Tuesday, February 4, 2014

மாறி வரும் மக்களின் ரசனை



மாறி வரும் மக்களின் ரசனை – Dr. பாலசாண்டில்யன்

சில பல விஷயங்களை நேரில், ஊடகங்களில், அலுவலகங்களில் பார்த்த போது மனதில் தோன்றிய விஷயம் இது தான்....! ஒவ்வொரு விஷயத்திலும் மக்களின் ரசனை மிகவும் மாறிக்கொண்டு வருகிறது

முதலில் உணவு : வீட்டில் தினமும் சமைத்துச் சாப்பிட்ட வழக்கம் மாறி அடிக்கடி ஹோட்டல் போகும் வழக்கம் பிடித்துக் கொண்டு விட்டது.  வீட்டில்    4-5 தோசை சாப்பிட்டவர் ஹோட்டலில் ஒரு தோசை சாப்பிட்டு வயிறு நிறைப்புகிறோம்.  நிறைய சைனிஸ், வட இந்திய உணவுகளை சாப்பிடுகிறோம். ரோடு கடையில் தயங்காமல் சாப்பிடுகிறோம்.  நிறைய போண்டா, பஜ்ஜி, கப் கார்ன், வறுத்தது, பொரித்தது சாப்பிடுகிறோம்.  அசைவ பிரியர்கள் KFC போன்ற கடைகளில் சென்று குளிர் பதனீடு செய்த சிக்கன் உணவுகளை நிறைய தயங்காமல் உண்கிறார்கள்.  தாய், இடாலியன் என்று வெளி நாட்டு உணவுகளையும் சுவைக்க நினைக்கிறார்கள். வாங்கி சுட வைத்து சாப்பிடும் பழக்கமும் அதிகரித்துள்ளது.  Coffee Day போன்ற கடைகளுக்கு சென்று நூறு ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ஒரு காபி குடிக்கிறார்கள். சிலர் சில உணவுகளை தேடித் தேடி சாப்பிடுகிறார்கள்.

அடுத்தது பெண்கள் : உடை மாறி விட்டது, தலை முடி விரித்த கோலம், சம்பிரதாயம் கடந்த நடவடிக்கைகள்...அது மட்டுமா? சிலர் வாரத்திற்கு ஒரு முறை தான் சமைக்கிறார்கள். கணவனிடம் தயங்காமல் வேலை வாங்குகிறார்கள்.  நிறைய காசு make-up க்கு செலவு செய்கிறார்கள்.

இசை : நாக்கு முக்கா போன்ற வேகமான குத்து பாடல்கள் அதிகம் கேட்கிறார்கள். மெலோடி பாடல்கள் சிலருக்கு மட்டுமே பிடிக்கிறது. இசைஞானியை விட DSP போன்றவர்கள் மக்களைக் கவர்கிறார்கள் ...அந்தோ ! ஹரிஹரன், SPB யை விட கானா பாலா அதிகம் பிரபலம். எவண்டி உன்னை பெத்தான் போன்ற பாடல்கள் அதிகம் கேட்கப் படுகிறது.  நல்ல பாடல் வரிகள் மனதுக்குள் நுழையாமல் இருக்கிறது.


திரைப்படம் : “மனம் கொத்திப் பறவை” போன்ற கவித்துவ தலைப்புகளை விடபிஸ்ஸா”, “கோலி சோடா” இவை மக்களுக்கு பிடிக்கிறது.

இளைஞர்கள் : ஹோட்டல், அரசு வேலை, தையல் வேலை, ப்ளம்பர், கார்பெண்டர், டிரைவர் காலியாக இருக்கிறது. எல்லோரும் IT வேலை விரும்புகிறார்கள். அந்நாளில் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று இருந்தது போய் "என் பணி கடன் பட்டுக் கிடப்பதே" என்று மாறி வருகிறது. வேலை செய்யாமல் சம்பளம் நிறைய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பத்திரிகை மற்றும் எழுத்து : முன்பு சிவசங்கரி, சுஜாதா, பாலகுமாரன், லக்ஷ்மி போன்ற எழுத்தாளார்கள் பிரபலம். இன்று எவரையும் படிக்கிறார்கள் ....கவர்ச்சியாக இருந்தால்...! கல்கி, கலைமகள், அமுதசுரபி படிப்பது தவறு. டைம் பாஸ் தான் சூப்பர்.

சமூக வலைத்தளம் : மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றாலும்லைக்’ போடுவார்கள். ஆயா செத்தாலும்லைக்’ போடுவார்கள். மனச்சிக்கல் எதையுமே நண்பர்கள், உறவினர்களிடம் சொல்வதற்கு பதில் முகநூலில் புலம்புகிறார்கள்.

தன்னை அறியாமல் சிக்கித் தவிப்பது : EMI, மிஸ்ட் கால், Mall, புதுப் புது மொபைல், படாடோபம் எதற்கெடுத்தாலும் பார்ட்டி.....!

கலாசாரம் : கலப்புத் திருமணம், திருமணத்திற்கு முன்பே விவாக ரத்து, மது அருந்தல், வேலை மாற்றல், வரவுக்கு மீறிய செலவு ....!

கமல், விக்ரம் இவர்களை விட சந்தானம்….பாலு சார், ஹரிஹரன் இவர்களை விட கானா பாலா….இட்லி- வடையை விட நூடுல்ஸ், பிஸ்சா….. புடவையை விட ஜீன்ஸ்…. பெற்றோரை நேரில் பார்ப்பதை விட மொபைல் மூலம் பணம் அனுப்புவது…. குழந்தை சமையல், குழந்தை ஆடல் பாடல், தெருவில் சத்தமாக பேசிக் கொண்டே நடப்பது, வேலை போனா கூட கவலை படாதவர்கள் மொபைல் காணவில்லை என்றால் அழுகை ….இப்படி எல்லாமே மாறி விட்ட ரசனைகள்....! எங்கே போய் முடியுமோ ! நல்லா இருந்தா சரி ...!