Saturday, November 30, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 24


கடமையும் கடுமையும் 
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே எனும் புறநானூற்றுப் பாடலிலே யார் யாருக்கு என்னென்ன கடமைகள் இருக்கின்றன என்று மிக அழகாக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது, மகனைப் பெற்றுப் பேணிக் காத்தல் ஒரு தாயின் கடமை, அவனைப் படிக்க வைத்து சான்றோனாக ஆக்குதல் ஒரு தந்தையின் கடமை, நன்னடத்தை உள்ளவனாக விளங்குதல் ஒரு வேந்தனுக்கு கடமை என்று அதில் விளக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாணவனின் கடமை என்பது விடுப்பு எதுவும் எடுக்காமல் தினமும் பள்ளிக்குச் சென்று அங்கே சிறந்த முறையில் கல்வி கற்றல் எனலாம். ஓர் ஆசிரியரின் கடமை என்பது இருக்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் சிறந்த முறையில் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்தல், அவர்களை நல்வழிப்படுத்துதல், ஒழுக்கம் கற்பித்தல், கல்வி மூலம் வாழ்வில் முன்னேறச் செய்தல் எனலாம்.
ஒரு பெற்றோரின் கடமை என்று பார்க்கும் பொழுது, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்தல், அவர்கள் அன்பு செலுத்தி நல்ல விஷயங்களை தமது நடத்தை மூலம் உணரச்செய்து குடும்பத்தை முன்னேற்ற ஆவன செய்து உதவுதல், பிள்ளைகளுக்கு உணவு உடை உறைவிடம் அளித்து அவர்களை ஆரோக்கியமான ஒழுக்கமான பிள்ளைகளாக வளர்த்து அரவணைத்துப் பேணிக் காத்தல் என்று பட்டியல் போடலாம்.
ஒரு நிறுவன ஊழியரின் கடமை எனும் போது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு இவற்றை மனதில் கொண்டு தமக்கு இடப்பட்ட பணிகளை செவ்வனே சிறப்பாக அழகாக நேர்த்தியாக முறையாக தவறுகள் ஏதும் இன்றி செய்து முடித்தல், தவிர நிறுவனத்திற்கு எந்த அவப்பெயரும் வந்திடா வண்ணம் சிறந்த பொருள் அல்லது சேவைகளை வழங்குதல் போன்றவை ஆகும்.
ஒரு சிறந்த தலைவர் - லீடர் என்பவரின் கடமை என்றால் தன்னை தொடருவோர்க்கு நல்ல வழிகாட்டியாக, வெற்றிக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும் எனலாம். தவிர நடைமுறை மாற்றங்களை உணர்ந்து சிறந்த தொலைநோக்கு பார்வையோடு நல்ல யுக்திகளை கையாண்டு பிறரை ஊக்குவித்து முன்மாதிரியாக இருந்து வழிநடத்திட வேண்டும்.
இது தவிர அரசியல் தலைவர் என்றால் முறையே வரி செலுத்துதல், நாட்டின் சட்ட திட்டங்களை கடைபிடித்தல், நேர்மையாக இருத்தல், நம்பகத்தன்மையுடன் திகழ்தல், மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நேர்மையுடன் காத்தல், நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தருதல், பொருளாதாரத்தை மேம்படுத்தல், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுதல் என்று பலவகையாக சொல்லிக்கொண்டே போகலாம்.
இது போன்ற கடமைகள் என்பது ஒவ்வொரு வகையான மனிதர்களுக்கும் உலகில் இருக்கின்றன. இவற்றை செய்பவர்கள் முழு ஆவலுடன் ஆற்றலுடன், விருப்பத்துடன் செய்கிறார்களா? கடனே என்று செய்கிறார்களா? (கடமை வேறு கடன் வேறு - என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்). கடுமையுடன் ஒரு கடமையை செய்ய நேரிட்டால் அது நிச்சயம் சரியாக இருக்காது.
அக ஊக்கம் மற்றும் வேட்கையுடன் செய்யும் எந்த வேலையிலும் ஒரு நேர்த்தி மற்றும் ஒழுங்கு இருக்கும். அதுவே புற ஊக்கத்துடன் பிறரின் உந்துதலில் கடுமையாக செய்ய வைக்கப்படும் ஒரு கடமை அல்லது வேலை என்பது ஏனோ தானோ என்று தான் முடியும். 
தானாக கனியும் ஒரு பழம் இனிப்பாக இருக்கும். அதை தடியால் கனிய வைத்தால் நிச்சயம் ருசியாக இருக்காது. அதே போல கடமையை கடுமையாக செய்யாமல் ஆவலுடன் விருப்பத்துடன் செய்தால் அதன் சிறப்பே தனி தான்.
கடமை ஆற்றும் போது கடுமையான வலியும் வேதனையும் உடல் மற்றும் மனச்சோர்வும் ஏற்படலாம். அதே கடமையை மிகவும் பிடித்து யாருடைய கடுமையிலும் செய்யாது இருந்தால் அந்த வலி தெரியாது. மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்...கருமமே கண்ணாயினார் என்று அக்கால நீதி நெறி விளக்கம் சொல்லுகிறது.
தானாக உவந்து செய்யும் கடமைகள் என்றும் உன்னதமாக உண்மையாக இருக்கும். ஏதோ ஓர் அழுத்தத்தில் கடனே என்று செய்யப்படும் எந்த செயலிலும் உண்மை இருக்காது. அது உருப்படியாகவும் இருக்காது.
கடுமை, கடுஞ்சொல் தவிர்த்து அன்புடன், அரவணைப்புடன், தட்டிக் கொடுத்து  முடிக்கப்படும் எந்த கடமையும் சிறப்பாக அமையும். கடனே என்றோ கஷ்டப்பட்டோ இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. இதன் மூலம் சில நல்ல செய்திகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற கடமையுணர்வோடு எழுதப்பட்டது.

Friday, November 29, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 23


சூழலை மாற்றினால் சுகம் தான் 
நமது நடத்தை எல்லாமே ஏதோ ஒரு வகையில் பிறரிடமிருந்து கற்றுக் கொண்டவை தான். (Every behavior is a learned behavior). பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், உடன்பணியாற்றுபவர்கள், அக்கம் பக்கத்தினர், ஊடகங்கள் (எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள்) என்று எல்லா நிலையிலும் ஒருவரால் கற்றுக் கொள்ள முடிகிறது.
ஏற்கனவே இருக்கும் எண்ணங்கள், மனப்பாங்குகள், பண்புகள், செயல்பாடுகள் எல்லாமே நமது சூழலினால் தலைகீழாக மாறிடும் வாய்ப்பு உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
'சத்சங்கத்வே நித்சங்கத்வம்' என்று சொல்லுவார்கள் வடமொழியில். அதாவது நாம் எந்த ஒரு மக்களின் தொடர்பில் உறவில் இருக்கிறோமோ அவர்களின் தாக்கம் நிச்சயம் அங்கே ஏற்படும் ஒவ்வொருவருக்கும். 
இதனை 'கூடாநட்பு' என்கிறார் வள்ளுவர். இந்த கூடா நட்பினால் அவதிப்பட்டவர்கள் ஏராளம். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல மிகப்பெரிய அறிவாளிகள் கூட சிக்கலில் மாட்டிக்கொண்டு இறக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
'மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்பார்களே அது போல நமது மனநிலை, அகச்சூழல் மற்றும் புறச்சூழல் மாறிட நாம் யாரிடம் பழகுகிறோம் என்பது மிக மிக முக்கியம். அப்படி நமது சூழலின் மாற்றத்தினை எப்படி சமாளிக்க வேண்டும் எனக் கற்க வேண்டும்.
செல்வந்தரோடு பழகினால் அவர்களின் சில செலவுப் பழக்கங்கள், புதிய பழக்கங்கள்  நமக்கும் தொற்றிக் கொள்ளும். சில பொல்லாதர்வகளின் இணக்கத்தினால் நாம் பேசும் வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் மாறும். இது குழந்தைகள் என்றால் அவர்கள் உடனே கற்றுக் கொள்ளும். பசு மரத்தாணி போல என்றும் ஐந்தில் வளையாதது என்றெல்லாம் சொல்லுவார்கள் பெரியோர்கள். இது நாம் அறிந்தது தான்.
பல நிறுவனங்களில் பார்க்கலாம். சிலர் ஒன்றாக வலம் வருவார்கள். ஒரே ஊர்க்கார்கள், ஒரே பழக்கம் (நல்ல மற்றும் கெட்ட) உள்ளவர்கள், ஒரு நபரை நேசிப்பவர்கள் அல்லது வெறுப்பவர்கள், ஒரே மாதிரி சிந்தனை அல்லது எண்ணங்கள் கொண்டவர்கள், ஒரே மாதிரி பதவியில் உள்ளவர்கள் என்று ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் ஒன்றிணைவார்கள். அப்போது அவர்களின் குணம் பழகும் ஒவ்வொருவருக்கும்  தொற்றிக்கொள்ளும் என்பது திண்ணம். எல்லோரும் ஒருபோலவே சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.
ஒரு சாயம் போகும் துணியோடு வெள்ளைத்துணியை துவைத்துப் பாருங்கள். அந்த வெள்ளைத் துணி என்னவாகும் என்று. காந்தத்தோடு இரும்பை சில மணித்துளிகள் உரசினால் இரும்புக்குக் கூட காந்த சக்தி வரும் என்பார்களே அது போல.
சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட் எனும் காயை பச்சை நிறத்தில் இருக்கும் பீன்ஸ் அல்லது முட்டைகோஸ் காயோடு சேர்த்து சமைத்தால் பாத்திரத்தில் இருக்கும் பதார்த்தம் எல்லாமே சிவப்பாகத் தான் இருக்கும்.
ஓர் அழுகிய காய் அல்லது கனியோடு நல்லதொரு காய் கனியை சேர்த்து ஒரு கூடையில் சேர்த்து வைத்தால் அதில் உள்ள எல்லாமே அழுகிப் போகும். அப்படித்தான் மனிதர்களும் தனது சூழலால் சகவாசத்தால் மாறித்தான் போகிறான்.
நீரை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நாம் என்ன பொருள் போடுகிறோமோ அதன் வண்ணத்தில் அது மாறும் (காபித்தூள், மஞ்சள் தூள்).  எந்த இடத்தில் இருக்கிறதோ அதன் வடிவத்தில் (கிணற்றில், குளத்தில், ஏரியில், நதியில், கடலில்) மாறி விடும். சாயம் கலந்தால்  நீரின் தன்மையே மாறிப்போகும்.. கடல் நீரோடு நல்ல நீரைக் கலந்தால் எல்லாமே உப்பாக மாறிவிடும். 
கோழிக்குஞ்சுகள் இருக்கும் கூண்டில் ஒரு கழுகு குஞ்சு சிக்கிக் கொண்டால் சில நாட்களுக்குப் பிறகு கழுகும் கோழிக்குஞ்சு போல மாறி விடும். வீரியம் உள்ள ஒரு வேட்டை நாய்க்கு தயிர் சாதம் போட்டு (மாமிச உணவிற்குப் பதில்) வளர்த்தால் அந்த நாய் மிகவும் சாதுவாக மாறி தனது உண்மையான குணத்தையே மாற்றிக் கொள்ள நேரிடுகிறது.
எங்கு பார்த்தாலும் ஆன்மீக எண்ணங்கள், பிரார்த்தனை, பக்தி என இருக்கும் ஓர் ஊரில் எல்லோருமே (வெகு சிலரை விட) அப்படி மாறிடும் நிலையைக் காணலாம். அதுவே ஒரு ஊரில் எல்லோருமே போராட்ட மனநிலையில் இருக்கிறார்கள், மிகவும் கோபப்படுகிறார்கள், தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள் என்றால் அங்கே வசிக்கும் பிற மக்களும் அப்படி மாறிவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனை நாம் அண்மையில் பல இடங்களில் பார்த்திக்கிறோம் . கொல்கத்தாவில் வசிக்கும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட மீன் சாப்பிடுகிறார்கள் என்று அறியமுடிகிறது. 
மேற்சொன்ன பல உதாரணங்களைப் பாருங்கள். வாழும் சூழல் மாறினால் மனநிலை, எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே மாறும். எனவே சூழல் மாறினால் சுகம் தான். ஆனால் சூழலை மாற்ற முடியாவிடினும், நம்மை எப்படி மாற்றாது அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்பது தான் சுய கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு. 

Thursday, November 28, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 22


பிரிவினையும் பிற வினையும் 
நமது வாழ்வில் எல்லாவற்றிலும் ஒரு பிரிவினை இருக்கிறது. நல்லது கெட்டது, பெரியது சிறியது, பெரியோர் சிறியோர், ஏழை செல்வந்தர், படித்தோர் படிக்காதோர், உயர் சாதி கீழ் சாதி, உயர்ந்தது தாழ்ந்தது, மேடு பள்ளம், நகரம் கிராமம், எளியோர் வலியோர், கற்றோர் கல்லாதோர் என்று  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பிரித்தாளும் யுக்தியை இந்தியர்களுக்கு சொல்லித் தந்ததே ஆங்கிலேயன் தான். டிவைட் அண்ட் ரூல் என்பார்கள். அப்படி பிரிவினை என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. அதனால் ஏற்படும் பிறவினைகளையும் நாம் சந்தித்த வண்ணம் தான் இருக்கிறோம்.
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று அக்காலம் முதற்கொண்டே சொல்லி இருக்கிறார்கள். அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று சொல்லுவார் பாரதி. பண்புள்ளவரை மக்கள் என்றும் பிறரை மாக்கள் என்றும் சொல்லுவது உண்டு. 
இப்போது சொந்த வீடு வாடகை வீடு என்பது போல, கணினி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், செல் வைத்திருப்பவர்கள் செல் இல்லாதவர்கள் என்று பிரிக்கிறார்கள். அதிலும் வாட்சப்பில் இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடும் உண்டு. அதாவது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர். டெக்னாலஜி தெரிந்திருப்பவர் தெரியாதவர் என்ற பிரிவு அது. 
அரிசி கார்டு வைத்திருப்பவர்கள் சர்க்கரை கார்ட் வைத்திருப்பவர்கள் என்ற பிரிவினை சென்ற வாரம் மாநில அரசு தகர்த்து விட்டு விருப்பம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் சென்று அரிசிகார்ட் வாங்கிக் கொண்டு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயும் வாங்கி விடலாம் (இன்று முதல் - 29.11.2019 )
பிரித்துப் பார்த்ததை எல்லாம் சேர்த்து பார்ப்பது பிற வினை கருதித் தான். எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் அவர்களும் நம் பக்கம் இருப்பார்கள் என்பது ஒரு யுக்தி.
இதை ஆங்கிலத்தில் இன்க்ளுசிவ் (சேர்த்துக்கொள்ளப்பட்ட அல்லது இணைத்துக்கொள்ளப்பட்ட) என்று சொல்லுவார்கள். ஆகவே பிரிவினை ஒரு புறம் இருந்தாலும் அதனால் ஏற்படும் பிற வினை கருதி மாற்றி அமைக்க எண்ணுகிற பாங்கு சில சமயம் ஏற்படுகிறது.
மேற்சொன்னதெல்லாம் சமூக வெளியில். வீட்டில் பார்த்தால் தற்போது தனிகுடித்தனமே பல இடங்களில் நடக்கிறது. அது வேலை, இருக்கும் இடம், கிடைக்கும் வருமானம் என்று பல காரணிகளால் உருவானது. சில திருமண நிபந்தனைகளால் கூட என்றும் சொல்லலாம். இந்த குடும்பப் பிரிவினை பெற்றோரை பெரியோரை பிரித்து வைத்து விட்டது. இதன் பிற வினை என்று பார்த்தால், உறவினர்களின் தொடர்பு அறவே அகன்று போகிறது. தவிர, பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி இவர்களின் அரவணைப்பு அன்பு, வீட்டுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் போகிறது.
இப்படித் தான் முன்பு சொல்லி வைத்தார்கள் : அன்னைக்குப் பின் உண்டி பாழ்; தந்தைக்குப் பின் கல்வி பாழ் என்று. இப்போது ஸ்விக்கி, ஊபர் வந்து விட்ட பிறகு அன்னையின் கவலை இல்லை. கூகிள் வந்த பிறகு மாதா பிதா கூகிள் தெய்வம் என்றாகி விட்டது. ஆகவே பிரிவினை என்பது பல இடங்களில் பலவாறு நடைபெற்று வருகிறது.  அதன் பிற வினைகளையும் அனுபவிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
நிறுவனங்களில் கூட நாமெல்லாம் ஒரே நிறுவனம் என்ற உணர்வை விட நீங்கள் இந்த டீம், நாங்கள் அந்த டீம் எனும் போது அந்த குழுவிற்குள் இருக்கும் ஒற்றுமை நிறுவனம் முழுவதும் இருப்பதில்லை. இதுவும் பிரிவினையால் வந்த பிற வினை என்று கொள்ளலாம். அந்தந்த பணிகளின் அடிப்படையில் இந்த டீம் பிரிக்கப்பட்டாலும், எல்லோரும் ஒரே நோக்கத்துடன் ஒரே நிறுவனத்திற்கு பணி புரிகிறோம் என்ற அந்த ஒத்துணர்வு எண்ணம் நிறுவனத்தை நிச்சயம் பல படிகள் மேம்படுத்தும்.
மலர்களில் சாதி (சாதி முல்லை) இருக்கிறது. பறவைகளில் பல வகை உண்டு. விலங்குகளில் வீட்டில் வளர்க்கும் வகை, காட்டில் வசிக்கும் சில ஆக்ரோஷமான விலங்குகள் இருக்கின்றன. இந்த பிரிவினை சில நேரம் தேவைப்படுகிறது. 
கோவில்களில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் என உண்டு. அதே போல ரயில் வண்டிகளில் சாதாரண வகுப்பு, எல்லா வசதிகளும் கொண்ட முதல் வகுப்பு என்றும் இருக்கிறது. இதில் என்ன பிற வினை என்று நீங்கள் கேட்கலாம். பணம் படைத்தோர் எங்கு சென்றாலும் சிறப்பு அடைகிறார்கள் என்று மாறி விட்ட உலகம் இது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது நிச்சயம் நாளுக்கு நாள் உலகெங்கும் குறைந்து வருகிறது. இதில் என்ன சந்தேகம்.
அன்னை தமது குழந்தைகளை பிரிவினை ஏதும் இன்றி அன்பு செலுத்துவது போல அரசனும் (ஆட்சியாளர்களும்) மக்கள் அனைவரையும் தம் மக்கள் என்று எண்ணுதல் வேண்டும். ஆனால் நாடு முழுவதும் அப்படி இல்லை என்பது நாம் அறிவோம். அது அரசியல். அதற்குள் நுழைய விழையவில்லை.
பிரிவினை தவிர்த்தால் பிற வினைகள் தானே மறையும் என்பது தான் இங்கே சொல்ல வந்த கருத்து. இயலுமா ? நிச்சயம் கருத்துப் பிரிவினை இதனைப் படிப்போர் மத்தியில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Wednesday, November 27, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 22


நேரம் உயிர் போன்றது, போனால் வராது 
காலத்தின் அருமை காலனின் அருமை இரண்டுமே மிகவும் முக்கியம். காலமும் காலனும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதனால் தான் நிகழ்காலம், இறந்த காலம் என்றும் எதிர்காலம் அல்லது வருங்காலம் என்றும் குறிப்பிடுகிறோம். 
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  
என்பார் திருவள்ளுவர். எது செய்தாலும் அதை நேரத்தை செய்தால் தான் மதிப்பு. ஆடி கழித்து ஐந்தாம் நாள் என்பார்களே அப்படிச் செய்தால் அதற்கு நிச்சயம் பயனில்லை.
A friend in need is a friend indeed என்பார்கள் ஆங்கிலத்தில். எதற்கும் கால நேரம் என்பது மிக முக்கியம். 
காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என்று பாரதி சொல்லுவது கூட இதைத்தான்.
பாண்ட் போட்டு உள்ளாடை போடுபவன் சூப்பர்மேன். உள்ளாடை போட்டு பாண்ட் போடுபவன் சாதாரணன் தான். எனினும் அதுவே சிறப்பு. எதை முன்னால் செய்வது. எதை பின்னால் செய்வது என்று வரையறுத்துக் கொள்ளுவது நல்லது.
பல நிறுவனங்களில் சந்திப்பு நேரம் குறித்துத் தருவார்கள். நாம் சென்று பார்க்க வேண்டும் என்றால் நம்மில் பலர் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் முன்பே அங்கு செல்லுவது வழக்கம். சந்திக்க அழைத்திருப்பவர்கள் பத்து மணி என்று சொல்லி விட்டு இரண்டொரு முறை நினைவூட்டிய பிறகும் பதினோறு மணிக்குத் தான் உள்ளே அழைப்பர்.  அது தான் நமது இந்திய பங்சுவாலிட்டி. அடுத்தவரின் நேரத்தை பெரும்பாலும் மதிப்பதில்லை.
பெரும்பாலும் கூட்டம் நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்பவர்களைப் பாருங்கள். மாலை 5 மணி என்று போட்டு விட்டு ஏற்பாட்டாளரே 5.15 க்கு தான் வருவார். கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர் 4.50 க்கே வந்து அங்கும் இங்கும் டென்க்ஷனுடன் அலைந்து கொண்டிருப்பார்.
அதே போல ஐந்து நிமிடங்கள் வாழ்த்துரை என்று மேடைக்கு அழைத்து மைக் முன்பு நிறுத்தப்பட்டவர் அவர்களே இவர்களே என்றும் தன்னைப் பற்றிய சுய பிரதாபங்கள் பற்றியும் பேசி முடிக்கவே ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொண்டு தமது பேச்சுக்குள் நுழைந்து முடிப்பதற்குள் சுமார் 23 நிமிடங்கள் கடந்து இருக்கும். ஏற்பாட்டாளர்கள் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போலச் சுற்றித் திரிவார்கள். பேசுபவருக்கு சிட்டு கொடுத்து அனுப்பினாலும் அவர் அதனை பார்க்கவே 16 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுவார்.  தமது பேச்சை முடித்துக் கொள்ளுவதற்கு முன்பு "காலத்தின் அருமை கருதி இத்துடன் எனது பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். பேசிட இன்னும் நிறைய இருக்கிறது. என்ன செய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எனக்கு அதற்குள் மூன்று முறை சீட்டு அனுப்பி விட்டார்" என்று அங்கலாய்த்துக் கொண்டு தரை இறங்குவார்.
இருப்பதிலேயே மிகவும் சுலபமான காரியம் என்னவென்றால் பிறரை குறை சொல்லுவது, கேள்வி கேட்பது,  விமர்சிப்பது, கேலி செய்வது, தூங்குவது, உண்பது, உறங்குவது எல்லாம் தான். அதே போல பேசுவது சுலபம். அதனைக் கேட்பது தான் மிக மிக கடினம். ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து வருவது மிகவும் சுலபம். அவரை காலத்தே பேசி முடிக்கச் செய்து திருப்தியுடன் அனுப்பி வைப்பது என்பது மிகவும் கடினம்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் மிகவும் கடினம். அந்தக் கலை எல்லோருக்கும் வருவதில்லை. அதுவும் மிகவும் சுவாரசியமாகப் பேசி இன்னும் கொஞ்சம் நேரம் பேசி இருக்கலாமே என்று நினைக்கும் போது முடித்து விடுவர் சிலர். அவர்களை நாம் மிக மிக அரிதாகத் தான் காண முடிகிறது.
கேட்க அமர்ந்து இருப்பவர்கள் மாணவர்கள், இது உணவு நேரம், நம்மை இது வரை ரசித்துக் கேட்டு விட்டார்கள், இப்போது முடித்துக் கொள்ளுவது நமக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது. நமக்குப் பிறகு இன்னும் பேச ஓரிருவர் இருக்கிறார்கள் என்று குறிப்பறிந்து பேசுகிற மனிதர்கள் நிச்சயம் தமது கையிலே சில குறிப்புகள் வைத்துக் கொண்டு 'டு த பாயிண்ட்' என்பது போல நச்சென்று பேசி முடித்து அனைவரின் பாராட்டினைப் பெற்று விடுவார்கள். அந்த ரகசியம் அறியாதவர்கள் நிச்சயம் எல்லோர் வாயிலும் விழுந்து எழுவார்கள்.
நமது நேரமும் பிறர் நேரமும் மிகவும் முக்கியம். அதனை நாம் மிகவும் மதிக்க வேண்டும். காலம் பொன் போன்றது என்பார்கள் சிலர். பணம் கொடுத்து பொன்னை பொருளை வாங்கி விடலாம். ஆனால் கடந்து விட்ட நேரத்தை வாங்க முடியாது. எனவே காலம் உயிர் போன்றது. போனால் வராது என்பதை நிச்சயம் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உங்கள் நேரம் உங்கள் உரிமை. எனவே நேரம் கிடைக்கும் போது இதனை வாசித்து மகிழுங்கள். பயன்பெறுங்கள். 

Tuesday, November 26, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 21

சிறு கூறுகள் மலைப்பைத் தராது 

எந்த செயலையும் கூறுகளாகப் பிரித்துக் கொண்டால் மலை ஏறுவது கூட மலைப்பாகத் தெரியாது. கூறுகள் ஆக்குவது என்பது சிறு விஷயங்களை பெரிய கூறுகளாகப் பிரித்தல், பெரிய விஷயங்களை சிறு கூறுகளாகப் பிரித்துக் கொள்ளுதல் இரண்டுமே சிறந்த வழிமுறை தான்.
பத்து பேருக்கு சமைத்தல் என்று ஒரு செயல்பாடு வரும் போது பெண்களை உற்று நோக்குங்கள். காய்கறிகளை நறுக்கி தனித்தனியாக வைத்துக் கொள்ளுவர். பிறகு அடுத்தடுத்த விஷயங்களை மிகச் சரியாக எடுத்து வைத்துக் கொண்டு எது முன்னே செய்ய வேண்டும், எது பின்னே செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு திட்டத்தோடு செயல்படுவார்கள்.
ஒரு பூனை எலி பிடித்து விட்டு எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். வாயில் வைத்திருக்கும் எலியை வசதியான அமைதியான இடத்திற்கு கொண்டு சென்று சிறிது சிறிதாக கடித்துத் தின்னும்.
ஒரு டெலிபோன் ஆபரேட்டரை கவனியுங்கள். 9840027810 எனும் எண்னை பிரித்து 984 00 27 810 என்று சொல்லும் போது எதிரில் பேசுபவர் எளிதில் கவனித்துக் கொண்டு குறித்துக் கொள்ள முடியும் என்று அவர்களுக்கு தெரியும்.
தல தோனி அவர்களைப் பார்த்திருப்போம். 20 ஓவர்களில் 240 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால். அவர் பதட்டமே படமாட்டார். ஒரு ஓவருக்கு (ஆறு பந்துகளில்) 12 ரன் - அதாவது ஒரு பந்திற்கு இரண்டு ரன் அடிக்க வேண்டும். அதை 4, 2 அல்லது 6 என்று எப்படி வேண்டுமோ முடிக்கலாம். ஆனால் 240 ரன்களா என்று மலைத்துப் போனால் நிச்சயம் தொடக்கமே டென்க்ஷன் தான். இது அவருக்கு நன்றாகத் தெரியும்.
ஒரு எல்ஐசி ஏஜென்ட் ஆண்டுக்கு 12 பாலிசி பிடிக்க வேண்டும் என்றால் மாதத்திற்கு ஒன்று என்று எடுத்துக் கொண்டால் ஏது மனக்கவலை. அப்போது என்ன, மாதம் ஒன்று தானா? ஏன் நாம் வாரம் ஒன்று முடிக்கக் கூடாது என்று அவர்களே தங்கள் இலக்கை அதிகமாக நிர்ணயித்துக் கொண்டு உற்சாகமாக செயல்படுவார்கள்.
ஒரே நேரத்தில் பல்பணி என்று சொல்லக்கூடிய மல்டிடாஸ்கிங் இன்று தேவைப்படுகிறது. இருந்தாலும் அவை வேகத்தை துல்லியத்தை தராது. அது மூளைக்கு ஒரே சமயம் பல விஷயங்களில் கவனம் செலுத்தும் அழுத்தம் ஏற்பட்டு ஏதோ ஒன்றில் நாம் தவறு செய்து விடுவோம். ஒரு சமயத்தில் ஒன்றை எடுத்து அதனை அழகாக சீராக சரியாக செய்து முடித்தலே சிறப்பு. இடையே வரும் இடையூறுகளை சமாளித்தல், குறுக்கே வரும் இன்னபிற சிறு வேலைகளை தவிர்த்து விட்டு எடுத்த காரியத்தை முடித்தல் என்பது நன்மை பயக்கும்.
அதே போல நடுநடுவே வேறு வேறு செயல்களை கொஞ்சம் கொஞ்சம் செய்தல் எல்லா வேலைகளையும் முழுமையாக செய்யாததை நமக்கு உணர்த்திவிடும்.
சிறு கூறுகளாக பகுத்துக் கொள்ளுதல், ஒவ்வொன்றாக செய்து முடித்தல் இரண்டுமே நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தும், மனநிறைவைத் தரும், மன அழுத்தம் குறைக்கும், வெற்றிகரமாக முடித்த நல்லுணர்வைத் தரும். நமது வேலையிலும் நேர்த்தி இருக்கும்.
மாணவர்களுக்கும் இந்த முறை மிகவும் பயனளிக்கும். மிகப் பெரிய புத்தகத்தை எடுத்து பரிட்சைக்கு முன்தினம் வைத்துக் கொண்டால் தலை சுற்றும், தூக்கம் வரும். அதுவே அன்றாடம் கொஞ்சம் கொஞ்சம் படித்து முடிக்க கடைசி தருணத்தில் அப்படியே புரட்டிப் பார்த்தால் போதும். இல்லையேல் அந்த புத்தகம் நம்மை புரட்டிப் போடும். நாம் தான் புத்தகத்தினை புரட்ட வேண்டும்.
ஒரு கோட்டையை ஒரு கோணத்தில் பார்க்கலாம். தாஜ்மஹால் என்று கொள்ளுவோம். சுற்றி வந்து பகுதி பகுதியாகப் பார்த்து ரசித்துப் பார்க்க வேண்டும். அதே போல குருடர்கள் யானையைப் பார்த்த கதை நமக்கு தெரியும். ஒரு சமயம் யானையின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்து உணர வேண்டும். 
பல வேலைகள் செய்யத் தெரிந்து கொள்ளுவது வேறு. பல வேலைகளை ஒரே சமயம் செய்வது வேறு.
கூறுகள் பிரித்து காரியம் செய்யுங்கள் என்று 'கூறு'வது வேறு. அதனைப் பின்பற்றி அதனை செயல்படுத்துவது வேறு. 
இந்த கட்டுரையை பாருங்கள். பத்தி பத்தியாக பிரித்து எழுதுவதன் காரணமே நீங்கள் பார்த்தவுடன் மலைத்துப் போகாமல் இருக்கவே. என்ன நான் கூறுவது சரி தானே?

Monday, November 25, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 20


சொன்னாலும் புரிவதில்லை 
தலைப்பைப் பார்த்தவுடன் படிக்கும் அனைவருக்கும் அட்வைஸ் அள்ளிவிடப் போகிறேன் என்று எண்ணி பயந்துவிட வேண்டாம்.
பொதுவாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், சமூக மற்றும் ஊடகவியலார்கள், எழுத்தாளர்கள் என்று யார் சொன்னாலும் நம்மில் பலர் நாம் நினைத்ததையே செய்கிறோம். குறிப்பாக இன்றைய கால கட்டங்களில் 'சிட்டிங் போஸ்சர்' மிக மிக முக்கியம். நேராக அமர வேண்டும் என்று தெரிந்தாலும் நமது சௌரியத்திற்கு மணிக்கணக்கில் அமர்ந்து விட்டு கழுத்து வலி, முதுகு வலி என்று மருத்துவரிடம் போய் நிற்கிறோம்.
படுத்துக்கொண்டு மொபைலில் வீடியோக்கள் பார்க்க வேண்டாம் என்றால் அதையே செய்கிறோம். விரலுக்கு கண்ணுக்கு கழுத்துக்கு பிரச்சனை வரலாம் என்பதால் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் நம் மீது அக்கறை கொண்டோர். ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் சொல்லுகிறார்கள். யார் கேட்கிறார்கள். செல் பேசிக்கொண்டே வீதியில் நடக்க வேண்டாம். விபத்து நடக்கலாம், நாமே தடுக்கி விழலாம். மொபைல் திருடர் கையில் இருந்து பறித்துச் செல்லலாம். இப்படி எல்லாமே நமக்கும் தெரியும். இருந்தாலும் சொன்னாலும் புரிவதில்லை மனதிற்கு, புத்திக்கு.
எதையுமே கடைசி நிமிடத்தில் செய்யாதே. எந்த பொருளையும் எடுத்த இடத்தில் வைத்து விட்டால் தேடும் வேலை மிச்சமாகும். சரியான நேரத்தில் கிளம்பி மிதமான வேகத்தில் பயணித்து பத்திரமாக அடைய வேண்டிய இடத்தை அடையுங்கள் என்று பலவேறாக பலர் சொல்லிக்கொன்டே இருக்கிறார்கள். நாம் எங்கே கேட்கிறோம்.
சரியான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்றும் சொல்லுகிறார்கள். நட்புகளை பார்த்துப் பார்த்து தேர்வு செய்யுங்கள். இப்படியெல்லாம் தெரிந்திருந்தும் ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்கள் நம்மில், நமக்குத் தெரிந்தவர்களில் பலர் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
மன அழுத்தம் இல்லா வாழ்க்கை வாழ சரியான திட்டமிடுங்கள். யோகா மற்றும் தியானம் செய்யுங்கள் என்று பலர் சொல்லுவதைக் கேட்கிறோம். நாம் பதிலாகச் சொல்லுவது எனக்கு நேரம் இல்லை என்பது தான். இங்கே நாம் நேரத்தை செலவழிக்கவில்லை. முதலீடு செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். என்ன மாற்றம் வந்தாலும் நமது வாழ்க்கையை சமாளித்து விடலாம் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். நமக்குமே அது தெரியும். இருந்தாலும் எனோ நமக்கு அது புரிவதில்லை இப்போது. பின்னால் வரும் கடினமான சூழலில் இந்த விஷயத்தை நாம் நினைத்துப் பார்பபோம்.
தினமும் அசைவ உணவை உண்ணாதீர்கள். உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள். ஆறு மாதத்துக்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் செய்து கொள்ளுங்கள். சரியான ஒரு பாலிசி எடுத்துக் கொண்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். மிகவும் இறுக்கமான உடை அணிந்து கொள்ளாதீர்கள். பார்த்த பொருட்கள் எல்லாவற்றையும் வாங்க வேண்டாம். அவசியமில்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கி கடன் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இப்படி பலர் பலவாறு சொல்லலாம். கேட்கிறோம். நமக்கே கூட அவையெல்லாம் தெரியும். இருப்பினும் சொன்னாலும் புரிவதில்லை இந்த பாழும் மனதிற்கு என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
நல்ல இசை கேளுங்கள். நல்ல புத்தகங்கள் வாசியுங்கள். மனதை எப்போதும் பாசிட்டிவ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். புன்னகையுடன் வலம் வாருங்கள். இப்படி சொல்லுபவர்கள் பலர் பல சொல்லுகிறார்கள். உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. உனக்கு நீ தான் நீதிபதி. இப்படி சொல்கிறது நமது மனம்.
சொல்லாமல் புரிந்து கொள்ளுவதை 'சுய புத்தி' என்றும். சொல்லித் தெரிவதை 'சொல் புத்தி' என்றும் சொல்லுவர். நமக்கு இருப்பது என்ன என்று யோசித்துப் பார்ப்போம்.

Sunday, November 24, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 19

ஒத்து ஊதுவதும் ஒத்துப் போவதும் 
நமது அன்றாட வாழ்வில் நிறைய பேர் ஒத்து ஊதுவதில் நிறைவடைந்து விடுகின்றனர். அதே சமயம் ஒத்து ஊதாது எதிர்க்கருத்து வைப்பவர்களும் உண்டு. அவர்களை பொதுவாக நாம் எல்லோரும் எதிரியாகப் பார்ப்பது வழக்கம். எதிர்க்கருத்து சொல்லுபவர்களை உற்று நோக்குங்கள். ஏன் அவர்கள் ஒத்து ஊதவில்லை என்ற பொருள் விளங்கும். நமது கருத்தும் எண்ணமும் கூட மெருகேறும்.
ஆம் என்று எதெற்கெடுத்தாலும் சொல்லுபவர்கள் பல நேரங்களில் குற்ற உணர்வுகளில் இருக்கிறார்கள் - நம்மால் ஏன் நமது கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்று. தவறு என்றோ நோ என்று சொல்லுபவர்களையோ நாம் எதிரியாகப் பார்க்க வேண்டியதில்லை. அது அவர்கள் உரிமை. அவர்கள் அப்படிச் சொல்லுவதற்கு சில காரணங்கள் உண்டு. "நான் நீங்கள் சொல்லுவதை ஏற்கும் நிலையில் இல்லை, நீங்கள் என்னை அசௌகரிய நிலைக்கு தள்ளுகிறீர்கள், நீங்கள் சொல்லுவது புரியவில்லை, வேறு அபிப்ராயம் எதிர்பார்க்கிறேன், இன்னும் சில விளக்கங்கள் கொடுத்தால் நல்லது, மற்றவர்களை ஆலோசித்து சொல்கிறேன்" இப்படி பல.
அப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக நோ என்பவர்களை சரி யெஸ் என்று சொல்ல வைத்தால் அது அவர்கள் மனசாட்சிக்கு எதிராக இருக்கலாம். எனவே, அவர்களின் நோ எனும் நிலை சில நேரம் நம்மை இன்னொரு முறை சிந்திக்க வைக்கும், தவறான முடிவுகளில் இருந்து நம்மைக் காக்கும், அவர்களையும் நம்மோடு சேர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். அது முன்னேற்றத்திற்கு உதவும்.
ஒத்துப்போதல் எனும் போது நிறைய விஷயங்களைச் சுருக்கமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. கணவர் மனைவி இருவரிடமும் இது தேவைப்படுகிறது. அது குடும்ப அமைதி மற்றும் சந்தோஷத்திற்கு உதவுகிறது. அதே போல பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே இந்த ஒத்துப்போதல் தேவைப்படுகிறது. இல்லை எனில் தினம் தினம் போராட்டம். 
நண்பர்கள் தொடர்ந்து நண்பர்களாக இருக்க இந்த விஷயம் மிக முக்கியம். இதை ஒத்துணர்வு எனலாம். 
நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மத்தியில் இந்த ஒத்துப்போதல் மிக மிக அவசியம், முக்கியம். அப்போது தான் அங்கே சுமுகமான நிறுவன இயக்கம் நடைபெறும். சக ஊழியர்கள் மத்தியில், வாடிக்கையாளர்கள் மத்தியில் என பல நிலைகளில் இது தேவையாகிறது. 
நோயாளி மருத்துவரோடு ஒத்துப்போதல் இருந்தால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும். ஆசிரியரோடு மாணவர்கள் ஒத்துப்போகாவிடின் அங்கே பயிற்றுவித்தல் நடைபெறாது. காவல் நிலையத்தில் குற்றவாளி ஒரு கட்டத்தில் அதிகாரியோடு ஒத்துழைத்தாக வேண்டும். வக்கீலோடு ஒத்துப் போனால் தான் அவர் ஒரு வழக்கை சிறப்பாக வாதிட்டு வெற்றி பெற முடியும்.
ஒரு குடியிருப்பில் இருக்கும் பிற குடித்தனக்காரர்களோடு ஒத்துப் போகாவிடின் அங்கே வசிப்பது என்பது நரகம் போலாகி விடும். ஊரோடு ஒத்து வாழ் என்று முன்னோர்கள் சொன்னார்கள். ஊரோடு ஒத்து வாழ்ந்தால் அங்கே அமைதி மகிழ்ச்சி நிலவும். 
எல்லாவற்றிற்கும் ஒத்துப் போதல் யெஸ் சொன்னால் நமக்கு சுயபுத்தி இல்லை என்றாகி விடும். அது மட்டுமா? உங்களுக்குப் பிடிக்காத ஒன்றிற்கு நீங்கள் சரி என்று சொன்னால் அடுத்தவரை மகிழ்வித்து உங்களை வருத்தப்படுத்திக் கொள்ளுகிறீர்கள். பிறரை வெறுப்பீர்கள், உங்கள் வேலையில் தவறு செய்வீர்கள், உங்கள் சக்தியை இழந்து பலவீனமாவீர்கள், உங்கள் வாழ்வின் ஒரு பகுதியை கெடுத்துக் கொள்வீர்கள். நோ என்று சொன்னாலும் பிறர் மனம் நோகாமல் சொல்லுதல் மிக நல்லது. 


இப்போது யோசித்துப் பாருங்கள். ஒத்து ஊதுதல் வேறு. ஒத்துப் போதல் வேறு. என்ன சரி தானே? நீங்கள் நான் சொன்னது சரி என்றால் மட்டும் ஒத்துக்கொள்ளுங்கள். என்னைப் பிடிக்கும் என்பதால் ஒத்து ஊத வேண்டாம். 

Tuesday, November 19, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 18

இன்னும் இருக்கிறது 
நம்மில் பலருக்கு அடிக்கடி தேவையற்ற ஓர் அலுப்பு ஏற்படுகிறது அல்லது மனதில் இருக்கிறது. . அதற்கு பெரிதாக ஒரு காரணமும் தேவை இல்லை. மனநிலை என்பது வானிலை போலத்தான். அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். ஏன் அப்படி மாறுகிறது என்று குறிப்பிட்ட காரணங்கள் யாராலும் கூற முடியாது. சிலர் இன்று முழித்த முகம் சரியில்லை என்று பிறர் மீது பழி போடுவதுண்டு. 
முதல் நாள் சரியான தூக்கம் இல்லை, நாம் பார்த்த படித்த செய்தி ஒன்று மனதை மிகவும் அலைக்கழிக்கிறது. இல்லை என்றால் எந்த காரணமுமே இல்லாமல் கூட நமது மனநிலையில் ஊசலாட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. எப்போதும் உற்சாகமாக மாறாத புன்னகையுடன் இருப்பதைப் பார்த்திருப்போம். அவர்களுக்குள்ளும் இந்த மனநிலை ஊசலாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது. இருப்பினும் அவர்கள் அதிலிருந்து எப்படி எளிதில் வெளிவருவது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லது அப்படிப்பட்ட உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்கக் கற்றிருக்கிறார்கள்.
எத்தனை ஆடைகள் இதுவரை நாம் அணிந்திருந்தாலும் திருப்தி இல்லாமல் மற்றவர் ஆடைகளைப்  பார்த்தவுடன் ஆசை மேலோங்குகிறது நாமும் அது போல வாங்கி விடலாம் என்று.  எத்தனை வகையான உணவுகள் இதுவரை உண்டிருப்போம். இருப்பினும்  சாப்பிட ஏனோ மனதில் நப்பாசை இன்னும் இருக்கிறது.
எத்தனை மேடையில் பேசி இருந்தாலும் சிலருக்கு மைக் கையில் கிடைத்து விட்டால் ஒரு குஷி. போதும் என்ற பிறகும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பல வகையான பாராட்டுக்கள் பெற்று விட்ட பிறகும் மனதில் ஏக்கங்கள் இன்னும் இருக்கிறது என்றபடியால் மேலும் பாராட்டு பெற துடிப்பது அல்லது ஏங்குவது மனித இயல்பு.
பல விஷயங்கள், அது தெரியும், இது தெரியும் என்றாலும் நாம் தெரிந்து கொள்ள, அறிவை மேம்படுத்திக் கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதனால் தான் பெரியோர்கள் சொன்னார்கள் - கற்றது கையளவு. கல்லாதது உலகளவு, பல கற்றும் கல்லாதார் என்று.
நெருக்கமான நல்ல உறவுகள், நட்புகள், தொடர்புகள் நமக்கு பல இருக்கலாம். இருந்தாலும் பொறாமையால், வெறுப்புணர்ச்சியால், வேண்டாத நெகடிவ் உணர்ச்சிகளால் நமது உறவுமுறைகளில் விரிசல்கள் இன்னும் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மாற்றங்கள் நம்மைச் சுற்றி தினம் தினம் நடைபெற்று வருகிறது. நாமும் மாறித்தான் போய் இருக்கிறோம். எனினும் மாறிட மாற்றிக்கொள்ள இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது. மறுக்க முடியுமா? 
முடித்து விட்ட கடமைகள் நம்மை திருப்தியில் ஆழ்த்தினாலும், இன்னும் முடிக்க வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. 
நான் இருக்கிறேன். கவலை எதற்கு என்று கடவுளே வந்து அருகில் நின்று ஆற்றுப்படுத்தினாலும், கவலைகள் மறையாது மனதில் இன்னும் இருக்கிறது. புதுப்புது கவலைகள் எந்த ரூபத்தில் வரும் என்று 'கவலைகள்' இல்லாத போதும் அவற்றை எண்ணி கவலைப்பட்டு பழக்கமாகி விட்டதே. வலையோடு போகிறவன் கெண்டை மீன்களோடு திரும்புவான். கவலையோடு போகிறவன் சண்டையோடு தான் திரும்புவான் என்று நான் எனது பயிற்சி வகுப்புகளில் சொல்லுவதுண்டு.
இப்படி சொல்ல நிறைய  இருக்கிறது என்று நான் அடுக்கிக் கொண்டே போக இன்னும்  நிச்சயம் இருக்கிறது. அவற்றைப் படிக்க உங்களுக்கு நேரமும் பொறுமையும் இருக்கிறதா? ஏற்கனவே சுமார் 17 நாட்களாக எழுதி வருகிறேன். ஓரிருவர் மட்டுமே படித்து விட்டு 'பேஷ்' என்கிறார்கள். இன்னும் நிறைய பேர் படித்து பயனுற வேண்டும் என்ற அவா என் மனதில் இன்னும் இருக்கிறது.

Monday, November 18, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 17

நாணயமும் நா நயமும் 
சிலர் நேர்மை என்பர். சிலர் நாணயம் என்பர். தினம் தினம் நாம் கேட்கும் வார்த்தைகள் இவை. மக்கள் இந்த வார்த்தைகள் பற்றி சிந்திக்க இன்று அதிக நேரம் இல்லை. வாழ்வியல் மதிப்பீடுகளை யார் மதிக்கிறார்களோ அவர்கள் நேர்மையுடன் நாணயத்துடன் விளங்குவர். 
அதிகமாக தமது குழந்தைகளை திட்டி அதட்டி மிரட்டி அடித்து விரட்டி செய்யும் பெற்றோர்கள் தமது அந்த தவறான செயலை நேர்மையாக உணர்ந்து மன்னிப்பு கேட்பதைப் பார்த்திருக்கிறோம். இது மிகவும் அரிதான ஒரு விஷயம் எனலாம். தமது பெற்றோர் எனும் உயர் நிலையில் இருந்து இறங்கி வந்து அப்படி மன்னிப்பு கேட்பது மிகவும் கடினம் தானே?
அலுவலகத்தில் மேலதிகாரிகள் பலர் மிக நன்றாக தமது சக ஊழியர்களிடம் வேலையை உறிஞ்சிக் கொண்டு, அவர்கள் உழைப்பில் குழுவுக்கு வெற்றி கண்டு அதன் பலன்கள் அவர்களே எடுத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. மிக நல்ல தலைவர்கள் குழுவின் மிகச் சிறந்த வெற்றி தமது குழு அங்கத்தினரின் கடின உழைப்பால் அவர்கள் பங்களிப்பால் கிடைத்தது என்று நிர்வாகத்திடமும், பொது இடத்திலும் எடுத்துரைத்து அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவேண்டும். இதனை நாணயம் அல்லது நேர்மை எனலாம்.
பல நேரம் இன்று காதல் செய்பவர்கள் மற்றும் காதல் திருமணம் செய்து கொள்ளுபவர்கள் தமது காதல் பங்காளியிடம் நேர்மையாக இருப்பதில்லை. அதனால் வரும் குழப்பங்கள் தான் இன்று அதிகமான மன மற்றும் மண முறிவை கொண்டு சேர்க்கிறது.
பலர் இன்று கார் ஓட்டுனர்களை பணியில்  வைத்துள்ளார்கள். எந்த ஓட்டுநர் நேர்மையாக நாணயத்துடன் செயல்படுகிறார்கள்?. பெட்ரோல் அல்லது டீசல் போடுவதில் பணம் பண்ணுவது, வண்டி ரிப்பேர் என்று அதிக பணம் முதலாளியிடமிருந்து வசூல் செய்வது என்று தான் இருக்கிறார்கள். அதே போல பல அரசு அதிகாரிகள் நேர்மை நாணயம் என்ற வார்த்தைகளை இது வரை அவர்தம் வாழ்வில் கேள்விப்பட்டதில்லை என்றே நடந்து கொள்கின்றனர்.
மிகவும் முக்கியமானவர்கள் கூட்டத்தில் கட்டாயம் இந்த குறித்த நேரத்தில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு காத்திருப்புக்கு பின்னர், நீங்கள் என்னை அழைக்கவே இல்லை என்று அப்பட்டமான பொய் சொல்லி தமது வாக்குறுதியில் இருந்து தப்பிக்கிறார்கள். அன்றாட வாழ்வில் சொன்ன வாக்கை காப்பாற்றாத நபர்களை நிறைய காண முடிகிறது. அவர்கள் வாங்கிய கடனை திரும்பத் தருவதில்லை.
இன்றைய விளையாட்டில், வியாபாரத்தில், பல டிவி நிகழ்ச்சிகளில் நாணயம் அல்லது நேர்மை என்பது பெயருக்குக் கூட சிறிதும் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். நாணயம் என்பது ஒருவர் பிறக்கும் போது இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது. அவர்களின் வளர்சூழல் மற்றும், அவர்கள் பெற்றோர் ஆசிரியர் சமூகம் என்று எதைக் கற்றுக் கொள்கிறார்களோ அதன்படியே அவர்களின் நாணயம் அமைகிறது என்பதே உண்மை.
இப்படித் தான் நா நயமும். யாரையும் எப்படியும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு சிறிதும் தயக்கம் இன்றி பயமின்றி மரியாதையின்றி கண்டபடி பேசுகிறார்கள்.
இப்படித்தான் பெரியோர்களிடம், மூத்தோர்களிடம், மேலதிகாரியிடம், வாடிக்கையாளரிடம் பேச வேண்டும் பழக வேண்டும் என்ற நா நயம் தெரியாத சமூகமாக இன்று மாறி வருவதற்கு முக்கிய காரணம் இன்றைய திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்கள் என்று சொல்லலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில், வீட்டில் எப்படி பிறர் மனம் கோணாது, நோகாது பேச வேண்டும் என்று சொல்லித் தருவதே இல்லை என்பது மிகவும் வருத்தமான செயல் தான். ஆத்திசூடி 'நயம்பட உரை' என்று (இனிமையாகப் பேசு) என்று கூறுகிறது. வாக்கினிலே இனிமை வேண்டும் என்று சொல்லுவான் பாரதி. 
சிலர் சொல்லில் வைப்பார் முள்ளை. சிலர் சொல்லில் வைப்பார் கள்ளை. சிலர் சிலர் சொல்லில் இன்னும் பிள்ளை. நா நயம் என்பது பிறரோடு நல்ல சுமுகமான உறவு முறை வைத்துக் கொள்ள மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 
நாணயமும் நா நயமும் வாழ்க்கை எனும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன என்பதில் என்ன சந்தேகம்?

Sunday, November 17, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 16

சுய கட்டுப்பாடு சிறந்தது 
சுய கட்டுப்பாடு என்பது நம்மை சற்று கட்டுப்பட்டு நிறுத்துகின்ற ஒரு வழிமுறை எனலாம். நமது எண்ணங்களை, நடத்தைகளை, வார்த்தைகளை சில தூண்டுதல்களில் இருந்து சில சலனங்களிலிருந்து தடுத்து நிறுத்துகிறது இந்த சுய கட்டுப்பாடு.
நமது இலக்குகளை அல்லது இலட்சியங்களை அடையத் தேவையான  ஓர் அறிவுசார் செயல்முறை இது என்று கூறலாம். 
எதைப்பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற நுகர்வோர் மனநிலை, இனிப்பு உணவைக் கண்டால் நப்பாசை, தவிர சில தீய பழக்கங்களுக்கு  (புகைத்தல், மது அருந்துதல், போதைக்கு ஆளாகுதல் இன்ன பிற) அடிமையாக இருத்தல் போன்ற பல விஷயங்களில் நமது சுய கட்டுப்பாட்டை இழக்கிறோம். 
இன்றைய காலகட்டங்களில் நொடிக்கொரு முறை மொபைல் எடுத்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தல், முகநூலில் மூழ்கி இருத்தல், அடிக்கடி செல்பி எடுத்துக்கொள்ளுதல், பார்க்கும் பொருட்களை உடனே வாங்கி விடுதல், யார் எது வைத்திருந்தாலும் அதனை தானும் வாங்கி விட வேண்டும் என்ற வேட்கை கொள்ளுதல், விடாது பேசிக் கொண்டே இருத்தல் இப்படி பல விஷயங்களில் மக்கள் சுய கட்டுப்பாட்டை இழந்து நிற்பதைக் காண முடிகிறது. இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. 
அருகில் இருக்கும் ஒரு பாக்கெரியில் இருந்து வாசனை வந்தால் உடனே சென்று ஒரு பிஸ்கட் வாங்குதல், வாசலில் மணி அடித்தாலே ஓடிச் சென்று ஐஸ்கிரீம் அல்லது வேர்க்கடலை வாங்குதல், வாகனத்தில் செல்லும் பொழுது பலாப்பழ வாசனை வந்தால் உடனே வண்டியை நிறுத்தி கொஞ்சம் வாங்குதல், டீக் கடையை பார்த்த மாத்திரத்தில் தேநீர் வாங்கிப் பருகுதல் என்று சுய கட்டுப்பாட்டை இழக்கும் பலரை அன்றாடம் காணலாம். 
எத்தனை முறை மணி சத்தம் கேட்டாலும் நான் வாசல்பக்கம் போக மாட்டேன், ஐஸ்கிரீம் அல்லது வேர்க்கடலை வாங்க மாட்டேன் என்று நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளுவது தான் நமது மனஉறுதி எனப்படுவது. "மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்" என்று பாடுவான் பாரதி. இதனை நெஞ்சுறுதி என்றும் சொல்லுவார்கள். 
நான் பொய் சொல்ல மாட்டேன். புலால் உண்ண மாட்டேன். அஹிம்சை வழியில் தான் செல்லுவேன். இப்படிச் சொல்லி அதன் படி வாழ்ந்து காட்டிய தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் தான் சுய ஒழுக்கம் அல்லது சுய கட்டுப்பாடு என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
சுய கட்டுப்பாடு பெரும்பாலும் நமது உடல்நலம் காக்க, பணியில் சிறப்பை வெளிப்படுத்த, தரமான வாழ்வை அளிக்க, பலரிடம் நற்பெயர் எடுக்க, பல சாதனைகள் செய்ய, பிறருக்கு உதவ, பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க உதவுகிறது. 
நேரத்திற்கு எழுந்து யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல், தியானம் செய்தல், இரவு நேரத்தே உறங்குதல், உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்தல், கெட்ட பழக்கங்களை தவிர்த்தல், தினம் நல்ல நூல்களை வாசித்தல், இயன்றவரை இயலாதவருக்கு உதவுதல் என்று நல்ல பழக்கங்களை வரவழைத்துக் கொண்டு அதன் படி விடாமல் நடந்து கொள்ள சுய கட்டுப்பாடு நிச்சயம் உதவுகிறது.
வெற்றி வாய்ப்பை அதிகரிக்க, செல்வத்தைப் பெருக்க, ஆரோக்கியமாக இருக்க, சமூக நன்மதிப்பைப் பெற, இலக்குகளை அடைய, சலனங்களில் இருந்து காக்க சுய கட்டுப்பாடு உதவுகிறது எனும் நோக்கத்தை புரிந்து கொண்டு நமது சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் கட்டற்ற மட்டற்ற வெற்றியும் ஆனந்தமும் கிடைக்கும் என்பது உறுதி.
தவிர மனஅமைதி, உணர்ச்சிக்கட்டுப்பாடு, நேர்மையான வாழ்வுமுறை, நல்ல சரியான முடிவுகள் எடுக்க, மற்றவர்களோடு நல்ல புரிதல் எல்லாமே சுய கட்டுப்பட்டால் ஏற்படும் நன்மை எனலாம்.
முக்கியமாக, பிறர் நம்மைக் கட்டுப்படுத்துவது பிடிக்காது என்பதால் நம்மை நாமே கட்டுக்குள் வைத்துக் கொள்ளுவது சிறந்த விஷயம் தானே?

Saturday, November 16, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 15

15. விதிவிலக்குகள் கிடையாது 
எந்த விதிக்கும் விதிவிலக்குகள் கிடையாது என்பது தான் விதிவிலக்கு. அப்படியெனில் சில விதிவிலக்குகள் உண்டு.
சிக்கல்கள் கவலைகள் இருப்பதில் குழந்தைகள் தான் விதிவிலக்கு என்று நாம் சொல்லுவோம். குழந்தைகளைப் பள்ளியில் சேருங்கள். வீட்டுப்பாடம், மனப்பாடம், பரிட்சை என்று அவர்கள் படும் அவஸ்தைகளுக்கு அளவே கிடையாது.
எல்லோருக்கும் பசி எடுக்கிறது, எல்லோருக்கும் தாகம் எடுக்கிறது, எல்லோருக்கும் தேவைகள் இருக்கிறது. எல்லோருக்கும் பணம் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் வேட்கை இருக்கிறது. எல்லோருக்கும் வெற்றியும் பாராட்டும் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் ஆசைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் கடமைகள் கனவுகள் இருக்கின்றன. எல்லோருக்கும் பொறுப்புக்கள் இருக்கின்றன.எல்லோருக்கும் நோய் வருகிறது. எல்லோருக்கும் வயோதிகம் வருகிறது. எல்லோருக்கும் மரணம் நிகழ்கிறது. இப்படி சில வாக்கியங்களைப் படித்த பின்பு என்ன தோன்றுகிறது? யாரும் இவற்றில் விதிவிலக்கு கிடையாது என்பது தானே?
மருத்துவர் என்றாலும் சில நேரம் வலி வேதனை வருகிறது. போலீஸ் வீட்டிலும் திருட்டு நடக்கிறது. அரசன் வீட்டிலேயே குற்றங்கள் நடக்கிறது. கடவுள் சிலை கூட காணாமல் போகிறது. பிரதமரை அவர் காவலாளியே கொன்றது நம் நாட்டில் தான்.
நெருப்பென்று சொன்னால் நீரில் அணைகிறது. நீர் என்று சொன்னால் நெருப்பில் வேகிறது. வானத்தில் கூட ஓட்டை விழுகிறது. ஆழ்கடலிலும் பேரலை அடிக்கிறது.
யானைக்கும் அடி சறுக்கும் என்று ஏன் சொன்னார்கள்? தவறு என்பது யார் வேண்டுமானாலும் செய்ய நேரிடலாம் என்பதை உணர்த்தத் தான். 
இவற்றையெல்லாம் மீறி சில விதிவிலக்குகள் இருக்கின்றன. கோவில்களில் அமைச்சர் ஒருவர் வந்தால் வரிசையில் நிற்க வேண்டாம். பேருந்தில் குறிப்பிட்ட வயது வரை பயணச்சீட்டு எடுக்க வேண்டாம். சேவை செய்யும் தன்னார்வ நிறுவனங்களின் வருமானத்திற்கு வரிவிலக்கு இருக்கிறது. சில பொருட்களுக்கு அரசு வரி விதிப்பதில்லை. சில நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுவதில்லை. சில நாடுகளில் எந்த பொருளுக்கும்  விற்பனை வரி வைப்பதில்லை. 
அதிகம் பார்த்தால் கண்கள் வலிக்கும். அல்லது கண்களில் நீர் வரும். அதிகம் சாப்பிட்டால் வயிறு வலிக்கும். அதிகம் நடந்தால் கால்கள் வலிக்கும். அதிகம் தூங்கினால் உடற்சோர்வு வரலாம். அதிகம் உழைத்தால் மயக்கம் வரலாம். ஆனால் அதிகம் கேட்பதால் காதுகள் வலிப்பதில்லை. (கேட்டால் காது வலிக்காது).
இப்படி சில விதிவிலக்குகளை பொதுவாக்கிட முடியாது. விதிகள் ஒரு நாள் மாறலாம். ஆனால் அன்றும் அந்த விதிகளில் ஏதேனும் விலக்குகள் இருக்கும். 
விதிவிலக்குகளை விதிகளாக மாற்றி விட முயற்சி செய்யக்கூடாது. உதாரணத்திற்கு ஒன்பது மணி அலுவலக நேரம் என்றால் பத்து நிமிடம் வரை தாமதமாக வரலாம். சிலர் அந்த பத்து நிமிடங்களைச் சேர்த்து தமது அலுவலக நேரத்தை 9.10 என்றே மாற்றி விடுவதுண்டு.
சிவப்பு விளக்கைப் பார்த்த பிறகு நான்கைந்து வாகனங்கள் கடக்கும். விடியற்காலையில், மதிய நேரத்தில் சிக்னல் அருகே போலீஸ் இல்லை என்று தெரிந்தால் ஒரு வழிச்சாலை கூட இரு வழிச்சாலை ஆகும். இது போல விதிகளை மீறுவது நல்லது இல்லை தானே?
விதிகளை மதிப்போம் என்று நான் இங்கே சொன்னால், தலை'விதி' என்று (கர்மா) என்று புரிந்து கொள்ள வேண்டாம். அப்படியே எடுத்துக் கொண்டாலும் சில ஆன்றோர்கள் சொல்லுகிறார்கள் விதியைக் கூட மதியால் வென்று விட முடியும் என்று. விதிகளை மீற வேண்டும் என்ற எண்ணங்களை விலக்கி வைப்போம். எல்லாமே சீர்மையுடன் மிகச்சரியாக  நடைபெற விதிக்கப்பட்டவற்றை மீறுவதில் ஒன்றும் புரட்சி வந்துவிடாது. 

Friday, November 15, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 14

இது தான் நல்ல தருணம் 
சரியான தருணம் வருமென்று காத்திருந்தால் அதே வராமலே போகலாம். ஒவ்வொரு நாளுமே தனித்தன்மை வாய்ந்த தருணங்கள் நிறைந்தவை. மிகச் சரியான நேரம் அல்லது வாய்ப்பு வரும் அது வரை பொறுத்திருப்போம் என்று காத்திருக்க வேண்டியது இல்லை. சரியான ஊக்கம் கிடைக்கும் அது வரை பொறுத்திருப்போம் என்பதும் தவறு. நாம் விரும்புகிற அந்த சிறப்புத் தருணத்தை நாமே உருவாக்கலாம் என்பதே உண்மை. 
தினம் தினம் மிக நல்ல விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றது. நாமும் இது போல தொடங்கிச் செய்து விடலாம் என்று காத்திருக்கும் பொழுது நாம் செய்யத் தவறி விடுகிறோம். காத்திருக்கும் நேரம் அப்படி ஒன்றும் நாம் புதிதாக கற்றுக் கொண்டு விடுவதில்லை. நாம் பெரிதாக முன்னேறி விடுவது இல்லை. புதிய அனுபவங்கள் பெற்று விடுவதில்லை. சும்மா இருக்கும் பொழுது எப்படி ஞானமும் அனுபவமும் கிடைத்து விட முடியும் ?
நாம் காத்திருக்கும் நேரங்களில் பெரும்பாலும் பற்பல மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்து விடுகின்றன. மக்களின் விருப்பங்கள் தேர்வுகள் மாறி விடுவதும் உண்டு. வேறு சிலர் நாம் நினைத்து வைத்திருந்ததை தொடங்கி விடும் வாய்ப்பும் உண்டு. அப்போது நாம் வருந்துவோம். நான் மட்டும் அன்றே தொடங்கி இருந்தால் என்று வருத்தமான கதைகள் சொல்லுவதில் உங்களுக்கு நேரம் உள்ளதா? 
என்பது வயதில் கூட ஹார்மோனியம் அல்லது வயலின் கற்றுக் கொள்ளலாம். மலை ஏறி விடலாம். ஆனால் 45 வயதில் அது இன்னும் சுலபமாக இருந்திருக்கும் அல்லவா ? சரியான தருணங்களில் எடுக்கப்படும் முடிவுகள் நல்ல விளைவுகளை மாற்றங்களை வாழ்வில் கொணரும். முடிவெடுத்து செயலில் இறங்கி அதில் தோற்று பாடம் கற்று கிடைக்கும் ஓர் அனுபவம், சும்மா இருந்தால் கிடைத்து விடுமா?
நல்ல தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து கோட்டையைப்  பிடிப்பதற்கு பதில் கோட்டை விட்டு விட்டு கொட்டாவி விட்டுக்கொண்டு இருத்தல் முட்டாள்தனம் தான். நமது வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் நேரம் காலம் தருணம் கிரகம் என்று வேறு பலவற்றின் கட்டுப்பாட்டில் போய் விடுவது மிகவும் துரதிர்ஷ்டமே. ராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, என்று பார்த்துப் பார்த்து நாம் தொடங்கும் நல்ல நாள் நமக்கு மிகவும் கஷ்டமான நாளாக இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் தான் பெரியோர் 'நாள் என் செயும் வினை தான் என் செயும்' என்று சொன்னார்கள். 

தான தருமம் கூட நினைத்த மாத்திரத்தில் செய்யாமல் சில கணங்கள் கழித்து யோசிக்கும் பொழுது மனது மாறி விடலாம். அப்போது பத்தாயிரம் ரூபாய் வழங்க எண்ணும் நாம் இரண்டாயிரத்தில் முடித்து விடுவோம். ஒன்றுமே கூடக் கொடுக்காமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. நன்றி சொல்ல, மன்னிப்பு கேட்க, விருபுகிறேன் எனச் சொல்ல, நலம் விசாரிக்க, உடல்நலம் சரியாதவரை சென்று காண என்று சில விஷயங்களை தள்ளிப் போட்டால் அது நடைபெறாமலே போய் விட வாய்ப்பு உள்ளது. ஆக எல்லா விஷயங்களுக்கும் இது தான் நல்ல தருணம்.
நம்மை, நமது திறனை, ஆற்றலை, நமது நேரத்தை நாம் மதிக்கத் தொடங்கினால் எல்லா நாளுமே சிறந்த நாளாக மாறிவிடும். சிறு சிறு ரிஸ்க்கள் எடுக்காமல் வாழ்வில் சுவாரசியமே இருக்காது. சவால்கள் வேண்டும். அவற்றை சமாளிக்கும் திறனும் சாதுர்யமும் நமக்குள் இருக்கிறது.
நாளைக்காக காத்திருந்தது போதும். நல்ல நாளைக்காக காத்திருந்தது போதும். இன்றே இப்போதே நல்ல தருணம் என்று தொடங்குங்கள் நீங்கள் ஆசைப்படுவதை, நினைப்பதை, அடைய எண்ணுவதை. மாயங்கள் நிகழும் என்று காத்திருக்காமல் மாயங்களை நாம் நிகழ்த்திக் காட்டுவோமே. நீங்கள் வெற்றிப்படிகளில் ஏறி விட்டதாக கற்பனையில் பார்த்துக் கொண்டு தியானம் செய்வதை விட, வெற்றிப்படிகளில் ஏறி விடலாம் சீக்கிரமாக. எதற்கு இந்த காத்திருப்பு. காலம் நம்மை கழுத்தறுத்து விடும். நமது காலத்தை தருணத்தை வெற்றியை சந்தோஷத்தை உருவாக்குவோம். தள்ளிபோடுவதால் தள்ளாமை தான் வரும். உழைப்பை அள்ளித் தருவதால் வெற்றி நம்மைத் துரத்தும். உலகம் நம்மை உற்றுப் பார்க்கும்.


நிறைவாக இந்தப் பாடலை நினைவில் வைப்போம்: "நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்". எனவே கற்பனையில், உறக்கத்தில் தயக்கத்தில் நாட்களை கழிப்பதை விடுவோம். உடனே தொடங்கி உன்னதம் அடைவோம்.

Thursday, November 14, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 13

13. பாதை மாறாதீர்கள் 
பாதை மாறாமல் இருப்பதற்கான திறன், துணிச்சல் நல்லவர்களின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இது பொறுமையான துணிச்சல் என்று சொல்லலாம்.

விஷயங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், சூழல் எப்படி எதிராக மாறினாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், மன அழுத்தங்கள் எதிர்கொள்ள நேரிட்டாலும் சிலர் எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியாக இருப்பர். "எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" என்று பாடுவான் பாரதி.

மனஉறுதி, விடாமுயற்சி, வெற்றிக்கான வேட்கை என்று சில தன்மைகள் கொண்டவர்களுக்கு போதிய காலம் அந்த கடினமான பாதையில் தாக்குப்பிடித்தால், விஷயங்கள் அவர்களுக்குச் சாதகமாக நிகழத் தொடங்கும். 

தமது 40 வயதுக்குள் சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான தரை மற்றும் கடற்பயணங்களை மேற்கொண்டு வாழ்வில் வெற்றி கண்டு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர் மார்கோபோலோ அவர்கள். பின்னாளில் அவர் சென்ற நாடுகளை அவர் சொல்லச் சொல்ல அவரின் மகள்கள் உலக வரைபடத்தை உருவாக்கினார். அதனை வைத்துக் கொண்டு பல நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் பலர். அவர்களில் மிக முக்கியமானவர் தான் கொலம்பஸ் என்று வரலாறு கூறுகிறது.

இப்படி எடுத்துக் கொண்ட பாதையில் பல இடர்பாடுகளுக்கு நடுவே வெற்றி கண்டவர் தான் உலகம் போற்றும் விளையாட்டு வீரர் மஹிந்திர சிங் தோனி அவர்கள். அப்படிப் பட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. அதே போல சினிமாத்துறையில் இன்று கால் பதித்து 60 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கலைஞானி கமலஹாசன் அவர்கள்.

சோனி நிறுவனத்தின் அதிபர் அகியோ மொரிடோ பலமுறை தோல்வியைத் தழுவி இருக்கிறார்.உலகே வெளிச்சமாக இருக்கிறது. பல்பு கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் 1000 முறை முயன்று பாதை மாறாது அதிலேயே மீண்டும் மீண்டும் மனம் துவளாது முயன்று கடைசியில் வெற்றி பெற்றது நாமெல்லாம் அறிந்ததே.உலகம் போற்றும் பில் கேட்ஸ் மற்றும் ஹென்றி போர்ட் போன்ற தொழிலதிபர்கள் பல ஆண்டுகள் தொடர் தோல்விகளை சந்தித்த பிறகும் தமது பாதையை மாற்றிக் கொள்ளாமல் துணிவுடன் பயணித்து இன்று உலகத்தின் மிகச் சிறந்த தொழிலதிபர்களாக விளங்குகிறார்கள். 

தமது 95 ஆவது வயதில் உயிர் நீத்த நெல்சன் மண்டேலா சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தமது முதல் பப்ளிக் உரையை நிகழ்த்தினார். தமது 71 ஆவது வயதில் பதவிக்கு வந்தார். 80 வயதில் மறுமணம் செய்து கொண்டார். ஒரு நாளும் பாதை மாறாத அவர் எல்லோருக்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

தமது மனதை மாற்றிக் கொள்ளாத எவராலும் உலகை மாற்றி விட முடியாது என்று ஒரு மாற்றுக் கருத்தை சொன்னவர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள்.இதே கருத்தை வலியுறுத்தி மாற்றத்தை எதிர்கொள்ளாதவர்கள் முன்னேறவே முடியாது என்று சொன்னவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அவர்கள். 

அதே சமயம் எது ஒன்றையும் சாதிக்காதவர்கள் 'இது சாத்தியம் அல்ல, விட்டு விடுங்கள்' என்று சரியான பாதையில் செல்லுபவர்களை நிறுத்த மனதை மாற்றிட அருகதை அற்றவர்கள் என்பதும் உண்மை தான். 

முட்கள் நிறைந்த பாதை என்று மனம் மாறி விட்டால் நிச்சயம் ரோஜாக்கள் கைக்கு வராது. முட்களை மீறித்தான் ரோஜாக்கள் கிடைக்கிறது. எனவே தடம் மாறாதவர்கள் தவம் செய்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 12


 ஒரு போதும் ஏமாற்றாதீர்கள் 
'ஏமாறாதே ஏமாற்றாதே' என்ற பழைய பாடலின் முதல் வரி மிகப்பெரிய அறிவுரையைப் புகட்டுகிறது. நாம் ஒருபோதும் யாரையும் ஏமாற்றக் கூடாது, பொய்யுரைக்கக்கூடாது. குறுக்குவழிகளைத் தேர்வு செய்யக் கூடாது. அதே போல யாரிடமும் நாம் ஏமாந்து நிற்கவும் கூடாது.
பெரும்பாலும் மக்கள் தமது பதவி அதிகாரம் படை பலம் மற்றும் தொடர்புகள் இவற்றை தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். யாருமே தமது செயல்களுக்கு பொறுப்பேற்க தயாராக இல்லை. தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டால், அதில் எனது பங்கு குறைவு தான். அவருடன் நான் சேர்ந்தது தான் தவறு. அவர் தான் தவறானவர். இப்படிச் சொல்லி பிறர் மீது பழிகள் போட்டு தன்னை நல்லவராக நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் நபர்களே இன்று அதிகம். 
அதிகாரத்தை உள்ளடிக்கிய ஒரு பதவியில் நாம் இருக்கும் போது, கிடைக்கின்ற மோசமான விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது எளிதில் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளுவது சுலபமானதாக இருக்கக்கூடும். நமது வேலை எங்கே பறி போய் விடுமோ என்ற பயத்தில் யாரும் நம்மோடு அதிகம் வாதிடவும் முன்வர மாட்டார்கள். ஆனால் உண்மை அவர்களுக்கு நிச்சயம் பட்டவர்த்தனமாக தெரியும். அவர்கள் நமது நடத்தையை கவனித்து வந்திருப்பார்கள். எனவே தாங்களும் இனி நாணயத்தோடு நடந்து கொள்ளத் தேவை இல்லை என்ற உணர்வை அவர்கள் பெற்று விடுவதும் உண்டு. 
ஒரு குடும்பத்தலைவர் கெட்ட சகவாசங்களில் உள்ளார், கெட்ட பழக்கங்களோடு வலம் வருகிறார் என்றால் அவரது பிள்ளைகளும் அப்படி இருந்தால் தவறில்லை என்று தானும் அப்படிப்பட்ட சூழல்களில் இறங்கி விடுவர். அல்லது அதை விட மோசமான செயல்களில் இறங்கி விடுவதும் உண்டு. 'யதா ராஜா ததா பிரஜா - மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி' என்று பழமொழிகள் இப்படித்தான் வந்திருக்கும். அப்படித்தான் தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்றும் சொல்லுவர். 
இது நிறுவனங்களிலும் நிச்சயம் பொருந்தும். நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு இழைத்தால், அந்நிறுவனத்தில் உள்ள எல்லோரும் அதே நடத்தையைப் பின்பற்றத் தூண்டப்படுவது இயல்பானது தான். அந்த ஏமாற்றுக் கலாச்சாரம் அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிலையிலிருந்து கீழ்மட்ட நிலை வரை எல்லா நிலைகளிலும் ஊடுருவி, அதன் விளைவாக அந்நிறுவனம் முற்றிலுமாக நிலைகுலைந்து போவது நடக்கத்தான் செய்கிறது. 
தலைவர் மல்யா பல தவறான செயல்கள் செய்து நாட்டை விட்டு தலைமறைவான பின்பு அந்த நிறுவனத்தின் இதர ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் மீது என்ன பிடிமானம் அல்லது பெருமிதம் இருந்து விடமுடியும்? அதே போல மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த கஃபே காபி டே நிறுவனத்தின் அதிபர் தற்கொலை செய்து கொண்டார் என்ற பிறகு அங்கே பணியாற்றும் எல்லா ஊழியர்களுக்கும் பதட்டமான மனநிலை தானே நிலவும் ? இப்படித்தான் சென்னையின் மிகப்பிரபலமான உணவகம் என்று பெயர் வாங்கிய சரவணபவன் ஹோட்டல் அதிபர் அவர் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பிறகு அவர் உடல்நிலை மோசமாகி உயிர் இழந்து விட்ட பிறகு, அங்கே வேலை பார்ப்பவர்களின் மனதில் இனி ஹோட்டல் என்ன ஆகுமோ, நமக்கு சம்பளம் கிடைக்குமோ? இப்படிப்பட்ட கவலைகளில் மூழ்கிப் போய் இன்று அங்கே ருசியாக கிடைக்கும் உணவு மிகவும் மோசமாகி விட்டது. போட்டியாளர்கள் கொடிகட்டிப் பறக்கிறாரக்ள்.
குடும்பத்தலைவர் சிறந்த முன்னுதாரணமாக இருந்து விட்டால் பிள்ளைகளும் மிகச் சிறந்தவர்களாக வளர்ந்து சாதனை படைப்பார்கள். அதே போல நிறுவனத்தலைவர்கள் நல்ல முன்னுதாரணமாக இருந்தால் அங்கே பணிபுரியும் ஊழியர்களும் சிறந்த முறையில் பணியாற்றுவார்கள். இல்லையேல் நிறுவனத்தலைவர்கள் விதைத்த அழிவுக்கான விதைகளை பார்த்து பார்த்து தானும் அதே நடத்தையை தங்களது பங்குக்கு இயன்றதைச் செய்து உள்ளதைக் கெடுக்கவே நினைப்பர்.
ஏமாற்றிப் பிழைப்பவர்கள் மிக நன்கு அறிவார்கள் உண்மை என்பது ஒரு நாள் நிச்சயம் வெளிப்படும். அன்று நம்மால் தப்பிக்கவே முடியாது (பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி)  என்று. குறுக்கு வழியில் எளிதில் சம்பாதிக்கும் பணம் வந்த வேகத்தில் போய் விடும் என்பதை நாம் பல இடங்களில் பார்க்க முடிகிறது. எனவே நமது வீட்டில் மற்றும் பணிபுரியும் இடங்களில் நல்லவற்றை விதைப்போம். என்ன விதைக்கிறோமோ அது தானே முளைக்கும். அரளி விதைத்து விட்டு அல்லி மலர் பூக்கும் என்று எப்படி எதிர்நோக்கலாம்?

Tuesday, November 12, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 12

12.  என்ன நிகழக் கூடும் ?
அடுத்து என்ன நிகழக் கூடும் என்பது பற்றிய ஒரு உள்ளுணர்வு அல்லது அறிவு பொதுவாக பெண்களுக்கு ஆண்களை விட மிக அதிகம் உள்ளது என்று மனநல ஆலோசகர்கள் கண்டறிந்து சொல்கிறார்கள். அது அவர்களுக்கு இயற்கையாகவே இறைவனால் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை எனலாம். 

சில சமயம் வீடுகளில் ஒரு சம்பாஷணை நிகழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது பெண்கள் கண்களாலேயே தமது கணவர்கள் அல்லது மகன்களுக்கு ஜாடை காட்டி எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் ஆண்கள் அவற்றைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் செய்வதேயே செய்து மாட்டிக் கொண்டு முழிப்பார்கள். இதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்கலாம்.அடுத்து இப்போது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள், எங்கேயாவது கேட்டுக் கொண்டே அவர்கள் வந்து விடப் போகிறார்கள் என்று பெண்கள் எச்சரிப்பார்கள். எப்படித் தான் அவர்களுக்குத் தெரியுமோ அதே போல நடக்கும். அவர்கள் சமையல் செய்யும் பொழுது கூட ஓரிருவருக்கு சேர்த்து செய்து வைப்பார்கள். அங்கே அவர்கள் கணித்த படி சில திடீர் விருந்தாளிகள் வந்து நிற்பார்கள்.சில நேரம் காலையில் வெயில் அடிக்கும் பொழுது இன்று மழை வந்தாலும் வரும், எதற்கும் குடை கொண்டு போங்கள் என்று சொல்லுவர் பெண்கள்.

இந்த அடிப்படை உள்ளுணர்வு ஆண்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களுக்கும் இது உண்டு. அப்படித்தான் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் சில டெண்டர்களை கோட் செய்வர். சில ஆர்டர்களை நினைத்தவாறு அடைந்து நிற்பர். சில உயர் அதிகாரிகளை சில நிமிடங்களில் நேர்காணல் செய்து தேர்வு செய்வர் அல்லது வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்வர். அவர்கள் முடிவு பெரும்பாலும் சரியாகத் தான் இருக்கும். தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்களைக் கொண்டு எதிர்காலக் கணிப்புகளை மேற்கொள்ளுவதில் நிறுவனத்தின் தலைவர்கள் திறமைசாலிகளாக விளங்குகின்றனர். இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிற விஷயங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் என்ன நிகழப் போகிறது என்பதை அவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியும். வாடிக்கையாளர்கள் இன்று எவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

பிறகு, எதிர்காலத்தில் அந்த வாடிக்கையாளர்கள் எந்த வகையான பொருள்களையும் சேவைகளையும் வாங்குவார்கள் என்று அவர்கள் தீர்மானிக்கின்றனர்.சில நிறுவனங்களின் தலைவர்கள் நெருக்கடிகளையும் முன்கூட்டியே எதிர்பார்க்கின்றனர். (பெண்கள் அஞ்சறைப் பெட்டிக்குள் நாளைக்கான செலவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்திருப்பர்) ஏதோ ஒன்று நிகழும்வரை அவர்கள் காத்திருப்பதில்லை. "எது தவறாகப் போகக்கூடும்?நிகழக்கூடிய எந்த விஷயம் என்னுடைய தொழிலுக்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது?" என்று அவர்கள் எப்போதும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர்.சிறந்த தலைவர்கள் இன்னொரு வகையான சிந்தனையிலும் ஈடுபடுகின்றனர். எதிர்காலத்தை முன்னோக்கிப் (விஷினரி) பார்த்துவிட்டு நிகழக்கூடிய சாத்தியமுள்ள அனைத்து விளைவுகளையும் அவர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்கின்றனர்.பிறகு தான் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டில் இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு சில விளைவுகளை எதிர்பார்த்து கணித்து விளையாடிய இந்திய வீரர்கள் தலைவர்கள் என்றால் அது கபில்தேவ் மற்றும் அனைவரும் போற்றும் தல தோனி இருவரும் ஆவர்.

நெப்போலியன் தன்னுடைய போர்களில் பெரும்பாலானவற்றைத் தன்னுடைய கூடாரத்தில் வென்றதாகக் கூறப்படுகிறது.என்ன விஷயங்கள் தவராகப் போகும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு கணித்து அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார் என்று சொல்லப்படுகிறது.

முன்கூட்டியே சிந்திப்பதற்கு நேரம்
ஒதுக்கிடும்  மக்கள் உத்திசார் சிந்தனையில் சிறந்தவர்கள். மேலும் அவர்கள் மிகச்
சிறந்த அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றனர்.எனவே நாமும் வாழ்வில் அடுத்தடுத்து என்ன நிகழக்கூடும் என்று சிந்தித்து அதற்கான உத்திகளோடு செயல்பட்டு வெல்லுவோம். சரி தானே ?