Saturday, September 30, 2017

On Friendship - a poem by Balasandilyan

நட்பு 

நினைவு எனும் சாவி போட்டு 
மனதைத் திறந்த பொழுது 
உலகின் எந்த மூலையில் எனது 
உன்னத நண்பர்கள் இருக்கிறார்களோ ?
யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை.
சில நினைவுகள் மட்டும் 
சிந்தனை தூண்டும் 
மணம் வீசும் புது மலரகளைப் போல 
அந்த வாய்க்கால் கரைகள் 
நதிக்கரை மணல்வெளிகள் 
பின்னர் கல்லூரி கட் அடித்துப் 
பார்த்து நின்ற கமல் படங்கள் 
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. 
தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரே 
தொடர்பில் இல்லாத நண்பர்கள் எங்கிருக்கிறாரோ 
எல்லாம் மாறிவிட்டது...வாழ்க்கை முறைகள் 
வாழும் முறைகள் ...இயந்திரமாய் இறுக்கமாய் ..
சிலருக்கு வேலையில் இருந்து ஓய்வு இல்லை 
சிலருக்கு நட்பு உறவுகள் தேவை இல்லை 
மாறிவிட்ட உலகில் இன்று நமக்கு நாமே 
மாறினோம் உறவாக...நட்பாக...இல்லையேல் 
முகவரி கூட தெரியாத முகநூல் நண்பர்கள் நடுவில் 
மூழ்கிய தினங்கள்...மாயமாகும் நிமிடங்கள் 
என்று மாறி விடுமா நமது அனுதினங்கள் 
கொஞ்சம் கொஞ்சமாக வயது கூடி ஆயுள் குறைகையில் 
வாழக்கை நினைவுகளின் புத்தகமாகி விட்டது 
பக்கங்கள் யாவும் பழைய நினைவுகள் 
பக்கத்தில் இருப்பவர் முகநூல் பக்கத்தில் இருப்பவர் 
அக்கறை இருப்பினும் ஏதோ ஒன்று குறைகிறதே 
என்றாலும் இன்று தேர்ந்து எடுத்த எனது நண்பர்களின் 
நட்பும் அன்பும் நான் செய்த தவமே...நான் பெற்ற வரமே...
சில நேரம் அந்த முகம் மறந்த ..பெயர் மறந்த 
நண்பர்கள் குழாம் நினைவுக்கு வந்தாலும் 
நினைவுகளுக்கும் வயதான விஷயம் புரிகிறது 
அவ்வப்போது நினைத்து நான் சிரிக்கும் தருணம் 
அட புதிய நண்பர்கள் எத்தனை பேர் 
ஆயிரம் ஜென்மங்கள் பழகியது போல இன்று கிடைத்துள்ளது  
ஆண்டவன் என் மீது காட்டிய கருணை தானே 
அபூர்வம் தானே இப்படி கிடைக்கும் நட்புகள் உறவுகள் 
அதனால் தான் இருக்கிற  எனது நட்பு பொக்கிஷங்களை 
ஆழ அகலமான நூலாக எழுதினேன் ...தினம் ஒருவராய் 
அவர்களை பெற்றதும் அவர்களிடம் கற்றதும் 
ஆனந்தம் தான் நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு 
அற்புத தருணமும் ...ஆன்மா ஆனந்தமாக சிரிக்கிற
அமைதியாக உதிர்க்கிற நீண்ட மூச்சுக்களின்   
அழகை உணர்கிறேன் ...அழகாய் உணர்கிறேன் 
நட்புகள் அனைவருக்கும் பணிவன்புடன் 
இதோ உங்கள் பாலசாண்டில்யனின் சமர்ப்பணம் இந்நூல்
இன்றே படியுங்கள்...நீங்களும் இது போல் ஒன்று வடியுங்கள் 
இன்பமுறட்டும் உங்கள் ஆன்மா ...இதமுறட்டும் இதயம்.!!

Friday, September 29, 2017

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது.

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது.
This is something new - You will find one of my compositions everyday in this space: Lots of music friends like 
Prabha Gurumurthy are truly encouraging
This one is from the inspiration from the Hindi film song - Jaane kya baath hai, neendh nahi aathi pehle mulaakath hai
ஏனோ தெரியவில்லை
என்னமோ தெரியவில்லை
உறக்கமும் வரவில்லை
உந்தன்முகம் மறையவில்லை - கண்ணில்
உந்தன் முகம் மறையவில்லை (ஏனோ)
ஒருமுறை பார்த்ததுமே
ஓடவில்லை எந்தன் நேரம்
ஒருமுறை பார்த்ததிலே
ஓயவில்லை இமைகளில் ஈரம்
மறுமுறை பார்த்துவிட
மனதிலே ஏக்கம் ஏக்கம்
மறுமுறை பார்த்துவிட்டால்
மறையுமோ எந்தன் தூக்கம் (ஏனோ)
அழகென்பது மொத்தமும் நீயோ
அகிலத்தின் சித்தமும் நீயோ
பழகிடஎண்ணி பார்வை விரித்தேன்
பாங்கது தெரியாது பாதி சிரித்தேன்
தாபம் போக்கிட தவமிருப்பேன்
தாங்கிச்சுமக்க யுகம் பொறுப்பேன்
தங்க நிலாவே நீ வருவாயோ
தவிக்குமெனக்கு சுகம் தருவாயோ (ஏனோ)

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
Composition 2
- பாலசாண்டில்யன்
கன்னல் மொழியே கலைமானே - உனைக் 
காண்கின்ற போதெல்லாம் கர்வமானேன் 
ஜன்னல் மலரே கல்லானேன் - நின் 
கவனம் கண்டு நான் சிலையானேன் (கன்னல்)
முல்லைச் சிரிப்பால் என்னை மயக்கி 
கொள்ளை கொள்பவளே - நீ 
பிள்ளையமுதே பேசுகம் கிளியே 
பொழியும் இசை மழையே (கன்னல்)
நிலவு முகத்தால் இரவை விலக்கி 
நினைவைக் கலைப்பவளே - மன 
நிம்மதி தேடி அலையும் எனக்கு 
நிழலாய் இருப்பவளே (கன்னல் )
This one is a melodious Tamil Ghazal.

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
Composition - 3
-
பாலசாண்டில்யன்
வெண்மதி வானிலே உலா வந்ததே 
பூவிழி காதல் நோயினால் வெந்ததே (வெண்மதி)
ஆசைப் பூஞ்சோலை பூக்கும் இனி தான் 
ஆடிடும் பூங்கொடி துணை தேடுதே (வெண்மதி)
மாலை வந்தாலே உந்தன் நினைவே 
மானின் உல்லாசமாய் தினம் ஓடுதே (வெண்மதி)
This one is a melodious Tamil Ghazal.in the tune of "Kam Nahi mere zindagi ke liye...Chine mil jayae dho gadi ke liye"

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 4
காயம் ஒன்று என் மனத்தே 
ஆழமாய் நின்று போகுமே 
நீயில்லை என்றான பின்னே 
நிம்மதி பறந்தோடுமே (காயம்)
காதல் விழா ஒன்று காணவே 
கண்கள் இரண்டின் தவக்கோலமே 
பூண்டிடும் புது வேடம் யாவும் 
புன்னகை மணம் வீசுமே (நீயில்லை என்றான )
பாடம் நிலா காயும் போதிலே 
பல்லாயிரம் முறை வேணுமோ 
பாவை உந்தன் பார்வையொன்று 
புத்தகம் உருவாக்குமே (நீயில்லை என்றான)
This one is a Tamil Ghazal again in the tune of " Dil hi dil mein katm ho kar dadkane rah jayegi"

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 5
ராகம்: பெஹாக் தாளம் : ஆதி
இதயமலர் சூடும் இளைய மகள் 
இதழமுதம் பொழியும் பருவமகள் - எந்தன் (இதய)
இசையினையே நாடும் கவிதையவள் 
இணைந்திடவே பாடும் பறவையவள் 
இனித்திடவே பிறக்கும் நினைவு அவள் 
இசைத்திடவே துளிர்க்கும் காதலவள் - எந்தன் (இதய)
இருளதனை அழிக்கும் ஒளியுமவள் 
இரவதனை விலக்கும் நிலவு அவள் 
இமைப்பொழுதில் மயக்கும் உருவமவள் -கவி 
இயற்றிடவே அழைக்கும் காதலவள் (இதய)

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 6
வெண்ணிலவு வந்தது வானிலே பறந்து 
காதலில் துணை தேடித் தேடி - வெண்ணிலவு வந்தது
ஊடலில் கண்கள் சிவந்து 
வாடியுடல் நீராய் மெலிந்து 
பாடிடும் செவ்வாய் உலர்ந்து 
பருவ நாணத்தில் மெல்ல . . (வெண்ணிலவு)
மோகத்தில் தன்னை மறந்து 
மெல்லிய பூவிதழாய் கலைந்து 
தேகத்தில் வலிமை குறைந்து 
திரியும் பறவை போல (வெண்ணிலவு)
My favorite Geet in Tamil - very soulful in its tune....

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 7
(தங்கத்திலே ஒரு குறை இருந்தால் மெட்டு ) - ஆயில் சேமிப்பு பாடல்
எதற்கெடுத்தாலும் வாகனம் என்றால் 
எரிபொருள் விரயம் அன்றோ - இனி 
எப்படி வருமோ சிக்கன மென்பது 
எவருக்கும் கடினம் அன்றோ
கதருக்குள் வாழ்ந்த காந்தியைப் போல 
காண்பத ரிதன்றோ - அவர் 
நடந்து நடந்தே தேச மளந்தர் 
நமக்கது பாட மன்றோ (எதற்கெடுத்தாலும்)
அரிதரிதாக கிடைப்ப துவன்றோ 
ஆயில் என்ற செல்வம் - அந்த 
எரிபொருளை நாம் காத்திடுமெண்ணம் 
இனியேனும் கொள்ளுவோம் (எதற்கெடுத்தாலும்)
தெருவில் வாகனம் தொடர்ந்து பறந்தால் 
தீரும் ஆயிலன்றோ - ஒரு 
கூப்பிடு தூரத்தை நடந்து அடைந்தால் 
கூடும் ஆயுளன்றோ ..கூடும் ஆயுளன்றோ (எதற்கெடுத்தாலும்)


எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 8
ராகம்: சுருட்டி தாளம்: ஆதி 
(
நாட்டியத்தில் பயன்படுத்தலாம் இந்த பாடலை)
என்னிடம் கோபம் என்ன ? - சகியே 
என்னிடம் கோபம் என்ன?
புன்னகை புரியும் பெண்ணழகே உனக்கு - என்னிடம்
நறுமணம் கமழும் நின் சிறுமணி இதழ்கள் 
நானருகில் வர நாணிச் சுருங்குமோ ?
எண்ணிக் கலங்காதே என்னிடம் மிரளாதே 
சின்னக் கருவிழியின் சித்திரம் நீ தானே? - என்னிடம்
சின்னக் குழந்தையைப் போல் சிணுங்கிய முகத்தை 
கன்னங் குழியக் கொஞ்சம் காட்டிச் 
சிரிப்பாயோ ?
சேட்டைகள் பண்ணாதே சினந்து நீ ஓடாதே 
நாட்டமுடனே வந்து நான் பிடித்திடுவேன் - என்னிடம்

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 9
(From the album viz. "Baba Malaradi Saranam" produced by Muthukrishnan. Music by Chanakya. Lyrics: Balasandilyan. Sung by : Sainthavi GV Prakash)
இது தான் நல்ல தருணம் - அருளைப் பெற 
இது தான் நல்ல தருணம் - சாயிநாதா 
நின் மலரடி சரணம் - சாய் நாதா நின் மலரடி சரணம்
பாபா எனும் சொல்லே அழகு - சாய் 
பாபா என்றாலே கொள்ளை அழகு 
பாபாவை நினைக்கும் பக்தன் மனது 
பெறுமே தினமும் அருளின் அமுது - அதற்கு இது தான் நல்ல தருணம்
பாபா காலத்தின் விருந்து - எந்த 
சீக்கெது வரினும் அவரே மருந்து 
எதிர்கொள்ளுவார் ஞானக் கதவு திறந்து 
ஏற்போம் அவரை இனிதே பணிந்து - அதற்கு இது தான் நல்ல தருணம்

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 10
அன்பின் நிறம் வெண்மை 
அறிந்து கொள் மனமே - அன்பின் நிறம் வெண்மை 
அந்த வெண்மையில் நாமும் 
அந்த உண்மையில் நாமும் 
ஒன்றரக் கலந்தால் இல்லை இனி பேதமே (அன்பின்)
ஆண்டவன் நிறம் வெண்மை 
ஆண்டவன் நிறம் வெண்மை 
அவனுடன் கலந்தால் அவனருள் இருந்தால் 
இல்லை இனி மன இருளே (அன்பின்)
அன்பின் நிறம் அது வெண்மை தானே 
அன்பின் நிறம் அது வெண்மை தானே (அன்பின்)
This is adopted from a Sufi Song -' Ishq ka rang safed hai baba' by Rekha Bharadwaj - something very divine. My version also has 3 more Charanams - Just listen to original and murmur my Tamil version - you will be able to sing a bit I am sure.
This is also dedicated to my friend Latha Swaathi - who has challenged a few friends today to write a song on 'Love' with true sense.

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 11
(From the album viz. "Sai Smaranam" by Giri Trading. Music by : Tamilpadam Kannan. Sung by: T S Ranganathan (Surang/Giri) Lyrics : Balasandilyan) - Album available at all Giri Trading Branches across the country.) This one is among the 9 songs in the album. This is a very emotional song and you will surely get moved. Don't miss to listen. Such is the magic by T S Ranganathan
(Man ke gaire Andheyare mein)
மனதின் இருள் விலகி ஒளி நிதம் பெறவே
சாயியின் நாமம் விளக்கொளியே 
சாயியின் நாமம் விளக்கொளியே (மனதின்)
எவரெலாம் சாயியின் நாமம் சொன்னாரோ
அவரெலாம் வாழ்வின் நாதம் உணர்ந்தார்
முள்ளின் வனங்களில் தவிப்பவர் தமக்கு 
சாயியின் நாமம் விளக்கொளியே (மனதின்)
எது எந்தனது எனக்கெது சொந்தம்
அகிலமெல்லாம் உன் ராஜாங்கம்
எதுவும் எனதென்ற அறிவிலிகளுக்கு 
சாயியின் நாமம் விளக்கொளியே (மனதின்)
எவரும் எவர்க்கில்லை இவ்வுலகினிலே
சாய் எவருக்கும் உடன் பிறந்தவரே
உறவுகள் விரிசலில் தனை இழந்தோர்க்கு 
சாயியின் நாமம் விளக்கொளியே (மனதின் )

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 12
Though I have written and composed around 100 songs, this is the first one which I wrote in the year 1987 after listening to the Kriti "Kathaya Kathaya Madhavam" by Narayana Theertha - The composition was fine-tuned with the help of my friend and great musician Ms. Kalyani Shankar.at that period. My sincere thanks to her. I had the great privilege and blessings of singing this song in front of Maha Periyavaa and took his blessings some three decades ago. A couple of years back I offered this song to Ms. Sindhujha Ekambaramwho does musical discourse for her to use in her programs. Feeling truly blessed. Grateful. Bliss.
ராகம்: கல்யாணி Thalam : Mishra Chapu
சரணம் சரணம் குருவே 
தாள் பணிந்து (சரணம்)
அருட்பார்வை தனில் அன்பு 
மழை பெய்யும் மேகமே 
இருள் நீக்கி பயம் போக்க வந்த 
இறைவா நின் தாள் போற்றி (சரணம்)
விழியோரம் ஒரு பார்வை 
விழுந்தாலே துயர் நீங்கும் - உன் (விழி)
கலி தீர்க்கும் காஞ்சி மாமுனியே - குருவே
நடமாடும் தெய்வமே 
நடராசன் வடிவமே (Space for Niraval and Swaram)
பழி நீக்கி பக்தி யாகம் செய்ய 
பாரிலுதித்தாய் போற்றி (சரணம்)
எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 13
தேசிய ஒருமைப்பாட்டு கீதம்
இந்து என்ன முஸ்லீம் என்ன உயிர் ஒன்று தானே 
ஏழை என்ன பணக்காரன் என்ன உணர்வொன்று தானே 
அல்லாஹ்வைத் தொழுதாலும் ஏசுவைப் பணிந்தாலும் 
அன்பு எனும் வேதம் அனைவர்க்கும் சொந்தம் (இந்து)
சாதி மத பேதம் மேலோர் கீழோரின்றி 
சமமென்ற பாவம் தேசத்தின் கீதம் 
இந்தியர் எல்லாம் ஒன்றே என்போம் 
இணைந்திடக் கைகள் ஏற்றங்கள் செய்வோம் (இந்து)
நிற இன வாதம் தேசத்தின் சேதம் 
நேயங்கள் வேண்டும் நெஞ்சத்தில் என்றும் 
எல்லோருமிங்கு நிகரென்று கொள்வோம் 
எம்மதமாயினும் இந்தியன் என்போம் (இந்து)
(கோவிந்த் போலோ கோபால் போலோ - எனும் ஒரு சாயி நாமாவளி கேட்ட பொழுது அந்த முணுமுணுப்பில் எழுதியது இந்தப் பாடல்)

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 14
ராகம் : மதுவந்தி தாளம் : ஆதி
இன்சொல்லே இனிமை தரும் 
இன்செயலே இறைமை குணம் - என்றும் (இன்சொல்லே)
நன்மை பயக்கும் நல்லவர் மனதில் 
நாளும் இருக்கும் நான்மறை நளினம் 
மென்மை பரப்பும் பணி தினம் செய்தால் 
மேன்மை பிறக்கும் பரமன் அருளால் (இன்சொல்லே)
வன்மம் ஒழித்து வாஞ்சை யுடன் புது 
உலகம் சமைத்து வாழத் தெரிந்தால் 
ஜென்மம் எடுத்த காரணம் புரியும் 
ஜீவனம் முழுவதும் சுகமே தொடரும் (இன்சொல்லே)
(I have sung this song in many of my training programs - very melodious and meaningful - is the feedback which I get from the participants)
எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 15
ராகம்: ஆபோகி
நல்ல பெண்மணி - மிக நல்ல பெண்மணி - ஒரு 
இல்லத்தில் சிக்கனம் எதிலுமே செய்பவள் (நல்ல)
சிலிண்டரை எப்போதும் நிமிர்த்தி வைத்து 
ரப்பர் குழாய் தனை அடிக்கடி கண்காணித்து 
அகன்ற பாத்திரம் தனில் சமைத்தே 
எரிபொருள் சிக்கனம் கடைபிடித்தால் அவளே (நல்ல)
தூங்கும் முன் சிலிண்டரை மூடிவைத்து 
சமைக்கையில் ஜன்னலை திறந்து வைத்து 
சிறிய பர்னர் தனிலே சமைத்து 
எரிபொருள் சிக்கனம் கடைபிடித்தால் அவளே (நல்ல)
கொதிநிலை பக்குவம் அறிந்து வைத்து 
குக்கர் வசதியை தினமுமே உபயோகித்து 
இண்டக்ஷன் ஸ்டவ் தனிலே சமைத்து 
எரிபொருள் சிக்கனம் கடைபிடித்தால் அவளே (நல்ல)
This song can be dramatized or used for dance. It was written in the context of oil/fuel conservation perspective. I am sure you will like this.
Top of Form

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
Composition - 16
ராகம் : திலங்க் தாளம்: ஆதி
இசை கேட்டு மயங்காதோர் எவருமுண்டோ 
இதயத்து அலைவரிசை எழுப்பும் இனியதொரு (இசை)
வசை பல பாடிடும் வையகந்தனிலே 
வாழ்த்தொலி பரப்பும் நல்லிதயங்களின் (இசை)
கவின்மிகு சோலையில் கானப் பறவைகளும் 
காற்றினில் சிரிக்கும் இனிய மலர்களும் 
கறவையினங்களும் காடு மரஞ்செடியும் 
கண்ணனின் குழலதில் மயங்கினவன்றோ - அந்த (இசை)
மனமெனும் மாயை மயங்கிய வேளையில் 
மலர்ச்சி கொள் என்றே மதுரகீதம் வரும் 
சினமெனும் பேயும் சிதறிப் பறந்தே 
சிந்தனைப் பொறிதனை செவி உணரச் செய்யும் (இசை)
(Song on Music and its magical effects...a true melody indeed)
எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் -16
ராகம்: பூர்விகல்யாணி தாளம்: ஆதி
வெற்றிக்கதிபதியே வேழ முகத்தவனே - பதம் 
பற்றிப் பணிந்திடவே அருளும் ஞான விநாயகனே (வெற்றி)
தொற்றும் பிணியகற்றும் தூய கணபதியே - உனை 
சற்றும் தொழுதிடவே கருணையை தூவும் அருள்நிதியே (வெற்றி)
வற்றும் வறுமையொழி சித்தி விநாயகனே - உடன் 
சித்தம் இறங்கி வரும் இனிய மூஷிக வாகனனே (வெற்றி)
முற்றும் உணர்ந்த முனி மூல கணபதியே -இப் 
பித்தன் செய்த பிழை இனிதே யாவும் பொறுப்பாயே (வெற்றி)
(திருப்புகழ் பாடல்கள் மாதிரி இனி யாரால் எழுத முடியும்...இது எனது குழந்தை முயற்சி)
The Golu starts today - the first Bommai to occupy the Golupadi would obviously be Lord Vinayaka

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் -17
ராகம்: ரஞ்சனி தாளம் : ஆதி
நீ தான் காத்தருளுவாய் - முருகா நீ தான் 
மனமிறங்கி நீ தான்
அழகா மால்மருகா இரு கண் மறைத்து - நான் 
அழைக்க நீ வருவாய் - மனமிறங்கி - நீ தான்
சலிக்கும் மனதை உன்புறம் மாற்று 
புவிக்குள் இருக்கும் துன்பங்கள் நீக்கு 
அரிதும் எளிது பெரிதும் சிறிது - உந்தன் 
கடைக்கண் பார்த்திட - மனமிறங்கி நீ தான்
வதைக்கும் நினைவை உன் திசையாக்கு 
பதைக்கும் மனதை உன் வசமாக்கு 
இதய மலையில் விளையும் ஆசை - என்றும் 
இனிதே மலர்ந்திட - மனமிறங்கி நீ தான்

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் -18
ராகம்: ரேவதி தாளம் : ஆதி
மாம்பலத்தே உறைபவனே குமரா - மேல 
மாம்பலத்தே உறைபவனே குமரா 
முருகாஸ்ரம பாலா - மருகா முருகா 
நீ வா அருள் தா (மேல மாம்பலத்தே)
தேமதுரத் தமிழே தெவிட்டாத அருளே 
வானவர் போற்றும் வடிவழகே (தேமதுர)
காண ஓர் அரிய பெட்டகமே 
கண்டதும் கலங்கிடும் எம் கண்களே 
ஆனந்தம் ஆனந்தம் 
ஆனந்தம் பெறுமே 
மனமே தினமே (முருகாஸ்ரம)
(We have a temple called Murugaasramam in West Mambalam - a divine place - where I used to go from childhood - Kandar Sashti Utsav used to be celebrated in a grand manner - The person who established Sri Sankaranantha Swamiji is no more - it is maintained by his family and other devotees - this composition is dedicated to Lord Muruga - When you sing this song I am sure you will be in tears)
எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் -19
ராகம்: ஆபோகி தாளம் : ஆதி
இளமைக் கனவுகள் இனி வருமோ 
என் இருள்சூழ் இதயம் ஒளி பெறுமோ ?
வளமை பெருகும் வாழ்வினிலே 
வசந்தம் இனிதான் வந்திடுமோ ? (இளமை)
நிலவிலா வானம் கருமேகம் - அன்பின் 
நிழலிலா மனதோ வெறுஞ்சாபம் 
கொடுமைகளால் நிதம் சுகம் காணும் 
குலங்களை நினைந்தே நிலம் வாடும் (இளமை)
தென்றலில் அசையும் மலர்க் கொடியே - கொடுந் 
துயர் வரின் வெறிக்கும் மன நிலையே 
அன்பு மழை பொழிந்து அரவணைக்கும் 
ஆண்டவனை எந்தன் மனம் துதிக்கும் (இளமை)
This particular composition was written and tuned by me (Dr. Balamurali Krishna - my manaseeka Guru comes in the mind even today) when I was just 26 working away from home - facing lots of personal and professional difficulties.

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் - 20
(This composition has won many accolades and a couple of awards in some important forums)
ராகம்: திலங்க் தாளம் : ஆதி
அன்பெனும் அகல் விளக்கு அணையலாமா 
பண்பெனும் பெருவுடைமை குறையலாமா 
நண்பரை பகைமையிலே தள்ளலாமா
நல்லதோர் இதயத்தை கிள்ளலாமா
இயந்திர குணம் நீ கொள்ளலாமா 
இடர்படும் வாழ்வை நீ அள்ளலாமா 
புகழுடன் உலகிலே வாழ நீயும் 
பழகிடு மானுடம் போற்றி நாளும் (அன்பெனும்)
கடமையை சுமையாய் கருதலாமா 
கயமையில் புதைந்தே போகலாமா 
மமதையில் தீய்ந்து கருகிடாமல் 
மற்றவர் பயனுற வாழ்தல் நலமே (அன்பெனும்)

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் - 21
ராகம்: திலங்க் தாளம் : ஆதி
நினைக்காத நேரம் உண்டோ - முருகா (நினைக்காத)
நெஞ்சமெல்லாம் நிறைந்த 
நேயமே நீயல்லவோ - உன்னை (நினைக்காத)
மயிலழகா மாயவனே மருகுகிறேன் முருகா 
ஒயிலெனவே நீ வருவாய் உருகுகிறேன் நீ வா 
குரலின் இனிமை கொஞ்சியுனை 
கொணரும் என்று கவி படைத்தேன் 
தருணமதில் துணை புரிய கருணை மிகு தலைவனே வா - உன்னை 
(
நினைக்காத)
வேலவனே வேண்டியுனை வணங்குகிறேன் முருகா 
வினை அகல துணை புரிவாய் 
விழைந்திடுவேன் நீ வா 
அன்பின் எல்லை நீயல்லவோ 
அருளைப் பொழிவாய் துயர் களைவாய் 
கவி மழையில் நீ நனைந்து கணப்பொழுதில் வந்திடுவாய் - உன்னை 
(
நினைக்காத)
எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் - 22
பக்கத் துணையாய் பாதுகாத்தருளும் பரிவெனும் காமாட்சி 
துக்க நிவாரணி தூயவள்மாயே பாரெங்கும் உனதாட்சி (பக்கத்)
தக்க சமயத்தில் தயை புரிபவளே 
தவிக்க விடாமல் தரணி ஆள்பவளே 
தாயாய்த் தாங்கும் பரி பூரணியே 
தருமம் காக்கும் அருளின் நிதியே !! (பக்கத்)
காஞ்சியி லமர்ந்து கருணை செய்திடும் 
காவல் தெய்வம் நீயே தாயே 
கல் மனதையும் கரைத்திடும் தேவி 
கல்மிஷம் நீக்கும் சமய சஞ்சீவி !! (பக்கத்)
குங்கும மகிமை குவலயம் அறியும் 
பங்கஜ லோசனி பரம கல்யாணி 
அங்கம னைத்தும் அடக்கிப் பணிந்தால் 
ஆட்கொண் டருளும் அன்பின் வழி நீ !! (பக்கத்)
This particular one is tunable. Not tuned as yet. Wrote for an album which did not come out for reasons beyond my control. Yet this is one of my favorite compositions as I am very fond of Kamatchi Amman.

எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது
- பாலசாண்டில்யன்
கானம் - 23
ராகம்: வாகதீஸ்வரி தாளம்: கண்டசாபு
முருகா ஒரு வரம் தா 
முருகா ஒரு வரம் தா 
ஒரு பொழுதும் உனை மறவேன் - முருகா 
பழனி மலை மேலமர்ந்த - முருகா
மத்யம காலம்
-------------------------
 
மின்னல் ஒளி முகத்தில் மேவும் புன்னகையே 
என்னை மயக்குமிசை என்றும் நிலைத்திடவே
திஸ்ரம் 
--------------------
கனிந்துருகி மனம் மகிழ - முருகா
மத்யம காலம்
-------------------------
 
மண்ணில் அருமருந்து மாயை களைந்திடவே 
கண்ணில் அரிய ஒளி காணப் பரவசமே
திஸ்ரம் 
--------------------
அழைத்தவுடன் அருள் பொழியும் - முருகா 
ஒரு பொழுதும் உன்னை மறவேன் - 
முருகா வா... வா ...... ....


எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது

- பாலசாண்டில்யன் 

கானம் - 24

ராகம்: பூபாளம் 

கனவு பலித்தது உன்  கருணையினாலே 
நினைவும் மலர்ந்தது நின்  கண்ணசைவாலே 
உறவுகள் எல்லாம் உன்னதமானால் 
உள்ளத்து விரிசல்கள் பேதமையாகும்   (கனவு)

அன்பு மழை பொழியும் அன்னையைப் போல 
அரவணைத்தாட் கொள்ளும் உள்ளம் கொண்டாய் 
துன்பமெல்லாம் போக்கி துணிவும் நல்கி 
தொடரும் நல் வாழ்வினில் இன்பம் பெருகிட (கனவு)

இதயமே தாங்காத இடர் வந்த போதும் 
எந்தையே உனைப் போற்றும் வரமருள்வாயே - நின் 
பதமலர் பணியும் பணியே பணியாய் 
பரிந்துரைத்தருளுவாய் குமரா முருகா (கனவு)



எனது கானம் - தினம் ஒன்று - இசைக்குட்பட்டது

- பாலசாண்டில்யன் 

கானம் - 25

ராகம்: மலயமாருதம்       தாளம்: ஆதி 

உனைக் காணும் வரம் ஒன்று தா - முருகா 
உன் தாள் பணிந்தேன் நான் 
அருமறை போற்றிடும் அருள் வடிவேலா (உனை )

வினைகள் தீர்க்க விரைந்தே நீ வா 
வள்ளி மணவாளா வடிவேலா 
அனைத்தும் உன் செயல் தான் 
அருள் செய் சிவபாலா 
கவலையைக் களையும் கருணைக் கடலே (உனை )

அநாதை என்னை அணைத்துக் கொள்வாய் நீ 
ஆரூரான் மைந்தா ஆறுமுகா 
வேதனை தீர்த்தருள்வாய் 
வேலா அருள்பாலா 
வா வா முருகா வடிவேலழகா (உனை )

(I have written over 100 compositions - yet this column of "enathu gaanam - dhinam ondru" in Facebook gets concluded today)