Wednesday, December 22, 2021

தீராப்பிணி

 தீராப்பிணி 

- குறுங்கதை 
- பாலசாண்டில்யன் 

சரவணன் இளங்கலை படிப்பு படித்து நேரடியாக ஒரு தனியார் வங்கியில் வேலைக்கு சேர்ந்த இளைஞன். பார்க்க அஜித் போல இல்லாவிடினும், விஷால் போல கருப்பு இல்லை. அவன் சேர்ந்த அதே நாளில் வேலைக்கு சேர்ந்தவள் தான் சாந்தி.

சாந்தி முதுகலை படித்து இருந்தாள். பார்க்க நல்ல லட்சணம். மாநிறம். நல்ல புத்திசாலி. பார்த்த மாத்திரத்தில் சரவணனுக்கு சாந்தி மீது ஓர் ஈர்ப்பு. சகஜமாக பழகினான். 143 என்றெல்லாம் சொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அமையும் என்று காத்திருந்தான். 

சாந்தியும் இவனை சாப்பாடு வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாள்.  சில நேரம் பைக்கில் போகிற வழியில் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடச் சொன்னால்  அது போகிற வழி இல்லை என்றாலும் சரவணன் சரி என்று அதைச் செய்தான். அவள் பிறந்த நாளில் அவளுக்கு பிடித்த பாட்டை ஸ்டேட்டஸ் ஆக வாட்ஸாப்பில் வைத்தான்.  அவளுக்கு நல்ல பரிசு வாங்கித் தந்தான்.  அவளும் மறுக்காமல் அதனை ஏற்றாள் 

சரவணன் சில நாட்களாக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தான். லேட்டாக வருவது, அடிக்கடி பெர்மிஷன் போடுவது என்று இருந்தான். அவன் சில சோகப்பாட்டை  ஸ்டேட்டஸ் ஆக வாட்ஸாப்பில் வைத்தான். அதனைக் கண்டும் காணாதது போல இருந்தாள் சாந்தி. 

காரணம், சாந்தியின் தங்கை திடீரென காதல் திருமணம் செய்து கொண்டாள். அதில் சாந்தியுடன் கூட இருந்து சரவணன் எல்லா உதவிகளும் செய்தான். அப்போது தான் தனது எண்ணத்தை தெரிவித்தான். சாந்தி சற்றும் யோசிக்காமல் நான் உங்களோடு அப்படி பழகவில்லை என்று மறுத்து விட்டாள். உடைந்து போனான் சரவணன். 

தாடி வளர்த்தான். தூக்கம் தொலைத்தான். முக வாட்டத்துடன் காணப்பட்டான். நண்பர்கள் பலர் வந்து சரிசெய்ய முயற்சி செய்தும் பலனில்லை. இதற்கிடையே சரவணனின் மேலதிகாரி இவனை பற்றி எழுத்து மூலம் புகார் அளித்தான். சரவணன் ஹெட் ஆபீஸ் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 

சரவணன் அந்த மேலதிகாரியிடம் தனது காதல் தோல்வி விவகாரம் பற்றி சொல்லி தனக்கு பணியிட மாற்றம் கேட்டான். இனி வேலையில் சரியாக கவனம் செலுத்துவேன் என்று உறுதி அளித்தான். அதன் படி வேறு மாவட்டம் மாற்றல் ஆனது.

ஒரு மாதம் கூட ஆகி இருக்காது. சாந்தியின் நிச்சயம் என்று காதில் விழுந்தது. அந்த நிமிடமே சரவணனின் காதல் விழுந்தது. 

அவனுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. 

சாந்தியின் சித்தி மகன் இவனுக்கு மிகவும் நெருக்கமானவன். அவன் மூலம் இவனுக்கு நிச்சயதார்த்த பத்திரிகை கிடைத்தது. அதைப் பார்த்ததும் இவனுக்கு ஒரே ஷாக். காரணம், அதில் மாப்பிள்ளை பெயர் சரவணன் என்று இருந்தது. என்ன இது என்னை நேரடியாக நிராகரித்து விட்டு என் பெயர் போட்டு நிச்சயம் நடக்கப்போகிறது? 

சாந்தி வீட்டில் இருந்து முறைப்படி அழைப்பு வரும். தனது கனவு நிறைவேறும் என்று தோன்றியது. வெகுநாட்களாக கோவிலுக்கு போகாத சரவணன் திடீர் என்று அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து நெற்றியில் விபூதி குங்குமம் பூசிக் கொண்டு நல்ல சாப்பாடு சாப்பிட்டான். 

சாந்தியின் சித்தி மகன் சுரேஷுக்கு போன் செய்து நிச்சய பத்திரிகையில் தனது பெயர் இருப்பது குறித்து விசாரித்தான். சுரேஷ் சரியாக பேசாமல் மென்று விழுங்கினான். குழம்பிப் போன சரவணன் "டேய் மச்சான் சுரேஷ் உண்மையை சொல்லுடா, யார்டா இந்த சரவணன் நான் தானே?" என்றான். 

சுரேஷ் உண்மையை போட்டு உடைதான். "சாரிடா சரவணா, மாப்பிள்ளை  பெயர் அது தான், அது நீயில்லை, மாப்பிள்ளை பூனாவில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறான்". மார்கழி பனி அவன் தலையில் ஆழமாக இறங்கியது. அது தீரா பிணி என்று புரிந்தது அவனுக்கு.

No comments:

Post a Comment