Friday, December 30, 2022

மலர் மனம்

 மலர் மனம்

காலை இளம் வெயில்
போலே இதமாக
இருக்கும்
உன்னை சந்திக்கும்
வேளையில்
மழையில் நனைவது
போலுள்ளது
ஏனோ.. ஒரு இனம் புரியாத
பயமும் தொடர்கிறது... ?!
சில விஷயங்களை
நினைக்கிறேன்
சில விஷயங்களை
எழுதுகிறேன்
சில விஷயங்களை
சொல்கிறேன்
சில விஷயங்களை
எழுதி அழிக்கிறேன்
சிலவற்றைஎழுதி
பின்னர் கிழிக்கிறேன்
எல்லாவற்றையும்
எல்லோருக்கும்
சொல்ல வேண்டும் என்று
என்ன கட்டாயம்...?!
உன் உதடுகள்
என் பெயரை உச்சரிக்கும் போது
குல்மொஹர் பூக்கள்
உதிர்வது போலுள்ளது...!!
எனக்குள் என்ன நடக்கிறது
என்பதை மனதில்
எண்ணி மகிழ்கிறேன்
எல்லாவற்றையும்
எல்லோருக்கும்
சொல்ல வேண்டும் என்று
என்ன கட்டாயம்...?!
- பாலசாண்டில்யன்

Purantharadasa poem translation

 தர்மமும் உதவியும் செய்ய முன்வரவில்லை கைகள் - மனம்

தாங்கொணா பாவங்கள் செய்ய தவறவில்லை செய்கைகள்
இது பொறுத்தருள இயலா கலி காலம் என் செய்ய
இறைவனே சாட்சி பூதம் யாரென் செய்ய
ஏமாற்றுக்காரர்கள் திருடர்கள் கொள்ளையர்கள்
இயங்கிடும் மிக மோசமான பெருங்காலம்
மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இல்லை நேரம்
வெட்கமற்ற பிடிவாதக் காரர்களின் அலங்கோலம்
பொய்யர்களின் காலம் மோசக்கார்களின் காலம்
நல்லவர்கள் வல்லவர்களுக்கு இல்லை இக்காலம்
அடிமைகளாக வாழும் உலகில் அன்புக்கில்லை காலம் - பெற்ற
அன்னைக்கே வந்த சோதனைக் காலம் என் செய்ய
பொய் தான் ஆனது இங்கே மெய் அய்யோ
வீணரால் பயனுள்ள பொருளும் வீணென ஆனது
மருமகளே மாமியாரை தண்டிக்கும் நவீன காலம்
உண்மையை போற்றும் மனிதருக்கு இல்லை இக்காலம்
(தர்மக்கே கை பாரதி கால - புரந்தரதாசர் பாடலின் சாராம்சம்)
முயற்சி : பாலசாண்டில்யன்

கொண்டு வா இன்னொரு மொந்தை

 கொண்டு வா இன்னொரு மொந்தை

கொல்லட்டும் அது எனது சிந்தை
நினைவைப் பற்றிப் பேசுவேன்
நினைவு எனக்கு வந்தவுடன்.........
கொண்டு வா இன்னொரு மொந்தை
கொல்லட்டும் அது எனது சிந்தை
நிறம் பற்றிப் பேசுவேன் எனது
நிறம் முழுதும் வெளுத்த பின்னர்
கொண்டு வா இன்னொரு மொந்தை
கொல்லட்டும் அது எனது சிந்தை
ஒரு முறை பார்த்த காரணம் போதை
ஒரு முறை முறைத்தாள் பிறந்தது கீதை
கொண்டு வா இன்னொரு மொந்தை
கொல்லட்டும் அது எனது சிந்தை
சத்தியம் இறந்தது நான் என்ன செய்ய
பைத்தியம் பிறந்தது என் மனம் கொய்ய
கொண்டு வா இன்னொரு மொந்தை
கொல்லட்டும் அது எனது சிந்தை
ஜனமும் மரணமும் இங்கு போராட்டம்
ஜனித்தது புது எண்ணம் அது நீரோட்டம்
கொண்டு வா இன்னொரு மொந்தை
கொல்லட்டும் அது எனது சிந்தை
வாழ்க்கையே என்றும் தள்ளாட்டம்
வாழ்வது இம்முறை ஒரு வெள்ளோட்டம்
கொண்டு வா இன்னொரு மொந்தை
கொல்லட்டும் அது எனது சிந்தை
(பங்கஜ் உதாஸ் கேட்டதன் பயன்)
- டாக்டர் பாலசாண்டில்யன்