Monday, August 13, 2018

தேச கீதம்

தேச கீதம்
ராகம்: ரீதிகௌளை

ஜெய ஜெய பாரதமாதா
ஜெயந்தான் உந்தன் மகர்க்கு
என்றுமே எங்குமே (ஜெய ஜெய)

பயமில்லை வாழ்ந்திட பாரத நாட்டிலே
பகையில்லை என்றுமே அன்புடை வீட்டிலே
கயமை பொய்மையிலா தேசம் பாரிலே
கட்டாயம் நம்முடை பாரதம் வேறிலை
- பாடிடு ஆடிடு  (ஜெய ஜெய)

வேற்றுமை புறத்திலே ஆயிரம் இருப்பினும்
ஒற்றுமை அகத்திலே உண்டிங்கு காணீர்
போற்றுவோம் பாரதத் தாயினை அன்பொடு- பறை
சாற்றுவோம் பாரதம் போலில்லை மண்தொடு
- என்றுமே எவருமே  (ஜெய ஜெய)

- டாக்டர் பாலசாண்டில்யன்

Saturday, August 4, 2018

காதல் பூமிக்கு அச்சாணி நீ

Jag goomeya - Salman impact
காதல் பூமிக்கு அச்சாணி நீ
என் புலம் சற்று நிற்கின்றது
என் நிலம் சுற்றி வருகின்றது 
உன் பார்வை என்மீது பட்டால்
உன் வாசம் எனைத் தீண்டி விட்டால்
என்ன என்ன இன்னும் செய்வாய்
எனையென்று முழுதாகக் கொய்வாய்
மறக்க முடியா உன் செவ்வாய் - எனை
மயக்கித் தருமா அமுத மழையாய்
பருவ மாற்றம் வானிலும் மனதிலும் -இரு
துருவ மாற்றம் அகமும் புறமும்
மாறுமா நெருப்பு நீராக வந்து
மாற்றிப் பார் ஓர் அணைப்பைத் தந்து ..
வெயிலுக்கு நிழலாக வருகின்ற நீ
மழை போல மனதினைக் குளிர்விக்கிறாய்
அலை போல வந்து வந்து போகாதே
அலைந்திட இனி என்னால் ஆகாதே
போக்கிரி மனதைத் திருத்த முடியமா - அதன்
போக்கைத் தான் நிறுத்த முடியுமா
சாக்கினி சொல்லாது முடிவுகள் வருமா - இல்லை
சாவையே காதல் பரிசாய்த் தருமா
- டாக்டர் பாலசாண்டில்யன்

Wednesday, August 1, 2018

பிக் பாஸ் - உளவியல் பார்வையில்

பிக் பாஸ் - உளவியல் பார்வையில் 
- முனைவர் பாலசாண்டில்யன் 
மனநல ஆலோசகர் 

உள்ளே இருப்பவர்களை வெளியே இருந்து வேடிக்கை பார்க்கிறது உலகம். அவர்களைப் பற்றிய கருத்துப் பதிவு, காழுப்புணர்ச்சி வெளிப்பாடு, புகழாரம் எல்லாமே சமூக வலைத்தளங்களில் நடக்கிறது. 

நமது அன்றாட வாழ்வில் நாம் என்ன செய்கிறோம், யார் அதனைப் பார்க்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். பேசுகிறார்கள் என்றெல்லாம் நாம் அறிவதில்லை. செய்வதையே செய்ததையே நாம் தொடர்கிறோம் அது தான் சரி என்ற நினைப்புடன். 

யாருடைய அங்கீகாரமோ ஆலோசனையோ அட்வைஸோ நமக்கு தேவையில்லாமல் இருக்கலாம். இருப்பினும் நம்மில் எத்தனை பேருக்கு சுய ஆய்வு செய்யத் தெரியும். 

சில சமயம் என்னுடைய சில நெருங்கிய நண்பர்கள் எனக்கு உள்பெட்டியில் வந்து உங்களின் அதிகமான போஸ்ட்கள் முகநூலில் வருகின்றன. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் சில நேரம் ஏன் இரண்டு மூன்று நாட்களாக ஒரு மாதிரி நெகடிவ் போஸ்ட் போடுகிறீர்கள் என்று கேட்பது உண்டு. அப்போது தான் நாமே உணருவோம் நம்மை பிறர் கண்காணிக்கிறார். நம்மை சிலர் பின்பற்ற நினைக்கிறார். நம் மீது உயர் அபிப்ராயங்கள் வைத்துள்ளார்கள் என்று. 

அப்படித் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும். இதர மொழிகளில் நிறைய சீசன்கள் தாண்டி விட்டன. தமிழில் இது தான் இரண்டாவது சீசன். இதைக் காண்பதே நம்மில் சிலருக்கு அதிர்ச்சியாக கடுப்பாக கோபமாக இருக்கிறது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஏன் இந்த சின்ன சின்ன விஷயங்களுக்கு பஞ்சாயத்து தேவைப்படுகிறது என்று. 

ஒரு விஷயம் என்னவோ உண்மை. அதிகம் பேருக்கு பொதுவாக சகிப்புத்திறன் குறைவாக உள்ளது. மேலும், இணையம், மொபைல், சமூக வலைத்தளம், உறவினர் மற்றும் நெருக்கமானவர்களின் பிரிவு, பிடித்த உணவு கிடைக்காமை, நினைத்த நேரத்தில் நினைத்த செயல், தூக்கம் போல செய்ய முடியாமை என்று எத்தனையோ கட்டுப்பாடுகள் இந்த பிக் பாஸ் வீட்டில் உள்ளன. நிச்சயமாக இது உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கும். தவிர, வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள், வெவ்வேறு பழக்கம் கொண்டவர்கள், வெவ்வேறு வயதினர் என்று ஒரு குழுவோடு வாழ்வது அதுவும் கண்காணிப்போடு வாழ்வது நிச்சயம் மிக மிகக் கடினமான ஒன்று தான். 

என்ன தான் விளையாட்டு என்றாலும், அதற்கு பணம் கிடைக்கிறது என்றாலும், ஒன்றை பெறுவதற்கு பலவற்றை இழக்க நேரிடுகிறது எனும் போது நிச்சயம் அது சிரமமான விஷயம் தான். 

பிறரைப் பற்றி குறை சொல்லுவது எளிது. ஆனால் சரியாக நடந்து கொள்ளுவது கடினம். 

இந்த பின்னணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து அதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன என்று உணர்ந்தால் நமக்கு நிறைய விஷயங்கள் புதிதாக புரிந்து போகும். நாம் இந்த இடத்தில் இருந்தால் இந்த சூழலில் இருந்தால் எப்படி நடந்து கொண்டு இருப்போம், எப்படி அதனை சமாளித்து இருப்போம் என்று கூட சிந்தித்து பார்த்தால் சிறப்பாக இருக்கும். 

யார் வெல்கிறார், யார் தோற்கிறார் என்பதை விட இது ஒரு டிவி விளையாட்டு, சிலரின் உண்மை முகம் இது தான் என்று ஏற்றுக் கொள்ளும் விதமாக அதனை பார்த்தால் நமக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது எண்ணம். 

அந்தப் பஞ்சாயத்துகளை ஒரு வக்கீல் மகன் எப்படி சமன் செய்கிறார், எப்படி அவர்களுக்கு புரிய வைக்கிறார் என்று பார்க்கும் போதும் சில புதிய விஷயங்கள் கற்க முடிகிறது. இது என்னுடைய பார்வை. உங்களது எப்படியோ??

Bala's poems

நீர்' வந்து அணைக்கும் போது
தீ நான் என்ன செய்வேன்
என்னோடு
என் துக்கமும் வெட்கமும் 
பஸ்மமானது கண்டேன்... 
காதலெனும் பருவ நதியே..
அள்ளிச் செல்.. என்னை 
ஆனந்தக் கடலுக்குள்..!
- பாலசாண்டில்யன்

புள்ளிகளும் அரைப்புள்ளிகளும் 
உன் எழுத்து வரியை நிறுத்தலாம்.
பேச்சும் செயலும் தான் நீ யார் என்பதை நிலைநிறுத்துகிறது 
அதுவே பின்னாளில் 
கேள்விக் குறியாக??
கேலிக்குறியாக ?!!
ஆச்சரியக்குறியாக ஆகிறது.!!
- பாலசாண்டில்யன்


உன் மலர்க்கரம் பட்டு
வருகின்ற மெசேஜ்களில்
உந்தன் வாசனை !


காலங்காலமாய் கரை நனைக்கும்
அலைக்கில்லை அலுப்பும் சலிப்பும்...
என்றோ வந்து தரை நனைக்கும்
மழைத்துளியைப் பார்...
ஓவர் டைம் பார்த்த அலுவலர் போல 
அலம்பலும் செருக்கும்...
சற்று நேரம் பார்த்த வேலைக்கே
விருது கேட்பதென்ன ஞாயம்...?!
- பாலசாண்டில்யன்


ஏணிகள் இருந்தும் தோணிகள் இருந்தும்
தாண்ட முடியவில்லையே கரை
உன்னுள் உணர்ந்து பார் இருக்கிறது எத்தனையோ நிறை
உதவத் துடிக்கிறான் இறை
வேண்டாமே உன் மனதில் குறை


எல்லோரையும்
வண்ணம் தீட்ட
ஒரே தூரிகையா?
எல்லோரையும்
கணித்திட
ஒரே எடைக்கல்லா?
எல்லோரிடமும்
ஒரே வார்த்தையா
எல்லோர் மீதும்
அதே பார்வையா?
பலமுறை
பலவகை
பல்நோக்கு
எல்லாம் பலன் தரும்...!!
- பாலசாண்டில்யன்