பயிற்சி வகுப்பு அனுபவங்கள் :
சென்னைக்கு வெளியே சென்று பல பயிற்சி வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சி. இது சற்று வித்தியாசமானது. வழக்கமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படி இருக்கும். ஆனால் இது வேற மாதிரி ஒன்று.
பல நிறுவனங்களில் இருந்து இருவர் மூவர் அல்லது நான்கு பேரை நியமித்து அனுப்பி இருந்தார்கள்.
பயிற்சியின் முக்கிய பிரதான டாபிக் - பாடத்தை தொடங்கும் முன்பு கலந்து கொள்ளுபவர்கள் தங்களுக்கு சில புரிதல் வருவதற்கும், எனக்கும் அவர்களுக்கும் ஒரு சுமுகமான உறவு மலர்வதற்கும் சில எனெர்ஜெய்சர் மற்றும் ஐஸ் பிரேக்கர் விஷயங்களை செய்வது வழக்கம்.
சில பாடல் வரிகளை பாடச் செய்து பங்கேற்பாளர்கள் இருவர் இருவராக பிரிந்து சில விஷயங்களை பேசி பகிர்ந்து கொள்ளச் செய்வது வழக்கம்.
அப்படித்தான் அந்த சமீப நிகழ்ச்சியிலும் நடந்தது.
அந்த பகிர்வுகளுக்கு பிறகு அவர்கள் மனதில் என்ன மாதிரி பாதிப்பு ஏற்பட்டது என்று சிலரை அழைத்து தமது அனுபவங்களை மற்றவரோடு பகிர்ந்து மகிழுங்கள் என்று சொல்லுவேன்.
செந்தில் என்று ஒருவர் வந்து மைக் பிடித்து, " நீங்கள் அம்மாவைப் பற்றி பேசச் சொன்னீர்கள். எனக்கு சின்ன வயதிலேயே அம்மா காலமாகி விட்டார்கள். எனது அம்மாவாக இருந்து என்னை வாழ்க்கையில் முன்னேறச் செய்தது எனது அக்கா தான் என்று சொல்லி விட்டு சற்று உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் 'சார் இன்னும் இரண்டொருவர் பேசிய பிறகு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது அதனைச் சொல்கிறேன்' என்றார். அப்படி என்ன அது சர்ப்ரைஸ்என்று யோசித்த படி நானும் சரி என்றேன்.
மேலும் மூன்று பேர் பேசிய பிறகு மீண்டும் நண்பர் செந்தில் அவர்கள் மைக் எடுத்து பேசினார். 'சார் எனது அக்கா தான் என்னை உயர்த்தினார் என்று சொன்னேன் அல்லவா? அவர்கள் திருமணத்திற்குப் பிறகு வேறு ஊருக்கு சென்று அங்கே ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் வந்துள்ளார். நீங்கள் அம்மாவைப் பற்றி பேசுங்கள் என்று சொன்ன போது அவர் தான் எனது பார்ட்னர்' என்று கண்ணில் ஈரத்துடன் அந்த ரகசியத்தை போட்டு உடைத்தார்.
அந்த அரங்கில் இருந்த அனைவரின் புருவங்களும் உயர்ந்து இறங்கின. சிலர் கண்களும் ஈரமாகின. எனக்கும் தான். யார் என்று எழுப்பி அவரைப் பாராட்டி கைதட்டி அவருக்கும் நண்பர் செந்திலுக்கு சாக்லேட் கொடுத்து இருக்கைக்கு அனுப்பி வைத்தேன். இப்படி ஒரு வித்தியாசமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது இதுவே முதல் முறை. வழக்கமாக நான் தான் மூத்த மகன். எனது தம்பி தங்கைகளை படிக்க வைத்து பிறகு தான் வாழ்க்கையில் செட்டில் ஆனேன் என்று சிலர் என்னைப் போலச் சொல்லுவது பார்த்திருக்கிறேன். இது கொஞ்சம் புதுசு.
No comments:
Post a Comment