Thursday, August 29, 2019

மகள் திருமண அனுபவங்கள்



மகள் திருமண அனுபவங்கள்
மூத்த மகள் சுபாஷிணியின் திருமணம் ஏப்ரல் மாதக் கடைசியில் நிச்சயம் செய்தோம். மே மாதம் கிட்டத்தட்ட ஜவுளி எடுத்தல், மண்டபம் புக் செய்தல், அழைப்பிதழ் தயாரித்தல், முக்கிய உறவினர்களை, வீட்டின் மூத்தவர்களை நேரில் சென்று அழைத்தல் என்று திருமண வேலைகளை கத்திரி என்று கூட பாராமல் நல்லதொரு நாள் பார்த்து தொடங்கி போய்க் கொண்டிருந்தது. அழைக்கப் போன இடங்களில் சில உறவினர்கள் என்ன இவ்வளவு முன்பே அழைக்கிறீர்கள். மறந்து போய் விடுவோம் என்றனர் விளையாட்டாக. மீண்டும் நினைவூட்டுகிறோம் என்று சொன்னேன்.
எல்லாமே இறைவன் எழுதிய ஸ்கிரிப்ட் என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் தான்.
ஜூன் மாதம் 17 ஆம் தேதி எனக்கு மிகப்பெரிய இடி போல் அதிர்ச்சி காத்திருந்தது. (ஜூன் 18 எனது பிறந்த நாள். நான் 59 முடிந்து 60 க்குள் கால் பதிக்கும் இனிய நாள் - அதனை எப்படிக் கொண்டாடுவது என்று எனது இரண்டு மகள்களும் சில இன்ப அதிர்ச்சி தரும் திட்டங்கள் தீட்டி இருந்தார்கள் போலும்) இரண்டு பெண்களும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு மிக அருகே ஒரு மாஜிக் கால் டாக்ஸி திடீர் பிரேக் போட்டதால் இவர்களும் பிரேக் போட்டு வண்டியில் விழுந்து சரியான காயம் பட்டுக் கொண்டார்கள். இளையவளுக்கு வலது கால் பாதத்தில் ஹேர் லைன் எலும்பு முறிவு. திருமணப் பெண்ணுக்கு அதே வலது காலில் முட்டிக்கு கீழ் இருக்கும் எலும்பில் முறிவு ஏற்பட்டு ஐந்து துண்டுகளாகி அதற்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்து பிளேட் ஸ் வைத்தார் மூத்த எலும்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சுப்பையா. உடன் இருந்து உதவியவர் மூத்த மருத்துவர் (குடும்ப நண்பர்) டாக்டர் பாஸ்கர். இந்த தருணத்தில் மிகவும் அக்கறையோடு உதவி எனது மகளை ஊக்கப்படுத்தியவர்கள் பிசியோ லக்ஷ்மணன் மற்றும் எங்கள் மீது அளவிலாத அன்பு செலுத்தும் நண்பர் முருகன் அவர்களும் தான்.
இரண்டு மகள்களுக்கும் காலில் கட்டு போட்டு அடுத்த அடுத்த கட்டிலில் படுத்த அன்று எப்படி பிறந்த நாள் கொண்டாட முடியும். போனில் அழைத்த பல நெருக்கமான நண்பர்கள் எனது குரல் சற்று சுருதி குறைந்து இருப்பதைக் கண்டுபிடித்து என்னவென்று கேட்க நடந்த அசம்பாவிதத்தை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. நானும் எனது மனைவியும் நெஞ்சு அடைத்துப் போனோம். எப்படி இந்தத் திருமணம் நடக்கப் போகிறது என்று. ஆனால் அங்கே தான் இறைவன் தனது அருளையும் (சோதனையுடன்) காட்டுகிறார். வீட்டுக்கு வர இருக்கும் மாப்பிள்ளை திரு சந்தோஷ் மற்றும் அவரின் பெற்றோர் மிகவும் தங்கமான மக்கள். அவர்களின் நல்ல உள்ளம், பிரார்த்தனை, மற்றும் ஆறுதல் சொல்லில் அடக்கிட முடியாது. அதே போல என்னுடைய (உரத்த சிந்தனை) நண்பர்கள், அக்கறை கொண்ட மற்ற நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரின் பிரார்த்தனையால் எனது மகள் சுபாஷிணி படிப்படியாக குணமாக ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக திருமண வேலைகள் அப்படியே முடங்கிப்போயின்.நானும் எனது மனைவியும் தான்.
இடையே எனது பணி நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிட்டது. அப்போதெல்லாம் எனது மனைவி மற்றும் இளைய மகள் (ஓரளவுக்கு குணமாகி விட்டபடியால்) மூத்த மகளை காரில் கூட்டிப்போய் முடிக்க வேண்டிய இதர ஷாப்பிங் செய்து முடித்தார்கள். இந்த சமயத்தில் தினமும் 108 முறை பிரார்த்தனை காலில் முட்டி போட்டபடி செய்தவர் ஜீ டிவி புகழ் ராக் ஸ்டார் ரமணி அம்மாள். சிதம்பரம் கஸ்தூரிபாய் கம்பெனியின் திரு முத்துக்குமார் அவர்கள். கல்யாணப்பெண் எப்படியோ நாலு கால் வைத்த வாக்கரில் இருந்த இரண்டு ஒற்றைக் கால் வாக்கர் பிடித்து நடக்க ஆரம்பித்தாள். இருப்பினும் எப்படி திருமணத்தில் நடக்கப் போகிறாள், நிற்கப் போகிறாள் என்ற பயம் இருக்கவே செய்தது. அவள் எந்த நம்பிக்கையை மட்டும் பிடிமானமாக வைத்து வாக்கரை ஓரம் கட்டி விட்டு திருமண மண்டபத்தில் நம்பிக்கையுடன் நடந்தாள் என்றால் அதற்கு ஊக்கம் தந்தது லண்டனில் இருந்து தனது இரண்டு மகள்களுடன் வந்திருந்த எனது மைத்துனி ஸ்ரீவித்யா மற்றும் எங்களுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசிக்கும் மாடி வீட்டு திரு ராஜா அவர்களும் தான். எல்லாம் இறைவன் அருள். மகளின் தீராத மன உறுதி. மாப்பிள்ளை சந்தோஷ் அவர்களின் அன்பு மற்றும் கரிசனம் இவற்றால் மகளும் நடந்தாள் நம்பிக்கையுடன். திருமணமும் மிக விமர்சையாக நடந்தது.
அதற்கு மிகவும் உறுதுணை கேட்டரிங் கான்ட்ராக்டர் அப்பு வெங்கட்ராமன், போட்டோகிராபர் விக்கி மனோ மற்றும் உதயம் ராம் போன்ற நண்பர்கள். இந்த கஷ்டமான காலகட்டத்தில் நல்ல நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் அவ்வப்போது நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.
நேற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு வெகு விமர்சையாக மகளின் திருமணம் நடைபெற்றது.
காய்கறி கடைக்காரர் ஜெயராமன், துணி இஸ்திரி செய்து தரும் தாட்சாயணி அம்மாள், வீட்டு வேலை செய்யும் காயத்ரி, மகளுக்கு குறைவான நேரத்தில் துணிகள் தைத்துத் தந்த டைலர், மருந்துகடைக்காரர், மேக்கப் செய்த கொல்கத்தா தபன் என்று பல சாமானியர்கள் கலந்து கொண்டார்கள்.
மறுபக்கம் உரத்த சிந்தனை அமைப்பில் இருந்து சென்னை, திருச்சி, தேனி, ஹைதராபாத், கோயம்பத்தூர் எல்லா ஊர்களில் இருந்தும் வந்து ஆசி வழங்கி அன்பு காட்டிய நண்பர்களை எப்படி பாராட்டுவது.
அது மட்டுமா? இயக்குனர் விசு சார், டெல்லி கணேஷ், இயக்குனர் வசந்த் சாய், ரவி தமிழ்வாணன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், மாம்பலம் சந்திரசேகர், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், தொழில் அதிபர் முரளி ஸ்ரீனிவாசன், வாசுகி கண்ணப்பன், ராக் ஸ்டார் ரமணி அம்மாள், திருமதி பாரதி திருமகன், நடிகர் எஸ்விஎஸ் குமார், சேவாலயா முரளிதரன், ஆனந்தம் பாகிரதி, அமுதா பாலகிருஷ்ணன், ஆடிட்டர் என்ஆர்கே, கார்முகிலோன், இதயகீதம் ராமனுஜம், கண்ணன் விக்கிரமன், உலகநாயகி பழனி, பெரியண்ணன், பத்மினி பட்டாபிராமன், உதயம் ராம், ராஜசேகர், துளசி பட், எம்ஓபி கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ஷிவ் ரிஷி எனும் என்கேடி ஜெயகோபால், சுஷ்மா ரங்கநாதன், வயலின் வித்வான் கல்யாணி சங்கர், வருமான வரி இணை கமிஷினர் திரு நந்தகுமார் ஐஆர்எஸ், மேகநாதன், சாய் சங்கரா பஞ்சாபகேசன், சிரிப்பானந்தா, துரைசாமி, சாரதா ரமணி மற்றும் அவரது கணவர் நடிகர் ரமணி அவர்கள், மூத்த எழுத்தாளர் ருக்மணி சேஷசாயி, பாலா திரிபுரசுந்தரி, ஸ்ருதிலய வித்யாலயா பார்வதி, என்று பற்பல விவிஐபிக்கள் வந்து ஆசி வழங்கி மகிழ்ந்தனர்.
தவிர எனது பால்ய சிநேகிதர்கள் எத்திராஜன், கிரிதர், நரசிம்மன், என்று சிலர். மேலும் எனது குரு டாக்டர் நடராஜன் அவர்களின் மனைவி, எனது ஆசான் திரு ஆரவாமுதன், பயிற்சியாளர்கள் பட்டாளம் - ஆறுமுகம், சந்திரமோகன், கண்ணன் ராஜா, ஷிவாஸ், ராமசுப்பிரமணியன், அஷ்ரப், பிரசன்னா, ரங்கசாமி, பேராசிரியர் சாய்குமார், சுரேகா, உதயசான்றோன், முருகபாரதி, வசந்தகுமாரி, என்று அற்புத ஆசான்கள், தவிர எனது மகளின் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், என்று நிறைய நண்பர்கள், அது மட்டுமா ? எனது முன்னாள் மேலதிகாரி சாலமன் சம்பத்குமார், என்னை ஆளாக்கிய முன்னாள் மேலதிகாரி திரு லோதா அவர்களின் புதல்வர் ராஜேஷ் லோதா, அக்கம் பக்கத்தார், உறவினர்கள், சுற்றத்தார், என்று எல்லோரும் சூழ மகளின் திருமணம் மிகவும் இனிதே நடைபெற்றது என்பது இறையின் திருவருளே. அவரின் கொடையே.
இதில் மிகவும் முக்கியமான விஷயம் : உடல்நிலை மற்றும் வயது வலி பாராட்டாது திருமணத்திற்கு வந்து ஆசி வழங்கிய இயக்குனர் விசு அவர்கள் "உனக்காக நான் வராமல் இருப்பேனா" என்ற பொழுது மனம் உருகிப் போனேன். கடந்த பத்து பதினைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் திரு டெல்லி கணேஷ் அவர்கள் "உடம்பு முடியவில்லை. இருந்தாலும், உன் மகள் திருமணத்திற்கு வராமலும் இருக்க முடியவில்லை" என்று வந்து ஆசி வழங்கினார்.
எனது கண்ணீர் உருண்டோடிய தருணம், மனம் நெகிழ்ந்த சமயம் என்னவென்று கேட்டால் - அது மூத்த எழுத்தாளர் அம்மா சிவசங்கரி அவர்கள் என்னிடம் சொன்னது தான். (நான் அவர்கள் தமிழக அரசின் 'பாரதி' விருது பெற்றமைக்கு பாராட்டு தெரிவிக்க நண்பர் உதயம் ராம் அவர்களோடு அவர்கள் இல்லம் சென்ற பொழுது மகள் திருமணத்திற்கு வாருங்கள் என்று மீண்டும் ஒரு வரவேற்பு அழைப்பை கொடுத்தேன் - அவர்கள் 11 மாதங்களில் எனக்கு இரண்டு முறை இதய நோய் வந்து அறுவை சிகிச்சை நடந்து உள்ளது - வர இயலாது எனினும் எனது வாழ்த்துக்கள் என்று தான் சொன்னார்). ஆனால் முகூர்த்த சமயத்தில் மிகச் சரியாக அவர்கள் வந்து "பாலா' என்று அழைத்தார். ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து "அம்மா எனக்கு தங்கள்வருகை இன்ப அதிர்ச்சி என்றேன். இத்தனை உடல் உபாதையோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி" என்றேன். அதற்கு அவர்கள் தந்த பதில் தான் எனது கண்ணில் நீர் வரவழைத்தது "பாலா உங்கள் மகள் திருமணத்திற்கு அழைத்தீர்கள். எனது உயிரை விட மேலானது உங்கள் அன்பு. வராமல் இருக்க முடியவில்லை". இதைக் கேட்டவுடன் எனது உடல் சற்று ஆடி நின்றது.
"இறைவா உனது கருணை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களை நான் உங்கள் காலடியில் சமர்ப்பித்து மகிழ்கிறேன். அன்பு பொழியும் அற்புதமான மனிதர்கள் கூட்டத்தில் என்னை கொண்டு சேர்த்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்."
மகள் திருமணத்திற்கு வந்து ஆசி வழங்கி மனம் குளிர்விக்க செய்த அனைவருக்கும் எனது நன்றி மலர்களை சமர்ப்பணம் செய்கிறேன்.

Saturday, August 10, 2019

பயிற்சி வகுப்பு அனுபவங்கள்

பயிற்சி வகுப்பு அனுபவங்கள்

சுமார் எட்டு ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம். இன்று நினைத்தாலும் எனக்கு தூக்கி வாரிப் போடும். ஆச்சரியமானதொரு சம்பவம் அது.

சென்னையைச் சார்ந்த ஒரு தெர்மல் பவர் நிறுவனத்தின் சார்பாக சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா என்ற ஊருக்குச் சென்று அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு ஹிந்தியில் பயிற்சி கொடுக்கச் சென்றிருந்தேன். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். 

ஒடிஷா - ஜார்ஸகுடா என்ற ஊரில் இரண்டு நாட்கள் பயிற்சி முடித்து விட்டு இரவு சுமார் எட்டு மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டோம் கோர்பா நோக்கி.  கார் டிரைவர் தமிழ்க்காரர் தான். நல்ல இளையராஜா பாட்டுகள் பல  போட்டு பயணத்தை இனிமையாக்கினார்.  உடன் வந்த மற்றொரு பயிற்சியாளர் ஒரு சில மணி நேரத்தில் களைப்புடன் தூங்கிப் போனார். நான் முன் சீட்டில் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே பயணம் செய்தேன். வழி முழுவதும் கும்மிருட்டு. நடுவே திடீர் என்று 1000 வாட்ஸ் வெளிச்சம் தெரிந்தது. அது தான் ஜிண்டால் நிறுவனம் என்று டிரைவர் விளக்கினார்.

அந்த ஊரில் நமது உணவு கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டே போன போது 'சாம்பா' என்ற ஒரு ஊரின் லெவல் கிராஸிங் வந்தது. இயற்கை உபாதை நீக்கி ஒரு டீ குடித்து விட்டு மீண்டும் பயணம் தொடங்கிய போது அவர் சொன்னார், "கவலை வேண்டாம் கோர்பாவில் 'இந்தியன் காபி ஹவுஸ்' உள்ளது. அங்கே உங்களுக்கு இட்லி வடை தோசை எல்லாமே கிடைக்கும் என்றார். நாக்கில் நீர் ஊறியது.

நள்ளிரவு சுமார் 2.30 மணிக்கு ஊர் போய் சேர்ந்து ஹோட்டல் ரூமுக்குள் சென்று படுத்தோம். மறுநாள் பயிற்சி வகுப்பு காலை 10 மணிக்கு மேல்  தொடங்கும். அதே இடத்தில் கீழ் தளத்தில் இருந்த ஹாலில் என்றார்கள். 

மறுநாள் பயிற்சி அறையில் நுழைந்த பொழுது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த துலுக்கன் சாமந்தி மாலை ஒன்றை கழுத்தில் போட்டு நெற்றியில் சந்தனத்  திலகம் கீற்றாக இட்டு வரவேற்றார்கள். பிறகு வகுப்பு தொடங்க எனது லேப்டாப் கனெக்ட் செய்து கொண்டேன். அந்த மேசையில் நடுவே கொறிக்க முந்திரி திராட்சை பாதாம் எல்லாம் வைத்திருந்தார்கள். வரவேற்பு பலம், ஏற்பாடுகள் பலம். மனம் துள்ளியது. 

வழக்கம் போல எல்லோருக்கும் வணக்கம் கூறி, ஹிந்தியில் ஒரு பிரார்த்தனை பாடல் லேப்டாப் மூலம் பாட வைத்து, பிறகு குத்துவிளக்கு ஏற்றி விட்டு, பிளான்ட் மேனேஜர் வரவேற்புரைக்கு பின்னர் பேச ஆரம்பித்தேன். "நண்பர்களே உங்கள் மொபைல் போனை சைலன்ட் மோட் அல்லது சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள்" என்றேன். உடனே ஒரு குரல் வந்தது "உங்களைப் பேச அழைத்து இருக்கிறார்கள். பேச பணமும் தருகிறார்கள். எதற்கு எங்களை இப்படி ஆணைகள் இட்டு கட்டுப்படுத்துகிறீர்கள், வந்த வேலையைப் பாருங்கள்". கேட்டதும் நான் சற்றும் மனம் தளராமல் பொறுமையாக புன்னகையோடு மேலும் பேசத் தொடங்கினேன்.

முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஒருவர் மிகவும் சிகப்பாக ஹிந்தி திரைப்பட நடிகரைப் போல இருந்தார். "உங்களை இது வரை எந்த தயாரிப்பாளரும் பார்க்கவில்லையா?" என்று கேட்டு எனக்கு போட்ட மாலையை அவருக்கு அணிவித்து அனைவரின் கைதட்டல்களை பெற்றேன். அவருக்கும் பெற்றுத் தந்தேன். அப்போது சற்று முன்பு பேசிய நபரின் போன் மணி அடித்தது. அவர் எடுத்து சத்தமாக பேசினார். மாறாத புன்னகையுடன் சற்று வெளியே போய் பேசி விட்டு வாருங்களேன் என்றேன். அதற்கு அந்த நபர், "உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எனது வேலையை நான் பார்க்கிறேன்" என்றார்.

அங்கே இருந்த பிளான்ட் மேனேஜர், எச்ஆர் மேனேஜர், மற்றும் சூப்பர்வைசர் மூவரும் மௌனமாக நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தனர். மூவரும் தமிழ்காரர்கள் தான். எனக்கு சூழல் புரிந்தது. சரி சமாளிப்போம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொண்டேன்.

நான் மீண்டும் அவரைப் பற்றி மனதில் 'வையாமல்' வகுப்பைத் தொடர்ந்தேன். கதைகள், விடீயோக்கள், சிற்சில எளிய விளையாட்டுகள் என்று வகுப்பு நகர்ந்தது. மீண்டும் அவர் போன் ஒலி கேட்டது. அவர் இன்னும் சத்தமாக அவர் இருக்கையில் அமர்ந்தவாறு பேசி வகுப்பை தொந்தரவு செய்தார். நான் யார் கழுத்தில் மாலை போட்டேனோ அவர் எழுந்து போய் அந்த நபரிடம், "சார் நமக்காக சென்னையில் இருந்து வந்து அருமையாக பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார். உனக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியே போ என்று ஏக வசனத்தில் ஓரிரு கெட்ட வார்த்தைகள் சொல்லி கிட்டத்தட்ட அவரை கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்பி விட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வகுப்பை தொடரச் சொன்னார்.

ஐந்து நிமிடங்களில் தேநீர் இடைவேளை வந்தது. அங்கே இருந்த மூன்று மேனேஜர்களும் என்னை நோக்கி ஓடி வந்து எனது கையைப் பிடித்து "சார் உங்களுக்கு எப்படித் தெரியும் அவர் தான் இங்கே யூனியன் தலைவர் என்று... அவருக்கு சரியாக மாலை போட்டு கவனித்தீர்கள்?" என்று கேட்டனர். நானோ "எனக்கு என்ன தெரியும்....இதெல்லாம் எனது மனதில் 'அவன்' தோன்றி உணர்த்தி இருக்க வேண்டும்" என்றேன். அவர்கள் என்னை ஆச்சரியமாக பார்த்தனர். ஆம் இப்படி பலமுறை எனது இண்ட்டியூஷன் எனக்கு (உள்ளுணர்வு - தெய்வ வழிகாட்டல்) நடந்துள்ளது. அன்றும் அப்படியே நடந்தது. இருந்தாலும் அன்றைய அனுபவம் இன்றும் மறக்கவியலாதது. நன்றி கடவுளே. 




Friday, August 9, 2019



தமிழ் திரை இசையில் என்ன நடக்கிறது ?
- டாக்டர் பாலசாண்டில்யன்
(கவிஞர், எழுத்தாளர், இசை ஆர்வலர், பாடலாசிரியர், பாடகர், மனநல ஆலோசகர்)

இசை ஞானியை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் அவர்கள் நேற்று மறைந்த செய்தி கேட்ட போது, தமிழ் திரை இசையில் என்னென்ன மாற்றம் நடக்கிறது என்று அசை போட்டது மனது.

ஒரு இசைப் பிரியனாக, சிறிது இசை கற்றவனாக, பாடல் எழுதும் கவிஞனாக, ஒரு நோக்கராக இருந்து பார்க்கும் போது சில விஷயங்களை கவனிக்க முடிந்தது. அதிக இசை அறிவு இல்லாத ஒருவனாக இசை பற்றியோ பாடல்கள் பற்றியோ பேசுவது தவறு. கடினம் கூட.

இசை உருவாக்கம் எனும் போது அதில் நான் நூற்றுக்கு ஜீரோ தான். ஆகவே அது பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேச எனக்கு அருகதை இல்லை என்றாலும் ஆவலை அடக்க முடியவில்லை. எனவே தான் இந்தக் கட்டுரை.

இசை என்ன மொழியில் இருந்தாலும், யார் குரலில் இருந்தாலும் கேட்டு ரசிக்க என்னைத் தூண்டுவது எனது ஆர்வம் தாண்டி எனது மகள்கள் இருவரும் தான். ஆகவே அணமைக் கால தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உற்றுக் கேட்கிறேன்.

சினிமா மூலம் இசை பலர் காதில் நுழைந்திருக்கிறது என்றால் அதற்கு நேற்று தொடங்கி இன்று வரை பல இசை அமைப்பாளர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். சாஸ்திரிய சங்கீதம், கர்நாடக சங்கீதம், நாட்டுப்புற சங்கீதம், சுபி, பாப், ராப், கஜல், நாட்டிய சங்கீதம், என்று பலவகை இசை திரையில் வந்து கொண்டிருக்கிறது. மக்களை கவர்கிறது. பாமரனை சுண்டி இழுக்கிறது. அதில் குத்துப் பாடல், கானா பாடல் இவையும் அடக்கம்.

இசை அமைப்பாளர்கள் என்று பார்க்கும் போது எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், வசந்த் தேசாய், ஓ பி நய்யர், லஷ்மிகாந்த் ப்யாரேலால், கே வி மஹாதேவன், எம் எஸ் வி, இசைஞானி இளையராஜா என்று தொடங்கும் ஒரு பட்டியல் மெதுவாக நீண்டு ஏர் ஆர் ரஹமான், தேவா, பரத்வாஜ், வித்யாசாகர், தேவா, ரமேஷ் விநாயகம், சங்கர் கணேஷ், இமான், சங்கர் எஹசான் லாய், ஹிமேஷ் ரேஷமையா, அங்கித் திவாரி, அமல் மாலிக், அட்னன் சாமி, அனு மாலிக், சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிரோ மஸ்தானி புகழ்), விஷால், ஜஸ்டின் பிரபாகரன், ஜி வி பிரகாஷ், அனிருத், தீனா, சத்யா, சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயண் என்று வந்து நிற்கிறது.

அதே போல கவிஞர்கள் என்று பார்க்கும் போது பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், பிறைசூடன் என்று தொடங்கும் பட்டியல் இன்று விவேக், யுகபாரதி, நா முத்துக்குமார், தாமரை, விவேக் வேலுமுகன், கானா பாலா, பாலன் காஷ்மீர், முத்தமிழ், கார்த்திக் நேதா, அருண்ராஜ் காமராஜ், விக்னேஷ் சிவன், ரோஷன் ஜாம்ரோக், தனுஷ், சிம்பு, சென்னை தமிழன், உமா தேவி, லொள்ளு உதயா, சங்கர் தாஸ் என்று நீளுகிறது.

தமிழ் இசையில் புரட்சி என்று பார்க்கும் போது முழுக்க முழுக்க கர்நாடக கச்சேரி பாடல்கள் போலவே இருந்தது மாறியது என்றால் எம் எஸ் வி அவர்கள் காலத்தில் தான் என்றால் மிகையாகாது. அதன் பிறகு 80 களில் இசைஞானி அவர்களின் அறிமுகம் மூலம் மீண்டும் மிகப் பெரிய ஒரு புரட்சி - கிராமிய மணமும் கர்நாடக இசையின் குணமும் கலந்து அற்புதமான ஆயிரம் பாடல்கள் நம்மால் கேட்டு ரசிக்க முடிந்தது.

சூழலுக்கு ஏற்ற பாடல் வரிகள், நல்ல குரல்கள், இனிமையான இசை, பின்னணி இசை, வாத்திய அற்புதம் என்று இருந்த போது வந்தது இசைப் புயல் ஏ ஆர் ரஹமான் அவர்கள் வந்து மற்றொரு புரட்சி இசை தந்து மக்களை மயக்கினார். இன்னும் மயக்கிய வண்ணம் இருக்கிறார்.

இதற்கிடையில் ஓசைப் படாமல் சில ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள் என்றால் அவர்கள் தேவா, ஜி வி பிரகாஷ், வித்யாசாகர், பரத்வாஜ், ரமேஷ் விநாயகம், இமான், என்று நீளும் போது திடீர் என உள்ளே நுழைந்திருப்பவர் சந்தோஷ் நாராயணன் அவர்கள்.

அவர் ஆஸ்திரேலியாவில் இசை ஏற்பாடு செய்து இங்கு வெளியிடுகிறார் என்று ஒரு புறம் செய்திகள் கசிந்தாலும் ஆசை ஒரு புல்வெளி, மோகத்திரை, பூ அவிழும் பொழுது, ஆகாயம் தீ பிடிச்சா, போன்ற மனதை வருடும் பாடல்கள் கொடுத்த பின்பு மாயநதி மற்றும் நெருப்புடா பாடல்கள் மூலம் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்த இவர் இசையை உயர்த்தி இருக்கிறாரா என்று கேள்வி புதிதாய் கிளம்புகிறது.

இதற்கு இடையில் அடியே அழகே, வா மச்சானே, கண்ணான கண்ணே, மனசுல சூரக்காத்து, போன்ற பாடல்கள் பாடி மனத்தைக் கொள்ளை அடித்து வருபவர் பிரபல மிருதங்க வித்வான் ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவ் மற்றும் வீணை வித்வான் பத்மா சாண்டில்யன் அவர்களின் மகன் ராகவேந்திர ராஜா (பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன்) என்கிற சீயன் ரோல்டன் எனும் இசைக் கலைஞன். நெகிழ வைக்கிறது அவர் குரல். அதைவிட பாடுகிற எல்லா பாடலும் ஹிட் ஆக்கி வரும் சித் சிரிராம்

அதே போல நேஹா பாஸின், அர்ஜித் சிங், ரஹத் பாத்தே அலி கான், பாம்போன் போன்ற ஹிந்தி இசைக் கலைஞர்கள் நம்மை மகிழ்வித்து வருகின்ற இந்த தருணம் எங்கே போயினர் நமது எஸ் பி பி, சித்ரா, ஸ்ரீனி, சங்கர் மஹாதேவன், ஹரிஹரன், சுஜாதா போன்றவர்கள் எனும் கேள்வியும் எழுகிறது?

அதே போல பாடல்கள் எழுதுகின்ற வைரமுத்து, நா முத்துக்குமார், கபிலன், பிறைசூடன், அறிவுமதி, பழனிபாரதி, தாமரை இவர்களுக்கும் ஓய்வு அளிக்கப் பட்டு விட்டதா? என்ற கேள்வியும் மனதில் வந்து போகிறது.

ஐ டி நிறுவனங்களில் அதிக சம்பளம் கொடுக்க முடியாத போது நிறைய சம்பளம் வாங்குபவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு குறைவான கூலியில் அதிகம் வேலை பார்ப்பவர்களை அமர்த்துகிறார்கள் அது போல தமிழ் மட்டும் ஹிந்தி படங்களில் புதிய நட்சத்திரங்கள், பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என்று மாற்றப் படுவதை நான் பார்ப்பது போல் நீங்களும் கவனித்தீர்களா ?

இன்று ஹிந்தி படங்களில்  அதிகமாக போஜ்புரி மற்றும் பஞ்சாபி பாடல்கள் தான் இடம் பெறுகின்றன - இதற்கு அதில் பங்கு பெறும் கலைஞர்கள் தான் காரணமா? அது போல் தான் இங்கு தமிழ் படங்களில் ஹீரோவே பாடல் எழுதுகிறார் பாடுகிறார், அல்லது புதிய நபர்கள் தான் படத்தை இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், எழுதுகிறார்கள், இசை அமைக்கிறார்கள், பாடுகிறார்கள் - இது வரம் மற்றும் சாபம் தான்.

புதியவர்களுக்கு திறமை இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், திறமையான பரிச்சயமான நபர்கள் ஏன் காணாது போனார்கள் ? கண்டுபிடித்து சொல்லுங்கள்.

முன்பெல்லாம் ஜெமினி படம் என்றால் பி பி எஸ் அல்லது ஏ எம் ராஜா பாடுவார். சிவாஜி எம்ஜிஆர் இருவருக்கும் டி எம் எஸ் பாடுவார், எப்போதாவது எஸ் பி பி பாடினார் - சற்று பொருந்தாவிட்டாலும். பிறகு கமல் மற்றும் ரஜினி என்றால் எஸ் பி பி தான் பாடுவார்.

இன்று பிரதீப் மற்றும் அருண்ராஜ் காமராஜ் ரஜினிக்கு பாடினால் சற்று வித்தியாசமாக இருக்கிறது எனக்கு. உங்களுக்கு எப்படி?

சமீபத்தில் கூட விஜய் படத்தில் ஹரிஹரன் பாடி ஒரு ஹிட் பாடல் கொடுத்தார்.

ஹிட் கொடுக்க ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ், ஒளிந்து இருந்து பாடி வந்தவர்கள், வீட்டு ஸ்டுடீயோவில் பாடியவர்கள் என்று  ஒரு கூட்டமே கிளம்பி விட்டது. கேட்டு ரசிக்க, ரசித்துக் கேட்க நாம் தயாரா? ஒரு கிடார் ஒரு தாள வாத்தியம் வைத்துக் கொண்டு மிக மிக குறைந்த செலவில் பாடல்கள் இன்று ரெடி. சில பாடல்கள் இந்தக் கட்டுரையில் மேலே சொன்னது போல ஹிட் ஆகி விட்டன.

இசை வெல்லட்டும். மனம் ரசிக்கட்டும். ஆன்மா லயிக்கட்டும். எல்லோரும் ஜெயிக்கட்டும் என்று வாய் சொன்னாலும் இசைஞானி, ரஹ்மான், வைரமுத்து, முத்துக்குமார், எஸ் பி பி, ஹரிஹரன், சுஜாதா இவர்கள் இல்லாத திரை இசையை ஏனோ ஏற்க முடியவில்லை. செலவு எனும் பெயரில் இவர்களை தள்ளி வைக்கும் புதிய திரை உலகம் நமக்கு இனி நல்லவை தருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

கொஞ்சம் 'மகிழ்ச்சி'யுடன் அதிக கவலையுடன் சோகத்துடன் முடிக்கிறேன் திரை இசை பற்றிய இந்தக் கட்டுரையை...

பயிற்சி வகுப்பு அனுபவங்கள்

பயிற்சி வகுப்பு அனுபவங்கள் 

ஒவ்வொரு முறை எனது பயிற்சி வகுப்புகளில் வந்து உட்காருபவர்களும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வருவார்கள். 

தேநீர் இடைவேளைகளில் உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்து பேசுவர் சிலர். சிலர் சார் ஒரு செல்பி என்று போனை நீட்டுவார்கள். சிலர் உங்க நம்பர் கிடைக்குமா என்பார்கள். வெகு சிலர் சார் உங்கள் கட்டுரைகள் படித்து இருக்கிறேன். உங்களை ஏற்கனவே டிவியில் பார்த்து இருக்கிறேன். இப்படி பலர் பல விதமாக.

அண்மையில் நடந்த பயிற்சி வகுப்பு ஒன்றில் எல்லோருமே இளைஞர்கள். மிகவும் சுறுசுறுப்பாக, மிகுந்த ஆர்வத்துடன் எல்லா விஷயங்களிலும் கலந்து கொண்டனர். என்னுடைய கருத்துக்கு மாற்றுக்கருத்து, உடன்பட்ட கருத்து, புதிய சில கருத்து என்று அவ்வப்போது பேசி நிகழ்ச்சிக்கு மேலும் பலம் சேர்த்தார்கள். ஒரு சிலர் மௌனமாக இருந்தனர்.

யார் இது வரை யார் பேசவில்லை, எதிலும் கலந்து கொள்ளவில்லை என்று நான் கவனித்துக் கொண்டே இருப்பேன். அவர்களை எழுப்பி உசுப்பி விட்டு பேச வைப்பேன். நன்றாக பேசினால் சாக்லேட் கொடுத்து கைத்தட்டு பெற்றுத் தருவேன். அப்படித்தான் அன்று இருவர் பேசவே இல்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். எனது முயற்சிக்கு பலன் இல்லை. 

மதிய நேர தேநீர் இடைவேளைக்கு பிறகு தாடி வைத்த (இருவரில் ஒருவர்) ஒருவர் எழுந்து அருமையான கருத்து சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவ்வளவு நேரம் ஏன் அமைதியாக இருந்தீர்கள். மிகவும் சிறப்பாகப் பேசுகிறீர்களே என்று கேட்டேன். அவர் சொன்னார். சார் நான் நேற்று இரவு முழுவதும் ஷிப்ட் பார்த்து விட்டு நீண்ட தூரம் பயணம் செய்து இந்த பயிற்சிக்கு வந்தேன். அந்த களைப்பு உங்கள் பேச்சில் மற்றவர் பங்கேற்பில் மறைந்து விட்டது. அது தான் இப்போது பேசினேன். என்றார். நான் அவரது அயற்சி பாராத உற்சாகத்தை பாராட்டினேன். 

அடுத்து நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் அந்த இரண்டாவது மௌன சாமி இளைஞர் எழுந்து பேச மைக் கேட்டார். "சார் நான் இது நாள் வரை அதிக நேரம் தூங்குவேன். எனது மனைவிக்கு இதய நோய் உள்ளது. இனி நான் சீக்கிரம் எழுந்து அவருக்கு என்னால் இயன்ற உதவிகள் செய்வேன். எனது தூக்கத்தையும் போன் நேரத்தையும் குறைத்துக் கொள்ளுவேன்" என்றார். உங்களுக்கு வயது ...என்று தயங்கினேன். அவர் 26 என்றார். உங்கள் மனைவிக்கு என்றேன். அவர் 28 ...எங்களுக்கு காதல் திருமணம் என்றார். 

அரங்கமே ஒரு இனம் புரியாத அமைதிக்கு போனது. உடனே நான் சமாளித்து கவலை வேண்டாம். இங்கே இருக்கும் நாங்கள் அனைவரும் அவர் சீக்கிரம் பூரண குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம் என்று ஒரு நிமிடம் அனைவரும் மௌனமாக பிரார்த்தனை செய்தோம். பிறகு நான் சொன்னேன். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்த ஊரில் மிக முக்கிய பிரமுகர். நான் அவரிடம் சொல்லி உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று பார்க்கிறேன் என்று சொன்னேன். பிறகு அதே போல அந்த பிரமுகரிடம் சொன்னவுடன் அவரும் மறுநாளே அந்த ஊரின் நல்ல இதய மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தருவதாகவும் வேறு உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தார். என் மனது இன்னும் அவருக்காக அவர் மனைவிக்காக செய்து கொண்டு இருக்கிறது.

பயிற்சி வகுப்பு அனுபவங்கள் :

பயிற்சி வகுப்பு அனுபவங்கள் :

சென்னைக்கு வெளியே சென்று பல பயிற்சி வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சி. இது சற்று வித்தியாசமானது. வழக்கமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படி இருக்கும். ஆனால் இது வேற மாதிரி ஒன்று.
பல நிறுவனங்களில் இருந்து இருவர் மூவர் அல்லது நான்கு பேரை நியமித்து அனுப்பி இருந்தார்கள்.

பயிற்சியின் முக்கிய பிரதான டாபிக் - பாடத்தை தொடங்கும் முன்பு கலந்து கொள்ளுபவர்கள் தங்களுக்கு சில புரிதல் வருவதற்கும், எனக்கும் அவர்களுக்கும் ஒரு சுமுகமான உறவு மலர்வதற்கும் சில எனெர்ஜெய்சர் மற்றும் ஐஸ் பிரேக்கர் விஷயங்களை செய்வது வழக்கம். 

சில பாடல் வரிகளை பாடச் செய்து பங்கேற்பாளர்கள் இருவர் இருவராக பிரிந்து சில விஷயங்களை பேசி பகிர்ந்து கொள்ளச் செய்வது வழக்கம். 

அப்படித்தான் அந்த சமீப  நிகழ்ச்சியிலும் நடந்தது.
அந்த பகிர்வுகளுக்கு பிறகு அவர்கள் மனதில் என்ன மாதிரி பாதிப்பு ஏற்பட்டது என்று சிலரை அழைத்து தமது அனுபவங்களை மற்றவரோடு பகிர்ந்து மகிழுங்கள் என்று சொல்லுவேன்.

செந்தில் என்று ஒருவர் வந்து மைக் பிடித்து, " நீங்கள் அம்மாவைப் பற்றி பேசச் சொன்னீர்கள். எனக்கு சின்ன வயதிலேயே அம்மா காலமாகி விட்டார்கள். எனது அம்மாவாக இருந்து என்னை வாழ்க்கையில் முன்னேறச் செய்தது எனது அக்கா தான் என்று சொல்லி விட்டு சற்று உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் 'சார் இன்னும் இரண்டொருவர் பேசிய பிறகு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது அதனைச் சொல்கிறேன்' என்றார். அப்படி என்ன அது சர்ப்ரைஸ்என்று யோசித்த படி நானும் சரி என்றேன். 

மேலும் மூன்று பேர் பேசிய பிறகு மீண்டும் நண்பர் செந்தில் அவர்கள் மைக் எடுத்து பேசினார். 'சார் எனது அக்கா தான் என்னை உயர்த்தினார் என்று சொன்னேன் அல்லவா? அவர்கள் திருமணத்திற்குப் பிறகு வேறு ஊருக்கு சென்று அங்கே ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் வந்துள்ளார். நீங்கள் அம்மாவைப் பற்றி பேசுங்கள் என்று சொன்ன போது அவர் தான் எனது பார்ட்னர்' என்று கண்ணில் ஈரத்துடன் அந்த ரகசியத்தை போட்டு உடைத்தார். 

அந்த அரங்கில் இருந்த அனைவரின் புருவங்களும் உயர்ந்து இறங்கின. சிலர் கண்களும் ஈரமாகின.  எனக்கும் தான். யார் என்று எழுப்பி அவரைப் பாராட்டி கைதட்டி அவருக்கும் நண்பர் செந்திலுக்கு சாக்லேட் கொடுத்து இருக்கைக்கு அனுப்பி வைத்தேன். இப்படி ஒரு வித்தியாசமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது இதுவே முதல் முறை. வழக்கமாக நான் தான் மூத்த மகன். எனது தம்பி தங்கைகளை படிக்க வைத்து பிறகு தான் வாழ்க்கையில் செட்டில் ஆனேன் என்று சிலர் என்னைப் போலச் சொல்லுவது பார்த்திருக்கிறேன். இது கொஞ்சம் புதுசு. 

பயிற்சி வகுப்பு அனுபவங்கள் :

பயிற்சி வகுப்பு அனுபவங்கள் :

அது ஒரு தனியார் வங்கி அதிகாரிகளுக்கான தலைமைப் பண்பு பயிற்சி. நல்லதொரு ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு நாள் நிகழ்ச்சி. நான் சில கிரௌண்ட் ரூல்ஸ் வைத்திருந்தேன். அதாவது வழக்கம் போல இரண்டு டீ பிரேக். மற்றும் ஒரு லஞ்ச் பிரேக் என்பது மட்டும் அல்ல. ஒவ்வொரு பிரேக் நடுவிலும் கலந்து கொள்பவர்கள் இடம் மாறி வேறு மேசையில் வேறு ஒருவர் பக்கத்தில் அமர வேண்டும்.

அது மட்டுமா? பிரேக் வரும் போதெல்லாம் இடைவெளி நேரத்தை இட்டு நிரப்பிட எனது லேப்டாப்பில் இருந்து தேர்வு செய்த சில மெலோடி பாடல்களை ஒலிக்கச் செய்யும் வழக்கம் கொண்டிருந்தேன். இப்படி அதே ஹோட்டலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தி இருந்தேன். அங்கே டீ/காபி வழங்கும் ஊழியர் கணபதி மௌனமாக என்னை கண்காணித்து வந்தார். இதை நான் கவனிக்கவில்லை. ஒரு நாள் டீ பிரேக் இடைவேளை நேரத்தில் ஓரிரு வடமாநிலத்தை சார்ந்த அதிகாரிகளுடன் (பங்கேற்பாளர்கள்) பேசிக் கொண்டு இருந்தேன். 

நண்பர் கணபதி என் அருகே வந்து சற்றும் தயங்காமல் ஏதோ ஒரு தேவையில்லாத அமைதி இங்கே இருக்கிறது. நீங்கள் வழக்கமாக சில பாடல்கள் போடுவீர்களே. ஏன் போடவில்லை. மறந்து விட்டீர்களா என்று கேட்டார். உடனே நான் ஹோ மை காட்...கணபதி நீங்கள் சூப்பர். நினைவூட்டியமைக்கு நன்றி. இதோ பாடல் ஒலிக்கும் என்று சொல்லி ஒரு நல்ல பாடலை பாடச்செய்தேன். பங்கேற்பாளர்கள் மிகவும் ரசித்து மகிழ்ந்தார்கள். 

கணபதி போன்ற சில சாதாரண நிலையில் இருக்கும் ஊழியர்கள் எவ்வளவு கவனிக்கிறார்கள். பயிற்சியாளரே பயிற்சி பெறுவது இவர்களைப் போன்ற உற்சாகம் கொண்டவவர்களால் தான். இப்படி நிறைய கணபதிகள் பல இடங்களில் அமைதியாக ரொட்டின் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அவர்களின் மேலதிகாரிகள் கண்டு கொண்டால் நிச்சயம் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.