பயிற்சி வகுப்பு அனுபவங்கள்
ஒவ்வொரு முறை எனது பயிற்சி வகுப்புகளில் வந்து உட்காருபவர்களும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வருவார்கள்.
தேநீர் இடைவேளைகளில் உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்து பேசுவர் சிலர். சிலர் சார் ஒரு செல்பி என்று போனை நீட்டுவார்கள். சிலர் உங்க நம்பர் கிடைக்குமா என்பார்கள். வெகு சிலர் சார் உங்கள் கட்டுரைகள் படித்து இருக்கிறேன். உங்களை ஏற்கனவே டிவியில் பார்த்து இருக்கிறேன். இப்படி பலர் பல விதமாக.
அண்மையில் நடந்த பயிற்சி வகுப்பு ஒன்றில் எல்லோருமே இளைஞர்கள். மிகவும் சுறுசுறுப்பாக, மிகுந்த ஆர்வத்துடன் எல்லா விஷயங்களிலும் கலந்து கொண்டனர். என்னுடைய கருத்துக்கு மாற்றுக்கருத்து, உடன்பட்ட கருத்து, புதிய சில கருத்து என்று அவ்வப்போது பேசி நிகழ்ச்சிக்கு மேலும் பலம் சேர்த்தார்கள். ஒரு சிலர் மௌனமாக இருந்தனர்.
யார் இது வரை யார் பேசவில்லை, எதிலும் கலந்து கொள்ளவில்லை என்று நான் கவனித்துக் கொண்டே இருப்பேன். அவர்களை எழுப்பி உசுப்பி விட்டு பேச வைப்பேன். நன்றாக பேசினால் சாக்லேட் கொடுத்து கைத்தட்டு பெற்றுத் தருவேன். அப்படித்தான் அன்று இருவர் பேசவே இல்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். எனது முயற்சிக்கு பலன் இல்லை.
மதிய நேர தேநீர் இடைவேளைக்கு பிறகு தாடி வைத்த (இருவரில் ஒருவர்) ஒருவர் எழுந்து அருமையான கருத்து சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவ்வளவு நேரம் ஏன் அமைதியாக இருந்தீர்கள். மிகவும் சிறப்பாகப் பேசுகிறீர்களே என்று கேட்டேன். அவர் சொன்னார். சார் நான் நேற்று இரவு முழுவதும் ஷிப்ட் பார்த்து விட்டு நீண்ட தூரம் பயணம் செய்து இந்த பயிற்சிக்கு வந்தேன். அந்த களைப்பு உங்கள் பேச்சில் மற்றவர் பங்கேற்பில் மறைந்து விட்டது. அது தான் இப்போது பேசினேன். என்றார். நான் அவரது அயற்சி பாராத உற்சாகத்தை பாராட்டினேன்.
அடுத்து நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் அந்த இரண்டாவது மௌன சாமி இளைஞர் எழுந்து பேச மைக் கேட்டார். "சார் நான் இது நாள் வரை அதிக நேரம் தூங்குவேன். எனது மனைவிக்கு இதய நோய் உள்ளது. இனி நான் சீக்கிரம் எழுந்து அவருக்கு என்னால் இயன்ற உதவிகள் செய்வேன். எனது தூக்கத்தையும் போன் நேரத்தையும் குறைத்துக் கொள்ளுவேன்" என்றார். உங்களுக்கு வயது ...என்று தயங்கினேன். அவர் 26 என்றார். உங்கள் மனைவிக்கு என்றேன். அவர் 28 ...எங்களுக்கு காதல் திருமணம் என்றார்.
அரங்கமே ஒரு இனம் புரியாத அமைதிக்கு போனது. உடனே நான் சமாளித்து கவலை வேண்டாம். இங்கே இருக்கும் நாங்கள் அனைவரும் அவர் சீக்கிரம் பூரண குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம் என்று ஒரு நிமிடம் அனைவரும் மௌனமாக பிரார்த்தனை செய்தோம். பிறகு நான் சொன்னேன். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்த ஊரில் மிக முக்கிய பிரமுகர். நான் அவரிடம் சொல்லி உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று பார்க்கிறேன் என்று சொன்னேன். பிறகு அதே போல அந்த பிரமுகரிடம் சொன்னவுடன் அவரும் மறுநாளே அந்த ஊரின் நல்ல இதய மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தருவதாகவும் வேறு உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தார். என் மனது இன்னும் அவருக்காக அவர் மனைவிக்காக செய்து கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment