Monday, October 28, 2013

Padithathil Pidathathu - about books written by my friends in a channel

சமச்சீர் தேசம் வேண்டும் !




சமச்சீர் தேசம் வேண்டும் !
                 டாக்டர். பாலசாண்டில்யன்
இலை நிறைய சோறு, குழம்பு இல்லை, பொரியல் இல்லை யோசியுங்கள்.

முகம் நிறைய முடி, மூக்கு இல்லை, முழி இல்லை யோசியுங்கள்
மூன்று தலை, பத்து கை, பல கால் எப்படி இருக்கும் யோசியுங்கள்
சோறு உண்டு, தூக்கம் உண்டு, வீடு உண்டு, டிவி உண்டு ஆனால் வேலை இல்லை.
சிறிய மரம், பெரிய பெரிய பூக்கள் பார்க்க சகிக்காது.
அப்படித்தான் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் நிபுணர்கள் மட்டும் நிறைந்த தேசம். அது ஒரு பக்கம் மட்டும் வீங்கிய மூஞ்சி போல.
திருமணம் என்றால் நகை நட்டு மட்டுமா? பெண், பையன், ப்ரோகிதர், சமையல்காரர் , பரிமாறுபவர், இசைக் கலைஞர்கள், தோரணம் கட்டுபவர்கள், பூக்காரர்கள், மேசை துடைப்பவர்கள், வண்டி ஓட்டுபவர்கள், புகைப்பட நிபுணர்கள், எல்லோரும் வேண்டும் அல்லவா ?
IT நிபுணர்கள் கூட பசித்தால் சாப்பிடுவார்கள், டீ குடிப்பார்கள், பார்ட்டி வைப்பார்கள், வீடு வாங்குவார்கள், வங்கியில் பணம் கட்டுவார்கள், வண்டி வாங்கி சர்வீஸ் செய்வார்கள், தோட்டம் வைப்பார்கள், நகை வாங்கி பரிசளிப்பார்கள், மொபைல் மற்றும் டாப் வாங்கி அமர்க்களம் செய்வார்கள். எல்லோருமே பொறியியல் படித்தால் இவர்களுக்கு வீடு யார் கட்டித் தருவார்கள்? வண்டி யார் ஓட்டுவார்கள் ? பிள்ளைகளை யார் குளிப்பாட்டுவார்கள், துணி யார் தோய்ப்பார்கள், பிள்ளைகளை பள்ளியில் விட்டால் யார் பாடம் நடத்துவார்கள் ? யார் பஸ்ஸில் அழைத்துச் செல்வார்கள் ? பாட்டு யார் சொல்லித் தருவார்கள்? இவர்கள் வாரம் தோறும் பார்க்கும் சினிமாவில் வசனம், பாடல் யார் எழுதுவார்கள் ? இவர்கள் புரட்டும் பத்திரிகைகளை யார் கொண்டு வந்து  வீட்டு  வாசலில் போடுவார்கள்? வீட்டிற்கே வந்து டிபன் கொண்டு வந்து தருவார்கள் ? பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்குவார்கள்? ஆபீஸ் போகும் பஸ் யார் ஓட்டுவார்கள் ? வீட்டில் பைப் அடைத்துக் கொண்டால் யார் வந்து சரி செய்வார்கள்? வரும் வழியில் காய் வாங்கி விட்டு பில் போட ஆள் இல்லை என்றால், வண்டிக்கு பெட்ரோல் ஊற்ற ஆள் இல்லை என்றால் ...யோசியுங்கள் ..!
பிள்ளைகள் மூலம் சண்டை வந்தால் யார் டிவோர்ஸ் வாங்கி தருவார்கள் ? தலை சுற்றுகிறதா ...?
55 சதவீதம் மக்கள் தொகை இந்த நாட்டில் இப்போது சராசரி வயது 25 ஆக இருக்கிறார்கள். இங்கே ப்ளம்பர், கார்பெண்டர், எலேக்ட்ரிசியன், டிரைவர், டீச்சர்கள், விற்பனை செய்பவர்கள், உணவு தயாரிப்பவர்கள், வீடு கட்டுபவர்கள், வங்கியாளர்கள், கணக்காளர்கள், காசாளர்கள், திட்ட நிபுணர்கள், நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள், அர்ச்சகர்கள், தரகர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், சிப்பந்திகள், மிஷின் ஆப்பரேட்டர் கள், லிப்ட் ஆப்பரேட்டர் கள் , விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், சமூக களப்பணியாளர்கள், முக்கியமாக விவசாயிகள், தோட்டக் கலை நிபுணர்கள், எல்லை பாதுகாவலர்கள், போலீஸ், விமான பணியாளர்கள், ரயில் மற்றும் பஸ் போன்ற போக்குவரத்து ஊழியர்கள், துப்பரவுப் பணியாளர்கள், செக்யூரிட்டி நபர்கள், ஆடை மற்றும் நகை தயாரிப்பவர்கள், தபால் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் என்று இந்த நிறைவு பெறாத பட்டியல் நீள்கிறது...இவர்கள் எல்லோருமே இருந்தால் மட்டுமே தேசம் செயல்படும்.
14 நாட்கள் கப்பல் வரவில்லை என்றால் இங்கே எந்த ஊர்தியும் ஓடாது. ஏன் எனில் நமக்கு தொடர்ந்து நிலக்கரி மற்றும் பெட்ரோல் வந்தே ஆக வேண்டும். எல்லையில் யாரும் நிற்கவில்லை என்றால் நமக்கு அண்டை நாடுகளிலிருந்து எல்லை இல்லா பெருந்துன்பம் வந்து சேரும். விவசாயிகள் இனி கிடையாது என்றால் ஈரத்துண்டு தான் வயிற்றுக்கு. ஆசிரியர்கள் இல்லை என்றால் கல்விக் கூடங்கள் காலிக் கூடங்கள் ஆகி விடும்.

Thinkers( சிந்திப்பவர்கள்), மற்றும் Doers (செயல்படுத்துபவர்கள்) இருவருமே ஒரு நாட்டுக்கு தேவை. எல்லோருமே பொறியாளராக அல்லது கணினி நிபுணர்களாக மட்டும் இருப்பார்கள் என்றால் என்ன ஆகும்?
முடி திருத்த, உடல் வலித்தால் பிடித்து விட, பசித்தால் சோறு போட, குடிக்க நினைத்தால் கூழ் ஊற்ற, அடுத்த இடம் செல்ல வண்டி ஓட்ட ஆட்கள் வேண்டாமா ? என்ன நடக்கிறது நம்மை சுற்றி எனச் சொல்ல பத்திரிகையாளர்கள், ஊடக நிபுணர்கள் வேண்டாமா, படித்து மகிழ எழுத்தாளர்கள் வேண்டாமா ? நடித்துக் காட்ட நடிகர்கள், பாடிக் காட்ட இசைக் கலைஞர்கள் வேண்டாமா?
இதெல்லாம் தாண்டி தங்க ஹோட்டல்,  உட்கார்ந்து காதலிக்க பூங்காக்கள், மன நலம் காப்பவர்கள், எல்லாம் தானே வேண்டும் ?
காலையில் எழுந்தது முதல் நாம் பயன்படுத்தும் பொருட்கள் விஷயங்கள் பற்றி யோசித்தால் - பேஸ்ட், ப்ரஷ், செய்தித்தாள், காபி, கப், பால், பாத்திரம், ஸ்டவ், காஸ், கேய்செர், பக்கெட், மக், சோப், பைப், ஷாம்பூ, துண்டு, உள்ளாடை, வெளியாடை, சிற்றுண்டி, காய்கறி, பழம், வண்டி, மொபைல், வீதி, கணினி, பேனா, ஷூ அல்லது செருப்பு, மேசை, நாற்காலி, முடிவாக படுக்கை, கட்டில் - இப்பட்டியல் குறைக்கப் பட்டது தானே தவிர நீட்டப் பட்டது அல்ல...! இந்த பட்டியலில் உள்ள பொருட்கள் எல்லாமே ஒரு பொறியியல் அல்லது கணினி சம்பந்தப்பட்ட நிபுணர் பட்டாளம் தொடர்பு உடையது தானா என்று கேட்டால் விடை "ஆம்" மற்றும் "இல்லை"..! எது சரி யோசித்தால் புரியும்...!
இறந்தால் புதைக்க, எரிக்க ஆள் வேண்டும். பிறந்தால் எடுத்து தொட்டிலில் போட ஆள் வேண்டும். இருந்தால் காப்பாற்ற ஆள் வேண்டும். பூசித்தால் யோசித்தால் யாசித்தால் சுவாசித்தால் வாசித்தால் - தனித்தனியே ஆள் வேண்டும்.
ஸ்கில் கேப் (திறன் இடைவெளி) இந்த மாபெரும் தேசத்தில் வரக்கூடாது என்றால், சிறப்பாக சிரிப்பாக தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் சமச்சீர் நாடு வேண்டும். அதற்கு ஹோட்டல், விமானம், உணவு, உடை, அழகு, பாங்கிங், கல்வி, மன நலம், சட்டம்,சமூகம், அறிவியல், மொழிக் கல்வி, பிற மொழிக் கல்வி, இசை மற்றும் கலை, திட்டமிடுதல், பொருளாதாரம், கணக்கு பார்த்தல், தேச பாதுகாப்பு, நிர்வாகம், ஆரோக்கியம், விற்பனை, விவசாயம் குறித்த படிப்புகள் படிக்க வேண்டும். குறிப்பாக வேறு துறை சார்ந்த வேலைகளை தவிர்க்க வேண்டும்.
நம் நாட்டில் நாலந்தா பல்கலைக் கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் 10000 மாணவர்கள், 2000 ஆசிரியர்கள், 50 க்கும் மேற்பட்ட படிப்புகள் கொண்டதாக இருந்தது.

நேர்த்தியான, அழகான, ஆரோக்கியமான தேசம் பாரதம் என்று இனி உலகுக்கு உரைக்க எல்லோரும் வேண்டும். இதனை உடனடியாக புரிதல் வேண்டும். ஊதியம் வரும் இடம் தான் நான் ஊழியம் செய்வேன் என்றால் பாழ் இந்த நாடு வெகு விரைவில் பாழ்...இது சத்தியம்...!!