கி மனோ மற்றும் உதயம் ராம் போன்ற நண்பர்கள். இந்த கஷ்டமான காலகட்டத்தில் நல்ல நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் அவ்வப்போது நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.
நேற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு வெகு விமர்சையாக மகளின் திருமணம் நடைபெற்றது.
காய்கறி கடைக்காரர் ஜெயராமன், துணி இஸ்திரி செய்து தரும் தாட்சாயணி அம்மாள், வீட்டு வேலை செய்யும் காயத்ரி, மகளுக்கு குறைவான நேரத்தில் துணிகள் தைத்துத் தந்த டைலர், மருந்துகடைக்காரர், மேக்கப் செய்த கொல்கத்தா தபன் என்று பல சாமானியர்கள் கலந்து கொண்டார்கள்.
மறுபக்கம் உரத்த சிந்தனை அமைப்பில் இருந்து சென்னை, திருச்சி, தேனி, ஹைதராபாத், கோயம்பத்தூர் எல்லா ஊர்களில் இருந்தும் வந்து ஆசி வழங்கி அன்பு காட்டிய நண்பர்களை எப்படி பாராட்டுவது.
அது மட்டுமா? இயக்குனர் விசு சார், டெல்லி கணேஷ், இயக்குனர் வசந்த் சாய், ரவி தமிழ்வாணன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், மாம்பலம் சந்திரசேகர், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், தொழில் அதிபர் முரளி ஸ்ரீனிவாசன், வாசுகி கண்ணப்பன், ராக் ஸ்டார் ரமணி அம்மாள், திருமதி பாரதி திருமகன், நடிகர் எஸ்விஎஸ் குமார், சேவாலயா முரளிதரன், ஆனந்தம் பாகிரதி, அமுதா பாலகிருஷ்ணன், ஆடிட்டர் என்ஆர்கே, கார்முகிலோன், இதயகீதம் ராமனுஜம், கண்ணன் விக்கிரமன், உலகநாயகி பழனி, பெரியண்ணன், பத்மினி பட்டாபிராமன், உதயம் ராம், ராஜசேகர், துளசி பட், எம்ஓபி கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ஷிவ் ரிஷி எனும் என்கேடி ஜெயகோபால், சுஷ்மா ரங்கநாதன், வயலின் வித்வான் கல்யாணி சங்கர், வருமான வரி இணை கமிஷினர் திரு நந்தகுமார் ஐஆர்எஸ், மேகநாதன், சாய் சங்கரா பஞ்சாபகேசன், சிரிப்பானந்தா, துரைசாமி, சாரதா ரமணி மற்றும் அவரது கணவர் நடிகர் ரமணி அவர்கள், மூத்த எழுத்தாளர் ருக்மணி சேஷசாயி, பாலா திரிபுரசுந்தரி, ஸ்ருதிலய வித்யாலயா பார்வதி, என்று பற்பல விவிஐபிக்கள் வந்து ஆசி வழங்கி மகிழ்ந்தனர்.
தவிர எனது பால்ய சிநேகிதர்கள் எத்திராஜன், கிரிதர், நரசிம்மன், என்று சிலர். மேலும் எனது குரு டாக்டர் நடராஜன் அவர்களின் மனைவி, எனது ஆசான் திரு ஆரவாமுதன், பயிற்சியாளர்கள் பட்டாளம் - ஆறுமுகம், சந்திரமோகன், கண்ணன் ராஜா, ஷிவாஸ், ராமசுப்பிரமணியன், அஷ்ரப், பிரசன்னா, ரங்கசாமி, பேராசிரியர் சாய்குமார், சுரேகா, உதயசான்றோன், முருகபாரதி, வசந்தகுமாரி, என்று அற்புத ஆசான்கள், தவிர எனது மகளின் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், என்று நிறைய நண்பர்கள், அது மட்டுமா ? எனது முன்னாள் மேலதிகாரி சாலமன் சம்பத்குமார், என்னை ஆளாக்கிய முன்னாள் மேலதிகாரி திரு லோதா அவர்களின் புதல்வர் ராஜேஷ் லோதா, அக்கம் பக்கத்தார், உறவினர்கள், சுற்றத்தார், என்று எல்லோரும் சூழ மகளின் திருமணம் மிகவும் இனிதே நடைபெற்றது என்பது இறையின் திருவருளே. அவரின் கொடையே.
இதில் மிகவும் முக்கியமான விஷயம் : உடல்நிலை மற்றும் வயது வலி பாராட்டாது திருமணத்திற்கு வந்து ஆசி வழங்கிய இயக்குனர் விசு அவர்கள் "உனக்காக நான் வராமல் இருப்பேனா" என்ற பொழுது மனம் உருகிப் போனேன். கடந்த பத்து பதினைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் திரு டெல்லி கணேஷ் அவர்கள் "உடம்பு முடியவில்லை. இருந்தாலும், உன் மகள் திருமணத்திற்கு வராமலும் இருக்க முடியவில்லை" என்று வந்து ஆசி வழங்கினார்.
எனது கண்ணீர் உருண்டோடிய தருணம், மனம் நெகிழ்ந்த சமயம் என்னவென்று கேட்டால் - அது மூத்த எழுத்தாளர் அம்மா சிவசங்கரி அவர்கள் என்னிடம் சொன்னது தான். (நான் அவர்கள் தமிழக அரசின் 'பாரதி' விருது பெற்றமைக்கு பாராட்டு தெரிவிக்க நண்பர் உதயம் ராம் அவர்களோடு அவர்கள் இல்லம் சென்ற பொழுது மகள் திருமணத்திற்கு வாருங்கள் என்று மீண்டும் ஒரு வரவேற்பு அழைப்பை கொடுத்தேன் - அவர்கள் 11 மாதங்களில் எனக்கு இரண்டு முறை இதய நோய் வந்து அறுவை சிகிச்சை நடந்து உள்ளது - வர இயலாது எனினும் எனது வாழ்த்துக்கள் என்று தான் சொன்னார்). ஆனால் முகூர்த்த சமயத்தில் மிகச் சரியாக அவர்கள் வந்து "பாலா' என்று அழைத்தார். ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து "அம்மா எனக்கு தங்கள்வருகை இன்ப அதிர்ச்சி என்றேன். இத்தனை உடல் உபாதையோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி" என்றேன். அதற்கு அவர்கள் தந்த பதில் தான் எனது கண்ணில் நீர் வரவழைத்தது "பாலா உங்கள் மகள் திருமணத்திற்கு அழைத்தீர்கள். எனது உயிரை விட மேலானது உங்கள் அன்பு. வராமல் இருக்க முடியவில்லை". இதைக் கேட்டவுடன் எனது உடல் சற்று ஆடி நின்றது.
"இறைவா உனது கருணை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களை நான் உங்கள் காலடியில் சமர்ப்பித்து மகிழ்கிறேன். அன்பு பொழியும் அற்புதமான மனிதர்கள் கூட்டத்தில் என்னை கொண்டு சேர்த்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்."
மகள் திருமணத்திற்கு வந்து ஆசி வழங்கி மனம் குளிர்விக்க செய்த அனைவருக்கும் எனது நன்றி மலர்களை சமர்ப்பணம் செய்கிறேன்.

No comments:

Post a Comment